மெத்தப் படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரையும் ஈர்ப்பது திரைப்படக்கலை. இணையத்தில் இன்று வெளிவரும் பதிவுகளில் [கிட்டத்தட்ட எண்பது விழுக்காடு என்று கூடச்சொல்லி விடலாம்] திரைப்படங்கள் குறித்த பதிவுகளே பெரும்பான்மை இடத்தைப்பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவுகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தபோதும் தர அடிப்படையில் கணிக்கும்போது பெரும்பாலானவை கொஞ்சம் பின் தங்கித்தான் போய் விடுகின்றன .இவ்வாறு சொல்வது ஒரு சிலருக்கு சற்றுக் கசப்பாகக் கூட இருக்கலாம்...என்ன செய்வது..? உண்மை என்பது எப்போதும் சுடுவதுதானே ...!
கதை,திரைக்கதை,இயக்கம்,இசை,ஒளிப்பதிவு,கலைக்காட்சிகள் போன்ற பலவற்றின் கூட்டுக் கலவையும்,பலதுறை வல்லுநர்களின் முயற்சியும்தான் திரைப்படம் என்னும் ஊடகத்தை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் பிடித்த நடிகர்களையும்,ஒரு சில கொச்சையான,தட்டையான சொற்களையும் முன் வைத்தே ஏராளமான திரைப்பதிவுகள் இன்று வலையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எல்லோருக்கும் எல்லா நுட்பமும் தெரிந்திருக்க முடியாது; அதற்கான அவசியமும் இல்லைதான்...ஆனாலும் விமரிசனம் என்று வரும்போது சொந்த விருப்பு வெறுப்புக்களச் சற்றே ஒதுக்கி வைத்து - எது தரமானது,எது தரமற்றது..அதற்கான காரணங்கள் என்ன என்று தர்க்க பூர்வமாக அலசும் திரை சார்ந்த பதிவுகளும்,தமிழின் தரமான படங்களோடு பிறமொழிப்படங்களையும், உலகப்படங்களையும் அறிமுகம் செய்து வைக்கும் பதிவுகளுமே திரைக்கலை பற்றிய புரிதலுக்கு வழியமைக்கும்.
அத்தகைய பதிவுகள் சில இன்றைய அறிமுகமாக....
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எனக்கு அறிமுகமான இரு பேராசிரியர்கள் திரு.மு.ராமசுவாமியும்,திரு அ.ராமசாமியும்.இருவருமே நாடகக் கலையில் தேர்ந்தவர்கள்.அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் திரைக்கலையில் ஆர்வம் காட்டுபவர்கள்.திரை சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நுட்பமான தேர்ச்சி பெற்றவர்கள்.
மதுரை நகரில் நிஜநாடக இயக்கத்தைத் தோற்றுவித்துப் பல புது நாடக முயற்சிகளை நிகழ்த்திக் காட்டியிருக்கும் திரு மு.ராமசுவாமி அவர்கள், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர்;நாடகத் துறையின் தலைவர். கன்னத்தில் முத்தமிட்டால், நான் கடவுள்,சண்டக்கோழி,பருத்திவீரன் போன்ற சில படங்களிலும் கூட அவரைப் பார்த்திருக்கலாம். அண்மையில் டிராமாசுவாமி என்னும் தளம் தொடங்கித் தன் எழுத்துக்களைப்பதிவு செய்து வரும் அவர் வாகைசூட வா,
மற்றும் வழக்குஎண்18/9 ஆகிய திரைப்படங்களைக் குறித்த அருமையான விமரிசனங்களைத் தன் தளத்தில் வழங்கியிருக்கிறார்.வழக்குஎண்18/9 பற்றிய அவரது விமரிசனம் காணொளியாகவும்...அதே தளத்தில் கிடைக்கிறது.
அ.ராமசாமி எழுத்துக்கள் என்னும் பெயரில்தன் கட்டுரைகளை எழுதி வரும் பேரா.அ.ராமசாமி அவர்களும் நாடக ஆர்வலரே. புதுவை நாடகப்பள்ளியிலிருந்து திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலை சென்ற இவர், இப்போது வருகைதரு பேராசிரியராகப்பணி புரிவது போலந்து நாட்டின் வார்சாவில்.இலக்கிய விமரிசனக்கட்டுரைகளோடு திரைப்படங்கள் குறித்த ஆழமான கட்டுரைகளையும் இவரது தளத்தில் அடிக்கடி காணலாம். உயிர்மை போன்ற சிற்றிதழ்களில் வெளியான சினிமா சார்ந்த கட்டுரைகளையும் வலையில் வெளியிட்டு வரும் அ.ராமசாமியின் அண்மைக்கட்டுரையான
நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம் என்னும் பதிவு, தமிழ்த் திரைப்படம் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை முன் வைக்கிறது.
நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம் என்னும் பதிவு, தமிழ்த் திரைப்படம் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை முன் வைக்கிறது.
