Thursday, December 6, 2007

எழுத்தென்னும் இசைமடியில்...



வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட சிலர்தானா... அல்லது.... ? ஒன்றும் புரியவில்லை. என்றாலும், தோளில் ஏற்றிய காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும். இந்தப் பதிவினைத் தவிர்த்து இன்னுமோர் பதிவு இருக்கிறது. அதன்பிறகு 'போய்ட்டு வரேங்க'என்று வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுவேன்.

முன்னரே கூறியிருந்ததுபோல 'இவுங்கள்ளாம் இவுங்க'என்று தனித்தனியாகச் சுட்டிச்செல்வது சிரமமாக இருக்கிறது. எப்படி வகைப்படுத்தலாம் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பதை விட, ஏதோ எனக்குத் தோன்றுகிற விதத்தில் கதம்பமாகச் சொல்லிச் செல்லலாம் எனத் துணிந்துவிட்டேன். வலைச்சரத்தில் சொற்களின் சித்துவிளையாட்டுகளுக்கு இடமில்லை. கவித்துவ நடையெனப்படுவதெல்லாம் புனைவுகளுக்கே.

தமிழ்மணத்திற்கு வந்த புதிதில், புதிதாகக் கிடைத்த பொம்மையின் தலையில் பற்றி தான் போகுமிடமெல்லாம் இழுத்துச்செல்லும் குழந்தையைப்போல ஒருவருடைய பக்கத்தை ஓடியோடிப் போய் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் அது பெரிய ஆதர்சமாயும் ஆசுவாசமளிப்பதாயும் இருந்தது. பழைய பதிவுகளைக் கூட கிண்டிக் கிளறி பல மணித்தியாலங்களாக அவர் பக்கங்களில் உலவிக்கொண்டிருந்தேன். இதெல்லாம் யார் அவர் என்று அறியாத காலங்களில். அதனால் முதுகு சொறிகிறேன், மூக்குச் சொறிகிறேன் என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். வர வர யாரையும் ஒரு வார்த்தை நல்லதாகச் சொல்லும் முன் பல தடவைகள் யோசிக்கும்படியான நிலைமையாகிப்போனதே என்று வருத்தமாக இருக்கிறது.

அலைஞனின் அலைகள் என்ற பெயரில் வலைப்பூ அமைத்து எழுதிவரும் பெயரிலியின் பக்கங்களில்தான் பகலிரவாகத் திரிந்துகொண்டிருந்தேன். அழுமூஞ்சிப் பதிவுகளாக எழுதிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களை அங்கதம் தெறிக்கும் அந்த நடை ஈர்த்ததில் வியப்பில்லை. புத்திசாலித்தனமாக மற்றவர்களைக் கலாய்ப்பதென்பதற்கு இயல்பிலேயே நகைச்சுவையுணர்வு அதிகமாக இருக்கவேண்டும். அவருடைய எழுத்துக்கள் புரியமாட்டேனென்கின்றன என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அந்த மண்ணிலிருந்து வந்ததனாலோ என்னவோ ஒரு அட்சரமும் பிசகாமல் எனக்குப் புரிந்துவிடும். அந்த மண்வாசனைக்காகவும் அவரது பதிவுகளுக்குப் போவதுண்டு. ஒவ்வொரு பதிவுகளாகக் குறிப்பிட்டுச் சொன்னால் தனிப்பதிவாகிவிடும் என்பதனால் இந்தக் கவிதை மற்றும் சிகை சிரைப்பு என்ற இந்தக் கதையை (ஒரு சோறு பதமாக என்பது தவறு-சிலது அவியாமலும் இருக்கும்) சொல்லிச்செல்கிறேன். அலைஞனின் அலைகளுள் பல வலைப்பூக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனால், சின்னச் சின்ன குச்சொழுங்கைகளுக்குள்ளால் போய்த் திரியத் தெரிந்திருக்கவேண்டும்.


நிறங்கள் என்ற பெயரிலான வலைப்பூவில் செல்வநாயகியின் பதிவுகளைப் படித்துவிட்டு எனது நண்பர்களில் சிலர் 'உங்கள் எழுத்தை வாசிப்பது மாதிரியான உணர்வு வருகிறது'என்று ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், என் மீதான மிகுதியான அபிமானத்தினால்தான் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நாட்கள் செல்ல அறிந்துகொண்டேன். சமூக அக்கறையும் தார்மீக கோபமும் செல்வநாயகியின் எழுத்தின் அடிநாதமாக இருக்கின்றன. சிந்தனையைத் தூண்டும் அதேவேளை கவித்துவமும் பொதிந்த எழுத்துக்களுக்கு உதாரணங்களாக நீ நிரப்பிய இடங்கள் மற்றும் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை ஆகிய பதிவுகளைக் கூறலாம். செல்வநாயகியின் பெயரைக் கண்டதும் அதைப் பின்தொடர்ந்து போவதை என்றைக்குமே என்னால் ஒத்திப்போட முடிந்ததில்லை.

