Wednesday, March 28, 2007

தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!


=======================================================
தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!

கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின் முதல்
சிறப்பு அம்சம் அங்கே வந்து சேரும் பலவிதமான
மக்கள் கூட்டம்தான்.

அதோடு அந்தக்கூட்டத்தை நம்பி டென்ட் அடித்துக்
கடைவிரிக்கும் வியாபாரிகளும், ஜவ்வு மிட்டாய், பலூன்
போன்ற சில்லுண்டிச் சாமான்களை விற்கும் (நடை)
ராஜாக்களும், குடைராட்டிணம், ராட்சச சுழலும் சக்கரம்
இத்யாதி போன்ற குழந்தைகளைக் கவரும் வித்தைக்
காரர்களும் அங்கே கூடுவது கூடுதல் சிறப்பு.

ஒரே கலகலப்பாக இருக்கும்!

தமிழ்மணமும் அப்படித்தான் தினமும் திருவிழா
நடக்கும் இடமாகி விட்டது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை
நாட்களில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கும்
அவ்வளவுதான். மற்றபடி வருடம் 365 நாட்களுமே
திருவிழாதான்

கலகலப்பிற்கும், வேடிக்கைகளுக்கும், உற்சாகத்திகும்
உரசல்களுக்கும் என்றும் குறைவில்லை!

இங்கே வந்துபோகும் எண்ணிக்கையற்ற தமிழ்
வாசகர்கள்தான் மக்கள் கூட்டம்..

பதிவர்கள் அத்தனை பேர்களுமே வியாபாரிகள் அல்லது
நடைராஜாக்கள் (இதற்கு விளக்கம் மேலே உள்ளது)

சில பல பதிவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு
நாட்கள் பதிந்து விட்டு மற்ற நாட்களில் அவர்களும்
பொதுமக்களுடன் மக்களாக விழாவில் கலந்து கொள்ள
வருவார்கள்!

Monetary Benefit' என்ற ஒன்று துளிக்கூட இல்லாவிட்டாலும்
தங்கள் பதிவுகளின் மூலம் தங்கள் எண்ணங்களையும்,
கருத்துக்களையும், திறமையான எழுத்தாற்றல்களையும்
இலவசமாகக்கொடுத்து ஒன்று பெயர் வாங்க அல்லது
மனத்திருப்திகொள்ள வருபவர்கள் அவர்கள்!

நான் இந்தத் திருவிழாவிற்குள் 23.12.2005 அன்று காலெடி
எடுத்து வைத்தபோது இருந்த ராஜாக்களின் எண்ணிக்கை
800க்கும் குறைவு . இந்தப் பதினைந்து மாத காலத்தில்
அந்த எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்திருக்கிறது.

அதுபோல மக்கள் கூட்டமும் அதிகரித்திருக்கிறது.

சரி இவ்வளவு கூட்டத்தையும் தாங்கும் அளவிற்குத் தமிழ்
மணத்தின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி
மேம்பட்டிருக்கிறதா என்றால் மேம்பட்டிருக்கிறது.

ஆனாலும் இன்னும் சற்று அதிகப்படியான வசதிகள்
செய்து தரப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!

மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிகத்தான் திருவிழா
சிறப்பாக இருக்கும். அதனால் அதை வரவேற்போம்.

ஆனால் ராஜாக்களுக்கும் உரிய வசதிகள செய்து தரப்பட
வேண்டும்!

சரி இங்கே தினமும் வந்து கடைவிரிக்கும் ராஜாக்களின்
எண்ணிக்கையையும், அவர்கள் கொண்டுவரும் பதிவுகளின்
வகைகளையும் கீழ்க்கண்ட அட்டவனைகள் மூலமாகப்
பார்ப்போம்.

இதற்காக நான் எடுத்துக் கோண்டது 15.3.2007 முதல் 22.3.2007
வரை வந்த பதிவுகள் . அவைகள் மொத்தம் 1028 (7 நாட்களில்)

சராசரியாகத் தினமும் 150 பதிவுகள் வருகின்றன!

