Sunday, April 22, 2012

சங்கத்தமிழ் வளர்த்த ஆலவாயிலிருந்து…


சில புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. ஏன் மனது அப்படி புத்தகங்களின் மீது ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று இன்றுவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
                    -எஸ்.ராமகிருஷ்ணன் (காற்றில் யாரோ நடக்கிறார்கள்)
எனது சிறுவயதிலிருந்தே  கதைகள் அதிகம் கேட்டு வளர்ந்ததால் புத்தகங்களின் மீதான காதல் இன்னும் குறையவில்லை. வாசிக்க பழகும் முன் படம் பார்ப்பதற்காகவே புத்தகத்தை விரும்பினேன்.
பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர் இவைகளைத்தான் நானும் முதலில் வாசிக்க பழகினேன். இராணிகாமிக்ஸ் புத்தகங்கள் அடுத்தகட்ட வாசிப்பிற்கு வந்தது. கபீஸ் குரங்கு, விக்ரமாதித்தன்-வேதாளம், இரும்புக்கை மாயாவி எல்லோரும் இன்று வரை நினைவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
விகடன், குமுதம், இந்தியாடுடே எ நாலாம் வகுப்பு படிக்கையிலேயே வாசிக்க தொடங்கிய பழக்கம் இன்றும் தொடர்கிறது. கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் வாசித்துகொண்டிருந்த வேளையில் பஞ்சதந்திரகதைகள், திராவிடநாட்டுப்புறகதைகள், தெனாலிராமன்கதைகள், பீர்பால் கதைகள், வால்காவிலிருந்து கங்கைவரை(அப்ப புரியல), துணைப்பாட புத்தகங்களில் இருந்த கதைகள் எல்லாம் வாசித்தேன்.
எங்க ஊரில் நூலகம் இல்லை. எட்டாப்பு வரை எங்க ஊர் பள்ளியில் படித்ததால் நூலகம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது நூலகத்தில் சேர்ந்தேன். சிறுவர் கதைகள்,யோகா-தியான புத்தகங்கள், பொதுஅறிவு, ரெய்கி-ஹிப்னாட்டிசம் போன்ற புத்தகங்களாக எடுத்து படித்தேன். இதெல்லாம் கடந்து வருவதற்குள் வெகு நாட்களாகி விட்டது.    
பதினொறாம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அந்த சரித்திரநாவல் பிடித்து போக பொன்னியின் செல்வன் ஐந்து பாகத்தை ஆறு நாளில் முடித்தேன். அடுத்து சாண்டில்யனின் கன்னி மாடம் படித்து பிடித்து போய் எங்கள் நூலகத்தில் இருந்த சாண்டில்யன் புத்தகங்கள் எல்லாத்தையும் படிச்சுட்டேன். நல்ல வேளை இதையும் தாண்டி வாசிக்க தொடங்கி விட்டேன்.
1001 அராபிய இரவுகள், கண்ணதாசன்-ஓஷோ புத்தகங்கள், தீபாவளி மலர்கள், வாழ்க்கை வரலாறுகள், மங்கையர் மலர், சுயமுன்னேற்ற புத்தகங்கள் எல்லாம் படித்தேன். பத்தாம் வகுப்பிலிருந்து கல்லூரி சேரும் வரை பக்தி ஸ்பெஷல் வாசகன் வேறு.
விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதாவிலாசம், துணையெழுத்து, தேசாந்திரி எல்லாம் எனக்கு உயிர். பின் ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், தொ.பரமசிவன், கி.ரா, நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி,  ஜெயமோகன், பெருமாள்முருகன் என நல்ல இலக்கிய வட்டத்துக்குள் வந்தேன். உயிர்மை,காலச்சுவடு,அம்ருதா போன்ற இலக்கிய இதழ்களும் என் வாசிப்பை விரிவு செய்ய உதவின.
கண்டது கடியது எல்லாம் வாசித்தேன். ஆனால் எதையும் குப்பை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள் தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
புத்தகங்களைப் பற்றிய பதிவுகளைத் தொகுத்து உள்ளேன். இணையத்தில் வாசிக்கும் போது வலைப்பக்கங்களில் புத்தகங்கள் பற்றிய பதிவைத்தான் தேடிப்படிப்பேன். அதிலிருந்து சில பதிவுகளை மட்டும் தொகுத்துள்ளேன். மேலும், வாசித்தபுத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும் என்ற எனது பதிவை பாருங்கள்.

  1. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
  2. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  3. ரெயினீஸ் ஐயர்தெரு - வண்ணநிலவன்
  4. கொற்றவை - ஜெயமோகன்
  5. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
  6. உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
  8. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
  9. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  10. இதற்கு முன்பும் இதற்கு பிறகும் – மனுஷ்யபுத்திரன்
  11. எனது மதுரை நினைவுகள் – மனோகர்தேவதாஸ்
  12. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
  13. ஆழிசூழ்உலகு – ஜோ.டி.குருஸ்
  14. ராஜன்மகள் – பா.வெங்கடேசன்
  15. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  16. உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் - தாணுபிச்சையா
  17. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  18. பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்
  19. அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார்
  20. இசையின் தனிமை – ஷாஜி
  21. வெயில் நண்பன் பிராத்தனை ஒரு தேசம்  – பா.திருச்செந்தாழை
  22. திருநங்கைகள் உலகம் – பால்சுயம்பு
  23. இடைவெளி - சம்பத்
  24. ஆ.மாதவன் கதைகள்
  25. பொய்கைகரைப்பட்டி – அர்ஷியா
எழுத்தாளர்களுக்கு பிடித்த புத்தகங்கள் பட்டியல், பதிவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் பட்டியலை வாசித்துப்பாருங்கள். அட்சயத்திருதியை வருகிறதாம். உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் பதிவை வாசித்துப்பாருங்கள். நகைகளை வாங்கி சேர்ப்பதைப் போல் புத்தகங்களையும் வாங்குங்கள். இன்றுடன் வலைச்சரத்தில் என்னுடைய பதிவை நிறைவு செய்கிறேன்.
இந்த வார வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளைக் குறித்து பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவிற்கு நன்றிகள் பல. மறுமொழிகள் அளித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி. மதுரையில் சமணம் குறித்த பதிவை வாசித்துப்பாருங்கள். நானே அறிமுகப்பதிவர்தான். சித்திரவீதியில் உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும்,

5 comments:

  1. மாயாவி தோன்றும் என்று ராணி காமிக்ஸ் புத்தகத்தை கண்டால் நான் வாங்காமல் போவதில்லை ஒரு காலத்தில்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  2. இளமைக்கால வாசிப்புகள் அருமை.கபீஸ் குரங்கு புத்தகம் இப்போது கிடைக்கிறதா?

    ReplyDelete
  3. சுவையான புத்தகங்கள் பற்றிய தொகுப்பளித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. கபீஸ் குரங்கு படக்கதை பூந்தளிரில் வந்தது. பூந்தளிர் என்ற பெயரை க்ளிக் செய்தால் வரும் அய்யம்பாளையம் ப்ளாக்ஸ்பாட்டில் கபீஸ் கதையொன்று, காக்கா காளி படக்கதையொன்று இருக்கிறது. மறுமொழியளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. nalla pthivu thoguppugal nandri

    ReplyDelete