(சேட்டையின் மேன்சன் அறைக்கதவு தட்டப்படுகிறது.
திறந்ததும் எதிரே.....!)
திறந்ததும் எதிரே.....!)
எமதர்மராஜன்: தோம் தாத்தா!
சே.கா: அடடே! வாங்க கவுண்டமணி அண்ணே! வாங்க செந்தில் அண்ணே! சவுக்கியமா?
எமதர்மராஜன்: டேய் சேனா கானா! யாரைப் பார்த்து கவுண்டமணி, செந்திலுங்கிறே? நான் எமன்! இவன் சித்திரகுப்தன்! வழியை விடு!
சே.கா: உண்மையாவா? நீங்க ஒரிஜினல் எமனா?
எமன்: பின்னே என்ன பர்மா பஜார் எமனா? ஒரிஜினல் எமன் தாண்டா, இத பாரு! என்னோட ஐடி.கார்டு! கீழே கையெழுத்துப் போட்டிருக்கிறது யார் தெரியுதா? பிரம்மா!
சே.கா: அது சரி, இங்கே எதுக்கு வந்தீங்க?
எமன்: உன் கிட்டே ஒரு பத்து ரூபா கைமாத்து வாங்கிட்டுப்போக வந்தோம்! டேய் பனங்கொட்டைத்தலையா! எமனும் சித்திரகுப்தனும் எதுக்குடா வருவாங்க? உன் உயிரை எடுக்கத்தான்!
சே.கா: அஸ்கு புஸ்கு! என் உயிரை இப்போ எப்படி நீங்க எடுத்திட்டுப் போக முடியும்? நான் தான் இன்னும் ஐம்பது வருஷம் உயிரோட இருப்பேனே? தப்பாக் கணக்குப் போட்டிருக்கீங்க!
சித்திரகுப்தன்: சேட்டை!! இந்த சித்ரகுப்தன் சரித்திரத்தில் தப்புக்கணக்கு என்பதே கிடையாது.
சே.கா: எனக்கு சரித்திரமே கிடையாது!
எமன்: சேட்டை! இன்னும் ஐம்பது ஆண்டுகள் நீ உயிரோடு இருப்பாய் என்று கூறியது யார்?
சே.கா: ஜோசியர் மந்தவளி மாடசாமி!
(எமனும் சித்திரகுப்தனும் சிரிக்கிறார்கள்! பிறகு.....)
சித்திரகுப்தன்: ஹையோ நரனே, இங்கு வருவதற்கு முன்னால் அவர் உயிரைத் தான் பறித்து விட்டு வந்திருக்கிறோம். அந்த மடசாமியை மடக்கி எமலோகத்துக்குப் பார்சல் பண்ணி அனுப்பிவிட்டோம்!
எமன்: சித்திரகுப்தா! இந்த தயிர்வடைத் தலையன் கிட்டே என்ன பேச்சு? கழுத்துலே பாசக்கயிற்றை வீசி இவன் உயிரை மாய்த்து விடு!
சே.கா: ஒரு நிமிஷம்! ஸ்தூ...ஸ்தூ!! எமதர்மராஜா, சித்ரகுப்தா! பறிக்கறது தான் பறிக்கறீங்க! ஒரு அரை மணிநேரம் கழிச்சுப் பறிக்கக் கூடாதா?
எமன்: ஏன்? மெகாசீரியல் பார்க்கப் போறியா? அதைப் பார்த்தால் எங்கள் உயிருக்கே கேரண்டி கிடையாதுரா சாமீ! உடனே கிளம்பு!
சே.கா: இல்லை எமதர்மராஜா! வலைச்சரத்துலே அஞ்சு நாள் முடிஞ்சு போச்சு! இன்னிக்கு ஆறாவது நாள்! அதையும் எழுதிட்டேன்னா, என் கடமை முடிஞ்சிடும். அப்புறம் சந்தோஷமா வர்றேன்.
