வணக்கம் தோழர்களே!
வலைச்சரப் பொறுப்பின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறேன். இன்று கொஞ்சம் சிந்தனைகளையும் சில தளங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
சிந்தனைகள் குறித்து ஒரு சிந்தனை
பெரும்பாலும் அறிதல் மற்றும் சிந்தனை ஆகியன ஏதாவதொன்றின் தொடக்கமாக இருப்பதில்லை. மாறாக, அவை முன்பிருந்த ஒன்றின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன. இதனால், வேறு வேறு மனிதர்களின் அறிதல் மற்றும் சிந்தனை முறைகள் வேறுவேறாக இருந்தாலும், அவை தங்களுக்கே உரித்தானவை என அவர்களால் உரிமை கோர இயலாது. அதாவது முன்பிருந்த அறிதல் மற்றும் சிந்தனை முறைகளின் தொகுப்பு மற்றும் தொடர்ச்சிகளையே நாம் நமது அறிதல் மற்றும் சிந்தனை முறையாகக் கைகொள்கிறோம். எவ்வாறு தனித்த அல்லது முழுமுற்றான உண்மை என்பது சாத்தியமில்லையோ அவ்வாறே தனித்த சிந்தனையும் சாத்தியமற்றது. ஏனெனில்,உண்மை என்பது எப்போதும் ஒரு தனிநபரையோ, ஒரு சமூகத்தையோ, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளையோ பொருத்து சார்புத் தன்மை கொண்டதாகவே அமைகிறது. அவ்வாறே சிந்தனையும். நீங்கள் முன்புள்ள சிந்தனை முறைகளுக்கு மாறான, முற்றிலும் எதிரான ஒரு சிந்தனை முறையைத் தோற்றுவிக்க முடியும் என்றாலும், அது முன்பிருந்த சிந்தனை முறைகளின் தாக்கத்தினால் மட்டுமே நிகழ முடியும். அதாவது, அதன் தொடர்ச்சியாக மட்டுமே இருக்க முடியும்.
ஒரு தனிமனிதன், வாழ்தல் குறித்த தனது அல்லது தனது சமூகத்தின் சிந்தனைகளை, கோட்பாட்டை எல்லா சமயங்களிலும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. ஆனாலும், சிந்தனை என்பது எல்லா நேரங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டுமென்பதில்லை. காரணம் சிந்தனை என்பது தேடலுக்கானது; செயல் என்பது வாழ்தலுக்கானது. சிந்திக்காமல் உங்களால் உயிர் வாழ முடியும். ஆனால், செயல்படாமல் அவ்வாறு முடியாது. மேலும், உயிர்வாழ்தல் என்பது ஒரு நோக்கமல்ல. மனிதன் உட்பட எல்லா உயிர்களுக்கும் உயிர்வாழ்தல் என்பது அவற்றின் இயல்பு. நோக்கம், கோட்பாடு என்பதெல்லாம் சிந்தனையின் விளைவு; சிந்தனை மொழியின் உற்பத்தி; மொழியோ மனிதப் பரிணாமத்தில் ஒரு விபத்து.
மேற்கண்ட கருத்துகளின் மீதான உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தலாம்.
இன்றைய தளங்கள்
திருவாளர் சி.ஜெயபாரதன் நெஞ்சின் அலைகள் என்ற தனது தளத்தில் தொடர்ந்து அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். குறிப்பாக விண்வெளி ஆய்வுகளில் அவ்வப்போது ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமாக எழுதி வருகிறார். கவிதை நடையில் தொடங்கும் இவரது கட்டுரைகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
திருவாளர் நாகார்ஜூனன் உலக இலக்கியங்கள், மொழி, கலாச்சாரம் மற்றும் இன்னபிற துறைகள் குறித்து மிகவும் ஆழமாக எழுதி வருகிறார். திணை இசை சமிக்ஞை என்ற இவரது தளம் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு களஞ்சியம். கொஞ்ச காலமாக இவரது தளத்தில் புதிய பதிவுகள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. அனைவரும் காண வேண்டிய அருமையானதொரு தளம்.
திருவாளர் ஜமாலன் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர். பல்வேறு பொருள் தொடர்பான இவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றன. மொழியும் நிலமும் என்ற இவரது தளம் நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்று.
திருவாளர் ருத்ரன் அவர்கள் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம். இவரது ருத்ரனின் பார்வை என்ற தளத்தில் தத்துவம் முதலான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். இதுவும் நீங்கள் பார்வையிடத் தகுந்த தளம்.
திருவாளர் அண்ணா.நாகரத்தினம் மார்க்சியம் உள்ளிட்ட தத்துவங்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். இவரது தளமான தத்துவப் போராட்டம் பொதுவுடைமைச் சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு ஒரு அமுதசுரபி.
திருவாளர் இராம.கி என்பவர் தனது தளத்தில் தமிழ்மொழி குறித்தும் அது சார்ந்த விஷயங்கள் குறித்தும் சுவாரஸ்யமான பதிவுகள் பலவற்றை இட்டுள்ளார். இவரது வளவு என்ற தளத்தையும் உங்கள் பார்வைக்குப் பரிந்துரைக்கிறேன்.
சரி தோழர்களே! இறுதிப் பதிவோடு மீண்டும் மாலையில் உங்களைச் சந்திக்கிறேன்.
அன்புடன்,
அப்துல் காதர்.
ஜமாலன் மற்றும் ருத்ரன் இருவர் மட்டுமே தெரிந்த முகங்கள்.. மற்றவர்களை பார்க்கிறேன்
ReplyDeleteவலைச்சரப்பதிவிற்கு எமது முதல் நன்றி. பலரது வலைப்பதிவை பார்த்து அதை எடுத்து அதில் உள்ள செய்திகளை விமர்சனப்பார்வையோடு பதிவிட்டுவரும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
அலைபேசி எண்: 9486265886
ReplyDeleteநீங்கள் அறிமுகப்படுத்திய சிந்தனைபதிவுகளை சென்று பார்த்தேன்.
மிகவும் அருமையான சிந்தனை பதிவுகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்/
அனைவரும் எனக்கு புதியவர்கள்! சென்று படித்து வருகிறேன்! நன்றி!
ReplyDeleteசில தளங்கள் புதியவை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...