வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பு .
பொதுவாகவே நான் அத்தனை சுறுசுறுப்பில்லாதவன்.
அதிலும் பதிவெழுதுவது என்பதென்றால் இன்னும் சோம்பல். கிடைக்கும் வார இறுதிகளில்
பொழுதுபோக்குக்கென உள்ள அம்சங்களை துய்த்துவிட்டு இன்னமும் நேரம்
கிடைக்கிறதென்றால் எதாவது எழுதுவது வழக்கம். நம்மில் பலர் அங்கனமே. தினமும் முகநூலில்
பதிவுகள் இடுவதென்பது வேறு. வலைப்பூவில் பதிவதென்பது வேறு. முன்னது
கணநேரக்கிறுக்கல்கள்,பின்னது செய்யுள். ஆகவே அதற்கேயுரித்தான முன்னேற்பாடுகளுடனே செய்ய
முயல்வது எனது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மின்னஞ்சலில் சில
அஞ்சல்கள் வந்து நிரம்பின. வலைச்சரம் பற்றி அறிவீர்கள் தானே? , அதற்கு ஒரு வாரம்
ஆசிரியர் பொறுப்பு வகிக்கமுடியுமா என்ற கோரல். எனது வலைப்பூவும் அவ்வப்போது
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக நேயர்களை என் வசம் ஈர்க்க உதவியது
என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு சின்ன சந்தோஷம். இதுவரை எனது வலைப்பூவிலும்
முகநூலிலும் மட்டுமே எழுதிவந்த எனக்கு பலரால் வாசிக்கக்கூடிய ஒரு தளத்தில்
எழுதவும், மேலும் என்னைக்கவர்ந்த பிறரையும் அவர்கள்தம் எழுத்துகளையும் அறிமுகப்படுத்த
ஒரு வாய்ப்பு. ( அவ்வளவு பெரியபயல் ஆகிவிட்டேனா என்ன?! :) )
வலைப்பூக்களை அதிக ஆர்வத்துடன் ஆரம்பித்தவர்கள்
, தொடர்ந்தும் அதைப்புதுப்பிக்கின்றனரா என்றால்
மிகச்சிலரே அந்தப்பணியை செவ்வனே செய்து
வருகின்றனர். நிறையப்பேர் முகநூலிலும், கூகிள் பிளஸ்ஸிலுமாக புலம் பெயர்ந்த
இந்தநாளில் இந்த வலைப்பூக்கள் அறிமுகம். இருப்பினும் தரவுகள் தேடியெடுப்பது என்பது
முகநூலிலும், மற்றதிலும் ஆகக்கடினமான விஷயம். இந்தப்பதிவுகளை நான் அறிமுகம் செய்கிறேன் என்பதை விட நான் ரசித்தவற்றைப்பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக வலைச்சரத்தை பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதே சரியாக இருக்கும்.
விடாது பின்வந்து என்னைப் பொறுப்பிலமர்த்திப்
பார்ப்பது என்ற ‘தமிழ்வாசி’ மற்றும் ’சீனு’ அவர்களின் விருப்பத்திற்கிணங்க இதோ
எனக்குப்பிடித்த, நான் ரசிக்கும் சில நண்பர்களின் வலைப்பூக்களையும், அவர்களின்
தமிழுக்கான பங்களிப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனினும் இன்னும் பலர் வலைப்பூக்களின்றி முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எங்கனம் அறிமுகம் செய்வது ?! :)
_____________________________________________________________________________________________________
தி.ராஜேஷ் (வளத்தூர்)
இன்று முதலில் அறிமுகப்படுத்துவது தோழர் ராஜேஷ்
தியாகராஜனின் வலைப்பூ. அதிகம் வெளியில் தெரியாது, ஏன் நம்மில் பலரும்தான்
அப்படி.தனக்குள்ளாக ஒரு பிரபஞ்சத்தை உருவமைத்துக்கொண்டு அதனுள் கவி பாடித்திரியும்
ஒரு ‘வளத்தூர்’ சின்னக்குயில் அவர். அத்தனை எளிதில் புரிபடுவதில்லை அவரின்
கவிதைகள். அதிகம் கவிதைகள் மட்டுமே எழுதுபவர். உரைநடைகள் அவ்வப்போது காணப்படும்
அவரது முகநூல் சுவரில். இருப்பினும் அவையும் கவிதை போலவே எனக்குத்தோற்றமளிக்கும்.
