"நாங்க காலேஜ் லைஃப்ல எஞ்சாய் பண்ணி இருக்கிற மாதிரி வேற யாரும் பண்ணி இருக்க முடியாது". ஆண் பெண் வித்தியாசமில்லாமல், கல்லூரி வாழ்க்கையை முடித்தவர்கள் எல்லாரும் தங்கள் நிகழ் கால வாழ்க்கையின் வெம்மை தாங்காமல், நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனம் பொறுக்க முடியாமல், கூட்டதோடே இருந்தாலும் அவ்வபோது தனித்து விடப்படும் கழிவிரக்கம் தாங்காமல் எப்போதாவாது "ம்" கொட்ட ஒருவர் கிடைக்கும் போது, வேகமாய் பழசை அசை போடும் தருணங்களில் வந்து விழும் வார்த்தைகளில் ஒன்றாய் இவை நிச்சயம் இருக்கக் கூடும். நானும் இதை அவ்வப்போது சொல்லித் திரிந்திருக்கிறேன்.
நான், செந்தில், விஜய், மாத்யூ, என்று ஒரு க்ரூப்பாய் கடைசி பெஞ்சுகளில் உட்கார்ந்துக் கொண்டு நாங்கள் செய்து வந்த குறும்புகளை எண்ணிப் பார்க்கும் எங்களில் எவருக்கும் சரவணன் நினைவில் வந்து போவான். பல நேரங்களில் நாங்கள் சிரித்துக் கொண்டிருந்ததற்கு காரணமாய் அவனே இருந்திருக்கிறான். நாங்கள் செமினார் எடுக்கும் போது எல்லாம் தூங்கி வழியும் வகுப்பு சரவணனின் செமினார் அன்று இருக்கிறது என்றால் மட்டும் வெகு உற்சாகமாய் இருக்கும். "Peer to peer Networking" என்ற தலைப்பில் செமினார் எடுக்கும் போது கூட சுத்தமாய் சம்பந்தமில்லாமல் "அன்றொரு நாள் நான் அமெரிக்க தெருக்களில் நடந்து கொண்டிருந்தேன்" என்றதொரு சுய தம்பத்துடன் ஆரம்பிப்பான். 40 நிமிட செமினாரில் 35 ந்மிடங்கள் தான் இதுவரை பார்த்திராத அமெரிக்காவையும், சிங்கப்பூரைப் பற்றியும் பேசி விட்டு கடைசி ஐந்தாவது நிமிடத்தில் ஆகவே யுவர் ஆனர் இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் என்று டாபிக்கை எப்படியாவது கோர்த்து விட்டு இறங்குவான்.
எங்கள் வகுப்புப் பெண்களில் ஒரு சிலர் நிஜமாலுமே அவன் பல நாடுகளைச் சுற்றி விட்டு வந்திருக்கிறான் என்று கடைசி வரை நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்து அவன் சோகமாய் இருந்தோ, ரொம்ப வருத்தப்பட்டு பேசியோ பார்த்ததேயில்லை. எங்களுடைய மற்றும் அவனுடைய உலகம் என்பது எப்போதும் சிரிப்பு என்ற ஒன்றைச் சார்ந்ததாயே இருந்திருந்தது. கல்லூரி முடிந்து வேலை தேடி நாங்கள் எல்லாம் சென்னைக்கு குடி பெயர்ந்த போது, அவன் மட்டும் ஏனோ மறுத்து விட்டான். கேட்டதற்கு ஒரு சில பிரச்சினைகள் என்று பொதுவாய்ச் சொல்லி விட்டான்.