==================================================

எண்ணிக்கை வரிசையில் பதிவு வகைகளின் பிரிவுகள்

=========================================================

தமிழ்மணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள வரிசையில் பிரிவுகள்


============================================================

சதவிகித அடிப்படையில் பிரிவுகள்

=======================================================

இந்த அட்டவணைகளின் நோக்கம் எந்தப் பிரிவில்

எத்தனை பதிவுகள் இடப்படுகின்றன. நெருக்கடி எங்கே

அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்!

==================================================

முகப்பில் அண்மையில் எழுதப்பெற்றவை என்னும்
இடத்திற்குக் கீழே இடம் பெறும் பதிவுகள்தான் அதிகம்
பேர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை!! படிக்கும் வாய்ப்பை அதிகமாகப் பெறுபவை!

சுமார் 20 அல்லது 22 பதிவுகளுக்குத்தான் அந்த வாய்ப்பு
அதுவும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரைதான்
பதிவுகள் அங்கே நிற்கவும் முடியும்!.

சகபதிவர்களும், வாசகர்களும் பல தேசங்களில்
வசிப்பவர்கள் ஆதலால் இரவு, பகல் என்று எந்தப்
பாகுபாடும் இன்றி, அவரவர்கள் வசிக்கும் தேசங்களைப்
பொறுத்து வந்து போகும் நேரமும் மாறுபடுவதால்,
முகப்பை மட்டும் வைத்துப் பதிவுகள் பார்க்கப்பட்டுவிடும்
என்று சொல்வதற்கில்லை!

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட
இடுகைகள் என்ற பக்கத்தில் உள்ள 16 பிரிவுகளில்
பதிவுகளைக் காண முடிகிறது.

ஆனாலும் அங்கேயும் இட நெருக்கடி.

பல பிரிவிகளில், கடைசியாக வந்த 5 இடுகைகள் மட்டுமே
பதிவரின் பெயர், பதிவின் தலைப்பு, பதிவின் Pofile படம்,
மற்றும் பதிவின் ஆரம்ப வரிகள் என்று அசத்தலாகக்
கண்ணில் பட்டு கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்

அதற்கு முன் வந்தைவைகள் எல்லாம் நெருக்கடிபட்டு
சடடை கசங்கி, தலை கலைந்து காணப்படும்! உற்றுப்
பார்த்தால்தான் அவைகள் கண்ணுக்குத் தெரியும்

அந்தப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளூமே நாள்
முழுவதும் பொலிவோடு தெரிவதற்கு வகை செய்யப்பட
வேண்டும். இந்தப் பதிவின் நோக்கமும் அதுதான்!

நான் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பக்கங்களின் அளவை
அல்லது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!

அதுதான் ஒரு நல்ல தீர்வு!

தமிழ்மணம் நிர்வாகத்தினர் இதைச் செய்வார்களா?

நாம் அனைவரும் ஏகமனதாக எடுத்துரைத்தால்
செய்யமாட்டார்களா என்ன?

உங்கள் மேலான கருத்து என்ன?

பின்னூட்டத்தில் சொல்லுபடி கேட்டுக்கொள்கிறேன்!

அன்புடன்
SP.VR. சுப்பையா,
இந்த வார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்

======================================

35 comments:

  1. //அந்தப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளூமே நாள்
    முழுவதும் பொலிவோடு தெரிவதற்கு வகை செய்யப்பட
    வேண்டும். இந்தப் பதிவின் நோக்கமும் அதுதான்!

    நான் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பக்கங்களின் அளவை
    அல்லது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!

    அதுதான் ஒரு நல்ல தீர்வு!

    தமிழ்மணம் நிர்வாகத்தினர் இதைச் செய்வார்களா?

    நாம் அனைவரும் ஏகமனதாக எடுத்துரைத்தால்
    செய்யமாட்டார்களா என்ன?

    உங்கள் மேலான கருத்து என்ன?//

    ஆசிரியர் கருத்தோடு நான் ஒத்துப்போகின்றேன்..

