Monday, August 6, 2007

படிக்கலாம் வாங்க...

பிளாக் ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 100 பதிவுகளுக்கு மேல் ஆகி விட்டது. பதிவுகள் எதுவும் போடாமல் சவுண்டில்லாத பார்ட்டி என பேரும் வாங்கியாகி விட்டது. ஒரு வித சலிப்பு என்பதை விட திரும்பத் திரும்ப பார்த்த சண்டைகள், விதண்டா வாதத்தில் ஆரம்பித்து தனி மனித தாக்குதல் என வெற்றி நடை போட்ட பிளாக் உலகத்தை கூகுல் ரீடரின் வழியே என் வலை மேயும் வட்டத்தையும் சுருக்கி வெகு நாட்களாகி விட்டது. வளர்ந்த மரத்தில் விளைந்த பழத்தின் சுவையை மட்டும் அறிந்து புதிய விதைகளின் வீரியத்தை உணர மறுக்கிறேன் என எத்தனை முறை மனதுக்குள் வாதம் செய்தாலும் நல்ல பதிவுகளை இணங்காண்பது என்பது அப்படி ஒன்றும் அரிதாகிக் கொண்டிருக்கும் விசயம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆடம் ஸ்மித்தின் கேப்பிடலிஸம், காரல் மார்க்சின் கம்யூனிசம் என உள் மன விவாதங்கள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்தது இந்த பதிவுலகத்துக்கு வந்த பின் தான்.

"ஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும். "

"தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்."

என சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு தனது எதிர்ப்பை தெளிவாக பதிவு செய்திருந்தார் பத்ரி தனது மே தின சிந்தனைகள் பதிவில்.

மைக்ரோ கிரெடிட், விக்ரம் அகுலா (Vikram Akula) என யாரோ சொல்லிச் சென்ற வார்த்தைகள் பின் மண்டையில் இருந்தாலும் முகம்மது யூனிஸ் என்ற இன்னொரு மனிதரின் மூலம் என்னிடம் சேர்த்தவர் செல்லமுத்து குப்புசாமி.

கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!! என அவர் விட்ட அறைகூவலில்தான் மைக்ரோ கிரெடிட் இன்னமும் கொஞ்சம் மண்டையில் தங்கி உள்ளது.

Microfranchising பற்றி ஒரு எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு லிங்க். பாலா ஒரு பாமரனுக்கும் புரியும் வண்ணம் அற்புதமாக எழுதியிருந்தார்.

சில சமயங்களில் முன் முடிகளுடன் பதிவை அணுகி பின் மண்டையில் தட்டிக் கொண்டு வெளி வந்த அனுபவம் நிறைய. ராஜா வனஜ்ஜின் அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்! அப்படித்தான:)

கத்துக் குட்டியாகிய எனக்கு இன்னமும் இந்த பிளாக் உலகம் தான் பொருளாதாரத்தைக் கத்துக் கொடுத்துக் கொண்டுள்ளது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

1 comment:

  1. அருமையான, பயனுள்ள தேர்வுகள். நன்றி.

    ReplyDelete