வணிகப்படம்,கலைப்படம் என்று பிரித்துக் கொள்ளாமல், தமிழ்ப்படம், பிற இந்தியமொழிப்படம், உலகத் திரைப்படம் எனப் பல மொழிப்படங்களையும் அலசிப் பிழிவதோடு திரைப்படம் சார்ந்த பொதுவான பார்வைகளையும் எந்தச் சமரசமும் அற்ற கறாரான பாணியில் பதிவு செய்யும் தளம் சுரேஷ் கண்ணனின் பிச்சைப்பாத்திரம். இவரது அண்மைப்பதிவுகளான நீர்ப்பறவையும்,
இங்கிலீஷ்-விங்கிலீஷ் திரைப்படம் பற்றிய சசியின் இந்திய லட்டும் அமெரிக்க ஆங்கிலமும் என்னும் கட்டுரையும் உங்கள் பார்வைக்கு.
மேலோட்டமான பார்வை தவிர்த்து ஆழமான திரைப்படக் கட்டுரைகளை வழங்கும் மற்றொரு பதிவர் தில்லியில் வசிக்கும் நண்பர் வெ.சந்திரமோகன்.மிகச் சிறந்த ஓவியரும்,இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவருமான இவரது திரைப்பார்வை கூர்மையான அவதானிப்புக் கொண்டது.சந்தனார் என்னும் வலைப்பூவில் தன் கட்டுரைகளை எழுதி வரும் இவரது களவாடும் கலையா சினிமா? என்னும் பதிவு தமிழ்த் திரை பற்றிய பல உண்மைகளைத் துணிச்சலாக விண்டு வைக்கிறது.
இளையராஜா : உயிரில் கலந்த இசை..என்னும் சந்திரமோகனின் கட்டுரையும் திரை இசை குறித்த கட்டுரைகளில் சிறந்த ஒன்று.
மாற்று சினிமாவுக்கான தேடல் உள்ளவர்கள் விரும்பும் தளமான தமிழ்ஸ்டூடியோ.காம். திரைப்படம்,குறும்படம் பற்றிய பற்பல தகவல்களையும் தொகுப்புக்களையும் தரும் ஆவணக்காப்பகம் போல விளங்கி வருகிறது. குறும்பட ஆர்வலர்கள் எடுத்த தரமான படங்களும் இத் தளத்தில் உண்டு. சான்றுக்கு ஈழத் தமிழ்க்கவிஞர் சுமதி ரூபனும் அவர் கணவர் ரூபனும் எடுத்துள்ள மனுஷி என்னும் குறும்படம்....இங்கே .
குற்றப்பரம்பரை என்றே முத்திரை குத்தப்பட்ட இனம் பற்றித் தெரியாதவர்கள் காவல் கோட்டம் நாவல் மூலம் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம்.அந்த இனத்தின் ஒடுக்கம் குறித்த ரேகை என்னும் குறும்படத்தை அறிமுகம் செய்திருக்கிறார் தில்லியிலிருந்து ராகவன் தம்பி என்னும் புனை பெயரில் எழுதும் வடக்கு வாசல் ஆசிரியர் யதார்த்தா பென்னேஸ்வரன்.
4/12 தேதியிட்ட சொல்வனம் இதழில் மிக அற்புதமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எறும்புகளின் கதறல் என்ற ஈரானியப்படம் குறித்த பதிவும் உலகப்படம் பற்றிய புரிதலுக்கு ஏற்றது.
பி.கு;
நல்ல தரத்திலான வேறு சில திரைவிமரிசனப்பதிவுகளை வாசகர்களாகிய நீங்களும் பின்னூட்டங்களில் பகிர்ந்து கொள்ளலாமே....
எதிர்பாராத பார்வை. வலைப்பதிவின் இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி .பிறமொழி மற்றும் வெளி நாட்டு படங்கள் குறித்தும் அலச ஆலோசனையளித்தது அருமை.திரைப்படத்திற்கென்றே தளமமைத்துள்ள இவரின் பதிவுகளைப் பாருங்கள் .http://worldcinemafan.blogspot.in
ReplyDeleteசில உலக சினிமாக்களைப்பார்க்க தூண்டியது இவரின் விமர்சனங்கள்.நன்றி
அன்புள்ள திருமதி சுசீலா அவர்களுக்கு,
ReplyDeleteதிரைப் படங்களைப் பற்றிய பதிவு என்றால் விலகி விடுவேன். ஒண்ணு திட்டுவாங்க; இல்லை ஒரேயடியாகப் புகழுவாங்க என்று.
நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திரு டிராமா சுவாமி,திரு அ. ராமஸ்வாமி எழுத்துக்கள் போன்ற வலைத்தளங்கள் ஒரு புதிய உலகத்தை எனக்கு காட்டியிருக்கின்றன.
திரு சந்திரமோகனின் வலைதளமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.
உங்களுக்கு நன்றி!
நல்ல தரத்திலான திரைவிமரிசனப்பதிவுகளை
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள்..
நான் படங்கள் பார்ப்புது குறைவு ஆனாலும் கருத்துக்கள் வாசிப்பதுண்டு.
ReplyDeleteஅவ்வகையில் நல்ல அறிமுகங்களிற்கு இனிய வாழ்த்து.