இதோ ஒன்று சான்றுக்கு அவர் இப்போது சமீபத்தில் எழுதியது.
‘’ஒன்றின் உணர்தலின் காலத்தை ஒன்றிணைத்து விடுகிறது தன் இருப்பு. பின் அவை எப்பொழுதும் தாங்கி கொள்ள முடியாத நிலையே தன்னையை அழுத்தி கொண்டிருக்கிறது . அதனை விடுவிக்க முயன்று முயன்று அதன் உணர்தலின் வழியே இதோ கிடைத்து விடுகிறது இந்தப் பகிர்தல் போல .’’
இந்தப்பகிர்தல்
என்பது அவர் எனக்கு அளித்த , அவரறியாமல் , நான் அவரிடம் பெற்ற பிரபஞ்சம் பற்றியதான
ஒரு தெளிவு. அவர் விரும்பும் பல பிரபஞ்சம் குறித்த வலைத்தளங்களும், அவரின் தேடல்
குறித்தான பதிவுகளும் எனக்கு காணக்கிடைக்கும். ராஜேஷ் இயல்பில் மண்ணியல்
சம்பந்தமான பணியைச்செய்து வருவதாலேயே அவரின் பதிவுகள், எண்ணங்கள், கவிதைகள்
அனைத்தும் இந்த மண்ணும், இன்னபிற பிரபஞ்ச வஸ்த்துகளுமாகவே இருக்கும், அவரின் கவிதை
முழுவதும் இது பற்றிய செய்திகளே விரவிக்கிடக்கும்.
அவர் இன்று எழுதிய கவிதை ஒன்று உங்களின்
பார்வைக்கென.
கடந்து கொண்டிருக்கையில்
வெளி
தன் இயல்பின் நகர்தலை
மேலும் தீவிரமாக்குகிறது .
இதுபோன்றே உங்களுக்குள் ஆழ்ந்து உங்களுடனே கலந்தாலோசித்த
பின்னர் புரிபடுதலை நான்கு வரிகளில் தோய்த்தெடுத்துவிடுவார்.
இன்னொன்று அது போல. எனக்கு மிகவும் பிடித்த
என்னைத்தைத்து விட்ட கவிதை. கைவிடப்பட்ட உயிர் கரு அகாலம் கொண்டு நம்மை உயிர் கொண்டிருக்கிறது . என்று கூறியவர் ‘சென்று வா விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில் மீண்டும் பிரபஞ்ச கரு உயிர்தெழும் ‘ என்று
முடிக்கிறார்.
கைவிடப்பட்ட உயிர் கரு
அகாலம் கொண்டு
நம்மை உயிர் கொண்டிருக்கிறது .
…………
சென்று வா
விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில்
மீண்டும்
பிரபஞ்ச கரு உயிர்தெழும் .
அகாலம் கொண்டு
நம்மை உயிர் கொண்டிருக்கிறது .
…………
சென்று வா
விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில்
மீண்டும்
பிரபஞ்ச கரு உயிர்தெழும் .
முழுக்கவிதையையும் வாசிக்க இங்கே சொடுக்கலாம்
இவரைத்தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு என்னை என்
பிரபஞ்சத்தைத்தொடர்ந்து கொண்டிருப்பது போன்ற ஒன்று. இவரது கவிதைகள் ‘உயிரோசை’,திண்ணை’, போன்ற இணைய இதழ்களில்
வெளியாகி உள்ளது. நீங்களும் அவரைத்தொடர இதோ அவரின் வலைப்பூ முகவரி.
_____________________________________________________________________________________________________________
‘சில
பகிர்வுகள்..பார்வைகள்’
அடுத்ததாக நான்
அறிமுகம் செய்வது ஒரு ‘ஷம்மி முத்துவேல்’ என்ற கவிதாயினியின் வலைப்பூவை.