சித்திரகுப்தன்: சேட்டை! நீ ஏற்கனவே சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வரலாற்றை முடிக்காமல் வைத்திருக்கிறாய் என்று புகார் வந்திருக்கிறது. உன்னைக் கொண்டு போய் முதலில் அதை முடிக்க வேண்டும்.
எமன்: அது மட்டுமில்லை! நீ வலைப்பூ ஆரம்பித்து எழுதத் தொடங்கியது முதல் மானிடர்கள் எங்களின் எந்த தண்டனைக்கும் மசிய மாட்டேன் என்கிறார்கள். சேட்டைக்காரனையே வாசித்து விட்டோம்; எங்களுக்குக் கும்பீபாகமெல்லாம் கோவளம் பீச்சில் குளிப்பது போல என்று கொக்கரிக்கிறார்கள். இனிமேல் புதிதாக தண்டனைகளை எமலோகத்தில் கண்டுபிடித்தால் தானுண்டு.
சித்திரகுப்தன்: அதற்குப் பேசாமல் அங்கேயும் இவனை ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கச் சொல்லி விடலாம்.
சே.கா: ஹும், விதி விட்ட வழி! இன்று தான் பழமைபேசி தொடங்கி, ஈரோடு கதிர் வரை பல பதிவர்களைப் பற்றி எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். நடப்பது நடக்கட்டும்.
எமன்: என்னது? பழமைபேசியா? "இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள எதையாவது செய்!" என்ற தங்கவரிகள் நிரம்பிய கவிதை எழுதிய பழமைபேசியா?
சே.கா: உங்களுக்கும் வலைப்பதிவு வாசிக்கிற வழக்கமுண்டா?
எமன்: இல்லாமலா உன் உயிரை முன்கூட்டியே பறிக்க வந்திருக்கிறோம்? ஒன்று செய்! நீ எழுதி முடிக்கும் வரையில் காத்திருக்கிறோம். நீயும் உருப்படியாக ஒரு காரியம் செய்ததாக இருக்கட்டும்.
சித்திரகுப்தன்: சேட்டை, யார் யாரைப் பற்றியெல்லாம் எழுதப்போகிறாய்?
சே.கா: "முனைவர்.இரா.குணசீலன்-வேர்களைத் தேடி" என்ற தனது வலைப்பதிவில் பல அற்புதமான இலக்கியம் குறித்த இடுகைகளை எழுதி வருகிறார். வாசிக்க வாசிக்க மலைப்பாய் இருக்கிறது.
எமன்: தோம் தாத்தா! நீ வாசிக்கிற வலைப்பதிவுகளெல்லாம் பிரமாதம் தான் போ! ஆனால், உனக்கு எந்த பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!
சே.கா: ஏன்? நானும் தான் ஸ்ரேயாவைப் பற்றி அந்தாதி எழுதினேன்.
எமன்: டேய் சேனா கானா! என் கிட்டே இருக்கிற ஒரேயொரு கதை உடைஞ்சாலும் பரவாயில்லை! உன் மண்டையிலே ஓங்கி ஒண்ணு போட்டிருவேன். நீ எழுதினது அந்தாதியாடா? அது அசிபத்ரம் - வாசிக்கிறவங்க கண்ணுலே ஊசியாலே குத்துறா மாதிரி இருந்துச்சு!
சித்திரகுப்தன்: ஹிஹிஹி! பிரபோ! அதனால் தான் அதைப் படித்து விட்டு துரை.ந.உ, "இது கடும்பாக்கள் அல்ல; கொடும்பாக்கள்,’ என்று கூறியிருந்தார். நினைவிருக்கிறதா?
எமன்: அவர் கூறியும் இவன் திருந்தவில்லையே? மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல பரிமாணங்களில் எழுதுகிறவராயிற்றே துரை.ந.உ? "மணி என்ன ஆச்சு?" என்று எழுதியிருந்தாரே, அது போல ஒரு கவிதை எழுத முடியுமா இந்த சேனா கானாவால்?