இது நடந்து ஒரு ஏழு மாதமிருக்கும். எப்படியோ அடித்து பிடித்து ஒரு வேலை வாங்கி விட்ட இறுமாப்பும், நாங்களும் சம்பாதிக்கிறோம் என்ற கர்வமும், எதிர்ப்படும் எவரையும் அலட்சியமாய் பார்க்க ஆரம்பித்திருந்த திமிருமாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலத்தின் ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் எனக்கு ஒரு போன் வந்தது. அடடடடடா இந்த க்ரெடிட் கார்டுகாரனுங்க தொந்தரவு தாங்கலைப்பா. எப்படித்தான் நம்ம நம்பர் எல்லாம் இவங்களுக்கு கிடைக்குதோ என்று ஒரு கர்வத்துடன் சுற்றி இருப்பவர்களிடம் சொல்லி விட்டு, Ya.. This is Nandha என்று ஆரம்பித்தேன். "மச்சான் நான் சரவணன் பேசறேண்டா" என்று பிண்ணனியில் பலத்த இரைச்சல்களுடன் அவன் பேசினான். ஏதோ ஒன்று அவனுடைய குரலில் இடறியது. நினைவு தெரிந்து அவன் இவ்வளவு அமைதியாய் பேச ஆரம்பித்ததில்லை.
நான் திருச்சி ஏர்போர்ட்ல இருந்து பேசறேண்டா.நாங்க எங்க ஊருக்கே போகலாம்னு இருக்கோம். இங்க எங்க அப்பாவாலயும் ஏதும் தொழில் பண்ண முடியலை. நிறைய பிரச்சினை வருது. எங்க சொந்தக்காரங்களும் இங்க வா பார்த்துக்கலாம்னு கூப்பிட்டுட்டே இருக்காங்க. அதனால கிளம்பிட்டோம். உங்ககிட்ட சொல்ல வேணாம்னுதான் பார்த்தேன். ஆனால் அங்க போய்ட்டா மறுபடி உங்களை எல்லாம் நான் எப்ப பார்ப்பேன், பேசுவேன்னு தெரியலை. அதான் இங்க ஏர்போர்ட் பூத்திலிருந்து போன் பண்றேன்டா என்று சொன்னான்.
என்ன சொல்வதென்று கூட அப்போது எனக்கு தெரிந்திருக்க வில்லை. என்னடா மச்சான் திடீர்னு இப்படி சொல்ற. டேய் அப்ப உங்க சொத்தை எல்லாம் என்னடா பண்ணீங்க. பணம் இருக்கா? அங்க தங்கறதுக்கு என்னடா பண்ணப் போறீங்க??? என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கினேன்.
என்னத்தை பெரிய சொத்து. வர்ற விலைக்கு இருக்கிறதை எல்லாம் வித்துட்டோம். போற இடத்துலயும் சொத்துன்னு எதுவும் இல்லை. கைல கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்பித்தான் போறோம். மீதி எங்க சொந்தக்காரங்களைத்தான் நம்பணும்.
டேய் உங்க அப்பா அம்மா வேணா அங்க போகட்டுமே. நீ வேணா இங்க சென்னை வந்திடேண்டா என்று நான் சொன்னேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் நான் கேட்டது எவ்வளாவு கிறுக்குத் தனம் என்று புரிகிறது. கையில் பேகுகளுடன் திருச்சி ஏர்போர்ட்டில் விமானத்திற்காய் காத்துக் கொண்டிருந்த ஒருத்தனைப் பார்த்து "மச்சான் நீ இங்க வந்திடுடா" என்று சொன்னால் கேட்பவர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பெரிய சிந்தனைகள் எல்லாம் எதுவும் அப்போது இல்லை. ஏதாவது நடந்து அவன் வாழ்க்கை விடியாதா என்ற ஆதங்கத்தில் விழுந்த வார்த்தைகள் அவை. சோகமான தருணங்களில் நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு பிடிக்க ஆரம்பித்தால் நாம் எல்லாரும் பைத்தியக்காரர்களே.
அப்படி ஒரு நாள் அவன் எங்களை விட்டுப் போய் விடுவான் என்று எங்களில் எவரும் அறிந்திருக்க வில்லை. வேலை தேடி சென்னை வந்ததற்கப்புறம் வாழ்க்கை ஓட்டத்தில் அவனைச் சற்றே மறந்து விட்டோமே என்று அவ்வபோது ஆதங்கப் படவும், சென்னை வந்த பின்பு அவனிடம் அடிக்கடி போனாவது பேசி இருந்திருக்கலாம் என்று எங்கள் மீது நாங்களே கோபம் கொள்ளவும் மட்டுமே எங்களுக்கு தெரிந்திருந்தது.
