Monday, September 10, 2007

எனது கோப்பிலிருந்து...

நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட பணியை கொஞ்சமாவது பொறுப்போடு செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். அதனால் கூடிய மட்டும் நான் முக்கியமாகக் கருதியவை அனைத்தையும் பதிந்து விடுகிறேன்.

காரைக்குடி நகரில் பிறந்து, பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே வளர்ந்து, ஊரை பெரிதாக சுற்றியவன் இல்லை என்றாலும் என் ஊரைப் பிரிந்து இருப்பது என்றால் ஒரு மாதத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை; ஊருக்கு ஓடிப்போய்விடுகிறேன். கொஞ்சம் சம்பாதித்துவிட்டு திரும்ப என் ஊருக்குள் சென்று பதுங்கிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். நமக்கே இப்படி என்றால் வெளிநாட்டுக்கு சென்று நீண்ட காலமாக நல்ல பணியில் இருப்பவர்களெல்லாம் சொந்த நாடு திரும்புவதற்கு எப்படி ஆசைப்படுவார்கள்? அல்லது, அந்த நாட்டின் சுகபோக வாழ்க்கையை விட்டு வசதிகளற்ற சொந்த ஊருக்கு எப்படி திரும்புவார்கள்? என்றெல்லாம் என்னுள் கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளுக்கு விடை சொன்னது இந்தப் பதிவுதான். அப்படி வாழ்வோரின் பின்னூட்டங்களும் கூட படிக்க வேண்டியவை. நாடு விட்டுச் செல்லுதல் உணர்வில் எத்தனை மாறுதலைக் கொடுக்கிறது... நான் செத்தாலும் என்னை என் ஊரில் புதையுங்கள் என்பதும், என் சாம்பலையாவது என் ஊரில் சேர்த்து விடுங்கள் என்றெல்லாம் விரும்புவது இப்படித்தானே! இந்த நேரத்தில் நாம் ஈழம் விட்டு புலம்பெயர்ந்து வாழும் எம் சொந்தங்களை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.எல்லா இரவுகளும் விடியும்! நம்பிக்கை இருக்கிறது.

ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மானத்தை இந்திய ஊடகங்களெல்லாம் தேடிக் கொண்டிருந்தபோது ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்று உரத்த குரலோடு சொல்லி விளையாட்டு வீராங்கணை சாந்திக்கு இப்படி ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி ஊடகங்களை மிதித்து நடந்த நடைவண்டி!

சட்டம் போட்டும்... கட்டாயம் என்று அறிவித்ததும்... இன்னும் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கும் பிரச்சினை. பொதுவுடைமைத் தோழர்கள் இது போல சில விசயங்களில் எப்படி மக்கள் விரோத, தங்கள் கோரிக்கைக்கே முரண்பாடான விசயங்களைக் கையில் எடுக்கிறார்களோ தெரியவில்லை. விலைவாசி உயர்வு என்று ஒருபக்கம் போராட்டம். தொழிற்சங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள ஆட்டோ கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தால் கூடப் பரவாயில்லை. 'மீட்டர் போடு' என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று சென்னையில் போராட்டம் வைக்கிறார்கள். நாடு முழுக்க ஒரே விலை விற்கக்கூடிய பெட்ரோலை காரணம் காட்டி இங்கு மட்டும் அலும்பு கூட்டும் ஆட்டோ பற்றிய வேதனை.

ராணுவத்தின் மீதான புனிதபிம்பம் வலிந்து அரசுகளால் திணிக்கப்படுவது. தேசப்பற்றின் அடையாளமாகக் காட்டப்படும் ராணுவத்தில் நிகழும் அவலங்கள் வெளிப்படுவதை அரசுகள் விரும்புவதில்லை. ஆனால் இந்திய ராணுவத்தின் ஈழ அத்துமீறல்கள், மிஸோரம் மனித உரிமை மீறல்களையும் தாண்டி, ராணுவத்துக்குள்ளேயே நிகழும் தற்கொலைகளும், கொலைகளும் அந்த பிம்பத்தை உடைத்தெறிகின்றன. இது நேரடியாக வலைப்பூவுக்காக எழுதப்படவில்லையாயினும் நல்ல பதிவு. அதே வலைஞரின் 'தியாகியாக்கப்பட்ட சர்வாதிகாரி' படிக்கலாம்.

இந்த வரிசையில் பாமரன்! பாமரனைச் சொல்லாமல் நான் ரசித்தவை நிறைவு பெறாது. கோவையின் குறும்பு வார்த்தைகளால், நக்கலடிப்பதும், சவுக்கைச் சொடுக்குவதும், உருகும் வார்த்தைகளால் விசயங்களைப் பதிய வைப்பதிலும் பாமரனின் லாவகம் அவருக்குத்தான் வரும். அவரது சேகுவேரா பற்றிய தோழிக்குக் கடிதம் தான் என்னை சேயின் பக்கம் அதிகம் கவனம் கொள்ள வைத்தது. குமுதம், விகடன், தினமலர் என்று வெகுஜன ஊடகங்களில் இவரது எழுத்துகள் வருவது இன்னும் பலரை இந்தக் கருத்து சென்றடைய உதவுகிறது. அவருக்கென தனி வாசகர் வட்டமும் இருப்பதால் வணிக இதழ்கள் அவர் எழுதுவதை வரவேற்கின்றன. தீராநதியில் அவர் எழுதிய 'தெருவோரக் குறிப்புகள்'-இல் 'கன்விக்டட் வார்டன்கள்' பற்றிய கட்டுரையை பள்ளி, பள்ளியாக ஏறி துண்டறிக்கையாகக் கொடுக்கவேண்டும். அவரின் எழுத்துகள் வலைப்பூவில் வந்திருப்பதும், அவரும் வலை தளங்களில் கவனம் செலுத்துவதும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ பாமரனுடையது!

பட்டியல் தொடரும்...

No comments:

Post a Comment