சித்திரகுப்தன்: உண்மைதான் பிரபோ! குறைவாகவே இடுகையிட்டாலும் நிறைவாக எழுதுகிறவர் அவர்!
எமன்: கேட்டாயா சேனா கானா! எனக்குத் தெரிந்து பிப்ருவரியில் 41 இடுகை போட்ட ஒரே பதிவர் நீ தான்! முழிக்கிறதைப் பாரு, பிளாக்கில் டிக்கெட் விற்கிறவன் மாதிரி! டேய் சேட்டை! சும்மாச் சும்மா இடுகை போட்டா போதாது; கும்மாச்சி எழுதிய "உழைப்பவன் ’கூமுட்டை’-இன்றைய தமிழகம்" மாதிரி அவ்வப்போது எழுதினாலும் அழுத்தமாக இடுகை எழுத வேண்டும்? தெரியுதா?
சே.கா: ஆஹா! கும்மாச்சியை நான் பின்தொடர்ந்துக்கிட்டிருக்கேனே?
சித்திரகுப்தன்: பின்தொடர்ந்து என்ன புண்ணியம்? அவர்களெல்லாம் முன்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்? "உண்மைத் தமிழன்(15270788164745573644) எழுதிய "இந்தக் கடன்களை யார் அடைப்பது?" போல ஒரு பதிவேனும் எழுதியிருக்கிறாயா?
சே.கா: என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க, நானும் தப்பித்தான் தமிழன்-னு அதே மாதிரி ஒண்ணு எழுத "ட்ரை" பண்ணினேனே?
எமன்: நீ "ட்ரை" பண்ணலேடா, வாசிச்சவங்களையெல்லாம் "ஃபிரை" பண்ணிட்டே! அதைப் படிக்காத தமிழனுங்க மட்டும் தான் தப்பிச்சாங்கன்னு எமலோகத்துலேயே பேசிக்கிறாங்க தெரியுமா?
சே.கா: எமண்ணே! அது காமெடிங்கண்ணே!
எமன்: டேய் சேப்பங்கிழங்குத்தலையா! ஒரு படமும் நாலு மொக்கையும் போட்டா காமெடியா? கோவி.கண்ணன் "சேவல்காரன் கதை வெளியாகியது!" என்று எழுதினாரே! அது காமெடி!
சே.கா: ஆஹா, நான் யார் யாரைப் பத்தியெல்லாம் எழுதணுமுன்னு நினைக்கறேனோ நீங்களே ஞாபகப்படுத்தறீங்களே!
சித்திரகுப்தன்: பிரபோ! இந்த நரனுக்கு நல்ல பதிவர்களைத் தெரிந்திருக்கிறது! ஆனாலும், தொடர்ந்து மொக்கையே போடுகிறானே? இவனை ஒரு ஆறுமாதத்துக்கு அந்தகூபத்தில் தள்ளி விட வேண்டும் பிரபோ!
சே.கா: தாராளமாப் போடுங்க! ஆனா, லேப்-டாப்பும் பிராட்-பேண்டும் மட்டும் கண்டிப்பா வேணும்! ஏன்னா,தமிழின் சிறந்த 100 சிறுகதைகளை சென்ஷி எழுதிட்டிருக்காரு! இந்த மாதிரி சான்ஸையெல்லாம் நழுவ விட முடியாது.
எமன்: டேய் சேனா கானா! உன்னை அடிக்கணுமுன்னு வரும்போதெல்லாம் இந்த மாதிரி நல்ல பதிவருங்க பெயரைச் சொல்லித் தப்பிச்சுக்கறே நீ?
சே.கா: அடிச்சாலும் வலிக்காதுங்க! முகிலன் எழுதின "பூ வலி" படிச்சதிலிருந்து மனசெல்லாம் வலியா இருக்குதுண்ணே!