    சென்ஷி

    ReplyDelete
  2. //சில பல பதிவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு
    நாட்கள் பதிந்து விட்டு மற்ற நாட்களில் அவர்களும்
    பொதுமக்களுடன் மக்களாக விழாவில் கலந்து கொள்ள
    வருவார்கள்!//

    விழாவில் கலந்துக்க பொதுமக்களுடன் வந்திருக்கேன், யாரும் விலாவில் குத்தி விடாதீர்கள்

    யோவ் டெல்லி! ஆணி உனக்கு கம்மியா? எங்க போனலும் வந்து நிக்கிற? ஹி ஹி இங்கேயும் தற்போதைய நிலவரப்படி கம்மி!

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  3. வாத்தியார் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.

    நானும் 'ஓ(ட்டு)' போட்டுக்கறேன்.

    ReplyDelete
  4. ஆசிரியரின் கருத்து சரிதான்.. வலைத்தளத்திற்குள் வருபவர்கள் அனைவருக்குமே இது முழு நேரப் பணியல்ல. தங்களின் பணிச்சுமையைக் குறைக்கும் அல்லது போக்கும் ஒரு மன திருப்திதான் இந்த வலைப்பதிவிற்குள் வருகையும், பதிவுகளும்.. ஆகவே ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே வலைப்பதிவிற்கும் வரும் பட்சத்தில் மீதி இருக்கும் இருபது அல்லது இருபத்தொன்று மணி நேரத்தில் இடப்பட்ட செய்திகள் அவரால் படிக்க முடியாமல் போகிறது. ஆசிரியர் அவர்கள் தெரிவித்ததைப் போல் இரண்டு பக்கங்களுக்கு இருந்தால் கூடுதலாக அவர்களுக்குப் பிடித்தவைகளை அவர்களால் படிக்க இயலுமே.. சுப்பையா ஸார்.. உங்களுக்கு ஒரு சல்யூட்..

    ReplyDelete
  5. மிஸ்டர் சென்ஷி,
    மிஸ்டர் சரவணன்,
    சகோதரி துளசி!

    உங்கள் மூவருடைய வருகைக்கும்
    கருத்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  6. வாத்தியார் ஐயா

    நல்ல விச்யம்தான். இலவ்சமாகக் கிடைக்கும் வசதி என்பதால் ஆளாளுக்கு நான்கும் ஐந்தும் பதிவுகளும் கூட வைத்துக்கொள்கிறார்கள்.

    உங்கள் கோரிக்கை நியாயமானதுதான்.ஆனால், எவ்வளவு சுமையைத்தான் திரட்டிகளும் தாங்கும்?

    'பீலிபெய் சாகாடும்'னு வள்ளுவர் ஏதோ சொல்லியிருப்பாரே? :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  7. ////உண்மைத் தமிழன் said...
    ஆசிரியரின் கருத்து சரிதான்.. வலைத்தளத்திற்குள் வருபவர்கள் அனைவருக்குமே இது முழு நேரப் பணியல்ல. தங்களின் பணிச்சுமையைக் குறைக்கும் அல்லது போக்கும் ஒரு மன திருப்திதான் இந்த வலைப்பதிவிற்குள் வருகையும், பதிவுகளும்.. ஆகவே ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே வலைப்பதிவிற்கும் வரும் பட்சத்தில் மீதி இருக்கும் இருபது அல்லது இருபத்தொன்று மணி நேரத்தில் இடப்பட்ட செய்திகள் அவரால் படிக்க முடியாமல் போகிறது. ஆசிரியர் அவர்கள் தெரிவித்ததைப் போல் இரண்டு பக்கங்களுக்கு இருந்தால் கூடுதலாக அவர்களுக்குப் பிடித்தவைகளை அவர்களால் படிக்க இயலுமே.. சுப்பையா ஸார்.. உங்களுக்கு ஒரு சல்யூட்../////

    வாருங்கள் டைரெக்டர் சார்! உங்கள் சல்யூட் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

    படத்திற்கு ஹீரோ ரோலிற்கு புதுமுகம் வேண்டுமென்றால் சொல்லுங்கள்
    அரவிந்தசாமி லுக்கில் டில்லியில் ஒரு ஆள் இருக்கிறது!
    ( இந்தப் பதிவின் முதல் பின்னூட்டம் அவர்தான்):-))))

    ReplyDelete
  8. ///// ஆசிப் மீரான் said...
    வாத்தியார் ஐயா
    நல்ல விச்யம்தான். இலவ்சமாகக் கிடைக்கும் வசதி என்பதால் ஆளாளுக்கு நான்கும் ஐந்தும் பதிவுகளும் கூட வைத்துக்கொள்கிறார்கள்.