அதற்கடுத்த இந்த மூன்றரை வருடங்களில் அவனிடமிருந்து யாதொரு தொடர்பும் இல்லை. எங்கேயோ அவன் நன்றாய் இருந்துக் கொண்டிருக்கிறான் என்று எங்களை நாங்களே திருப்திப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி அவன் போவதாய் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்ற அந்த அவனது அந்தச் சொந்த ஊர் இலங்கை.
இது நான் குறிப்பிட்ட ஒருவனது வாழ்க்கை. இது போன்ற பலரது வாழ்க்கைகள் இங்கே சொல்லாய் வடிக்கப் பட்டுள்ளது. தமிழ்நதியின் சோகம் தோய்ந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் நன்றாய் நினைவிருக்கிறது.
"இன்னமும் இது போன்று திருவான்மியூர் கடற்கரையிலும், மெரீனா சாலையிலும், வற்றிப் போன கண்களுடனும், இருள் அப்பிய முகத்துடனும், துயரம் நிரம்பிய மனதுடனும் எங்கள் இளைஞர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் செய்து கொண்டிருப்பதுதான் ஒன்றே ஒன்றுதான். அது உயிருடன் இருப்பது."
இருப்பற்று அலையும் துயரையும், எதுவுமில்லாத சூன்யமாய் மனம் வெறிச்சிட்டிருப்பதையும், இவரது கவிதைகளில் நாம் காணப் பெறலாம். நல்ல வேளையாய் இலக்கியவாதிகளின் அரசியல் இவர்களுக்கு புரியாததாலோ என்னவோ இவர் தனது கவனத்தை கவிதைகளில் மட்டும் செலுத்திக் கொண்டிருக்கிறார். அதனாலேயே நல்ல கவிதைகளை இவரால் படைக்க முடிகிறது.
பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது
இருப்பற்று அலையும் துயர்
மீண்டும் அகதி
என்று இவரது கவிதைகளில் எனக்கு பிடித்தமானவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
"சூரியன் தனித்தலையும் பகல்" பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இவரது கவிதைத் தொகுப்பு. இதற்கான விமர்சன கூட்டம் கூட சமீபத்தில் நடந்தது. போக முடியாமல் போனவர்களில் ஒருவன். இந்தக் கூட்டத்தில் என்ன விமர்சனம் செய்தார்கள் என்று எனக்கு தெரிய வில்லை. "தமிழ் நதி இது வரை கவிதையே எழுத வில்லை. இனி வரும் நாட்களில் இவர் நல்ல கவிதைகளை எழுதலாம்" என்று குட்டி ரேவதிக்கு (வெ.சா என்று நினைக்கிறேன்) சொன்ன மாதிரி இவரையும் சொல்லி இருக்கலாம். அல்லது "தமிழ் கவியுலகின் அசைக்க முடியாத ஆளுமை தமிழ்நதி" என்று புகழ்ந்திருக்கலாம். எது வேண்டுமானாலும் சொல்லி இருந்திருக்கலாம். எனக்கு தெரிய வில்லை. ஆனால் அவை எதுவுமே இவரது கவிதைகளைப் படித்த உடன் என் விழிகளில் ஏற்படும் கசிவையும், மனதில் ஏற்படும் சூனியத்தையும் தடுக்க முடியாது.
"யாரும் வராமல் பசித்து பட்டினியாய் யாருமற்ற இந்த மணல்காட்டிற்குள்ளேயே நால்வரும் சாகப்போகிறோமா. விடியட்டும் ஏதேனும் படகுகள் வரும் காலடியில் சொரிந்து கிடந்த நம்பிகையைக் கூட்டி அள்ளி நிமிர்த்த முயன்றேன். அவன் கரையென்று காட்டிய திசையைப் பார்த்தேன் இப்போதும் கரை தெரிகிற மாதிரித்தான் இருந்தது. கரை கிட்டத்தான் இருக்கிறது. எப்படியும் போய்விடலாம் யாரேனும் வருவார்கள் அல்லது இந்தியன் நேவியாவது வராதா: மனசுக்குள் பிரார்த்தித்தேன். அம்மா ஏற்கனவே அழுது ஓய்ந்து செபமாலையோடு இருந்தாள். நான் சூரியனுக்காக காத்திருந்தேன். கரையின் தொலைவைக் கண்களால் அளந்தேன் மனசுக்குள் நம்பிக்கையை நிரப்பினேன். நாளைக்கு நிரஞ்சனியைப் பார்க்கலாம் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு கொஞ்ச முத்தங்களைப் பரிசளிக்கலாம் நம்பினேன்."
