07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 31, 2014

மெஞ்ஞானம் எனும் தத்துவன்

"பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில் ஆயிரம் கோயில்கள் தேவையா ?"

"பூமியைப் படைத்தது சாமியா? இல்லை சாமியைப் படைத்தது பூமியா?" என‌ பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய கேள்விக் கணைகளால் தொடுத்த‌ கவியரசு கண்ணதாசனின் வரிகள் இவை.

ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன, ஏழைகள் இருக்கிறார்களா ?

மெஞ்ஞானம் என்றவுடனே நம்மில் பலருக்கும் தெய்வம், ஆலயம், வழிபாடு தான் முதலில் வருகின்றன.  அதனையும் தாண்டி நம் பிறப்பின் தேடலின் பின் சென்றால் பல அதிசயங்களைக் காணமுடியும்.  இது பல ஞானிகள், யோகிகள், மோனிகள், தத்துவ வித்தகர்களின் (போலிச் சாமிகள், மற்றும் கார்ப்பரேட் சாமிகள் தவிர்த்து :)) வாழ்க்கை வரலாறு மூலம் அறியப் பெறலாம்.  ஒரு அறைக்குள் சென்று பின் திறந்து பார்க்கையில், உள் சென்ற ஞானியின் சுவடு அறவே இல்லை.  காற்றில் கற்பூரமாய் கரைந்து போனார்கள் என்று படிக்கிறோம்.  சில நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்தார் என்று வரலாற்றுப் பதிவுகள் இருப்பதாக அறிகிறோம்.  சரி, இதற்குள் பயணித்தால் போய்க் கொண்டே இருக்கலாம்.  நமது பதிவர்களின் சில மெய்ஞானம், தத்துவம், ஆன்மிகப் பதிவுகள் இன்று.

Arinthathum Ariyathathum - JVC-OSA Community தளத்தில் இருந்து.  பல அறிய செய்திகள் மெஞ்ஞான விளக்கங்கள் கொண்ட தளம்.

ஆறுபடை வீடும், ஆறாதாரமும் - ரிச்மண்ட் கவிநயா அவர்களின் தளத்தில் இருந்து, முருகன், அம்மன், ஆன்மிகம், பக்தி என கவிதை கதைகளில் கலக்கும் பதிவுகள் கொண்ட தளம்

முருகனருள் தளத்தில் இருந்து கவிநயவின் பல பாடல் பகிர்வுகள் (சுப்புத் தாத்தா பாடியது) மற்றும் முருகன் பெருமைகள் பல கொண்ட தளம்.

திருமந்திரம் - Rie அவர்கள் தளத்தில் இருந்து திருமந்திரம், அட்டாங்க யோகம், என பல பாடல்கள், அதன் விளக்கங்கள் என நுண் கருத்துக்கள் கொண்ட தளம்.

முருகனருள் முன்னிற்பதாக..!! ‍ - Kamala Hariharan அவர்கள் தளத்தில் இருந்து ,முருகனின் பெருமை கூறும் பதிவுகள்.

விஞ்ஞானம் வெற்றிதான்! ஆனால் மெஞ்ஞானம்... - Sasi Rama அவர்கள் தளத்தில் இருந்து, விஞ்ஞானத்தின் வெற்றி சொல்லி, மெஞ்ஞானம் பற்றிய சிறுகுறிப்பு அருமை!

நெருப்பில்லாமல் புகையாது ! - Chittarkottai Sunnath Jamath அவர்கள் தளத்தில் இருந்து,  மெஞ்ஞானம் பற்றி இஸ்லாத்தின் பார்வை.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் - ஹைஷ் அவர்கள் தளத்தில் இருந்து அருமையான சிறிய விளக்கம் அனைவருக்கும் புரியும் வண்ணம்.

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி - ‍சிவத்தமிழோன் அவர்கள் தளத்தில் இருந்து, பல சிந்த்திக்க வைக்கும் கருத்துக்கள் அடங்கிய தளம்.

விஞ்ஞானம் - மெஞ்ஞானம் ! -  SIVAPRAKASAM SRINIVASAN அவர்கள் தளத்தில் இருந்து.  சிறிய விளக்கம் என்றாலும், கடைசி வரி படக்கென்று நம்மைப் பற்றிக் கொள்கிறது.

ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்! - விவேகாநந்தன் அவர்கள் தளத்தில் இருந்து.  ஓம் என்னும் ப்ரணவம் குறித்த நுண் விளக்கங்கள் கொண்ட பதிவு.

மெஞ்ஞானத் தெளிவு பெற்று விஞ்ஞானம் போற்றி நல்வாழ்வு வாழ்வோமாக!  நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!!
மேலும் வாசிக்க...

Thursday, October 30, 2014

கணிதம் எனும் அமைச்சன்


Ramanujan by me :)

கணிதம் என்றாலே, 'கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்' என்ற பிரபல திரைப்பட வசனம் நம்மில் பலருக்கு ஞாபகத்திற்கு வரலாம்!  உண்மையும் கூட.  'எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம்' என்று சித்தாந்தத்தை சிந்தித்தால் இது புரியுமோ என்னவோ.  சரி, இன்று நாம் பார்க்கவிருப்பது நமது பதிவர்களின் கணிதம் குறித்த பார்வை.  வழக்கம் போல ஒரு சிறிய உரையுடன் ...

நல்லா கணக்கு பண்றவங்கள (தப்பர்த்தம் பண்ணக் கூடாது :)) நமது ராஜாக்கள் அமைச்சர்களாக அமைத்துக் கொள்வார்களாம்.  சோழர்கள் வேளாண் வல்லுநர்களையும், பாண்டியர்கள் வணிகர்களையும் அமைச்சர்களாகக் கொண்டிருந்தார்கள் என்பது வரலாறறிந்த உண்மை!