    உங்கள் கோரிக்கை நியாயமானதுதான்.ஆனால், எவ்வளவு சுமையைத்தான் திரட்டிகளும் தாங்கும்?

    'பீலிபெய் சாகாடும்'னு வள்ளுவர் ஏதோ சொல்லியிருப்பாரே? :-)

    சாத்தான்குளத்தான ////

    " பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்"

    கூகுள், யாஅகூ, எம்.எஸ்.என் ஸ்பேஸ் திரட்டிகளை நினத்துப் பாருங்கள்
    சாத்தான் குளத்தாரே!

    அவற்றின் அள்வில் 1000த்தில் ஒரு பங்கு இருக்குமா நமது தமிழ்மனத் திரட்டி?

    இன்னும் ஐந்து வருடத்திற்குள் இதே ரேஷியோவில் பதிவுகளின் எண்ணிக்கை
    நிச்சயம் பத்தாயிரத்தைத் தாண்டும்! அப்போது என்ன செய்யப் போகிறோம்?

    அதெல்லாம் மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    இன்றைய தொழில் நுட்ப உலகில் சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை
    என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்!

    ReplyDelete
  9. //படத்திற்கு ஹீரோ ரோலிற்கு புதுமுகம் வேண்டுமென்றால் சொல்லுங்கள்
    அரவிந்தசாமி லுக்கில் டில்லியில் ஒரு ஆள் இருக்கிறது!
    ( இந்தப் பதிவின் முதல் பின்னூட்டம் அவர்தான்):-))))//

    அவர் நாகேஷ் மாதிரில்ல இருப்பாரு..

    :)

    என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணலயே..

    சென்ஷி

    ReplyDelete
  10. வாத்தியார் ஐயா, ரொம்ப நல்லாத்தான் சொன்னீங்க.. இதோ நானும் என் கையை தூக்கிட்டேன்.

    ReplyDelete
  11. //வாருங்கள் டைரெக்டர் சார்! உங்கள் சல்யூட் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது!//
    அதெல்லாம் சரி வாத்யாரே.. இதென்ன புதுசா ஒரு மரியாதை.. டைரக்டர்ன்னுட்டு.. ஏற்கெனவே நான் வலைத்தளத்துல அனாதைப் பய.. இதுல நீங்க வேற கெத் ஏத்தாதீங்க.. இல்லாட்டி நம்ம பக்கத்து ஆளா.. நல்லா தெரிஞ்சுதான் கலாய்க்கிறீங்களா? அப்பா யாரையுமே நம்ப முடியலப்பா..

    ReplyDelete
  12. //// சென்ஷி said... //படத்திற்கு ஹீரோ ரோலிற்கு புதுமுகம் வேண்டுமென்றால் சொல்லுங்கள்
    அரவிந்தசாமி லுக்கில் டில்லியில் ஒரு ஆள் இருக்கிறது!
    ( இந்தப் பதிவின் முதல் பின்னூட்டம் அவர்தான்):-))))//
    அவர் நாகேஷ் மாதிரில்ல இருப்பாரு..
    என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணலயே..
    சென்ஷ/////

    என்ன சென்ஷி ந்ம்ம வகுப்பு மாண்வர்கள் என்றால் எனக்கு ரத்தத்தின்
    ரத்தமானவர்கள் - அவர்களை வைத்துக் காமெடி பண்ணுவேனா என்ன?
    உண்மையிலேயே அது பரிந்துரைதான்!

    ReplyDelete
  13. //////// கோவை ரவீ said...
    வாத்தியார் ஐயா, ரொம்ப நல்லாத்தான் சொன்னீங்க..
    இதோ நானும் என் கையை தூக்கிட்டேன்.////

    எவ்வளவு கஷ்டப்ப்ட்டுப் பாட்டெல்லாம் பதிவிடுறீங்க?
    அது 4 அல்லது 6 மணி நேரத்திற்குப் பிறகு திருவிழாக் கூட்டத்தில்
    காணாமல் போய்விட்டால் வருத்தமாக இருக்காதா?