கருத்துகள் மூலம் தரமான படங்களை உணரலாம்.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉலக சினிமாரசிகன் அவர்களின் விமர்சனங்கள் சிறப்பானவை நேரிடையாக கருத்துக்களை தெரிவிப்பவர். எதிர் கருத்துகளுக்கு அஞ்சாமல் தனது விமர்சனங்களை முன் வைக்கிறார். நாயகன் திறனாய்வு தொடர் பதிவு கொடுத்துவருகிறார்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று பதிவிடப்பட்ட பதிவுகள் அனைத்தும் அருமை பதிவுகளை பார்க்கும் போது நிறைய திறைப்படங்களை பார்க சொல்லுகிறது நான் திறைப்படங்கள் பார்ப்பது மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும் நல்ல படைப்பாளிகளை ,இன்று அறிமுகம் செய்துள்ளிர்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள் அம்மா,பதிவுகளை தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-நன்றி-
வித்தியாசமான வலைப்பூக்களை இன்று அறிமுகம் செய்தீர்கள். நன்றி!
ReplyDeleteஅனைவரும் நான் அறியா முகங்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநான் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. இந்த வருடம் கூட இரண்டு படங்கள்தான் பார்த்தேன். அதுவும் எதிர்பாராமல் சென்றதுதான். ஆனால், திரைவிமர்சனங்கள் தொடர்ந்து வாசிப்பேன். விகடன் விமர்சனம் வாசித்து நல்ல படங்களின் விமர்சனங்களை மற்றதிலும் தேடி வாசிப்பேன்.
ReplyDeleteநல்ல பதிவு. நன்றி.
வித்தியாசமான பதிவு.
ReplyDeleteநண்பர் சந்திரமோகன் தவிர அனைவருமே எனக்குப் புதியவர்கள். படிக்கிறேன் மா.
ReplyDelete
ReplyDelete// இணையத்தில் இன்று வெளிவரும் பதிவுகளில் [கிட்டத்தட்ட எண்பது விழுக்காடு என்று கூடச்சொல்லி விடலாம்] திரைப்படங்கள் குறித்த பதிவுகளே பெரும்பான்மை இடத்தைப்பெற்றிருக்கின்றன//
இன்றைய மக்கள் அன்றாட நேரத்திலெ திரைப்படங்கள் எண்பது விழுக்காடு இடத்தைப் பிடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இன்றைய பொதுமக்கள் பெரும்பாலோர் ஒன்று திரைப்படங்கள் பற்றி பேசுகிறார்கள் , இல்லையெனின் அரசியல் பேசுகின்றார்கள்.
இந்தப்போக்கு பத்திரிகைகளில் , மீடியா ஊடகங்களில் அளவுக்கும் அதிகமாக, சென்சேஷணல் செய்திகளாக வெளியிடப்படுகின்றன.
பதிவுகள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க இயலும். ?
கட்ஜூ சொன்னபடி ஊடகங்களுக்கும் இது போன்ற வலைகளுக்கும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் ஒரு தணிக்கை குழு வருமோ எனத் தோன்றுகிறது. இது சரியா தவறா எனக் காலம் தான் பதில் சொல்ல இயலும்.
சுப்பு ரத்தினம்.
nalla pakirvu vaalththukkal
ReplyDeleteஅ.ராமசாமியின் பதிவுகளை ஏற்கனவே வாசித்து வருகின்றேன். மு.ராமசுவாமியை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள், ஏனையவர் யாவரும் அறியப்பட்ட முகங்களே, நன்றிகள்.
ReplyDeleteவலையும் திரையும் கட்டுரைக்குக் கருத்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteதிரு எழிலும்,கலாகுமரனும் வேறு சில தளங்களை இனங்காட்டியிருப்பதில் மகிழ்ச்சி.
//இன்றைய பொதுமக்கள் பெரும்பாலோர் ஒன்று திரைப்படங்கள் பற்றி பேசுகிறார்கள் , இல்லையெனின் அரசியல் பேசுகின்றார்கள்.
இந்தப்போக்கு பத்திரிகைகளில் , மீடியா ஊடகங்களில் அளவுக்கும் அதிகமாக, சென்சேஷணல் செய்திகளாக வெளியிடப்படுகின்றன.
பதிவுகள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க இயலும். ? //
என்று சூரி சிவா சொன்னதை நானும் ஏற்கிறேன்.
திரைப்படம் தீண்டத்தகாததல்ல.ஆனால் அது சார்ந்த தரமற்ற பதிவுகள் அளவுக்கு மிஞ்சிக் குவிவது பற்றிய என் கவலையையே வெளியிட்டேன்.
ஊக்கப்படுத்துவோர்க்கு என் வந்தனங்கள்.
எங்கள் வலைப்பூக்கள் பற்றி அருமையான அறிமுகத்துடன் எழுதியிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேடம்.
ReplyDeleteதொடர்ந்து எழுத மிகப்பெரிய ஊக்கம் தரும் உங்கள் பதிவை படித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
என்றும் அன்புடன்
சந்துரு