மனிதர்களே இல்லாத உலகத்தில் நாம் சென்று வாழ்ந்து விடக் கூடாதா என நினைப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. மனிதர்கள் மனிதாபிமானம் தொலைத்துவிட்டார்கள் என்கிற குறைபாடு அதிகமே உண்டு. ஆனால் மனிதர்களுடன், அவர்களது நிறை குறைகளுடன் வாழும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம். காட்டில் தவம் செய்ய செல்வது, சந்நியாசம் கொண்டு வாழ்வது மிகவும் கடினம் என்றால் அதைவிட மிகவும் கடினம் குடும்பம் என ஒரு கட்டுகோப்புடன் வாழ்வதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் எத்தனை சிறப்புடையது. ஏதாச்சும் செய்யணும் பாஸ் என அழைப்பு விடுத்த விதூஷ் மனதில் நீங்காத இடம் பெற்றார் என்றால் மிகையாகாது. இவரது எழுத்துகள் மிகவும் அருமை.
மீண்டும் அதே மனிதர்கள். எத்தனைவிதமான மனிதர்கள் உலகில் உண்டு என்பதை மிகவும் அருமையாகவே படம் பிடித்து வருபவர்கள் மிகவும் குறைவு. நமக்கு ஏற்றமாதிரிதான் பிறர் அமையவேண்டும் என நினைக்கும் மக்கள் உலகில் அதிகம். பிறருக்கு ஏற்றமாதிரி வாழ்ந்துவிட இருப்பவர்கள் ஒன்று கட்டயப்படுத்தபட்டு இருப்பார்கள், அல்லது சூழ்நிலை கைதி என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை அதுவல்ல. இவரின் பதிவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும். ஒவ்வொன்றும் அதி அற்புதம். என்னை பலமுறை யோசிக்க வைத்தவர். பாமரர்கள் எப்பொழுதுமே அதி புத்திசாலிகள் தான். வானம்பாடிகள் என மனதில் நீங்காத இடம் பெற்ற வலைப்பூ இது.
மனதில் உள்ளதை சொல்ல தைரியம் வேண்டும் என்பார்கள். ஆனால் பல நேரங்களில் நமக்கு வாய்ப்பதில்லை. மனதில் இருப்பதை எழுத்துகளில் வேறு வடிவத்தில் வடித்து வைக்கும் திறனும் பலரில் உண்டு. ஆனால் தனக்கு ஏற்பட்டது இதுதான் என சொல்ல நிச்சயம் துணிவு வேண்டும். அந்த வகையில் தனது செல்ல குழந்தையை பற்றி அருமையாய் எழுதி வருபவரான இவர் சமூக அக்கறை உடைய ஒரு பதிவராகவே எனது கண்களுக்கு தீபா தெரிந்தார். ஒரு புன்னகை பதிவு இது.
வானத்தில் கோட்டை கட்டுவது. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போன்றே இவரது ஆசைகள் எனக்கு தெரியும். அதாவது பதிவர்கள் மூலம் பல விசயங்கள் சாதிக்க இயலும் என்கிற அசையாத நம்பிக்கைதான் அது. ஆனால் எனக்கு எதற்கு இந்த வீண்வேலை, வீண் நினைப்பு என்றே தோன்றும். உண்மையிலேயே நினைத்து பார்க்கும்போது பல விசயங்கள் சாத்தியம் என்றே தோன்றுகிறது. சில விசயங்கள் சாத்தியமானது அனைவரும் அறிந்ததுதான். தமிழா தமிழா என இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை நிச்சயம் பாராட்டுக்குரியது.
ஆண்களுக்கு மட்டுமே தைரியம் என சொல்லிவைத்த நாடு இது. பெண்கள் என்றால் மிகவும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என கோடு போட்டு வைத்த நாடு. ஆனால் மிகவும் வெளிப்படையாக, கலகலப்பாக பதிவுகளில் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக, கோபம் கலந்த வேகத்துடன் தீர்க்கமாக சொல்லும் அதிசயம் இந்த பதிவரிடம் கண்டேன். பெயர் என்னவோ எனக்குப் பிடித்த மாமா மகள் பெயராக இருக்கவும் ஒருமுறை வலைப்பக்கம் சென்று பார்க்க ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சிறப்பு. நிச்சயம் இவரை பாராட்டலாம்.
இவரைப் பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். எனக்கு மிக மிக பிடித்தமான பதிவர். மனதின் எண்ண ஓட்டத்தை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் அழகோ அழகுதான். மனிதத்தை எப்படி வானம்பாடிகள் அவர்கள் வேறு விதத்தில் படம் பிடிக்கிறார்களோ அதைப்போலவே மற்றொரு கோணத்தில் படம் பிடிக்கும் அழகு தனி. எனக்கு பிடித்த பதிவு எனது பதிவில் சுட்டி இருந்தாலும் இங்கே வேறு ஒரு பதிவு. இவரது எழுத்துகளால் தமிழ் தினமும் புதிய உதயம் பெறத்தான் செய்கிறது.
கலக்கல் பதிவர். கலக்கல் பின்னூட்ட காரர். இறை பக்தி அதிகம் உடையவர். திருநெல்வேலி மண்ணுக்கு சொந்தக்காரர். என்னை பல விதத்தில் ஆச்சர்யம் அடைய செய்தவர். வாசிக்கும் அனுபவமே மிகவும் உறுதுணை எழுத்துக்கு. இவரது வாசிப்பு அபாரம். எழுத்துகள் களைகட்டும். பல இடங்களை சுற்றிப் பார்த்து அதில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக சொல்வதில் வல்லவர். இப்படித்தான் அழகாக சொல்கிறார் சித்ரா. கொஞ்சம் வெட்டி பேச்சு என சொன்னாலும் மிகவும் வித்தியாசமான பேச்சுதான்.
இவரை எப்படி விட்டுவிடுவது? இன்னும் நினைவில் இருக்கிறது இவரது இயற்கை நேசி எனும் வலைப்பூ. மிகவும் வித்தியாசமான சிந்தனைகாரர். பெயரை பார்த்ததும் எனக்கு கூட அட என தோன்றியது. தெகா என செல்லமாக அழைக்க அத்தனை அழகுதான். இவரது ஒவ்வொரு பதிவும் பல அருமையான கதைகள் சொல்லும். படம் பிடிப்பதிலும் வல்லவர். ஏன் இப்படி என கேட்கும் விதத்தில் பல விசயங்கள் மிகவும் அவஸ்தைப்படும்.
அடடா, இடுகைகளை பற்றி அல்லவா நான் எழுதி இருக்க வேண்டும், ஆனால் இடுகை இட்டவர்களை பற்றி அல்லவா எழுதி விட்டேன். ஆனால் அது அப்படித்தான். ஏனெனில் ஒரு இடுகை மட்டுமே ஒருவருக்கு அறிமுகம் தந்துவிடாது. ஒவ்வொரு இடுகையும் அவர்களுக்கு அறிமுகம் ஆகவேண்டும். மனதில் நீங்கா இடம் பிடித்த மின்மினிபூச்சிகள் ஷக்திபிரபா. திருவண்ணாமலை மட்டுமல்ல பல பதிவுகள் மிகவும் சிறப்பு.
இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. விட்டுப் போகாத வியாழனில் மனம் தொட்டு சென்றவர்களை நிச்சயம் எழுதுவேன். வலைச்சரத்தின் விதிமுறைக்கு அப்பாற்பட்டு எழுதி இருப்பின் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.