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற சொற்றொடரைக் கேட்கையில் கணியன் பூங்குன்றன் நினைவில் வருகிறார்.  இவர் பெயரில் இருக்கும் 'கணியன்' என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?

'The Man Who Knew Infinity' என்ற சொற்றொடரைத் தட்டினால், ராமானுஜரை அள்ளி வழங்குகிறது இணையம்.  'கொடிது கொடிது இளமையில் வறுமை'.  அதுவும் தன்னிடம் ஒரு சிறப்பான சக்தி இருந்தும், பொருளாதார சிக்கலினால், பெரிதும் ஆளாக முடியாமல் எத்தனையோ மேதாவிகள் தவித்திருக்கிறார்கள்.  அவர்களில் ராமானுஜனும் ஒருவர் என்றால் மிகையாகாது!  ஆனால், அவர் செய்த புண்ணியம், நண்பர்களும், ஆசிரியர்களும் அவருக்கு உதவி, உலகம் சுற்ற வைத்து, பின்னாளில் உலகமே போற்றியது.  இருப்பினும், இளமையின் வறுமை, உடல் ரீதியில் தன் வேலையைக் காட்டி, இளம் வயதிலேயே அவர் மரணிக்க நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை.  கணித மேதை ராமானுஜனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

கணித மேதை ராமானுஜன் - ஜெயபாரதன் அவர்களின் தளத்திலிருந்து 2009ல் எழுதியதென்றாலும், இன்று வரை மறுமொழிகள் பெற்ற/பெறுகின்ற‌ பதிவு.

யூக்ளிட் (கணிதவியலின் தந்தை) -  க்ரேக்கர்களின் கணிதம் பற்றி பல நுண்ணிய தகவல்களுடன் மாணவன் பதிந்திருக்கிறார்.

கணித மேதை காஸ் - ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது.  கல்வித்தேடல் தளத்திலிருந்து!

கணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை - செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து.  எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லையே என்று நம்மை எண்ண வைக்கும் பதிவு.

கணித மேதைகள் - சோமசுந்தரம் ஹரிஹரன் அவர்கள் தளத்திலிருந்து,  மூன்று கணித மேதகள் பற்றி சிறு குறிப்புகள் கொண்ட பதிவு.  மேதைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கவிதை ... கணிதம் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தளத்திலிருந்து ஒரு குட்டிக் கவிதை.  ரெண்டே வரிகளில், 'அட சூப்பர்' என சொல்ல வைக்கிறது!

வேத கணிதம் - தே.அன்பழகன் அவர்கள் நடத்திவரும் தளத்திலிருந்து.  தளம் முழுதும் கணிதம்.  எண்களின் மகத்துவம், கிழமையை அறிதல், கணிதப் புதிர்கள் என ஏராளம் உள.  அவசியம் அனைவரும் பார்க்க/படிக்க வேண்டிய பதிவுகள்.

கணக்கதிகாரம்
15ம் நூற்றாண்டில் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்.  தமிழும் கணிதமும் கலந்து செய்த கலவை இந்நூல்.  வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல்.  இதன் பிரதி Project Madurai தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.  கணக்கதிகாரம் பற்றி நம் பதிவர்களின் பதிவுகள் சில.

http://peramuwin.blogspot.com/2011/04/blog-post_28.html
http://kuzhalinnisai.blogspot.com/2014/10/blog-post_96.html
http://venkatesh1586.blogspot.com/2012/04/blog-post_5533.html
http://balasailam.blogspot.com/2012/12/blog-post_17.html

இன்றைக்கு கணக்குப் போட்டாச்சு, நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!!!

மேலும் வாசிக்க...

Wednesday, October 29, 2014

நகைச்சுவை எனும் அரசன்

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..
‍ - கவி காளமேகம்
(தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது)

சிவன் கோவில் மடப்பள்ளியில் பணி.  மடப்பள்ளியில் தினம் நெய்தோசையும், பொங்கலுமாக உண்டு, ஒருநாள் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருக்கையில், தேவி வந்து காளமேகத்தின் நாவில் எழுதி, நீ பெரிய புலவனாவாய் என்றராம்.  இவ்வாறு வாரியார் அவர்கள், கவி காளமேகம் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் தனது ஒரு உரையில்!


நகைச்சுவை அரசன், '23ம் புலிகேசில வர்ற ராஜா?' மாதிரியா என்று கேட்டீர்கள் என்றால், இருக்கலாம்.  தவறில்லை. ஆனால், நாடே சிரிப்பா சிரிச்சுப் போயிடும் :)

'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி.  சிரிப்பதற்கு, தற்போதைய அவசர யுகத்தில் இடம் இருக்கிறதா ?  நகைச்சுவை என்பது எந்த நிலையில் இருக்கிறது?  முதலில் நமக்கு எங்கே நேரம்?  காலையில் எழுந்ததில் இருந்து ஓடு ஓடு ஓடு என்றிருக்க உட்கார்ந்து யோசிக்க, சிரிக்க எல்லாம் எங்கே நேரம்?  இப்படினு நாம நிறைய பேர் இருக்க, நகைச்சுவையாளர்கள் இல்லாமலில்லை இன்றும்.  ஒரு குழுவிலோ, திருமண நிகழ்விலோ, திருவிழாவிலோ கூடினால், ஒவ்வொரு குழுமத்திற்கு ஒன்றிரண்டு நகைச்சுவையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

நம்மில் வெகு சிலருக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும்.  சிலருக்கு, பயிற்சியின் மூலம் கைவரப் பெறும்.  பலருக்கு, சுட்டுப் போட்டாலும் வராது.  நானெல்லாம் கடைசி ரகம்.  பள்ளி காலங்களில் 'வெண்மதி' கண்ணன், கல்லூரி காலங்களில் 'டொம்பா' கண்ணன், வேலையிடத்தில் 'பான்ட்' ரமேஷ், 'கலக்கல்' ஜெய் என்று வெகு சிலர்.  இன்றும் நகைச்சுவை எனும் போது இவர்களை நினைக்காமல் நான் இருந்ததில்லை.

