அது ஒரு காலம். வலைப்பதிவுகளை வெறுமனே பார்வையளனாய் மட்டுமே இருந்து வந்த ஒரு காலம். தமிழ் வலையுலக அரசியலையோ, போலி என்றொரு வார்த்தையையோ, தெரிந்து வைத்துக் கொண்டிராததோர் காலம் அது. கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பத்திரிக்கைகளின் மூலமும், சிற்றிதழ்களின் மூலமும் மட்டுமே படித்து வந்த ஒரு காலம் அது. அப்படி ஒரு நாளில் ஏதேச்சையாய் ஃபார்வேர்டு மேசேஜாய் வந்த ஒரு மெயிலில் இருந்த தமிழ்மணம் லிங்கை கிளிக்கிப் பார்த்ததுதான் நான் வலையுலகை எட்டிப்பார்ப்பதற்கு முதல் காரணமாய் இருந்த ஒன்று.
அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்காமலிருந்திருந்தால் ஒரு வேளை நான் பதிவுலகிற்கு பார்வையாளனகவோ, படைப்பாளியாகவோ வந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு வேளை தாமதப்படுத்தப்படிருக்கலாம். இந்த இடத்தில் என் தன்னடக்கத்தை வெளிப்படுத்த வேண்டி “நீங்களும் தப்பித்திருக்கலாம்” என்று நான் சேர்க்க வில்லையென்றால், என்னை பெரும் கர்வக்காரன் என்று நீங்கள் எண்ணி விடும் அபாயமிருப்பதால் அதை இங்கே சேர்த்துக் கொள்கிறேன். நீங்களும் தப்பித்திருக்கலாம்.
காலங்கள் செல்லச் செல்ல நாம் நம்மை ஏதேனும் சில விஷயங்களில் நம்மை மேம்படுத்திக் கொண்டே போகிறோம்.அது நமது டெக்னிக்கல் நாலெட்ஜாக இருக்கலாம்.அல்லது வாசிப்பனுபவமாய் இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்பிருந்த வாசிப்புகளிற்கும், இப்போதிருக்கும் வாசிப்புகளிற்குமான வித்தியாசத்தையே என் பரிணாம வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது பதிவுலகமும், இலக்கிய உலகமும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் ஃபோபியாவின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். எடுத்துக் கொள்ளக்கூடிய ஆட்களைப் பொறுத்து நிலைப்பாடுகள் மாறிக் கொண்டே இருக்கிறது.
வாசிப்புகளைப் போலவே வாசிப்புகளைப் பற்றிய பகிர்தலும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாய் இருக்கிறது. நான் இந்த இந்த புத்தகங்களைப் படித்தேன் என்று சொல்வது படித்ததை பறை சாற்றிக்கொள்ளவா? அல்லது தேடலும், தேடலைப் பற்றிய பகிர்தலின் வேட்கையா? சொல்லப்போனால் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. வெளிப்படுத்துகின்ற முறைகளே இவற்றை தீர்மானிக்கின்றன. நான் சொல்லப்போகும் சிலவையும் அப்படிப்பட்ட ஒரு வேட்கையின் வெளிப்பாடுதான்.
அருள்குமார்:
தனது நிறுவனத்தை முழு மூச்சில் நடத்த வேண்டியோ என்னவோ, இவர் இப்போதெல்லாம் வலையுலகில் காணப்படுவதேயில்லை. ஆனால் இவரது ஒரு சில பதிவுகள் என்ன காரணத்தினாலோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
மரணம் என்றொரு நிகழ்வு தேன்கூடு போட்டிக்காக எழுதப்பட்ட இந்த கதையில் எல்லா உணர்வுகளும் பொதிந்து கிடக்கின்றன. கதையின் இறுதியில் மெல்லியதாய் நிலவோடும் காதல் உணர்வும் ஒரு வித சந்தோஷத்தைத் தருகிறது.
மங்கையர்க்கரசி என்ற இவரது கவிதையில் இருக்கும் யதார்த்தம் மனதைச் சுடுகிறது.
இவர் தொடர்ந்து எழுதினால் இன்னும் பல நல்ல படைப்புகளை தரலாம்தான். கால ஓட்டத்தில் இவர் திரும்பி வரலாம்.
பத்மப்ரியா:
இவர் இப்போ சுத்தமாய் எழுதுவதே இல்லை. இருந்தாலும் நான் வலையுலகிற்கு வருவதற்கு முன்பு படித்த அழகியல் சார்ந்த கதைகளில் இவருடையதும் ஒன்று. வயதின் காரணமாயோ என்னவோ சில காலங்களாகவே காதல் சார்ந்த படைப்புகள் மிக எளிதில் என் மனதை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் இவர் தொடராக எழுதிய நிலா கதை எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கின்ற ஒன்று.
தேவ்:
தேவ்வின் பல கதைகள் எனக்கு ஒரு வகை இனம் புரியா சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. பல கதைகள் மெலோ டிராமேடிக் வகையைச் சேர்ந்தவைதான், இந்த இடத்தில் இந்த சம்பவம் நடைபெறும் என்பதை ஒரு தேர்ந்த வாசகனால் கண்டுப்[இடித்து விட முடியும்தான் என்றாலும், இவரது இந்தக் கதைகள் ரொம்பவே பிடித்துதான் இருக்கின்றது.
நட்பெனும் தீவினிலே
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
ஒரு சாரல் பொழுது...
வெட்டிப்பயல்:
வலையுலகில் ரொம்பவே அறிமுகமான இவரின் ஆரம்பகால கதைகளில் உள்ள காதல் உணர்வும், ஏன் என்ற கதையில் உள்ள சோக உணர்வும் ரொம்பவே பிடித்துப் போனது. இவரது கதைகளில் உள்ள ஃபேண்டஸி தன்மை ஒரு வித குதூகலத்தைத் தருகிறது.
ஏன்???
கொல்ட்டி
H-4
திவ்யா
வலையுலக கும்மி ப்ரியர்களில் ஒருவரான இவரின் சில கதைகள் ஏற்கனவே சவலையுலகில் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வதில் சந்தோஷமே.
ரயில் சிநேகம்
கல்லூரி கலாட்டா
நான் மேலே குறிப்பிட்டிருப்பவற்றில் பெரும்பாலானவை அழகியல் சார்ந்த கதைகளே. தீவிர வாசகர்களுக்கும் எதிர் அழகியலை கொண்டாடுபவர்களுக்கும், இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்த முனைபவர்களுக்கும் ஒரு வேளை இது போன்ற படைப்புகளின் ஃபேன்டசி தன்மை சாதாரணமானதாய் இருக்கலாம். ஆனால் வாசிப்பனுபவத்தில் எவரும் இது போன்ற படைப்புகளை ஒரேயடியாக தாண்டிச் சென்றிருக்க முடியாது. தேவையில்லாமல் ரொம்ப வாசிக்கிரோமோ என்றோ, அட என்னத்தை படிச்சு என்னத்தை கிழிக்கிறது என்றோ எரிச்சல் கொள்ளும் போது ஆசுவாசப் படுத்துவது போல இது போன்ற சில படைப்புகள் அடுத்த கட்ட் தளத்திலும் இது போன்ற பல உணர்வுக்குவியல்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கைய ஏற்படுத்தி வாசகனின் முதுகில் கை வைத்து தொடர்ந்து உந்தித் தள்ள வைக்கின்றன. இவற்றை நினைவு கூர்வதில் பெருமையே.
No comments:
Post a Comment