சித்திரகுப்தன்: சேட்டை! இதே கருத்தில் வானம்பாடிகள் எழுதிய "காய் வலி" இடுகையையும் படித்தாயா இல்லையா?
சே.கா: படிக்காமலா இருப்பேன்? ஐயாவின் வலைப்பூவையும் நான் விடாமல் படிக்கிறேனே?
எமன்: சித்திரகுப்தா! சிறந்த பதிவர்களைப் பற்றியெல்லாம் இவனும் ஒரு கணக்கெடுப்பே நடத்தியிருப்பான் போலிருக்கிறதே!
சே.கா: நான் கணக்கெடுப்பது இருக்கட்டும்! நமது ச.செந்தில்வேலன் எழுதிய "சாதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்." என்ற இடுகையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எமண்ணே? நெத்தியடி!
எமன்: சேட்டை! இவ்வளவு நல்ல பதிவர்களைத் தெரிஞ்சு வைச்சிருக்கிறே? அருமையான இடுகைகளையெல்லாம் படிக்கிறே? கையிலே வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்காக அலையுறியே?
சே.கா: ஆஹா! வெண்ணைன்னதும் நினைவுக்கு வருகிறது எமண்ணே! பலாபட்டறை சங்கர் எழுதிய "ஒரு ஆதங்கம்" என்ற பதிவைப் பற்றியும் வலைச்சரத்தில் குறிப்பிட்டே ஆகணும்.
சித்திரகுப்தன்: இவர்களெல்லாம் சமூக அக்கறையோடு எழுதுகிற பதிவர்கள். கோடியில் ஒரு சிலரே இப்படி சிந்திக்கிறார்கள்.
சே.கா: கோடி! தேங்க்ஸ் சித்ரகுப்தா! ஈரோடு கதிர் எழுதிய இடுகைகளில் எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிக்கொண்டிருந்தேன்; அவர் எழுதிய "கோடியில் இருவர்" இடுகையைப் பற்றிக் குறிப்பிட்டு விடுகிறேன்.
எமன்: பலே சேனா கானா! தமிழ்மணத்திலும் தமிழீஷிலும் புதிய வரலாறே படைத்த இடுகையாயிற்றே! அதே ஈரோடை நகரைச் சேர்ந்த அகல்விளக்கு எழுதிய "உதிரும் இலைகள்" பதிவையும் நினைவில் நிறுத்திக்கொள்!
சித்திரகுப்தன்: சேட்டை! இது போன்ற இடுகைகள் உன் போன்ற புதியவர்கள் செல்ல வேண்டிய திசையை தெளிவாகக் காட்டும்
எமன்: சித்திரகுப்தா! எனக்கென்னவோ சேனா கானா நம் இருவரிடமும் போட்டு வாங்கிக்கொண்டிருக்கிறான் என்று படுகிறது. பார், இப்போது நீயே 'திசைகாட்டி’ ரோஸ்விக் எழுதிய "ரயில், தாலாட்டும் மற்றொரு தாய்" என்ற அருமையான இடுகையை நினைவூட்டி விட்டாயே?
சித்திரகுப்தன்: சீக்கிரம் இவன் எழுதி முடித்தால் தானே இவனை எமலோகத்துக்குக் கொண்டு செல்ல முடியும்? நமக்காக நீண்ட பயணம் காத்திருக்கிறதே!
சே.கா: ஆஹா வந்திருச்சு! நீண்ட பயணம் என்றா சொன்னீர்கள்? இருங்கள், துபாய் ராஜாவின் பயணக்கட்டுரைகளில் எனக்குப் பிடித்த "எகிப்திய விருந்து" பற்றியும் குறிப்பிட்டு விடுகிறேன்.
எமன்: குறிப்பிடு! குறிப்பிடு! சுறாவைப் பற்றி எழுதி மொக்கை போட்டது போதும்! ஆயில்யன் எழுதிய "புறா" வைப் பற்றியும் மறக்காமல் எழுது!
