பயண மலர்கள்
பயணங்கள் - நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய சமாச்சாரம். பெரும்பாலான தமிழர்களுக்கு அப்படி இருப்பதில்லை. நெடும் தொலைவு பயண வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, பயணக்கட்டுரைகள் அக்குறை தீர்த்து வைக்கும். இன்று பயணக்கட்டுரைகள் நிறைந்த வலைப்பூக்களை காண்போம்.
பயணம் என்றால், வலையுலகில் நினைவுக்கு வருபவர் துளசி அம்மாவாகத்தான் இருக்கும். இவங்களோட வலைத்தளத்திற்குள் நுழைந்தால் போதும். கன்னியாக்குமரியில் இருந்து வாகா பார்டர் வரை, நியூசிலாந்தில் இருந்து தாய்லாந்து வரை, ஒரு பைசா இல்லாமல் உலகைச் சுற்றி பார்த்துவிடலாம். பார்த்த ஒரு விஷயம் விடாமல், கேட்ட ஒரு விஷயம் விடாமல் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். தகவல் ரீதியில் ஒரு முழுமையான அனுபவத்தை, அம்மாவின் பதிவுகள் கொடுக்கும்.
சர்வேசன் அடிக்கடி ஊர் சுற்ற மாட்டார். எப்ப காசு செலவழிக்க தோணுதோ, அப்ப மட்டும் போவாரு. :-) ஆனா, எப்பலாம் போறாரோ, அப்ப எல்லாம் நமக்கு தரமான கண்ணில் ஒத்திக்கிற மாதிரியான படங்கள் கிடைக்கும். இங்கே, இவர் அலாஸ்காவில் எடுத்த படங்கள் இருக்கிறது. அலாஸ்காவை மட்டுமல்ல, பல்லாவரத்தையும் அழகா படம் பிடிப்பாரு.
பதிவர் சௌந்தர், சென்னையில் இருந்து வத்தலக்குண்டு பக்கமிருக்கும் ஒரு கோவிலுக்கு காரில் சென்ற அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கிறார். வாசித்தால், நாமும் அவருடைய குடும்பத்துடன் சென்ற வந்த உணர்வு கிடைக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்ற வந்த அனுபவத்தை, பதிவர் சிதம்பரநாதன் அவருடைய வலைப்பூவில் பதிவிட தொடங்கியிருக்கிறார். இப்போது தான் தொடங்கியிருக்கிறார். வாருங்கள், நாமும் சேர்ந்து கொள்ளலாம்.
அதேபோல், பதிவர் சிவா அவர்கள் திருநெல்வேலி சீமையை சுற்றிக்காட்ட போகிறார். அதற்கும் தயாராகுங்கள்.
வெங்கட் நாகராஜ், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த சென்ற ரயில் பயண அனுபவத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறார். பயணங்களின் போது, அவர் சந்தித்த வித்தியாசமானவர்களைப் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷபீக் அவர்கள் குற்றாலத்தின் அருமை பெருமைகளை இப்பதிவில் பட்டியலிட்டு இருக்கிறார். கூடவே, குற்றாலம் சென்றால் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். குற்றாலம் செல்லும் முன்பு, வாசித்துவிட்டு செல்ல வேண்டிய பதிவு.
இப்படி எல்லோரும் அவுங்கவுங்க பயண அனுபவங்களை சொன்னது போல், உறவுக்காரன் அவர்கள் உலக அமைதிக்காக தொடர் பயணம் மேற்கொண்ட ஒரு பெண்மணியை பற்றி இப்பதிவில் சொல்லியிருக்கிறார். அந்தம்மா அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ என நாடு விட்டு நாடு, நடை நடை’ன்னு நடந்திருக்காங்க.
சேகுவரா பல்வேறு நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட உலக பயணங்கள் மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கை பயணத்தை பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது.
இங்கு பார்த்ததுபோல், பயணங்கள் என்பது புது இடங்களை காண்பது என்பதில் இருந்து உலக மக்களின் நன்மை என்ற வகையில் வரை முக்கியத்துவம் பெறுகிறது. இதை படித்துவிட்டு, எங்காவது சென்று வரலாம் என்று தோன்றுகிறதா? அது போதும் எனக்கு.
நாளை உங்களை கவரும் இன்னொரு வகை மலர்களுடன் சந்திக்கிறேன். டாடா... பை... பை...!!!
.