துளசி தளம்: நகைச்சுவை சிலருக்கு சரளமா வரும் என்றேனல்லவா. அதில் முக்கியமாக நம் நினைவிற்கு வருபவர், மூத்த பதிவர் (வயசுல அல்ல, எழுத்துல! அப்புறம் அங்குசத்தத் தூக்கிட்டு அடிக்கவந்துறப் போறாங்க‌!) துளசி டீச்சர்.  அன்றைக்கு எப்படி துள்ளலா நகைச்சுவையோடு எழுதினாரோ இன்றும் அப்படியே.  இவர் பற்றி அறிமுகம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அவருடைய நகைச்சுவை உணர்விர்க்காக மீண்டும் இங்கே!  ஒரு பதிவு என்றெல்லாம் சொல்லி இவரை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள‌து தளத்திற்கே சுட்டி.

The Think Tank: ஃப்லோல அடுத்து நம்ம டுப்புக்கு அவர்கள்.  இவரையும் அறியாதார் யாரும் இருக்க முடியாது.  என்னே இவரது நகையுணர்வு எழுத்து நடை!

இட்லி வடை: அடுத்து வருவது இட்லிவடை.  பதிவுகளில் கொஞ்சம் நகைச்சுவை, ஆனால் ப்ரொஃபைல் பார்த்தால், படித்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம்

தானைத் தலைவி அவர்கள்.  புரட்சித் தலைவி இல்ல போல :)  அருமையாக வீட்டு உறவுகளுக்குள் நடக்கும் நையாண்டிகளை அழகாக எழுத்தில் கொண்டுவருகிறார்.

மீனாவுடன் மிக்சர்: ‍ ரிச்மண்டில் இருந்து மீனா சங்கரன்.  தொலைந்த சென்னையாக இருக்கட்டும், பக்கத்து வீட்டு மாமி ஆகட்டும், அரை நிஜாரில் ஓடும் ஆங்கிலேயர்களாக இருக்கட்டும், வெள்ளிக்கிழமை ஏன்டா வருகிறது என்று புலம்புவதாகட்டும், இவருக்கு வரும் இயல்பான நகைச்சுவை அபாரம்!  இவர் எழுதி நாளாச்சு, இந்தப் பதிவின் மூலமா அவர் எழுத்தைத் தொடர அழைக்கிறேன்.

பாத்ரூம் பாடகரும் எனது காலையும் - வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவு.  சேவலுக்கு பதில் இவரது ஆல்ட்டர்னட் அலார்ம் என்னவென்று பாருங்கள்.

இந்தப் பதிவிற்காக நகைச்சுவைப் பதிவுகளைத் தேடு தேடு என்று தேடியதில், மிகச் சிலவே கிடைக்கின்றன.  பலர் நகைச்சுவை என்று எழுதினாலும், புத்தகத்தில் இருந்தோ, முகநூலில் இருந்தோ, வாட்ஸாப்பில் இருந்தோ எடுத்து ஜோக்ஸ் ஆகப் பதிந்திருக்கிறார்கள்.  அவற்றைத் தவிர்த்து, கிடைத்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் இன்று.  நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!



மேலும் வாசிக்க...

Tuesday, October 28, 2014

ஜெமோ (GMO) எனும் ஓரசுரன்

B.T.Tomato (கருப்புத் தக்காளி)
Photo Credit: Google
சமீபத்தில் பரவலாக‌ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மூன்றெழுத்து GMO (ஜெமோ).

'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண் வல்லுநர்களோடு இணைந்து இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாக அறிகிறோம்.

எல்லாத் துறைகளிலும் இருக்கும் Pros & Cons, 'ஜெமோ'விலும் இல்லாமலில்லை.  மரபணு மாற்று விதைகள், உயர்ரக‌ ரசாயணம், பூச்சிக் கொல்லிகள், மேலதிக மகசூல். இவை, இதன் சிறப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.  இதெல்லாம் தேவையேயில்லை, இவை நம் மண்ணின் வளத்தை இன்றில்லை என்றாலும் நாளை குலைத்துவிடும் என்று இயற்கை வழி விவசாயிகள் போராடுகின்றனர்.

GMO உலகையே ஆட்டி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் மான்ஸான்டோ நிறுவனம், வித்திலிருந்து, விருட்சம் வரைக்கும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறது.  ஏன்?  நாளைய விவசாயம் இவர்களிடம் எனும் நிலையும் ஓங்கி வருகிறது.

GMO நன்மையே என நவீன விஞ்ஞானமும், பண முதலைகளும் சொல்லிக் கொண்டிருக்க, மரபணு மாற்று காய்கனிகளால் மனிதனுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அடித்துக் கூறுகின்றனர் இயற்கை வழி விவாசயம் செய்யும் பலர்.  இது பல கேடுகளை விளைவித்து, நாளைய சமுதாயத்தை சத்தின்றி நடைபோட வைக்கும் என்றும் பதறுகிறார்கள்.  உதாரணத்திற்கு ஒரு காணொளி Seeds of death.  தயவுசெய்து நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள்.

GMO ஒரு புறம் எனில், ஊரே பீட்ஸா, நூடுல்ஸ், பர்கர் என்று இன்னொரு புறம். நமக்கு இன்னும் Non GMO குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்றே தோன்றுகிறது.  இது குறித்து நம் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எனத் தேடியதில் மிக சொற்பமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன.  அதுவும் ஒரு சில வருடங்கள் முன்னர் எழுதியவை.  இதோ ...