த.அகிலனின் கரைகளிற்கிடையே பதிவும் அதே போன்ற ஒன்றை தொட்டுச் செல்கிறது.இதை படித்து முடித்ததும் நம்மால் கையாலாகாத ஏதோ ஒன்றை நினைத்து நமக்கு கோபம் வருவது நிச்சயம். இவரது பதிவுகளிலும் இதே போன்று பல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. மரணத்தின் வாசனை என்ற பகுப்பின் கீழ் இருக்கும் இவரது அனுபவங்களை படியுங்கள். இன்னும் இரண்டு நாளைக்கு உங்கள் உறக்கம் தொலைத்துப் போங்கள்.
"நீங்களும் வலியைத்தான் நினைக்கிறீர்கள் மாலன். இந்துராம் எனும் அறிவுசீவியை இப்படியெல்லாம் திட்டினால் அவருக்கு வலிக்காதா என்று அவரின் வலியை நினைக்கிறீர்கள். நானும் வலியைத்தான் நினைக்கிறேன். குழந்தையின் உயிரைமட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளலாம் எனப் படகில் ஏறியும் இந்தப்புறம் கொண்டுவந்து சேர்ப்பதற்குள்ளாகவே அதையும் பறிகொடுத்த அவலத்தின் வலியை, ஏழுகடல்தாண்டி எங்கோ ஒரு புலம்பெயர்ந்தநாட்டில் இருந்தபடியே தன்னோடுவராமல் தாய்மண்ணிலேயே தங்கியிருந்த தமையன் செத்த செய்திகேட்டும் "இன்று இவன், நாளை எவனோ" என்ற பயத்துடனேயே வாழநேருகின்ற தலைமுறைகளின் வலியை , பாலுக்கழுகிறதா, போர்முடியாப் பூமியிலே பிறந்ததற்கு அழுகிறதாவெனத் தெரியாமல் பிறந்த குழந்தையையும் அழுதுகொண்டே அணைக்கவேண்டிய தாய்களின் வலியை, மக்களைக் காக்கவெண்டிய அரசின் இராணுவத்தாலேயே வன்புணரப்பட்டுத் தூக்கிவீசப்பட்ட பெண்களின் வலியை எல்லாம் நினைத்தால் இந்துராம்களுக்கு அவர்களின் செயல்பாடுகள்மீதான ஆற்றாமையை வெளிப்படுத்திய வார்த்தைகளே வலிக்குமென்று நான் நினைக்கவில்லை"
செல்வநாயகியின் இந்த கோபம், மாலன் அவர்களுடனான உரையாடலின் நீட்சியாய், அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் பதிவில் எழுதப்பட்டது. திரும்பத் திரும்ப பல முறை என்னை வாசிக்கத் தூண்டியது. அப்படி என்ன இதில் இருக்கிறது என்ரு நீங்கள் கேட்டால் எனக்கு சொல்லத்தெரியாது. தனது எல்லாப் பதிவுகளிலும் தனது ஆளுமையை பலமாய் நிரூபிக்கும் திறமை செல்வநாயகி அவர்களுக்கு மிக எளிதில் கைகூடப் பெறுகிறது.
