கலை கலைக்கானது எனும் விவாதங்களை விட்டு இலக்கியம் இன்று வெகுதூரம் விலகி வந்து சமூகத்தோடு இணைந்து விட்டது. இலக்கியம் இணைந்த அளவுக்கு நமது தமிழ் சமூகத்தோடு இணைந்ததா என்பது கேள்விக்குறியே.
அறிவியல் என்றாலும், புதிய மேனாட்டு கண்டுபிடிப்புகள் என்றாலும், அறிவியல் விதிகள் என்றாலும் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்பட முடியும் எனும் குருட்டுத் தனமான விவாதங்கள் நமது மொழித் திண்ணைகளில் அலசப்படுவதுண்டு.
அத்தகைய புலம்பல்களையெல்லாம் புறந்தள்ளின் இன்று பல்வேறு அறிவியல் கட்டுரைகள் தமிழின் கரம்பிடித்து நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் தகவல்களை தமிழ்படுத்தும் பணி ரொம்பவே கடினமானது. ஆனாலும் பல தளங்கள் முடிந்தவரை புரியும் வகையில் தமிழ்ப்படுத்தித் தருகின்றன. இவை தகவல் பரிமாற்றம் எனும் நிலையையும் தாண்டி மொழியின் செழுமையயும், ஆளுமையையும், தனித் தன்மையையும் நிலைநாட்டும் என்பதில் ஐயமில்லை.
விஞ்ஞானக் குருவி வலைத்தளம் நான் அவ்வப்போது உலவும் இடம். அறிவியல் தகவல்களை பெரும்பாலும் உடனுக்குடன் பதிப்பிக்கும் தளமாக இது இருக்கிறது. அவ்வப்போது கொஞ்சம் தொய்வு நேர்ந்தாலும் இடைவிடாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தளம் இயங்கிக் கொண்டிருப்பதே ஒரு இனிமையான செயல் தான். இந்தத் தளத்தின் சிறப்பு தகவல்களை சுருக்கமாக, நல்ல விஞ்ஞானத் தமிழில் தருவது தான்.
கவிஞர் ஜெயபாரதன், கனடாவில் வசிப்பவர். அவருடைய கவிதைகளை திண்ணையில் அடிக்கடி படித்திருக்கிறேன். ஆனால் அவர் பிரமாதமாக விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதுவார் என்பது எனக்கு தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் தான் அவருடைய அறிவியல் கட்டுரை ஒன்றைப் படித்தேன். உயிரின் முதல் துகளைத் தேடும் அறிவியல் முயற்சிக் கட்டுரை அது. மிகவும் விரிவாக சிறப்பாக எழுதியிருந்தார்.
கடவுளின் துகளைத் தேடும் பயணம் என நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நானும் ஒரு சிறு அறிமுகக் கட்டுரை எழுதியிருந்தேன். ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையுடன் ஒப்பிடுகையில் நமது கட்டுரை பாமரர்களுக்கான ஒரு அறிமுகக் கட்டுரையே.
அதே தளத்தில் அவருடைய மற்று சில விஞ்ஞானக் கட்டுரைகளும் காணக் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவல். உதாரணத்துக்கு ஒன்று இங்கே பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !!
வலையில் இலக்கியங்களும், கலாட்டாக்களும் வளர்ந்த அளவுக்கு அறிவியல் குறித்த பதிவுகள் வளரவில்லை என்பதே உண்மை. விமானம் எப்படிப் பறக்கிறது என விளக்கும் செம்மலர் பதிவு போல இடையிடையே சில பதிவுகளே அகப்படுகின்றன.
எனது அலசல் வலைத்தளத்தில் மருத்துவம், விஞ்ஞானம், புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பதிவுகள் நிறைய போடுவதுண்டு.
அறிவியல் கட்டுரைகள் இன்னும் நிறைய தமிழில் எழுதப்படவேண்டும் எனும் எதிர்பார்ப்பு உங்களைப் போல என்னிடமும் நிரம்பவே இருக்கிறது !
மீண்டும் சந்திப்போம்.
கடவுளில் துகளைத் தேடும் பயணம் பதிவிற்குச் சென்றேன். புரிதல் சிரமமாக இருக்கிறது...
ReplyDeleteஉண்மை தான்.. கொஞ்சம் ஆழமான கட்டுரை. நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்...
ReplyDeleteஅறிவியல் பற்றிய தமிழ்ப் பதிவுகள் சற்றே குறைவுதான். அதையும் தேடிப்பிடித்து சுட்டியது நல்ல செயல் - நன்றி
ReplyDeleteநன்றி சீனா.
ReplyDelete