சே.கா: அம்மாடியோ! எமதர்மராஜனே! உங்களைப் பெற்ற தாயின் கால்தொட்டுத் தொழ வேண்டும் போலிருக்கிறது.
எமன்: சரியாகச் சொன்னாய்! அன்னையர் தினம் பற்றி SUREஷ் (பழனியிலிருந்து) எழுதிய MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல் பதிவையும் ஒரு முறை வாசித்து விடு சேட்டை!
சே.கா: எமண்ணே! நேற்று ஔவையைப் பேட்டி கண்டபோதும் அவரை அம்மா என்று தான் அழைத்தேன்! ஒரே ஒரு குறை! அவரிடம் அதியமான் அளித்த நெல்லிக்கனி பற்றி கேட்காமல் விட்டு விட்டேன்.
சித்திரகுப்தன்: சேட்டை! கவலைப்படாதே! அந்த நெல்லிக்கனி கிடைக்காவிட்டால் என்ன? நம் சங்கவி எழுதிய "மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி"யை வாசித்துப்பாரேன்!
சே.கா: கை கொடுங்கள் சித்ரகுப்தன் அண்ணே! இப்போ எனக்கு ரொம்ப தைரியம் வந்திருச்சு! நான் எதிர்பார்த்ததை விடவும் இந்தப் பதிவு நல்லா வருமுன்னு தண்டோரா போட்டுச் சொல்லலாம் போலிருக்கு!
எமன்: சேனா கானா? மறக்காமல் உண்மையைச் சொல்! தண்டோரா எழுதிய "கருநாகம்" புனைவைப் படித்தாயா இல்லையா?
சே.கா: படிக்காமலா இருப்பேன்? எங்கள் வலையுலகிலும் கூட எத்தனை புதுமைப்பித்தன்கள், தி.ஜானகிராமன்கள், சுஜாதாக்கள்....?
சித்திரகுப்தன்: சேட்டை! நல்ல வேளை நினைவூட்டினாய்! செ.சரவணக்குமார் எழுதிய "என் இனிய சுஜாதா" கட்டுரையைப் பற்றியும் தவறாமல் குறிப்பிட்டு விடு!
சே.கா: நான் சொல்வதற்கெல்லாம் உள்ளர்த்தம் கண்டுபிடித்து உதவுகிறீர்களே இருவரும்! மிக்க நன்றி!
எமன்: நீ சொல்வதற்கு உள்ளர்த்தம் கண்டுபிடிப்பது இருக்கட்டும்! கேபிள் சங்கர் "மனைவி அகராதி" என்று மனைவியின் பேச்சுக்கு எப்படி அர்த்தம் கண்டுபிடிப்பது என்று எழுதியிருக்கிறார் தெரியுமா?
சே.கா: ஓ! படித்தேன் அண்ணே! இதோ இடுகை ஏறக்குறைய முடிந்தே விட்டது. நர்சிம் எழுதிய "ஆழி-ஊழ்" என்ற புனைவைப் பற்றி மட்டும் ஓரிரு வார்த்தைகளாவது எழுதி விட்டால் போதும்.
எமன்: சேனா கானா! ஸ்டாப்!! நான் சொல்வதைக் கேள்!
சே.கா: இவ்வளவு நேரம் பொறுத்தீர்கள்! இதை முடிக்கும் வரை பொறுக்கக் கூடாதா?
எமன்: சேனா கானா! சுயபுத்தி இல்லாட்டியும் நாங்க ரெண்டு பேரும் சொல்லச் சொல்ல எவ்வளவு நல்ல நல்ல பதிவர்கள் பத்தியெல்லாம் எழுதியிருக்கே? உன் உசிரைப் பறிக்க எனக்கு மனசே வர மாட்டேங்குதுப்பா!
சித்திரகுப்தன்: பிரபோ என்ன இது?