"ஒரு நல்ல புத்தகம் படித்து முடிக்கும்போது. ஒரு மாலையில் சந்திக்கும் நபர் தன் குரல்கிழித்து, வியர்வை துடைத்துப் பேசிக்கொண்டிருந்தாலும் நான் "நீ என்ன பேசினாலும் என்னை ஒன்னும் செய்யமுடியாது" என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அடிக்கும் தொலைபேசியில் உயிர்நண்பன் அழைத்தாலும் அது அவனுக்குரிய எண்ணென்று தெரிந்தாலும் எடுக்காமல் அதேபோல் பார்த்துக்கொண்டிருப்பேன். "இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"
"இவ்வளவு பளுவானாலும் தூக்கிவிட முடியும் என்ற திமிர் உண்டு. ஆனால் இரண்டு சொற்களைச் சொல்லப்படவேண்டிய இடத்தில் சொல்லாது விட்டுவிட்டால் அது மனதில் பெரும்சுமையாக இருந்து அழுத்தும். ஒருவருக்கு அதைச் சொல்லாது விட்டதை ஒரு பத்துப் பேருக்காவது சொல்லிப் பாரம் குறைக்க முயன்றாலும் விடாது கனக்கும் அவை. அவை மன்னிப்பு, நன்றி என்ற இரண்டும்தான்."
""Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான். அதன்பின் அவர் தலைதடவிக்
கொடுத்ததோ இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள் என்று அவர் நகையாடிச் சென்றதோ எதுவும் தெரியாத உணர்வற்ற நிலைக்கே மீண்டும் பலமணி நேரங்கள் பயணம்."
அவர்களின் இந்த கிறுக்கியாக வாழும் ஆசை பதிவு பல நாட்கள் என்னை அழைக்கழித்த ஒன்று. தனது கிறுக்குத் தனங்களைக் கூட ஒருவரால் இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்று கிறங்க வைத்த பதிவு இது.
"இவை வெறும் இரண்டு உதாரணங்கள்தான். மிகச்சமீபத்தின் ஈராக் போரில் இதுபோன்று நடந்தவைகளையோ, இராணுவத்தின் தொடரும் அத்துமீறல்களாய் இலங்கையில் நடந்ததை, நடப்பதை சமீபத்தில் தன் பதிவில் தமிழ்நதி எழுதியதையோ நான் இங்கு மீள்பதிப்புச் செய்யாமலே தினம் உலகச்செய்திகள் படிக்கிற யாரும் அறியமுடியும். வீரப்பனைப் பிடிக்கப் போகையில் வழியில் அகப்பட்ட சின்னாம்பதி கிராமத்துப் பெண்களைச் சின்னாபின்னம் செய்தவர்களின் கதையைத் தமிழகச் செய்திகளை நினைவில் வைத்திருக்கும் யாரும் மறக்க முடியாது.
இந்தப் பெண்கள் செய்த குற்றமென்ன? உறங்கிக்கொண்டிருப்பவர்களையும், உணவருந்திக்கொண்டிருப்பவர்களையும் வீடுபுகுந்துஇழுத்துக்கொண்டுபோய் வன்புணர்ந்த ஆண்களின் கண்களுக்கு முன்னால் தங்களை மூடிக்கொள்ளாமல் வந்து மோகினி ஆட்டம் ஆடியா அந்த ஆண்களின் காம உணர்வை எழுப்பிவிட்டார்கள்? மூடிக்கொண்டிருப்பது பெண்களுக்கு நல்லதாம், பேசுகிறார்கள் எம் கற்றறிந்த நண்பர்கள்."
சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் எனும் அவரது இப்பதிவில் பெண்கள் அணிய வேண்டிய உடை குறித்து மதவாதிகள் கற்பித்து வரும் போலித்தனங்களை கடும் கோபத்துடன் சாடுகிறது. மனசாட்சியுள்ள எவரும் இதில் கூறி இருக்கும் உண்மையை வெறுமனே மதத்தின் பெயரைச் சொல்லி மறுத்து விட முடியாது.
கூட்டத்தினருடன் இருக்கும் போதும் தனது தனித்தன்மை தொலைந்து விடாது என்பதை அவரது இந்த ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள் பதிவின் மூலம் இனங் கண்டுகொள்ள முடியும். ஒட்டு மொத்த வலையுலகமும், ஞானி யின் பூணூலை விமர்சித்துக் கொண்டிருக்க, தனது தனித்துவமான கருத்தை இந்த பதிவின் மூலம் ஆணித்தரமாய்ச் சொன்னவர். இதே கருத்தாக்கத்தை தருமியும் தனது பாணியில் சொல்லி இருக்கும் பதிவு ஞாநியும் என் நண்பர்களும்.
