Monday, September 1, 2008

வாங்கண்ணே! வாங்க அம்மிணி! வணக்கமுங்கோ!

Holy Kailsh like Rising sun between vajrapani and avalokeshwara - உதய சூரியன் போல் திருக்கயிலாயம்



அன்பு வலையுலக நண்பர்களே,

வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் "தமிழ் வலைப்பூ கதம்பம்" வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும் படி அழைத்துள்ளார் சீனா ஐயா.

வலைப்பதிவுகளில் கலக்கிக் கொண்டிருக்கும் எவ்வளவு அன்பர்களை முடியுமோ அவ்வளவு அன்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு பெரிய பொறுப்பை, குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வைத்துள்ளார் அவர்.


முதற்கண் அவருக்கும் வலைச்சரத்தை ஆரம்பித்து இவவாறு சேவை செய்து வரும் , முத்துலக்ஷ்மி-கயல்விழி, பொன்ஸ்- பூர்ணா, சிந்தாநதி ஆகியோருக்கும் அனந்த கோடி நன்றிகள்.

முதல் பதிவில் சுய புராணம் பாடலாம் என்று அனுமதி தந்திருக்கிறார்கள் எனவே ஒரு சிறு அறிமுகம். அடியேன் ஒரு சிறு தொண்டன். பெற்றோர்கள் இட்ட நாமம் திருமுருகானந்தம், அது பள்ளியில் சென்ற போது முருகானந்தமாக சுருங்கியது. தற்போது கைலாஷி என்ற பெயரில் பதிவிடுகின்றேன். என்னடா ஒரு 'இகார' விகுதி அதிகமாகி விட்டதே என்று தோன்றுகிறதா? அது காரணப்பெயர்.



மாபெரும் கருணைக் கடலாம் அன்பே வடிவான முக்கண் முதல்வனும், மலையரசன் பொற்பாவையும் இந்த நாயேனையும் ஒரு பொருட்டாக மதித்து தங்கள் திவ்ய தரிசனம் தந்தருளினார்கள் அதற்கு கைமாறாக இட்டுக் கொண்ட பெயர் இது. திருக்கைலாயம் தரிசித்தவன் என்ற அர்த்தமும் கொள்ளலாம்.

இனி அடியேன் பதிவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு.
கிடைத்தற்கரியது மானிடப்பிறவி, இப்பிறவியில் மட்டுமே நாம் பூரண சரணாகதி செய்து , சீவனாகிய நாம் 'சீ' யில் உள்ள ஆணவமாம் கொம்பைத் தொலைத்தால் நாமே சிவமாகலாம். அதாவது, பிறப்பு, இறப்பு என்னும் இந்த சம்சார சாகரத்தை கடந்து மோக்ஷம் அடையலாம் என்ற உணர்வுடன்,

.......அகண்டாகார சிவ
போகம் என்னும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய் கிடக்குதையோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் செகத்தீரே!

என்றபடி அந்த ஆண்டவன் தந்த திவ்ய தரிசனங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆன்மீகப்பதிவுகள் எழுதுபவன். எனவே வந்து தரிசிப்பவர்களும் மிகவும் குறைவுதான்.


திருக்கயிலாய யாத்திரை மிகவும் கடினமானது என்று ஒரு அபிப்பிராயம் அனைவரிடமும் உள்ளது, ஆனால் அவ்வாறு இல்லை, தூய மனதுடன் "அம்மையப்பா தங்கள் தரிசனம் வேண்டும்" என்று பிரார்தித்தால் போதும் அவரே கையைப் பிடித்து அழைத்து சென்று எப்படி அற்புத தரிசனமும் கொடுத்து அனுப்புகின்றார் என்பதைக் கூறும் பதிவுதான் திருக்கயிலாய யாத்திரை


அம்பலத்தாடும் அரசரின் அருளையும், அருமையையும், அழகையும், " ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே" என்ற திருஞான சம்பந்தரின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு புனையும் பதிவுதான் அம்பலத்தரசே அருமருந்தே



அஹோபில திவ்ய தேசம் சென்று வந்தவுடன் ஆரம்பித்த பதிவு, பின்னர் விஷ்ணு சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் நரசிம்ஹர் என்னும் இப்பதிவுகளில் காணலாம். பெருமாளை கருட வாகனத்தில் த்ரிசித்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்பது ஐதீகம். அந்த பொன் மலையாம் கருடன் மேல் கரும்புயலாம் திருமால் பல திருக்கோவில்களில் பவனி வரும் அழகையும், அது தொடர்பான பல ஐதீகங்களையுக் கூறும் பதிவு. மற்ற பதிவுகளை விட அதிகம் அன்பர்கள் தரிசிக்கும் பதிவு இது கருட சேவையும் தமிழுக்கு தகைமை சேர்க்கும் அத்யயனோற்சவம் பற்றிக்கூறும் வலைப்பூ வைகுண்ட ஏகாதசியும் இதனுள் அடக்கம்.


காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பாரத தேசமெங்கும் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஜகத் ஜனனி, ஜகன் மாதா, மஹா திரிபுர சுந்தரி, அன்னையின் அருளை, அழகை,மாப்பெரும் கருணையை இயம்பும் பதிவுதான் நவராத்திரி நாயகி


சிறு வயதில் மார்கழிப்பனியில் அதிகாலையில் எழுந்து ஓடி உடுமலைப்பேட்டை பிரசண்ட விநாயகர் ஆலயத்தில் சேவித்த திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டதால் அதற்காக இட்ட பதிவுகள் திருப்பாவை மற்றும திருவெம்பாவை


இனி அடுத்த பதிவில் இருந்து வலைப்பதிவர்களின் அறிமுகம் ஆரம்பம்.


" பூப் பூவா பூத்திருக்கு (வலை) பூமியிலே ஆயிரம் பூ அவற்றின் நறுமணத்தை உணர வாரும் வலை உலகத்தோரே"


என்று கை கூப்பி தாழ்மையுடன் அழைக்கின்றேன். அன்பர்கள் அனைவரும் வந்து படித்து இன்புறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

******************

இந்திர ஜாலம் மஹேந்திர ஜாலம்

எம்கோனும் சூரியனும் இணைந்து அளிக்கும் அற்புத ஜாலம்

வாம தேவ முகம் என்றழைக்கப்படும் சிவபெருமானின் வடக்கு நோக்கிய முகத்தில் சூரியன் நடத்தும் அற்புத ஜாலத்தைக் கண்டு களியுங்கள் அன்பர்களே.




இந்திர ஜாலத்தின் துவக்கம்




வர்ண ஜாலத்தின் அடுத்த கட்டம்


அடி முதல் முடி வரை சூரியக்கதிர்கள்








Full of red - அருண நிறத்தில் எம்பிரான்




Golden yellow Hued Lord Shiva - தங்கமென மின்னும் எம்பெருமான்





Lord in His usual self - சுவேத வர்ணேஸ்வராக
எப்படி இருந்தது வர்ணஜாலம்??
"கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாத கண்டேன்."

5 comments:

  1. அன்பின் முருகானந்தம்

    அருமையான துவக்கம் - சிவனடி போற்றி, கைலாச தரிசனத்தை ஒட்டி அனைத்து ஆன்மீகப் பதிவுகளையும் அறிமுகப்படுத்திய பாங்கு பாராட்டத்தக்கது.

    அம்பலத்தாடுபவன், அவனின் மைத்துனன், வாகனமாகிய கருடன், பண்டிகைகளில் முக்கியமான வைகுண்ட ஏகாதசி, நவராத்திரியின் நாயகி, திருப்பாவை, திருவெம்பாவை என ஆன்மீகப் பதிவுகள் அனைத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார் ஆசிரியர். அனைத்துப் பதிவர்களையும் அவ்வப்பொழுது இப்பதிவுகள் பக்கம் செல்லுமாறு இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. பெயருக்கேத்தபடி கயிலையையே கண்முன்னாலே நிறுத்திட்டீங்களே கைலாஷி.

    தரிசனம் அருமை.

    இந்தவாரம் 'சிவசிவா'ன்னு இருக்கப்போகுது!!!

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. //அம்பலத்தாடுபவன், அவனின் மைத்துனன், வாகனமாகிய கருடன், பண்டிகைகளில் முக்கியமான வைகுண்ட ஏகாதசி, நவராத்திரியின் நாயகி, திருப்பாவை, திருவெம்பாவை//

    அருமையான ஒரு மாலை ஆக்கி விட்டீர்கள் சீனா ஐயா நன்றி

    ReplyDelete
  4. நன்றி துளசி டீச்சர்.

    உறங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் அவர்தான் மனம் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

    //பெயருக்கேத்தபடி கயிலையையே கண்முன்னாலே நிறுத்திட்டீங்களே கைலாஷி.//


    யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

    ReplyDelete
  5. முதலில் வந்து வரவேற்ற சதாங்கா அவர்களுக்கு நன்றி.

    தாங்கள் வரைந்த அம்பலத்தரசர் படம் அருமை அதைக்காண்பதற்காகவே பல முறை உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்.

    வரும் நாட்களிலும் வாருங்கள்.

    ReplyDelete