எமன்: சித்திரகுப்தா, குறுக்கே பேசினா குறுக்காட்டி மிதிச்சுப்போடுவேனாக்கும்! சேட்டை! நீ வலைச்சரம் எழுது! அப்புறமா உன் வலைப்பதிவுலேயும் எழுது! இன்னும் அம்பது வருசம் உசிரோட இருந்து எல்லார் உசிரையும் வாங்கு! ஆனா, இந்த எமனுக்காக ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணு! எப்படியாவது இந்த சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வரலாற்றை மட்டும் அப்பப்போ எழுதித்தொலை! அந்தாளு எமலோகத்துலே பண்ணுற லொள்ளு தாங்க முடியலே சேட்டை!
சித்திரகுப்தன்: ஆமாம் சேட்டை! கூடிய சீக்கிரம் நீ எழுதலேன்னா (கண்களைத் துடைத்துக் கொண்டே) அவரோட ராஜநர்த்தகி வரலட்சுமியை எமதர்மராஜன் முன்னாலே ஆட வைச்சிடுவேன்னு மிரட்டியிருக்காரு!
எமன்: ஆமாம் சேட்டை! ஏற்கனவே ஒரு வாட்டி அந்த அம்மா ஆடினதைப் பார்த்து என் கிட்டே இருந்த கிங்கரனெல்லாம் வி.ஆர்.எஸ்.வாங்கிட்டு பூலோகத்துக்குப் போயி பித்துப்பிடிச்சு அலையுறாங்க! இன்னொரு தடவை ஆடுனா என் நிலைமை என்னாகிறது? இது நியாயமா? இது அடுக்குமா?
சே.கா: அச்சச்சோ! கவலைப்படாதீங்க அண்ணே! சீக்கிரமே சொறிகால் வளவனைப் பத்தி திரும்பவும் எழுதறேன். உங்களைப் பொறுத்தவரைக்கும் வரலட்சுமி இனிமேல் வரா லட்சுமி தான்,போதுமா? பயப்படாம பத்திரமா எமலோகம் போய்ச் சேருங்க!
எமன்: வரேன் சேட்டை!
சித்திரகுப்தன்: நானும் வரேன் சேட்டை!
சே.கா: தோம் தாத்தா!
(எமதர்மராஜனும் சித்திரகுப்தனும் மறைகிறார்கள்)
அன்புடையீர்,
இந்த ஆறு நாட்களில், என்னால் இயன்றவரையிலும் பல வலைப்பதிவுகள் குறித்து எனக்குத் தெரிந்தவரையில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். அனுபவமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக, பல வலைப்பூக்களைப் பற்றி எழுத முடியாமல் போயிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது. அங்ஙனம் நான் குறிப்பிடத் தவறிய வலைப்பூக்களும் எனது விருப்பத்துக்கும் ரசனைக்கும் உரியவையே!
நாளைய தினம், எனது இடுகைகளில் எனது சகவலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமான சிலவற்றைப் பற்றி எழுத விழைகிறேன். இந்த ஆறு நாட்கள் பொறுத்தது போல, நாளை ஒரு நாளும் பொறுத்துக்கொள்ளுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன? :-)
நாளை ""அந்நி(யா)யன்" இடுகையில் சந்திப்போமா?
நன்றி! வணக்கம்!!
சேட்டைக்காரன்
இதை முதல் ஆளாய் வாசித்த மோகனுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete( ஹி! ஹி!! எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்)
இன்னும் படிக்கவே இல்லே...படிச்சிட்டு வரேன்
சேட்டை, ஒரு விஷயம் நான் பார்த்தது ...
