Wednesday, October 10, 2007

குழந்தைகளின் உலகம் - கென்

குழந்தைகளின் உலகம் எத்தனை புதிரானது, ஆழமானது, வண்ணங்களாலானது, அழகானது என்று அவர்களை அருகிலிருந்து ரசிக்கும்போதுதான் புரிகிறது. குழந்தையாகவே இருந்துவிட்டிருக்கலாமோ என்று சின்ன பொறாமை கூட தொற்றிக் கொள்கிறது.

நேற்று கடைத்தெருவில் பார்த்த ஒரு குழந்தையின் விரல் ஸ்பரிசம் இன்னும் அகலாத நிலையில், குழந்தைகளை பற்றி பதித்திருக்கும் வலைப்பூக்களைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.

குழந்தைகளை பற்றி மட்டுமே எழுதும் நோக்கத்தோடு வீணாப்போனவன் என்ற பெயரில் வலைப்பதியும் முகுந்த் நாகராஜன், குழந்தை கவிதை எழுதுவதில் தேர்ந்தவர். இவரது இரண்டு கவிதை தொகுப்புகள் "அகி" மற்றும் "ஒரு இரவில் 21 செ.மீ மழை பெய்தது" பெரும் கவனம் ஈர்த்தன. குறிப்பாய் பெண் குழந்தைகளின் உணர்வுகளை மிக ந‌யத்தோடு இவரால் கவிதையாய் வடிக்க முடிகிறது. உரைநடை வடிவத்தில் சற்றே மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு இருந்தாலும் காட்சிகளை கண்முன் நிறுத்தும் விதமும் குட்டிப்பெண்களின் அழுகையும் சிரிப்பும் உணர முடிவதால் ரசிக்க வைக்கிறது.

இவரது கவிதை ஒன்று இங்கே :

நீர் தெளித்து விளையாடுதல்

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்-களும்
மிகக் குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும் போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

(c) veenaapponavan@yahoo.com

###############################


ராஜா சந்திரசேகர் , கவிதை , குறும்படம், வசனம் , விளம்பரப் பட உலகம் என விரிந்த தளத்தில் இயங்கி வரும் படைப்பாளி. இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகள்

(கைக்குள் பிரபஞ்சம் , என்னோடு நான் , ஒற்றைக் கனவும் அதை விடாத நானும் ) வெளிவந்துள்ளன.

இவரது வலைப்பூவில் எழுத்தின் எளிமையும் கவிதை முடிகையில் பரவும் அதிர்வையும் உணர முடிகிறது. குழந்தையாகவே மாறி இயற்கையோடு பேசும் ராஜாவின் கவிதைகளை படித்து பாருங்கள்.

சந்தோஷ் சிவன் இயக்கிய 'டெரரிஸ்ட்' (Terrorist) 'மல்லி','நவரசா' ஆகிய மூன்று படங்களுக்கும் இவர்தான் வசனம்.

எண்களின் வலை


கணித பாடத்தின்
விடை கேட்டு வந்த குழந்தை
உம்மென்று
முகத்தை வைத்திருந்தாள்

எண்களுக்குள்
சிக்கிக் கிடந்த அவளை
வெளியில் எடுக்க
பெரும் சிரமமாயிற்று

பென்சிலைக் கடித்தபடி
சொல்லித்தரச் சொன்னாள்

என் பால்ய பூஜ்யத்தை
மறைத்துப் போட
கிடைத்தது
சரியான விடை

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துப் போனாள்
பிரம்பின் பயம் நீங்கி

அவள் மேல்
விளையாடிய எண்கள்
காலடியில் கிடந்தன
சத்தங்கள் அற்று

1 comment:

  1. எனக்கு அறிமுகமில்லாதவர்களாக தெரியப்படுத்தி வருகிறீர்கள். நன்றிகள் பல

    ReplyDelete