    ReplyDelete
  14. ////// உண்மைத் தமிழன் said...
    //வாருங்கள் டைரெக்டர் சார்! உங்கள் சல்யூட் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது!//
    அதெல்லாம் சரி வாத்யாரே.. இதென்ன புதுசா ஒரு மரியாதை.. டைரக்டர்ன்னுட்டு..
    ஏற்கெனவே நான் வலைத்தளத்துல அனாதைப் பய..
    இதுல நீங்க வேற கெத் ஏத்தாதீங்க..
    இல்லாட்டி நம்ம பக்கத்து ஆளா.. நல்லா தெரிஞ்சுதான்
    கலாய்க்கிறீங்களா? அப்பா யாரையுமே நம்ப முடியலப்பா..////

    அடடா! வலைத்தளத்துல அனாதைப் பய என்ற நினைப்பு உங்களுக்கு வரலமா?
    நான் இருக்கிறேன் தோள் கொடுக்க!

    எனக்கு கலாய்க்கிற வயசெல்லாம் இல்லை!
    உங்கள் Blog Profile ஐப் பார்த்துவிட்டுத்தான் டைரெக்டர் என்றேன்!

    உங்கள் Blog Profile இதோ:
    உண்மைத் தமிழன்
    Age: 37
    Gender: Male
    Astrological Sign: Aquarius
    Zodiac Year: Rooster
    Occupation: Writer-Director
    Location: Chennai : Tamilnadu

    அதில் என்னவென்று உள்ளது - நீங்களே மறுபடியும் ஒருமுறை பாருங்கள்!

    ReplyDelete
  15. //Occupation: Writer-Director
    Location: Chennai : Tamilnadu

    அதில் என்னவென்று உள்ளது - நீங்களே மறுபடியும் ஒருமுறை பாருங்கள்!//

    வாத்தியார் தப்பு பண்ணமாட்டார்..
    ஆனா என்னை எப்படி சூஸ் பண்ணாருன்னுதான் தெரியல :)

    ஆனாலும் ரெடியாகிட்டேன் யாருப்பா அங்க என்கூட டூயட் ஆட போட்டி போடுறது :)

    சென்ஷி

    ReplyDelete
  16. //ஆனாலும் ரெடியாகிட்டேன் யாருப்பா அங்க என்கூட டூயட் ஆட போட்டி போடுறது//

    சென்ஷி,

    நான் ஓ.கே வா?

    ReplyDelete
  17. அடடே! வாத்தியாருக்கு ஒரு வணக்கம் சொல்ல மறந்துட்டனே!

    வணஆஆஆஆஆக்கம் ஐயாஆஆஆஆஆஆஆஅ!

    ReplyDelete
  18. மக்களை நம்பி அனானி & அதர் ஆப்ஷன் என்று எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது பார்த்தீர்களா?

    யார் யாரோ வந்து எழுதி வைத்துவிட்டுப் போகிறார்களே ஸ்வாமி!

    மிஸ்டர் சிந்தாமணி இதைச் சற்று கவனியுங்கள்;_))))

    ReplyDelete
  19. சிந்தாமணி? ;)

    கதாநாயகன் இருந்தால் கதாநாயகி வரத்தானே செய்வார். விடுங்க ஐயா...இதெல்லாம் சும்மா ஜாலிக்கு உங்க சீடர்கள் யாரோ விளையாடுவதுதான். ;)))

    ReplyDelete
  20. ////சிந்தாமணி? ///

    இதுவும் நல்ல பெயர் - மேலும் வழக்கில் உள்ள பெயர். வேண்டாம் என்று சொல்லாமல் இதையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்
    வாத்தியார் கொடுத்த பரிசாக நினைத்துக் கொள்ளுங்கள்!

    ///கதாநாயகன் இருந்தால் கதாநாயகி வரத்தானே செய்வார். விடுங்க ஐயா...இதெல்லாம் சும்மா ஜாலிக்கு உங்க சீடர்கள் யாரோ விளையாடுவதுதான். )///

    தெரிந்துதான் ஸ்மைலி போட்டிருக்கிறேன்!
    நயன்தாரா ஏற்கன்வே கால்ஷீட் தகறாரு!
    போட்டவன் ஒரு உருப்படியான நடிகையின் பெயரைப் போட்டிருக்கக்கூடாதா என்ற் வருத்தம்தான்!