ReplyDeleteஇந்த ஆறு நாளில் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளில் நான் சென்று பார்த்த போது....நிறைய பதிவுகளில் நீங்கள் கம்மென்ட் போடவில்லை ஆனால் அதனை ஞாபகம் வைத்து இன்று எழுதி உள்ளது..உண்மையிலே வியப்பு
இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு
//மெகாசீரியல் பார்க்கப் போறியா? அதைப் பார்த்தால் எங்கள் உயிருக்கே கேரண்டி கிடையாதுரா சாமீ!//
ReplyDeleteசரியாத்தான் சொல்லியிருக்கார் எமகவுண்டர்... சிரிச்சு முடியலை. இன்னொரு வாரமும் ஆசிரியரா தொடர்வதற்கு அவர்கிட்ட வரம் வாங்கியிருக்கலாமே.
அப்பப்பா ஏகப்பட்ட வலைப் பூக்களை வாசித்து அதன் அருமை பற்றி தங்களுக்கே உரித்தான பாணியில் விளக்கி இருக்கும் உங்களின் பாணி தனித் தன்மை பெற்றது. வாசித்த உடன் அவைகளை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது. சேட்டை உங்களின் கடுமையான உழைப்புக்கு ஒரு ராயல் ஸல்யூட்.
ReplyDeleteரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
அருமை சேட்டை.
ReplyDeleteஅன்பின் சேட்டைக்காரன்
ReplyDeleteஒவ்வொரு நாளும் பதிவர்களை அறிமுகப்படுத்திய விதம் தேர்வுகள்
இதற்கு பின்பு இருக்கும் வாசிப்பு
வாழ்த்துகள் ! சிறப்பான வாரம் !
முடியல! சிரிச்சு வயிறு வலிக்குது.
ReplyDeleteசூப்பர் அண்ணாச்சி.
வாழ்த்துகள் ! சிறப்பான வாரம் !
ReplyDeleteஉங்கள் சேட்டைப் பணி தொடரட்டும்.சேட்டையாய் இருந்தாலும் பயனுள்ளதாய் இருக்கு.
ReplyDelete:)). யப்பா ஆனாலும் இவ்வளவு சேட்டையாகாது. காட்சி கண்முன் விரிகிறது. இது வரைக்கும் வலைச்சரம் காணாத கலக்கல். மெகா கலக்கல்:). மீண்டும் நன்றி குறிப்பிட்டதற்கு.
ReplyDeleteசேட்டை.. சும்மா சொல்லக்கூடாது இந்த ஆறு நாளும் அலப்பற தான்.
ReplyDeleteநாளையையும் எதிர்பாத்திருக்கேன்..
அன்பின் சேட்டை
ReplyDeleteகடும் உழைப்பு - ஈடுபாடு - இத்தனை பதிவர்கள் அறிமுகமா - நினைத்துப் பார்க்கவே முடிய வில்லையே - நாளை ஞாயிறும் எழுதலாம் - ஞாயிறு இரவு வரை எழுதலாம் - எழுதுக எழுதுக - நல்வாழ்த்துகள் சேட்டை
நட்புடன் சீனா
சேட்டை,
ReplyDeleteரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
உரிய படிவத்தை அனுப்பி வெச்சீங்கன்னா “ மீ த ஃபர்ஸ்ட்” -ன்னு போட்டு ரசிகர் மன்றத்த ஆரம்பிச்சிடுவேன்.
சரம் தொடுத்த விதம் ... பாராட்ட என்னிடம் புது சொல் எதும் இல்லியேப்பா.
நீங்க காட்டிய தடத்தில் ரவுண்டு போயிக்கிட்டு இருக்கிறேன்..ங்கோ
ReplyDeleteசேட்டை சேட்டை தான் !!!
ReplyDeleteஅடுத்து வர ஆசிரியருக்கும் கொஞ்சம் பதிவுகளை விட்டு
ReplyDeleteவைங்கப்பு :)) ச்சும்மா........அசத்தல் சேட்டை.
அனுபவமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக, பல வலைப்பூக்களைப் பற்றி எழுத முடியாமல் போயிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது"//
ReplyDeleteஅவையடக்கம்...!!!?