பதிவுலகில் திடீர் திடீரென்று ஒரு ஃபோபியா வந்து விடும். ஒட்டு மொத்த பதிவுலகமே அந்த ஃபோபியாவினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாய் பதிவுகளை எழுதிக் குவித்து கொண்டிருக்கும் வேளைகளில், தனது தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் இது போன்ற ஒரு சில பதிவுகளும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை எனக்குள் பல நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இது போன்று நான் அறிவிக்கத்துடிக்கும் பல பதிவுகள் இன்னும் வரிசையில் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சரத்தை பெண்ணியச் சரம், காதல் சரம், கவிதைச் சரம் என்று பிரித்து பிரித்து தொடுப்பார்கள். ஆனால் என்னால் இப்பதிவை எந்த வித சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தொடுக்க முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த பதிவுகள் என்னுள் தங்கிப்போனவை. இவற்றுள் சில என்னை உலுக்கிப் போட்டவை.
இப்படி எந்த வித சட்ட திட்டங்ககளுக்கும் பொருந்தாத பதிவுகள் நிரம்பிய இந்தச் சரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம். எனக்கு பிடித்த பதிவுகள் என்றா? இல்லை இப்படி வைக்கலாமா? "என்னுடன் தங்கி விட்ட மேகக் கூட்டங்கள்" என்று. ஹ்ம்ம்ம்ம் வேறு எப்படித்தான் சொல்வது. "தொடர்பற்றதாய்ச் சில பதிவுகள்" என்று கூடத்தான் வைக்கலாம். அட விட்டுத் தள்ளு. "ரோஜாவுக்குப் பெயரா முக்கியம்". (உபயம்: விஜய் மில்டன்).
தெரிவுகளும் இடுகைத் தலைப்புகளும் நல்லா இருக்கு..
ReplyDeleteபடித்து முடித்து ரொம்ப நேரம் வரை நந்தா....கூடவே வருவது போல இருந்தது...ரொம்ப அருமையான எழுத்து...குறிப்பிட்ட பதிவுகளும் அருமை....
ReplyDeleteஅன்புடன் அருணா
இந்தப் பதிவை நான் படித்தேனா ?
ReplyDeleteஅல்லது
இந்தப் பதிவு பேச நான் கேட்டேனா ?
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
அந்தப் பதிவைப் படித்துவிட்டுத்தான் இந்தப் பதிவுக்கு வந்தேன். இந்தக் குரூர உலகில் துளி அன்பு கண்டாலும் கலங்கிப்போவது என்னியல்பு. இன்றைக்கு கண்கலங்கினேன்.
ReplyDelete"இந்தக் கூட்டத்தில் என்ன விமர்சனம் செய்தார்கள் என்று எனக்கு தெரிய வில்லை. "தமிழ் நதி இது வரை கவிதையே எழுத வில்லை. இனி வரும் நாட்களில் இவர் நல்ல கவிதைகளை எழுதலாம்" என்று குட்டி ரேவதிக்கு (வெ.சா என்று நினைக்கிறேன்) சொன்ன மாதிரி இவரையும் சொல்லி இருக்கலாம். அல்லது "தமிழ் கவியுலகின் அசைக்க முடியாத ஆளுமை தமிழ்நதி" என்று புகழ்ந்திருக்கலாம். எது வேண்டுமானாலும் சொல்லி இருந்திருக்கலாம்."
நந்தா!நல்லவேளை தப்பித்தேன். மேற்குறித்த இரண்டு விதமாகவும் சொல்லவில்லை. தேர்ந்த மொழிப்பிரயோகத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள். குறைகள் ஒன்றிரண்டே குறிப்பிடப்பட்டன. அந்த வகையில் பாராட்டுவிழாவாகவும் இல்லை. சிறிய நிறைவான கூட்டம் அது. நன்றி.