    சென்ஷிக்கு இன்றைய தேதியில் சரியான ஜோடி கோவை சரளாதான்!:-))))

    ReplyDelete
  21. //கதாநாயகன் இருந்தால் கதாநாயகி வரத்தானே செய்வார்.//

    இந்த வார கதாநாயகன் வாத்தியார் தானே?

    நலம்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?

    ஐயா! உடலும் உள்ளமும் நலம்தானா?

    ReplyDelete
  22. ////நலம்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?
    ஐயா! உடலும் உள்ளமும் நலம்தானா?////

    மறைந்திருந்து பின்னூடம் போடும் மர்மமென்ன?- மாணவனே
    மர்மமென்ன?- என் வகுப்பு மாணவனே
    மர்மமென்ன?

    ReplyDelete
  23. //மறைந்திருந்து பின்னூடம் போடும் மர்மமென்ன?- மாணவனே
    மர்மமென்ன?- என் வகுப்பு மாணவனே
    மர்மமென்ன? //

    வாத்தியின் முகம் காண அச்சமே! உங்கள் பிரம்புக்கு நான் ஓடக் கூடாதே!
    உங்கள் பிரம்புக்கு நான் ஓடக் கூடாதே!

    ReplyDelete
  24. //தெரிந்துதான் ஸ்மைலி போட்டிருக்கிறேன்!
    நயன்தாரா ஏற்கன்வே கால்ஷீட் தகறாரு!
    போட்டவன் //

    அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்! அவையடக்கத்துடன்(!?) கேட்டால் தக்க பதில் கிடைக்கும்!

    :))

    (இதுவும் ச்சும்மா ஜாலிக்குத்தான்)

    ReplyDelete
  25. எந்தன் கண்* பட்டதால் உங்கள் உள்ளத்திலே

    புண் பட்டதோ அதை நான் அறியேன்!

    :(

    *கண் - பின்னூட்டம்

    ReplyDelete
  26. வாத்தியாரே, நல்லா வியாபரம் ஆகிற கடையில் கூட வந்து இன்னைக்கு 40 பேருக்கு வித்தாச்சா இனிமே நீ முதல் வரிசை கடையில் இருக்கக்கூடாதுன்னு இருட்டா இருக்கிற இடத்துக்குத் தள்ளிடறாங்களே. இதுக்கு என்ன செய்ய? :))

    ReplyDelete
  27. மாண்புமிகு மாணவன், நக்கீரன்
    தில்லானா மோகனாம்பாள் என்று பல பெயர்களில் உள்ளே வந்து கலாய்த்துக் கொண்டிருக்கும் மாணவர்
    யாரென்று தெரிந்து விட்டது!

    வகுப்பறைக்கு வரட்டும் பேசிக்கொள்கிறேன்

    அவர் ஒருவரே பின்னூட்டம்போட்டு பின்னூட்ட எல்லையை தாண்டும்படி செய்து விட்டால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

    ஆக்வே இதை இத்துடன் விடுகிறேன்

    அவருக்குப் பதில் வகுப்பறையில் காத்திருக்கிறது!

    ReplyDelete
  28. /// இலவசக் கொத்தனார் அவர்கள் சொல்லியது: வாத்தியாரே, நல்லா வியாபரம் ஆகிற கடையில் கூட வந்து இன்னைக்கு 40 பேருக்கு வித்தாச்சா இனிமே நீ முதல் வரிசை கடையில் இருக்கக்கூடாதுன்னு இருட்டா இருக்கிற இடத்துக்குத் தள்ளிடறாங்களே. இதுக்கு என்ன
    செய்ய:-))////

    அதானே! உங்களைப் போன்ற சிறந்த முன்னனி வியாபாரிகளைக்காகத்தான் இந்தப் பதிவே எழுதப்பட்டது!

    எங்கே மதிப்புற்குரிய டீச்சர் அக்காவைக் காணவில்லை?