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி.  - அட்ரா...சக்க எனும் தளத்திலிருந்து.  இதில் பலரின் மறுமொழிகளும் சிந்திக்க‌ உகந்தவை.

பசுமை புரட்சி என்னும் மாய வலை - முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தளம்.  இவரைத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நன்றாகப் பேசக்கூடியவர்.

பசுமைப் புரட்சி..!!! - கலைவேந்தன் வடுவூர் தளத்திலிருந்து.  தான் எழுதியதல்ல எங்கேயோ படித்தது எனப் போட்டிருக்கிறார்.  இருப்பினும் வாசிக்க உகந்த பதிவு.

பசுமைப்புரட்சியின் உண்மைக் கதை - சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து.  இவர் எழுதிய புத்தகத்திற்கு, எழுத்தாளர் 'ஜெமோ' அளித்த முன்னுரையின் ஒரு சிறு பகுதி ... "ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்"

பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும் - GMOவிற்கு ஆதரவாக தனது கண்ணோட்டம் தளத்திலிருந்து ரவி ஸ்ரீநிவாஸ்.  பதிவை படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.  கண்மூடி நம்புகிறோமா நாமெல்லாம்.  நம்மாழ்வார், பாலேக்கர் செய்த செய்துவரும் பணியை எந்த ஆதாரத்துடன் இவர் மறுக்கிறார் எனத் தெரியவில்லை.  இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுகருத்து இருக்கத் தானே செய்யும்.

GMOவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இயற்கை வழி விவசாயம் தான் சிறந்தது என்று போராடும்/போராடிய பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் கருத்துக்களை சிந்திப்போமாக!

நம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம் - நேர்வழி எனும் தளத்திலிருந்து அதன் ஆசிரியர், நம்மாழ்வார் அவர்களின் வானகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்திருக்கிறார்.

நன்றி!  நாளை வேறொரு பதிவினில் சந்திப்போம்!!
மேலும் வாசிக்க...

Monday, October 27, 2014

வணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...


Photo Credit: Google
சீனா ஐயாவின் அழைப்பை, தனிமடலில் பார்த்து வியந்தேன்.  'மறுபடியுமா ?' என்று :)  சில ஆண்டுகள் முன்னர் வலைச்சர ஆசிரியப் பணிக்குப் பின் மீண்டும் அழைப்பு இப்பொழுது.  நன்றிகள் பல சீனா ஐயா!

இதற்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கலக்கி சென்றிருக்க, அடிவயிற்றில் ஒரு பீதி வரத்தான் செய்கிறது.   அவர்கள் செய்து சென்ற அதே சிறப்பான பணியைத் தொடரவும், மற்றும் உங்களோடு ஒரு வார காலம் உரையாடவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திகொள்கிறேன்.  தங்கள் பேராதரவினை அடியேனுக்கும் வழங்குமாறு கேட்டு, எனது சுயதம்பட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஆசிரியப் பொறுப்பினை!

ஆரம்பத்தில் கவிதைகள் என்று எழுதி வந்ததெல்லாம் இன்று மீண்டும் வாசிக்கையில், அன்று என்னே ஒரு நகைச்சுவையுணர்வு நமக்கு என்று இன்று தோன்றியது :)) கவிதை கிறுக்கல் என்று சொல்லிக்கொள்வோம் :)

கதைகளும், கட்டுரைகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில இன்றைக்கு வாசிக்கையிலும் அன்றிருந்த அதே புத்துணர்வு மீண்டும் கிட்டியதில் மெத்த மகிழ்ச்சி.

இவற்றிலிருந்து சில சுட்டிகள் உங்கள் பார்வைக்கு ...



நெல்லி மரம் ! - ஒரு 'நச்' திருப்பம் கொண்ட கதைப் போட்டிக்கு எழுதி அனுப்பியது. 'நச்' இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன்!

கட்டழகி ... - இதுலயும் ஒரு 'நச்' திருப்பம் வைத்து எழுத எண்ணினேன், இருக்கிறதா என்று தான் தெரியவில்லை!

மெட்ரோ ... - ஜி.யு.போப் அவர்கள் தான் இக்கதைக்குத் தூண்டுகோல்

வீராப்பு - காளைக்கும் மனிதனுக்கும் உள்ள பந்தம்

அடை மழை ! - அம்மாவும் பெண்ணும் ஒரு அரைப்பக்கக் கதையில்

யோகம் பயில் - சமீபகால Status வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.  வரவேற்கவேண்டியது!

பழமொழி 400 - நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் பல பழமொழிகள் எங்கிருந்து வந்தது என்ற தேடலில் கிடைத்தவற்றைப் பதிந்தது!

தமிழ்த் தாத்தா யார்? - யார் ?  அப்படி என்ன அவர் தமிழுக்குச் செய்தார் ?  என் சிற்றறிவுக்கு எட்டிய சில துளிகள்!

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை - தன்னை அறிதலின் தேடலில் விளைந்த சிறு துளிகள்!

தயிர்சாதம் (டே!) - பள்ளி கல்லூரி கால மதிய உணவு குறித்து யோசிக்கையில் விளைந்த பதிவு. இது அன்றைய நிலை. நல்ல வேளை, பீட்ஸா பர்கர் எல்லாம் அபோதில்லை :)

பாதயாத்திரைப் பயணம் - கண்டம் விட்டு கண்டம் கடந்த நம்முன்னோர் பயன்படுத்திய போக்குவரத்து மார்க்கம் நடராஜா சர்வீஸ் மட்டுமே. பின்னாளில் கலங்களும், சக்கர வாகனங்களும், ஊர்திகளும், விமானங்களும் என பரிணமித்தோம். இந்த அவசர யுகத்தில் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று செயல்பாட்டில் இறங்கியதில் இருந்து ...

