இதுவும் ஒரு
அனுபவ பகிர்வே
பல
சந்தர்ப்பங்களில் மனு அளிப்பதற்காக பல எம்.பிக்களை சந்தித்துள்ளோம். அது பற்றிய
சில செய்திகள்.
பாஜக
ஆட்சிக்கு வந்த புதிதில் ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்த போது அதற்கு
எதிராக பல இயக்கங்கள் நடத்தினோம். சைக்கிள் பிரச்சாரம் ஒன்று நடத்துகிறோம்,
நீங்கள் அதனை துவக்கி வைக்க வேண்டும் என அப்போதைய வேலூர் எம்.பி திரு
என்.டி.சண்முகம் அவர்களை கேட்டபோது அவர் டைரியை புரட்டி அந்த தேதியில் நான்
டெல்லியில் இருப்பேன், என் வாழ்த்துக்கள் உண்டு என்றார். இதையே ஒரு அறிக்கையாக
அளியுங்கள் என்ற கேட்டவுடன், தன் லெட்டர் ஹெட்டை கையில் கொடுத்து என்ன எழுத
வேண்டுமோ அதை எழுதிக் கொள்ளுங்கள் என்று விட்டார். பாஜக அரசின் முடிவு மக்களுக்கு
எதிரானது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க போராட்டம்
வெல்லும்வரை துணை நிற்பேன் என்று எழுதினோம். படித்து கூட பார்க்காமல் அப்படியே
கையெழுத்து போட்டு கொடுத்து விட்டார். ஏதாவது மாற்றம் சொல்வார் என்று எதிர்பார்த்த
எங்களுக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி. இதை பத்திரிக்கைகளில் கொடுக்கலாமா என்றதற்கு
மறக்காம எல்லாருக்கும் கொடுத்துடுங்க என்றார். அன்றைய மாலைப் பத்திரிக்கையில் “
ஆளும் கட்சி மீது வேலூர் எம்.பி கடும் கண்டனம்” என்று செய்தி வந்தது.
இதில் என்ன
விஷயம் என்று கேட்கிறீர்களா?
பாமக அப்போது
பாஜகவின் கூட்டணிக் கட்சி. எம்.பி அமைச்சர் பதவியை ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்.
அதிமுகவின்
ராஜ்யசபைத் தலைவராக திரு மார்க்கபந்து இருந்தார். அவர் மிகவும் நியாயமாக இதை
அம்மாவுக்கு அனுப்பி விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு பயன் இருக்கும் என்று
சொல்லி விட்டார். அந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அதிமுக லோக்சபாவில்
மசோதாவிற்கு எதிராக வாக்களித்தது. ராஜ்யசபையில் மசோதா வரும் முன்பாக சில
இயக்கங்களை நடத்த வேண்டும் என்று எங்கள் சங்கம் அறைகூவல் விடுத்தது. ஒரு தர்ணா
போராட்டத்தை வாழ்த்த வேண்டும் என்று அவரை சந்தித்தோம். உங்கள் கட்சி ஏற்கனவே
லோக்சபாவில் எங்கள் நிலையை ஆதரித்தது என்ற போது அவர் “ டெல்லி போகும் முன்பாக
அம்மா என்னையும் பி.ஹெச். பாண்டியனையும் அழைத்து அரசுக்கு ஆதரவாக செயல்படச்
சொன்னார். அதன் பின்னர் எதிர்க்குமாறு பி.ஹெச். பாண்டியனுக்கு தகவல் வந்தது என்று
எனக்கு தெரியும். ஆனால் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அம்மா கடைசியாக என்னிடம்
என்ன சொன்னார்களோ அதற்கு மாறாக என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நழுவி
விட்டார்.
ஒரு ஐந்தாண்டு
காலம் வேலூர் எம்.பி யாக இருந்த திரு காதர் மொய்தீன், நன்றாக பேசுவார். நாலாயிர
திவ்ய பிரப்பந்தம் நூல் அவரது மேஜையில் இருக்கும். ஒரு முறை தேவாரம் கூட படித்துக்
கொண்டிருந்தார். ஒரு விஷயம் மட்டும் சொல்லி விடுவார். உங்கள் தலைவர்களை
மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பேசச் சொல்லுங்கள். இது போன்ற விஷயங்கள்
அவர்களுக்கு மட்டும்தான் புரியும், அக்கட்சி எம்.பி க்கள்தான் நன்றாக பேசுவார்கள்
என்று தவறாமல் சொல்லுவார்.