‘சில
பகிர்வுகள்..பார்வைகள்’ என்ற வலைப்பூவில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவர்
ஆங்கிலத்திலும் எழுதுவார். நான் எழுத வருவதற்கு பல காலம் முன்னரே எழுத வந்தவர்.
ஆதலால் அறிமுகம் என்பது என்னளவில் சரியான சொல்லாக இருக்கவியலாது. அவரின் கவிதைகள்
பிடித்துப்போக பின் தொடர்ந்த ஒரு ரசிகன் என்ற அளவில் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
இவரின்
கவிதைகளிலும் ஒரு வித மயக்கம் எப்போதும் காணப்படும்.அத்தனை எளிதில் விளங்கிக்
கொள்ளவியலாத , இன்னமும் கூர்ந்து கவனித்து வாசித்துப்பொருள் தேடிக்கொள்ளும் விதமாக
அவரின் கவிதைகள் அமையப்பெற்றிருக்கும். கவிதைகள் எங்கனம் அமையப்பெறலாம் என்றும்
அதில் கவிஞன் என்னென்ன தவறிழைப்பான் எனவும் பிரம்மராஜன் கூறுவது போல இவருடைய
கவிதைகள் என்றும் பழையதாகிப்போவதில்லை. “ வெளிப்பாட்டில் தெளிவு, மொழியைக் கையாள்வதில் கச்சிதத்தன்மை அல்லது சிக்கனம், விவரணையில் ஸ்தூலத்தன்மை போன்ற நல்ல கவிதைக்கான லட்சணங்கள் பழையதாகிப் போய்விடுவதில்லை. “ இவரின் கவிதைகள் எனக்கு
எப்போதும் இன்று வாசிப்பவை போன்ற உருவத்தையே கொடுக்கும்.
எனக்குப்பிடித்த அவரின் கவிதைகளில் ஒன்றிரண்டு
உங்கள் பார்வைக்கு , ‘மெலீனாவின் கனவொன்றில்’
என்ற கவிதை
அவளின்
கைகள்
நீண்டு
வானம்
தொட்டே பூக்கள்
பறிக்கின்றன ....
" விலுக்கென " அசைகிறாள்
பத்தே
வயதான மெலினா ... எனத்தொடங்கும் இந்தக்கவிதை ஒரு
சிறுகதைத்திருப்பம் போல் இப்படி முடிகிறது.
அவள்
கரங்களின்
நாளங்கள்
வழியே
கீமோ
வின்
திரவங்கள்
செலுத்தப்படுகின்றன .....
அசங்கலுற்ற
அவள்
முகம்
அம்மதம்
பிடித்த
யானையின்
மேல் கொண்ட
அச்சம்
ஒத்தே இருந்தது
முழுமையாக
இந்தக்கவிதையை வாசிக்க இங்கே சொடுக்கலாம்.
இன்னுமொரு கவிதையில்
எனக்குள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும் வரிகள் இவை.
காகிதக்கூழ் பதுமையாய்
ஒட்டலின்றி விலகி
தனித்து நின்றாடுதோர்
தலையாட்டி பொம்மை
அச்சுக் கருமை விலகாமல்
என்று முடியும்
இந்த’ கருமையின் படிமானம்’ என்ற கவிதையும் எனக்குள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும்
ஒன்று. இதுபோல இன்னமும் பல ரசிக்கத்தக்க கவிதைகளையும், அவர் எழுதிய சிறுகதைகளையும்
வாசிக்க இதோ அவரின் வலைப்பூ முகவரி.
_________________________________________________________________________________________________________________
கடல் நுரைகளும் என் கவிதையும்
இவரைப்பற்றி நான் அறிமுகம் என செய்ய இயலாது.
தொடர்ந்து பயணிப்பவர். கதைகளாகட்டும், கவிதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் சினிமா
விமர்சனங்களாகட்டும் என எல்லாம் தெரிஞ்ச வல்லசித்தி இவர். ஸ்ரீவிஜி விஜயா. இவரின்
கட்டுரைகள் எனக்கு எப்போது பிடித்தமான ஒன்று. எதையும் ஒளிவு மறைவின்றி வலுவுடன்
எழுதக்கூடியவர்களில் இவரும் ஒருவர். தினமும் எதாவதொன்று இவரின் தளத்தில்
காணக்கிடைக்கும்.