போதுமென நினைக்கிறேன், இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இந்த பக்கம் வரவேண்டுமல்லவா :)

இறுதியாக,

2008 ல் வலைச்சர ஆசிரியப் பணியின் போது இட்ட‌ முதல் பதிவு

வலையும், வலைச்சரமும், நானும் !

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றி!



மேலும் வாசிக்க...

Sunday, October 26, 2014

குமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சே.குமார்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சதங்கா   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

பெயர் சதங்கா, தற்போதைய வாசஸ்தலம் அமெரிக்கா.  பள்ளிக் காலத்திலிருந்தே இவருக்கு எழுத்தில்  ஆர்வம் உண்டு. இவருடைய 'வழக்கம்போல்' என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள்  எழுதி, 'ரிச்மண்ட் தமிழ் சங்கம்' தளத்திலும் எழுதி வருகிறார்.  யூத்ஃபுல் விகடன் வந்த சமயங்களில் இவரின் பல படைப்புகள் அவற்றில் பிரசுரமாகியிருக்கிறது.  அதீதம் இதழிலும், தென்றல் இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.  தற்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் தமிழ் மீது தீராத காதல் இவர்க்கு!

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சதங்காவினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் குமார் 

நல்வாழ்த்துகள் சதங்கா 

நட்புடன் சீனா

 

மேலும் வாசிக்க...

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...



வணக்கம்.

கடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியனாய் உங்களுடன் கலந்திருந்தது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்த எனது பேராசான், எழுத ஆரம்பித்த போது திட்டினாலும் அப்புறம் நல்லா எழுதுறான்னு மனசார வாழ்த்திய அப்பா மற்றும் அம்மா, நான் கிறுக்குபவைகளை எல்லாம் நல்லாயிருக்கு என்று சொல்லும் என் மனைவி, பள்ளி செல்லும் முன்னே என் எழுத்துக்கள் வந்த பத்திரிக்கைகளை வீதியெங்கும் காட்டி மகிழ்ந்த அன்பு மகள், எங்கப்பா எழுதுனதுன்னு சொல்லும் செல்ல மகன் என அனைவருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இது என்னையும் எழுத வைத்து உலகளாவிய நட்பைக் கொடுத்த இறைக்கான நன்றி.

நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை


வலைச்சர ஆசிரியர் பணி குறித்து முதலில் சீனா ஐயா என்னிடம் கேட்டபோது அலுவலக வேலைச் சூழலில் பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவும் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் யோசனையோடுதான் ஒத்துக் கொண்டேன்.

காலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் சென்று தொடர்ந்து 11 மணி நேரங்கள் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிவிட்டு அறைக்கு வந்து ஊருக்குப் பேசி, சமையல் செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி இரவு பதினொன்றுக்கு மேலாகிவிடும். இந்தச் சூழலில் தினம் ஒரு பகிர்வு சாத்தியப்படுமா என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. ஜோதிஜி அண்ணன் அவர்கள் உன்னைவிட பணிச்சுமையில் நான் இருக்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் உன்னை மெருகேற்றும்... செய் என்று சொன்னார்கள். சரி... சென்ற முறை போல் அதிகம் சிரமமின்றி ஓரளவு பகிர்வு தேத்திப் போட்டாப் போச்சு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அதை கடமைக்கு செய்யாமல் கடமை உணர்வுடன் செய்ய வேண்டும். இது எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டும்... முழுத் திருப்தி இருக்க வேண்டும் கடமைக்குச் செய்யக்கூடாது என்பார். அதன்படி நம்பிக்கையை வீணாக்காமல் முடிந்தளவுக்கு நன்றாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் முதல் நாள் இரவே எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து ஊருக்குப் பேசிக் கொண்டே பதிவு எழுத ஆரம்பிப்பேன். பூவாக இருக்கும் பகிர்வு மொட்டாகி... காயாகி... கனியாகும் போது இரவு 1 மணியைத் தொட்டு விடும். அதன் பிறகு தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வைத்து விட்டு நித்திரையை அணைத்துக் கொள்வேன். மறுநாள் காலை குளித்து வந்ததும் அவசர அவசரமாக பதிவை பகிர்ந்து விட்டு கிளம்பி விடுவேன். மாலை வந்து பதிவருக்கெல்லாம் விவரம் தெரிவித்து பின்னூட்டம் போட்டு விடுவேன். தீபாவளி அன்று மதியம் வந்து விட்டதாலும் வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதாலும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

இந்த வாரத்தில் பதிவு இடும்போது அதிகம் பின்னூட்டம் வரவாய்ப்பில்லை என்று தோன்றியது. காரணம் தீபாவளி விடுமுறை, பதிவர் மாநாடு என நம் மக்கள் அனைவரும் ரொம்ப பிஸி. இருந்தாலும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை உங்கள் மனதில் நிற்கும் வண்ணம் நிறைவாய் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு இணங்க முடிந்தளவு சிறப்பாக செய்திருப்பதாய்த்தான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒரு படப்பாடலின் முதல் வரியாகவும் பதிவுக்குப் பொறுத்தமான பாடலையும் பகிரும் எண்ணம் முதல் பகிர்வை பகிரும் போதுதான் தோன்றியது. அதுவும் நல்லாத்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

எனக்கு வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த சீனா ஐயாவுக்கும் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், ராஜி அக்கா இருவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களால் எனக்கு ஊக்க உரமிட்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

இனி எப்பவும் போல மனசு வலைப்பூவின் மூலமாக உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கும் வரை இந்த கிராமத்தானை நினைவில் நிறுத்தி வையுங்கள். முடிந்தால் என்னோட மனசுக்கு வாங்க...