    ReplyDelete
  29. //மாண்புமிகு மாணவன், நக்கீரன்
    தில்லானா மோகனாம்பாள் என்று பல பெயர்களில் உள்ளே வந்து கலாய்த்துக் கொண்டிருக்கும் மாணவர்
    யாரென்று தெரிந்து விட்டது!

    வகுப்பறைக்கு வரட்டும் பேசிக்கொள்கிறேன்//

    அடப் பாவமே! பழி ஓரிடம்! பாவம் ஓரிடமா?

    ReplyDelete
  30. //வகுப்பறைக்கு வரட்டும் பேசிக்கொள்கிறேன்//


    பேசிக் கொல்கிறேன் என்றல்லவா இருக்க வேண்டும்!

    ReplyDelete
  31. ///பேசிக் கொல்கிறேன் என்றல்லவா இருக்க வேண்டும்! ///

    சமயங்களில் அதையும் செய்வதுண்டு!

    ReplyDelete
  32. என்ன வாத்தியார் ஐயா? சுகமா இருக்கீகளா?வலைசரம் முடிந்ததா? வகுப்பிற்க்கு எப்போது ( முன்னாடியே சொன்னால் தானே எஸ்கேப் ஆகா எளிதாக இருக்கும்!)

    ஏனுங்க வலைச்சரம் ஒரு வாரம் மட்டும் தானா? நான் கூடா ஏதோ ஒரு மாசமானு நினைச்சிருந்தேன்!

    //எந்தன் கண்* பட்டதால் உங்கள் உள்ளத்திலே
    //

    அந்த மாணவர் தங்களை கண் கொண்டு பார்த்திருப்பதாக உ.கு வைக்கின்றார்.

    ஐயா! மறைந்திருந்து பின்னூட்டம் போட்டவர் யார் என்று உங்களுக்கும் தெரியும் , ஆனால் அவருக்கு மட்டுமே வகுப்பறையில் அதிக மதிப்பெண் என்ன நியாயம் இது?

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  33. ///உங்க்ள் நண்பன் அவர்கள் சொல்லியது: வகுப்பிற்க்கு எப்போது ( முன்னாடியே சொன்னால் தானே எஸ்கேப் ஆகா எளிதாக இருக்கும்!)///

    நாளை முதல் மீண்ட்டும் வகுப்பறை!
    யாரும் எஆகேப் ஆக முடியாது - ஏனென்றால் பாடம் துவக்கததிலிருந்தே சுவாரசியமாக இருக்கும்!

    //எந்தன் கண்* பட்டதால் உங்கள் உள்ளத்திலே
    // அந்த மாணவர் தங்களை கண் கொண்டு பார்த்திருப்பதாக உ.கு வைக்கின்றார்.///

    அது எனக்குத் தெரியும் அவர் என் வகுப்பில் இரண்டு வருடமாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்!

    ஒருவகுப்பில் இரண்டாவது வருடமும் தொடர்ந்து படிப்பதற்கு என்ன பெயர்?

    ReplyDelete
  34. //சென்ஷிக்கு இன்றைய தேதியில் சரியான ஜோடி கோவை சரளாதான்!:-)))) //

    டைர டக்கர் சாரே..
    படத்துல எனக்கு 3 வேஷம்ன்னு சொன்னீங்கல்ல. தாத்தா, அப்பா, பேரன். அதில மொதோ தாத்தா வேஷத்துக்கு பரவை முனியம்மாவ போட்டுடுங்க. அதோட என் போட்டோவுல ஒரு மாலைய மாட்டி தோங்க விட்டுடுங்க. கூடவே கோவை சரளா போட்டோவுக்கு மாலைய மாட்டி, சேத்து ஒரு ஊதுபத்தியும் எரிய வச்சிடுங்க. பேரன் கேரக்டருக்கு ஜோடியே வேணாம். ஏன்ன்னா அவனுக்கு இப்பத்தான் 3 வயசு :)

    சென்ஷி

    ReplyDelete
  35. //அது எனக்குத் தெரியும் அவர் என் வகுப்பில் இரண்டு வருடமாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்!

    ஒருவகுப்பில் இரண்டாவது வருடமும் தொடர்ந்து படிப்பதற்கு என்ன பெயர்?//

    ஆசான் மேல் ப்ரியம் ;)

    சென்ஷி

    ReplyDelete