வாசிக்கச் சுவாரசியமற்ற கசப்பான, வரண்ட விடயங்களைக் கூட தனது நடை என்ற தேன்கலந்து அலுப்புத்தட்டாமல் தருவதில் ஆழியூரானை விஞ்ச ஆளில்லை.

நடைவண்டி என்று, தமிழ்மணத்தில் தற்போது நிலவிவரும் சிறப்புப்பண்பான தன்னடக்கப்பாணியில் வலைப்பூவிற்குத் தலைப்பூ வைத்திருக்கும் இவரது எழுத்துக்கள் தலைப்பிற்கியைபுற தத்தி நடக்கவில்லை; தாவியோடுகின்றன. சாதி சூழ் உலகு...! என்ற பதிவும் பெண்ணுரிமை - நாம் அனைவரும் குற்றவாளிகளே என்ற பதிவும் இவர் அண்மையில் எழுதியவற்றில் என்னை மிகவும் பாதித்தவை. எப்போதும் ஏதாவதொரு சமூகப்பிரச்சனை குறித்துப் பேசும் இவர் மொக்கை போடுவது அரிதிலும் அரிது. ஆழியூரானால் 100%மொக்கையென முன்மொழிந்து போடப்பட்ட கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழனியம்மாள் என்பதே என்வரையில் தரம் வாய்ந்ததாகத்தான் இருந்ததென்பதை எந்தவொரு பதில் மொய்யையும் எதிர்பார்க்காமல் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.(மேடைப்பேச்சு வாடையடிக்கிறது)


தமிழ்மணத்தில் அண்மையில் காணக்கிடைத்த
ஜமாலன் என்ற பெயரை எங்கோ சிற்றிதழ்களில் கண்ட ஞாபகத்தில் அதனைத் தொடர்ந்துபோய்ச் சேர்ந்த இடம் தீவிர வாசிப்பை வேண்டிநின்றது. அவரது ஒரு கட்டுரைக்குள் நுழைந்தால், நிச்சயமாக புதிதாக ஏதாவதொன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று திருப்தியோடுதான் வெளிவருவோம். சில நீண்ட பதிவுகளை பிறகு வாசிக்கலாம் என 'ஆறப்போட்டு'விட்டாலும் கீழ்க்காணும் பதிவுகள் வாசிப்பு அளித்த தாக்கத்தினால் பரிந்துரைக்கத் தூண்டுகின்றன. பெண்களைப் பற்றிய இந்தப் பதிவு , பிறந்தமண்ணை விட்டுப் பிரிந்து சென்று, வரண்ட வளைகுடா நாடுகளில், சிறகு தழைத்தமர்ந்து ஆற மரங்களற்றுப் போன பறவைகளைப்போல கடின உழைப்பினால் தங்களை வருத்திக்கொண்டிருக்கும் இந்தியர்களைக் குறித்த வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள் ஆகியவை கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை.


பெயரிலேயே முரணைக் கொண்டிருக்கும்
இந்த இணையத்தளத்திற்கும் பெண்களின் படைப்புகளை வலையேற்றும் ஊடறுவிற்கும் இடையில் ஆரம்பித்த, ஆண்கள் பெண்களின் பெயரில் எழுதுவது குறித்த சர்ச்சை - பலருடைய கவனத்தையும் ஈர்த்தது நினைவிருக்கலாம். தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிட விரும்பாத பதிவுகளைக் கொண்டமைந்த வலைப்பூ முரண்வெளி. அதிகம் பதிவுகள் இடப்படுவதில்லையெனினும் 'நாங்களும் எழுதுறோமாக்கும்' என்றில்லாமல் ஆற அமர ஆக்கபூர்வமான பதிவுகள் போடப்படுகின்றன. 'பெயல் மணக்கும் பொழுது' என்ற பெயரில் அ.மங்கையால் தொகுக்கப்பட்ட ஈழப் பெண் கவிஞர்களுடைய தொகுப்பு பற்றி பெண்கள், அடையாள அரசியல், பிரதியாக்கம் மற்றும் பெண் எழுத்து என்ற தலைப்பில் நிகிதா இம்மானுவல்பிள்ளையால் எழுதப்பட்ட கட்டுரை அவசியம் படிக்கப்பட வேண்டியதொன்று. ஈழத்துப் பெண் எழுத்துக் குறித்த ஒரு சித்திரம் இந்தக் கட்டுரையை வாசித்து முடித்ததும் பதிவாகும். http://muranveli.net/category/jaffna/ என்ற பக்கத்திலுள்ள 'யாழ்ப்பாண நாட்குறிப்புகள்' ஒரு காலம் எழுதிய குறிப்பாயிருக்கிறது. நிம்மதியாகச் சாப்பிடுவதும் உறங்கக் கிடைப்பதும்கூட தமிழராகப் பிறந்தவர்களுக்கு அதிகாரங்களால் வழங்கப்படுகிற அதிகபட்ச சலுகைதான் என்ற எண்ணத்தை அப்பதிவு நினைவூட்டியது.(மறந்தால்தானே நினைப்பதற்கு - பழசுதான்)

வலைச்சரம் என்றால் சும்மா வேலையில்லை. படிப்பை நிறுத்தியபிறகு 'பள்ளிக்கூடம் போ' என்பது மாதிரி கொஞ்சம் பழைய பதிவுகளுக்குள் சுற்றியலைந்து திரும்பவேண்டியிருக்கும். இருந்தாலும், அரைகுறையாகச் செய்யவும் மனசில்லை. அடுத்த பதிவை மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!