அடுத்த வாரமும் உங்களையே தொடரச் சொல்லும் சாத்தியக் கூறுகள் தெரிகின்றன சேட்டை...எனவே குறையை விடுங்கள்...ச்...ச்...சும்ம்...மா பின்னிட்டீங்க..
தொகுப்பும் தொகுத்த விதமும் சிறப்பெனச் சொல்லவும் வேண்டுமா:)? வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சே.கா!
ReplyDeleteவாழ்த்துகள்! :))
யோவ் சேட்டை..... எப்படிய்யா..... எப்படி....இப்படி!!!!!!!
ReplyDeleteஇதுதான் இந்தவாரத்துலே 'மகுடம்'
மனமார்ந்த இனிய பாராட்டுகள்.
//இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு//
ReplyDeleteசேட்டை கன்னாப்பின்னானு ரிப்பீட் போட்டுக்கறேன்.
எப்படி இத்தனை பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க..
அசத்தல்காரன் நீங்க.
சேட்டை நண்பா!
ReplyDeleteஎன்னமாய் அறிமுகங்கள்...
வலைச்சரத்தின் இந்த வாரத்தில் நிறைய அறிமுகங்களோடு அசத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
குறிப்பாய் இன்றைய அறிமுகங்கள்... தோம்....தாத்தா!
பிரபாகர்...
உங்க மண்டைக்குள்ளே ஏதாவது தேடுதல் பொறி ( செர்ச் எஞ்சின்) தனியா வச்சிருக்கீங்களா ????????????
ReplyDeleteஒருவாரமா நீங்க தூங்குனதுக்கான அறிகுறியேத் தெரியலியே !!!!!!!!!!
வாழ்த்துகள் சே’ரன் .
தோம் தாத்தாவுல எங்க பிரவு காணோமே..
ReplyDeleteஅட.. பிரவுதான் சித்திர குப்தனா!!???
சரி சரி..
அசத்தல் சேட்டை
நன்றி
ஒரு வாரம் போன மாதிரியே தெரியல அசத்தல் :-)))))))
ReplyDelete// ஏன்னா,தமிழின் சிறந்த 100 சிறுகதைகளை சென்ஷி எழுதிட்டிருக்காரு!//
ReplyDeleteஇன்னும் நான் எந்த சிறுகதையும் எழுத ஆரம்பிக்கலைங்க.. சிறுகதைகளைத் தேடித் தொகுத்திக்கிட்டிருக்கேன். அம்புட்டுத்தேன் :)
சேட்டையின் கைகளில் அறிமுகங்கள் மிகவும் அருமை.
ReplyDeleteநண்பர்கள் குறிப்பிடுவதுபோல உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது சேட்டைக்காரன். குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅறிமுகம் செய்த பதிவுகள் அனைத்தும் நல்லப் பதிவுகள்.
ReplyDeleteநன்றி.
அனைத்து அறிமுகங்களும் அருமை சேட்டைக்காரன்.
ReplyDeleteஅசத்தலான அறிமுகங்கள் சேட்டை. நல்லதொரு படைப்பு.
ReplyDelete////இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு//
ReplyDeleteஅதேதான் சேட்டை...
சேட்டைக்காரன் அசத்தல்காரன்...
:-)
அறிமுகம் செய்த பதிவுகள் அனைத்தும் நல்லப் பதிவுகள்.
ReplyDeleteஅருமை, அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteபின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்! :-)
ReplyDeleteசேட்டைக்காரன்
நூறுஆண்டு காலம் வாழ்க!
ReplyDeleteஎல்லோரையும் மகிழ்வித்து மகிழுங்கள்.
அண்ணே..
ReplyDeleteகாலைத் தொட்டு வணங்குகிறேன்..
இதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய மனசு வேணும்.. அது உங்ககிட்ட இருக்கு..!
பதிவர்கள் சார்பாக நன்றி.. நன்றி.. நன்றி..