எப்பவும் போல் இன்றும் நன்றி சொல்ல ஒரு பாடல்... கேளுங்கள் ரசிப்பீர்கள்...
நன்றி சொல்ல உனக்கு



ஒரு வாரம் என்னை ஆசிரியனாய் ஆக்கிப் பார்த்த வலைச்சரத்துக்கும் என்னோடு பயணித்த வலை நட்புக்களுக்கும் மீண்டும் நன்றி.
நட்புடன்
-சே.குமார்
பரியன் வயல்
தேவகோட்டை
(இ) அபுதாபி

மனசு வலைத்தளம்.
மேலும் வாசிக்க...

மதுரை வலைபதிவர் திருவிழா 2014- நேரலை....

வணக்கம்
தமிழ் வலைபதிவு நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...
PLAY button press செய்யவும்...
நேரலை:


Live streaming video by Ustream

மேலும் வாசிக்க...

ஒரு வானவில் போல...

நேற்றைய பகிர்வான ‘உன் சமையல் அறையில்’ என்ற பகிர்வுக்கு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி
--------------------
ன்றைய பகிர்வாக நாம் பார்க்க இருப்பது உலக வலைப்பூ நண்பர்கள் அனைவரும் அறிந்த முகங்கள் பற்றித்தான் என்பதை தலைப்பே சொல்லும் . இந்த அறிந்த முகங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருப்பினும் நான் விரும்பி வாசிக்கும் சிறப்பான பகிர்வர்களுக்காக ஒரு பகிர்வு போட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இப்பகிர்வு. இதில் எல்லோரையும் குறிப்பிடமுடியாது என்பது தெரியும். அதனால் சிலரைப் பற்ரி இங்கு பார்ப்போம். அதற்கு முன்னர் கொஞ்சம் பேசிக்கலாம்.

நம்ம நாட்டைப் பொறுத்தவரை நாலு பேருக்கு நல்லது செய்யிறவனை நாலு ஊருக்குத்தான் தெரியும். நடிகனையும் அரசியல்வாதியையும் நாய்க்கும் தெரியும் என்று எனது நண்பன் சொல்லுவான். ஆம்... அது உண்மைதான் என்ற போதிலும் தமிழ் எண்ணும் உயிர் இன்று முகம் பார்த்து அறியாவிட்டாலும் உலகமெங்கும் நட்பைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட பிரபல முகம் கிடைக்க காரணமாய் இருந்தது... இருப்பது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் வலைப்பூ.

கல்லூரியில் படிக்கும் போதும் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் நடத்திய போதும் அம்மாவை சைக்கிள் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிர்படுபவர்களில் பலர் கையைக் காண்பித்துச் செல்வார்கள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வரும் அம்மா, வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. உண்மைதான் இன்றும் தேவகோட்டையில் எனக்கு ஒரு உதவி என்றால் உறவுகளைவிட நட்புக்களே முன் நிற்பார்கள். இப்பவும் காசு பணம் இருக்கோ இல்லையோ வலைப்பூ மூலமாக உலகளாவிய உறவுகளாய்... ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழி என எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்களை இறைவன் எனக்களித்து இருக்கிறான். அப்படி எனக்குக் கிடைத்த உறவுகளில் சிலரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க எனது உறவு வட்டம்தான். இன்றைய பதிவில் புதியவர்கள் இல்லை... ஆனால் பல புதியவர்கள் அறிய வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும் என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் உலகளாவிய சூப்பர் ஸ்டார் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், செல்லமாக DD, நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பகிர்வார். இப்போ வலைப்பதிவர் மாநாட்டு வேலைகளில் ரொம்ப பிஸி என்பதால் வலைப்பக்கம் வருவதில்லை. இவரின் எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் என்ற பகிர்வில்...
“இந்தப் பாடல்களை சில பேர் கேட்டு இருப்பீர்கள்... சில நண்பர்கள் கேட்கவில்லை, பிளேயர் தெரியவில்லை. லோட் ஆக நேரம் ஆகிறது. பாடலின் திரைப்படம் தெரியவில்லை. அதனால் பணத்தைப் பற்றி எழுதிய மாயா... மாயா... எல்லாம் சாயா... சாயா... பதிவைப் போல் வரிகளாக எழுதுங்கள் என்று சொன்னதால் இதோ உங்களுக்காக...”


ந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையென்றால்... நான் ஆச்சர்யப்படமாட்டேன், இந்த உலகத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால்... ஆச்சர்யம் மட்டுமல்ல... வருத்தமும் அடையேன் என்ற எஸ்.எஸ்.வாசனின் வரிகளை தலைப்பில் மேற்கோள்காட்டி தேவியர் இல்லம் என்னும் வலைத்தளத்தை நடத்திவரும் எங்கள் மண்ணின் மைந்தரும் திருப்பூர் மாநகரில் வசிப்பவருமான எனதன்பு அண்ணன் ஜோதிஜி அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் விவரித்து மேற்கோள்கள் வைத்து நீண்ட பதிவாகத்தான் கொடுப்பார். தற்போது கூட ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்கள் என்ற தலைப்பில் பனியன் கம்பெனிக்குள் நடக்கும் அறியாத தகவல்களை அறியத் தருகிறார். அதில் ஒரு பகுதியான கொள்ளையடிப்பது தனிக்கலை என்ற பகிர்வில்....
“இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள்.”


சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே!!! என்று தனது வலைப்பூவான சும்மாவின் தலைப்பின் கீழ் சொல்லி வைத்திருக்கும் எங்க காரைக்குடிகாரரான பாசமிகு தேனம்மை லெஷ்மணன் அக்கா அவர்கள் பிரபல எழுத்தாளர், புத்தக் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர், இதையெல்லாம் விட வாஞ்சையாய் அன்பு செலுத்தும் பாசக்காரர். நிறைய எழுதுவார்... நிறைவாய் எழுதுவார். இவரின் சாட்டர்டே ஜாலி கார்னரில் பல பிரபலங்களிடம் கேள்விக்கான பதிலைப் பெற்று பதிவிடுவார். அதற்கு நல்ல வரவேற்பு. அதில் என்னையும் பிரபலம்ன்னு நினைச்சு போட்டுட்டாங்க. (ஐ... எப்படியோ நம்ம பதிவு ஒண்ணு அக்கா தளத்தில் இருக்குன்னு சொல்லியாச்சு) இவரின் ஸ்வரமும் அபஸ்வரமும் என்ற பகிர்வில்...
“மிகச்சிறப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு விஷயம்/ கவிதை/கட்டுரை/ கதை/ பகிர்வு தனக்கான வாசகர்களைக் காலம் கடந்தேனும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தே விடுகிறது. அப்போது அந்த விஷயத்தின் கனமும் மனமும் ஒன்றியிருக்க கருந்துளையும் பெருவெடிப்பும் மரணமும் பிறப்பும் துன்பமும் இன்பமும் ஒருசேர உணரமுடிகிறது.. விழிப்பற்ற நிலையா விழிப்பாவெனப் பகுபடாத ஒரு நிலையில் புத்தகம் சரணம் கச்சாமி.”


வன் ஜெயிக்கப் பிறந்தவன்  என்று சொல்லி WARRIOR என்னும் தளத்தில் எழுதும் எனது அண்ணன் தேவா சுப்பையா அவர்கள் எழுதிப் பழகுபவன் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் எப்படி எழுத வேண்டும் என்பது இவரின் தளத்தை வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எடுக்கும் தலைப்பில் இப்படியும் எழுத முடியும் என்று வாசித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இலக்கியமாய் விரித்தும் நடையில் அதே உணர்வுகளோடு நம்மையும் பயணிக்க வைக்கும் ஒரு சிலரின் இவரும் ஒருவர். செம்மண் பூமியில் (நம்ம பக்கந்தேன்) இருந்து வந்த பூங்காற்று இவர். இவரது பூங்காற்று புதிரானது...! பகிர்வில்....
“எப்போதுமே சுவையான நினைவுகளோடுதான் படு சுமாரான எல்லாவற்றையும் நாம் கடந்து வரவேண்டி இருக்கிறது. இருளான ராத்திரியின் கற்பனையோடு நான் நகரத்து வெளிச்சமான இராத்திரிக்குள் நடந்து கொண்டிருந்தேன். இருப்பதற்குள் இல்லாததை தேடி எடுத்து இருக்கிறது என்றே நினைத்துக் கொள்வது போலத்தான். புத்திக்குள் மூன்றாம் பிறை ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்திருப்பேன் ஒருவேளை நான் சீனு என்னும் பாத்திரமாக இருந்திருந்தால்....”

  
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் அன்பிற்குரிய அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள் மிகச் சிறப்பான எழுத்தாளர். இப்போ முகநூலில் எழுதுகிறார். அவ்வப்போது வலைக்கும் தீனி போடுகிறார். இவர் எழுதும் கவிதைகள் சிறப்பானவையாக இருக்கும். இவரின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போ!... என்ற பகிர்வில்...
“கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம், காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.”


ன்மீகப் பகிர்வென்றால் எனக்குப் பிடித்த இருவரில் முதலாமவர் அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்று சொல்லி தஞ்சையம்பதி என்னும் வலைத்தளத்தில் எழுதும் மரியாதைக்குரிய ஐயா துரை.செல்வராஜூ அவர்கள், எந்த ஒரு பகிர்வென்றாலும் நாம் அறியாத விஷயங்களை நிறைவாய்ச் சொல்வதுடன் அழகிய படங்களையும் இணைத்து... இத்தனை பொறுமையாக ஒரு பதிவை எழுதும் இவரைப் போன்றோரைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுவேன். அழகழகான படங்களுடன் அற்புதப்படைப்புக்கள் ஐயாவுடையது. அதில் துளசி தளம் என்னும் பகிர்வில்
“பவித்ரமான துளசியின் தளிரில் பிரம்மனும் மத்தியில் மஹாவிஷ்ணுவும் வேரில் சிவபெருமானும் நிலைத்திருக்கின்றனர். அதனால் - மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் துளசியை  ஏனைய முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னிரு சூரியரும் பதினோரு ருத்ரரும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் இருவரும் சூழ்ந்து துதித்திருப்பதாக ஐதீகம். “


ன்மீகப் பகிர்வில் எனக்குப் பிடித்த மற்றொருவர் அன்பிற்குரிய அம்மா திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் வாசிப்பது என்பது சுவாசிப்பது!! வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!! என்ற வரிகளுடன் மணிராஜ் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். செல்வராஜூ ஐயா போலவே தலவரலாறு, இறைவனின் சிறப்பு, பாடல்கள் என எல்லாம் விவரமாக எழுதி அழகழகாய் படங்கள் இணைத்தும் அற்புதமான பகிர்வாய்த்தான் தருவார். பெரும்பாலான நாட்களில் இருவரும் ஒரே ஆலயத்தைப் பற்றியோ... இறைவனைப் பற்றியோ... எழுதியிருப்பார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவரின் வெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி என்ற புதிய பகிர்வில்...
“முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவனன்.”