பெண்களுக்கேயுரித்தான இயற்கையின் இடர்ப்பாடுகள்
பற்றி அவர் இங்கே இத்தனை விளக்கங்களுடன் சொல்லியிருப்பது ஒரு சான்று.
மேலும் என்னைக்கவர்ந்த ஒரு பதிவு , அதில்
இப்படிப்போகிறது வரிகள்,வர்ணனைகள் “முன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துக்கொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங்கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.”
தலை முடி பற்றிய ஒரு பதிவு,
வாசிக்கத்தவறவிடக்கூடாத சிடுக்கு இது :)
முழுமையாக அவரின் பதிவுகளைத்தொடர
____________________________________________________________________________________________________
ரசிகன்
பக்கங்கள்!!!
அற்புதமான காதல் கவிதைகளை அள்ளித்தரும் இந்த
ரசிகனுக்கு நான் பரம ரசிகன். கை சொடுக்கும் நேரத்தில் பாடி முடித்துவிடும் நான்கு
வரி நாயகன். அத்தனையும் முத்துகளாக அள்ளித்தருவார். சொக்கிப்போக வைக்கும்
சொற்களுடன், அதிகம் நீட்டாது சுருக்கமாக , சொற்சுருக்கம் கவிதைக்கழகு
என்பதற்கேற்ப.
நான் ரசித்த சில கவிதைத்துளிகள் சில இங்கு.!
உன் இடையின் சிறு துண்டு தான்
பிறை நிலவென
ஒரு பொய் சொன்னேன்...
கவிதை என்கிறார்கள்!
பிறை நிலவென
ஒரு பொய் சொன்னேன்...
கவிதை என்கிறார்கள்!
“என்னமோ அனுப்ப வேண்டும் என சொல்லி முகவரி
கேட்டாள்.... இதயத்தை கொடுத்திருக்கிறேன்!” என வெகு
சுலபமாகச்சொல்வார். மேலும் இது போன்ற
அருமை வரிகளை அவரின் பக்கத்தில் போய் தரிசியுங்கள்.
___________________________________________________________________________________________________
பிம்பம்
இது எனது மிகநெருக்கமான நண்பர் நடத்திவரும்
வலைப்பூ. எல்லாவித சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராயும் அற்புத நண்பர். தற்போது
வேலைப்பளு காரணமாக அவ்வப்போது மட்டுமே பதிவுகள் இடுகிறார்.
மிகச்சரியாகச்சொல்ல வேணுமானால் ,தமிழை
உயிர்மூச்சாகக்கொண்டு இயங்கும் இவரின் வலைப்பூ.
வைரமுத்துவின் கவிதைகள் என்றால் இவருக்கு
கொள்ளைப்பிரியம். அவரின் திரைப்பாடல்களிலிருந்து வரிகளைத்தேர்ந்தேடுத்து பகிர்வார்
முகநூலில்.
மேலும் அறிவியல்,வானாராய்ச்சி, மற்றும் இன்னபிற
தொழில்நுட்பங்களை அழகு தமிழில் பகிர்ந்து கொள்வார். பெரும்பாலுமானவர்க்கு இவரின்
வலைப்பூ பரிச்சயம் என்றாலும் அவரின் சில முக்கிய பதிவுகளின் சுட்டியை இங்கு பகிர
விரும்புகிறேன்.
அழிவிலிருந்து ஆக்கம் என்ற இந்தப்பதிவு பல நல்ல
அரிய தகவல்களை உள்ளடக்கியது.
மேலும் ‘சைபைகூ’ (SciFiku) என்ற புதியவகை கவிதைகளை உருவாக்குவதில் பல முயற்சிகள்
செய்து பார்த்தார். அதன் சுட்டி இங்கே. பல அறிவியற்தகவல்களையும் கவிதைகளாக்கி
பகிர்ந்துகொண்டிருக்கிறார் இங்கு.
தவறவிடக்கூடாத பக்கங்கள் இவருடையவை..
_____________________________________________________________________________________________________
நாளை இன்னும் சுவாரசியமான பக்கங்களுடன் உங்களைச்சந்திக்கிறேன்.