3 comments:

  1. நல்லதொரு தொகுப்பு.
    நன்றி.

    பெயரிலியின் குச்சொழுங்கைகளுக்குள் இறங்குவதிலும் சில சிக்கல்களுள்ளன.

    அவரது தனி வலைப்பதிவுகளும் அவற்றின் இடுகைகளும் திரட்டிகளில் தோன்ற மாட்டா.
    திரட்டியில் தோன்றுவது அலைஞனின் அலைகள் ஒன்றுதான். எனவே பின்னூட்டங்களைக் காணவேண்டின், அலைகள் வலைப்பதிவில் வந்த இடுகையில்தான் பார்க்க முடியும்.
    பின்னூட்டங்களின்றி இடுகையேதும் முழுமை பெறாதென்பது வலையுலகப் பொதுவிதி.

    இனிமேலாவது தனி வலைப்பதிவில் பதியும் இடுகைக்கு, அவ்விடுகை அலைஞனின் அலைகள் வலைப்பதிவில் எழுதப்பட்ட இணைப்பைக் கொடுக்கும்படி பெயரிலிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    ~~~~~~~~~~~~~~~
    இந்தப் பின்னூட்டம் தமிழ்நதிக்கு விளங்குமெண்டு நினைக்கிறன். பெயரிலியின்ரயே விளங்குதாம், சொந்த ஊர்க்காரனின்ர விளங்காதோ?

    ReplyDelete
  2. //அதனால் முதுகு சொறிகிறேன், மூக்குச் சொறிகிறேன் என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். வர வர யாரையும் ஒரு வார்த்தை நல்லதாகச் சொல்லும் முன் பல தடவைகள் யோசிக்கும்படியான நிலைமையாகிப்போனதே//

    ஒவ்வொரு பதிவிலும் இதையே ஏன் சொல்லிக்கொள்கிறீர்கள். யாரையும் முதுகு சொறியவில்லை என யாருக்குச் சொல்கிறீர்கள்? உங்களுக்கே சொல்கிறீர்களா? யாருக்கு அஞ்சுகிறீர்கள்? இப்படிச் சொல்வதன் மூலம் அவர்களின் வாயை அடைத்துவிடலாம் என நினைத்துவிட்டீர்களா? உங்களுக்குப் பிடித்த யாரையும் வாழ்த்தவோ, புகழவோ, பரிந்துரைக்கவோ நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டும்? ஏன் அஞ்சவேண்டும்? உங்களிடமிருந்து இப்படியானதொரு குறிப்பைக் கேட்க சங்கடமாயிருக்கிறது. (இதுவும் முதுகுசொறிதல் அல்ல :-) )

    மற்றபடி, உங்கள் வலைச்சர தொகுப்புகள் யாவும் மிகச்சிறப்பானதாகவே இருக்கிறது. எனது தேர்வுக்கு 90% அருகிலேயே இருக்கிறது.

    வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  3. "இந்தப் பின்னூட்டம் தமிழ்நதிக்கு விளங்குமெண்டு நினைக்கிறன். பெயரிலியின்ரயே விளங்குதாம், சொந்த ஊர்க்காரனின்ர விளங்காதோ?"

    வசந்தன்!இப்ப வர வர சொந்த ஊர்க்காரரின்ரைதான் விளங்குதில்லை:) ஏனெண்டா சொந்த ஊர்க்காறர் இப்ப எழுதுறது குறைஞ்சு போச்சு. எனக்கு எழுத்தாலைதானே அவையளைப் பழக்கம். எதிர்பாராமல் ஒரு சொந்த ஊர்க்காரரை கிட்டடியிலை சந்திக்க நேர்ந்தது. அட!என்னெண்டு இவர் இவ்வளவு நல்லா எழுதுறார்'எண்டு நினைச்சுக்கொள்ளும்படியான எழுத்துக்காறர். பிறகு பார்த்தா...... நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்:)

    முபாரக்!உண்மையில் மனம் நொந்துதான் எழுதினேன். அதைச் சொல்ல வந்தால் 'சொந்தக்கதை'ஆகிவிடும் என்பதால் பிறகோர் சமயம் சொல்கிறேன். வருகைக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி.

    ReplyDelete