இன்னொரு
எம்.பி, பெயர் சொல்ல விரும்பவில்லை. நாற்காலியெல்லாம் போட்டு காபி கொடுத்து
எல்லாம் நன்றாக இருந்தது. நாற்பது நிமிடம் பேசியும் அவரால் புரிந்து கொள்ளவே
முடியவில்லை. பாவம் அந்த தொகுதி மக்கள் என்று திரும்பி வந்து விட்டோம்.
நாடாளுமன்ற சபாநாயகருக்கு
முக்கிய பிரமுகர்களிடமிருந்து கடிதம் பெற்று அனுப்புவதாய் ஒரு இயக்கம். அப்போதைய
வேலூர் எம்.எல்.ஏ திரு ஞானசேகரனைப் பார்த்தோம். விஷயத்தை சொன்னதும் அவரும் லெட்டர்
ஹெட்டை கொடுத்து விட்டார். கடிதத்தை டைப் செய்து எடுத்து போன நேரம் மும்முரமாய்
இருந்தார். வேலூர் நகராட்சிக்கு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பரபரப்பில்
இருந்தார்.
கடிதத்தை
கொடுத்ததும் பார்த்து உடனே கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு அப்படியே சொன்னார்.
“ உங்களிடம்
முன்பு அளிக்கப்பட்ட ஒன்றரை கோடி கையெழுத்து இயக்கத்தில் நானும்
கையெழுத்திட்டிருந்தேன் என்று இந்த கடிதம் தொடங்குகிறது. முன்பு எதுவும் நான்
கையெழுத்து போடவில்லை. ஆனாலும் என்ன நான் கையெழுத்து போடவில்லை என்று
பாலயோகிக்கு தெரியவா போகிறது ? ". ஒரு நொடிக்குள் கடிதம்
முழுமையை படித்ததை நினைத்து அசந்து போனோம்.
இப்போது சில அறிமுகங்கள்.
உலக சினிமா வரலாறு என்ற புத்தகத்தை எழுதிய அஜயன் பாலா.
சிம்ரன் பற்றி அவர் எழுதிய பதிவு சுவாரஸ்யமானது.
மழலை ஒரு தேவதை என்பதை சிதறல்களில் இந்த பதிவில்
காணலாம்.
கிரிக்கெட் வெறியர்களை எஸ்.ஜி.ரமேஷ்பாபு நக்கலடித்துள்ள
பதிவை படித்து சிரியுங்கள். பெண்கள் மீதான பாலியல்
தாக்குதல் குறிப்பான பதிவும் அவசியம் படிக்க வேண்டிய
ஒன்று.
மாணவர் இயக்கத்திலும் வாலிபர் இயக்கத்திலும் பல காலம்
பணியாற்றி தொழிற்சங்கப் பணியாற்றி வரும் எஸ்.கண்ணன்
கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதிய இந்த பதிவு
மிகவும் பயனுள்ளது.
நாளை விடைபெற வேண்டிய நாள். அதிகாலை மீண்டும்
வருகிறேன்.
அதுவரையில் சிங்கப்பூர் ஸ்கை பார்க்கில் கொஞ்சம்
பொழுதைக் கொண்டாடுங்கள்.
படம்கள் மிக அருமை தோழரே.
ReplyDeleteஅனுபவ பதிவும், அறிமுக பதிவுகளும் நன்றாக இருந்தது. படங்கள் அழகு!
ReplyDeleteமிகவும் நல்ல அறிமுகங்கள்!, பாலியல் குறித்த கட்டுரையும், சிம்ரனின் கட்டுரையும் மிகவும் சிறப்பு!
ReplyDeleteமிகவும் நல்ல அறிமுகங்கள்!, பாலியல் குறித்த கட்டுரையும், சிம்ரனின் கட்டுரையும் மிகவும் சிறப்பு!
ReplyDelete