செங்கோவி என்னும் தளத்தில் பல்சுவையாய் கலக்கிய நண்பன் செங்கோவி (புனைப்பெயர்) அவர்கள், இன்றைய தேதியில் ஒரு படத்தை உறிச்சு... உறிச்சு... சிறப்பான விமர்சனம் எழுதி வலையுலகில் சினிமா விமர்சனத்தில் முக்கியபுள்ளியாக வலம் வருகிறார். திரைக்கதை இப்படித்தான் எழுத வேண்டும் என்பதை தொடராக எழுதி வருகிறார். அருமையான தொடர். இவரின் திரைக்கதை சூத்திரங்கள் என்னும் பகிர்வில்...
“தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் பாம் தியரிஎன்ற பெயரில் அழைக்கப்படுகிறது.”


கோதரர் பரிதி முத்துராசன் அவர்கள் தனது பெயரில் வைத்திருக்கும் வலைத்தளத்தில் சினிமாவும் சினிமா செய்திகளும் என்று சொல்லியிருப்பதால் சினிமா விமர்சனம், கருத்துக்கணிப்பு என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பகிர்வுகளும் அருமையாகப் பகிர்வார். இவரின் மெட்ராஸ் - சினிமா விமர்சனம் என்ற பகிர்வில்...
“படத்தில் நிறையக் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக உலாவருகின்றன. அதில் மனதில் நிற்பவர்கள் காளியின் நண்பனாக வரும் அன்பு, அன்புவின் மனைவி மேரி, கண்ணனின் ஆதரவாளர்களாக வரும் விஜி, மாரி, கண்ணன், காளியின் அம்மா, பைத்தியமாக வந்து கலகலப்பூட்டும் பரட்டைத்தல ஜானி...”


சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... என்று சொல்லும் நான் மாடக் கூடலில் பிறந்த சகோதரர் பகவான்ஜி அவர்கள் தனது ஜோக்காளி என்னும் வலைத்தளத்தில் நகைச்சுவைகளை அள்ளிக் கொடுக்கிறார். ரசிக்க ரசிக்க பதிவுகளைக் கொடுப்பதில் வல்லவர். இன்றைய தேதியில் தமிழ் மணத்தில் முதலாமிடத்தில் இருக்கும் எழுத்தாளர். இவரின் புருஷனுக்கு ரொம்ப ஆசைதான் என்ற நகைச்சுவையில்...
போலீஸ்  சார்ஜ்ன்னா  இவருக்கு  தெரியாது போலிருக்கு  !''போலீஸ்காரன் என்கிட்டே எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
''நீங்க சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே”


கரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பிரபல முகமான ஈரோடு கதிர் அண்ணன் அவர்கள், நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற பதத்துடன் கசியும் மௌனம் என்னும் வலைப்பூவில் எண்ணங்களை வண்ணங்களாக்கித் தருகிறார். இவரின் படைப்புக்கள் எல்லாம் வாழ்வியல் பேசும். இவரைப் போலவே இவரின் கீச்சுக்களும் மிகப் பிரபலம். இவரின் ஆடிய ஆட்டமென்ன என்ற பகிர்வில்...
“முன்பெல்லாம் வகுப்பில் குறும்பு செய்யும் பசங்களைப் பேர் எழுதிக்கொடுப்பதுபோல், அடங்கவில்லை, மிக மிக அடங்கவில்லை என அவர்களின் பெயர்களை எழுதிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. யாரிடம் கொடுப்பது, மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தாவிடமா கொடுக்க முடியும்.கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. சிலநாட்களுக்கு முன்பு அவர் வாசித்த ரயில்வே பட்ஜெட் நினைவுக்கு வந்தது.”


ன்னும் நிறைய... நிறையச் சொல்ல ஆசை பதிவின் நீளம் கருதி சில பிரபலங்களின் தள முகவரி மட்டும் இணைக்கிறேன். இது வலைச்சர விதிகளுக்கு மாறானது என்றாலும் நிறைய அறிமுகங்களைக் கொடுத்ததால் சீனா ஐயா அடியேனை மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் இதோ சிலரின் பக்க இணைப்புக்கள்.


திரு. பால கணேஷ்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்! 

திரு. முனைவர் இரா.குணசீலன்

மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை 

திரு. கில்லர்ஜி

பூவைப் பறிக்கக் கோடாரி எதற்கு? 

திரு. கோவை ஆவி




திரு. வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்ததும்


திரு. டி.என்.முரளிதரன்

மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா? 

திரு. சிபி. செந்தில்குமார்




திரு. பிரபாகரன்
காற்றில் கனிகள் விழுந்திடும் வரையில் காத்திருக்காதே... கல்லடி கிடைக்கும் 

திரு. சென்னை பித்தன்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் 

திரு. அ. பாண்டியன்
என் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில் 

கவிஞர். கி.பாரதிதாசன்

தமிழ் இலக்கண இலக்கிய மின்வலை 

திரு. சரவணன்
கல்விக்கான சிறப்பு வலை


திருமதி. மனோ சாமிநாதன்

கலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே!! 

திருமதி. அனிதாராஜ்
மனதில் உதிர்க்கும் எண்ணங்களை கிறுக்கல்களாய் இங்கே படைக்கிறேன் 

திருமதி. ராமலெஷ்மி ராஜன்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாக கோர்த்தபடி


இங்கு என் நட்புவட்டத்தில் இருக்கும்  அனைத்து எழுத்தாளர்களையும் சொல்லத்தான் ஆசை. அதற்கான கால நேரம் வரும்போது கண்டிப்பாக மற்றவர்களைப் பற்றியும் பகிரலாம்.

இன்றைய பகிர்வு ரொம்ப நீளமாகிவிட்டது. படித்த உங்களுக்கு மூச்சு வாங்கியிருக்கும்.  அதனால அப்படியே இந்தப் பாட்டைப் பாருங்க... கொஞ்சம் உற்சாகம் வரும்.

ஒரு வானவில் போல


மதுரையில் இன்று நடக்கும் வலைப்பதிவர் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்.

நன்றி. 

-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது