Monday, February 26, 2007

வலைப்பூ ➜ வலைச்சரம்

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் கவனப் படுத்தப் பட்டார்கள். முக்கியமான பதிவுகள் அதில் சுட்டிக் காட்டப் பட்டும் விமர்சிக்கப் பட்டும் தவறவிடப் படாமல் வாசிக்க உதவின.

வலைப்பூ இதழ் ஆசிரியர் என்பது பின்னர் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவாக மாறியது. ஆனால் வலைப்பூவில் வலைப்பூ ஆசிரியர் செய்தது போல தாங்கள் வாசித்த பதிவுகளின் விமர்சனமாகவோ தொகுப்பாகவோ நட்சத்திரப் பதிவர்கள் செயல்பட அவசியமில்லாமல் தங்கள் படைப்புகளை அந்த வாரத்தில் முதன்மைப் படுத்துவதாக மட்டுமே அமைந்து விட்டது. அதே சமயம் தமிழ்மணத்தின் இப்போதைய பூங்கா இதழ் வலைப்பதிவர்களின் படைப்புகளை தொகுத்து வழங்குவதன் மூலம் இன்னொரு விதமாக அந்த சேவையை மீண்டெடுத்துள்ளது.

கில்லி ஓரளவுக்கு வலைப்பூ போன்றதொரு அமைப்பை கொண்டுள்ளது. எனினும் பெரும்பாலும் ஆங்கிலப் பதிவுகளையே கில்லி முன்னிலைப் படுத்துகிறது என்பதால் இதுவும் வலைப்பூ ஆசிரியர் அளவுக்கு தமிழ் வலைப்பூக்களை அறிமுகம் செய்வதாக இல்லை.

பாஸ்டன் பாலா தனிநபராக தனது snape judgement மூலம் சில பதிவுகளை அறிமுகம் செய்து ஆவணப் படுத்தி வருகிறார்.

எனினும் அன்றைய வலைப்பூ தந்த சேவையை, திருப்தியை வழங்கும் சேவைகள் இப்போது இல்லாததால் அதுபோன்றதொரு முயற்சியை மீண்டும் உருவாக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

அன்றைய வலைப்பூ மூலம் பல புதிய பதிவர்களுக்கு ஊக்கமும் வெளிச்சமும் கிடைத்தது. பல்வேறு விதமான விமர்சனப் பார்வைகள் மூலம் முக்கியமான பதிவுகள் கவனப் படுத்தப் ட்டன. அதற்கு மேலாக அவை அங்கே ஆவணப் படுத்தப் பட்டன. அது போன்றதொரு முயற்சி மீண்டும் தமிழ் வலைப்பதிவுலகிற்கு தேவை என்ற எண்ணத்தில் விளைந்த ஒரு முயற்சி இது.

வலைச்சரம் என்ற வலைப்பதிவு அதற்கென உருவாக்கப் பட்டுள்ளது. வலைப்பதிவர்களில் ஒருவர் ஒரு வார காலம் தன் பார்வையில் கவர்ந்த, முக்கியமான வலைப்பதிவுகள், இணைய தளங்களைப் பற்றி சில வரிகளில் சிறு விமர்சனக் குறிப்பினை இட்டு அறிமுகம் செய்வார்.

இதற்கென தேர்வு செய்யப் படும் வலைப்பதிவர் அந்த ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று பதிவுகள் முதல் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் இடலாம். ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவு அல்லது இணைய தளத்தை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். இது போன்ற சில விதிமுறைகளின் அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப் பட்ட நோக்கங்களுடன் வலைச்சரம் உங்கள் முன் வலை(ப்பதிவு)ச்சரம் தொடுத்துப் படைக்க வருகிறது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தளம் மற்றும் முயற்சி குறித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன...

Thursday, February 22, 2007

தமிழ்ப்பதிவுகள்

2003 ஜனவரி முதல் நாள் கார்த்திக்ராமாஸ் ஆரம்பித்த தமிழ் வலைப்பதிவுலகம் இன்று சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த பதிவர்களில் தமிழர்களான சிலர் தமிழிலும் வலைப்பதியலாம் என்று உணர்ந்ததும் ஆங்காங்கே தமிழிலும் எழுதத்தொடங்கினர்.

அப்படி எழுத வந்தவர்களில் ஒருவரான மதிகந்தசாமி தமிழில் எழுதப்படும் பதிவுகளை தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல் ஆக ஒரு வலைப்பதிவிலேயே தொகுக்க ஆரம்பித்தார்.

பின்னர் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பதிவுகளை தானாகவே தொகுக்கும் திரட்டி ஒன்றை உருவாக்கி தமிழின் முதல் வலைப்பதிவு திரட்டியான தமிழ்மணத்தை உருவாக்கினார் இன்னொரு வலைப்பதிவரான காசி ஆறுமுகம்.

பிறகு வலைப்பதிவுகளின் பெருக்கமும் தமிழ்மணத்தில் இடம்பெறாத வலைப்பதிவுகளும் மற்றொரு வலைப்பதிவரான சாகரனுக்கு தேன்கூடு என்னும் மற்றொரு வலைதிரட்டியை உருவாக்க உந்துதலாக அமைந்தது.

பல தமிழ் வலைப்பதிவு எழுதுகருவி நிரல்களை உருவாக்கிய சுரதா யாழ்வாணனும் வலைப்பதிவுக் குடில் ஒன்றை உருவாக்கிய போதிலும் அவர் அதைத் தொடரவில்லை.

பின்னர் எகலப்பை தந்த தமிழா முகுந்த் தமிழ்ப்பதிவுகள் திரட்டியை உருவாக்கினார். இன்றைக்கு இம்மூன்று திரட்டிகளும் மட்டுமன்றி டெக்னோரட்டி, டெலிசியஸ் போன்ற வலைத்தொகுப்பான்கள் மூலமாகவும் தமிழ் வலைப்பதிவுகள் திரட்டப் பட்டு ஏராளமான வாசகர்களால் வாசிக்கப் படுகிறது.

சிறிய குறிப்புகள் மற்றும் அனுபவங்கள் மட்டும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவுகள் இன்று மிப்பெரிய மாற்றூடகமாக மாறிவிட்டன. எழுத்து, குரல், படம், ஒலி-ஒளி என எல்லா பல்லூடகத் தன்மைகளும் இன்று வலைப்பதிவுகளில் சாத்தியமாகியுள்ளன.

எல்லா நன்மைகளிலும் தீமை கலந்தே இருப்பது போல வலைப்பதிவுகளிலும் சாதி, சமயச் சண்டைகளும் குழுச்சண்டைகளும் பெருகியுள்ளன. எனவே பாலையும் நீரையும் பிரித்துண்ணும் அன்னம் போல நல்ல பதிவுகளை அடையாளம் கண்டு வாசிப்பது இன்றைய வலைப்பதிவுப் பெருக்க சூழலில் தேவையாக உள்ளது. அதற்கான முயற்சிகள் பலவும் நடந்தே வருகின்றன. அவை பற்றி...

(தொடரும்)