இன்றைய
தினத்தை ஒரு கவிதையோடு தொடங்குவோம்.
எங்களது
வேலூர் கோட்டச்சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
கொஞ்சம் எங்கள் அமைப்பு முறையை சொல்கிறேன். எல்.ஐ.சி மற்றும் பொது இன்சூரன்ஸ்
நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கானது எங்கள் சங்கம். எல்.ஐ.சி யின் அலுவலக
அமைப்பு என்பது மத்திய அலுவலகம், அதன் கீழ் எட்டு மண்டல அலுவலகங்கள், மண்டல
அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் கோட்ட அலுவலகங்கள். கோட்ட அலுவலகத்தின் கீழே கிளை
அலுவலகம். அது போலவே சங்கமும் கிளைச்சங்கம், கோட்டச்சங்கம், மண்டலக் கூட்டமைப்பு,
அகில இந்திய அமைப்பு என்ற கட்டுமானம் கொண்டது. எல்.ஐ.சி 1956 ம் வருடம் தோன்றும் முன்னரே
1951
ல் உருவானது எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். எல்.ஐ.சி யின் வேலூர்
கோட்டம் உருவானது 1988 ம் வருடம். அப்போதுதான் வேலூர்
கோட்டச்சங்கமும் உருவானது.
வெள்ளி விழாவை
ஒட்டி பல இயங்கங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். எங்கள் சங்கத்தின்
அதிகாரபூர்வமான வலைப்பக்கத்தில் பல இயக்கங்களின் பதிவு களை பார்க்கலாம்.
எங்கள்
தோழர்களுக்கு கவிதைப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடத்தினோம். போட்டி
துவங்கும் நேரம்தான் தலைப்பு அறிவிக்கப் பட்டது. எங்கள் சங்கத்தை சாராத தோழமை
அமைப்புக்களின் தோழர்கள் நடுவர்களாய் இருந்து பரிசுக்குரியவர்களை
தேர்ந்தெடுத்தனர்.
மங்கையராய்
பிறப்பதற்கே மாதவமும் வேண்டுமோ இனி?
என்ற
தலைப்பில் வைக்கப் போட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற கவிதை இதோ.
பெண்ணை தவிர்த்து
உலகேது
பெருமைகள்
மறைக்க திரையேது
மண்ணை நனைத்து
மலரச் செய்யும்
மழை போல்
தோன்றி வந்தவள் மாது
அழகியல்
பொருளாய் அவளைப் பாடி
அறிவை தடுத்த
காலமுண்டு
அந்தப்
புரத்து ஆசைத் தீயினின்
அவிந்து போன
கதைகளுண்டு.
கணிகையர்
வீதியில் கணவனைக் கூடையில்
சுமந்து
நடந்ததாய் சொன்னதுண்டு.
எரியும் கணவன்
சிதையில் விழுந்து
முடிந்து போன
நிகழ்வுண்டு.
பகடைப்
பொருளாய் ஆடை களைய
கதறி நின்ற
காட்சிகளுண்டு.
சிலம்பை
உடைத்து நீதியை நிமிர்த்திய
சினத்தின்
முழக்கம் கேட்டதுண்டு.
இன்று, புவியை
வெல்லும் புலமை அவளிடம்
வெற்றியை
சமைக்கும் வித்தைகள் அவளிடம்
கவிதை முதல்
கணிணி வரை – அவள்
கரங்கள் படாத்
துறைகள் எவ்விடம்?
ஆதிக்க வெறி
அவளை அடித்து துவைத்தாலும்
ஆணவக் காமம்
உயிரைப் பறித்தாலும்
திராவக
வீச்சில் தேகம் எரிந்தாலும்
திசைகளை
முடக்கி திகைக்க செய்தாலும்
எழுந்த
பெண்ணினம் முடங்கி விடாது
சமத்துவப்
போரினில் சரிந்து விடாது.
கலங்கிய
குட்டையல்ல – பெண்ணினம்
காட்டாற்று
வெள்ளமல்ல,
சிந்தனை
ஊற்றெடுத்து சிரிக்கின்ற ஜீவ நதி.
ஓங்கிய
பெண்ணின் கரம் நீதியை வென்றெடுக்கும்.
உரசிடும்
பகையையெல்லாம் உருக்குலைய உடைத்தெடுக்கும்
பாதையை
வசப்படுத்தி வெற்றிப் பயணத்தை முன்னெடுக்கும்
மாதராய்
பிறப்பெடுக்க உலகே செய்திடுக மாதவம்
இக்கவிதைக்கு
சொந்தக்காரர் எங்களது நெய்வேலி கிளைச்சங்கச் செயலாளர் தோழர் ஆர்.பாலசுப்ரமணியன்.
உங்கள்
கருத்துக்களை கொஞ்சம் பின்னூட்டமிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இனி
அறிமுகங்களுக்குச் செல்வோம்.கவின்மலர்
பெயரிலேயே
கவிதை கொண்டவர் . உங்கள் அனைவருக்கும் தெரிந்தவர்தான். உணர்ச்சி பொங்கும்
எழுத்துக்களை கண்டிப்பாய் படித்திருப்பீர்கள். கோபம் கொப்புளிக்கும் அவரது கவிதை
யும் கடிதமும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று.பணம் மட்டுமே வாழ்வல்ல என்பதை
நடைமுறையில் பின்பற்றி வரும் கவின்மலர் அவர்களை வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.
இன்னொரு
கவிஞரின் பக்கம் இது. இரா.தெ.முத்து, த.மு.எ.க.ச வின் துணைப் பொதுச்செயலாளர்.
அவரின் கவிதை ஒன்றை இங்கே படியுங்கள். வலைப் பக்கத்தை விட முக நூலில் தான் அவரது
அதிகமாக உள்ளது. அதிலே எங்கள் சங்க இதழ் சங்கச்சுடருக்காக நான் பயன்படுத்திக்
கொண்ட கவிதை இது.
மனுவின்
பார்வையில்
இருவரும்
பாதசாரிகள்
உடைமையாளன்
பார்வையில்
இருவரும்
கூலிகள்
போலீஸின்
பார்வையில்
இருவரும்
காலிகள்
மானுடவியலாளனின்
பார்வையில்
இருவரும்
கறுப்பர்கள்
பொதுவுடமையாளர்
பார்வையில்
இருவரும்
பாட்டாளிகள்
அப்புறம்
எங்கே
மேல் கீழ்?
மேலும் சில
அறிமுகங்களை நாளை பார்ப்போம்.
ஒரு போலீஸ்
ஸ்டேஷன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்
என்று
நினைக்கிறேன். அதுவும் கூட கவிதை தொடர்பானதால்.
ஒவ்வொரு
தொழிற்சங்கவாதிக்கும் காவல் நிலையம் செல்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
புகார் கொடுக்க, புகாரை சமாளிக்க, அனுமதி கேட்க என்று எத்தனையோ தருணங்கள் வரும்.
இது சற்று மாறுதலான அனுபவம்.
கிட்டத்தட்ட
பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம். இன்சூரன்ஸ்துறை தனியார்மயத்திற்கு
எதிராக ஒரு மாநிலம் தழுவிய வேன் பிரச்சார இயக்கம் நடந்து கொண்டிருந்தது. அதையொட்டி
ஒரு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல் நிலையம் சென்றிருந்தேன்.
கடிதத்தை
வாங்கிப் படித்து விட்டு அந்த இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஏதாவது அவசர வேலை
இருக்கிறதா என்று கேட்டார். இல்லை சார் என்று சொன்னவுடன் அது என்ன உலகமயம்,
தாராளமயம் என்று கொஞ்சம் சொல்லுங்க என்றார்.
உங்க கூட்டம், சி,ஐ.டி.யு, மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்துக்கெல்லாம்
பந்தோபஸ்துக்கு வந்தாலும் எதையுமே நிதானமாக கேட்க முடியாது. கவனமெல்லாம்
வயர்லெஸ்ஸில் என்ன செய்தி வரும் என்பதில்தான் இருக்கும். என்றார். ஒரு ஐந்து
நிமிடம் விளக்க ஆரம்பித்திருப்பேன். உடனடியாக ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரையும்
கூப்பிட்டார். ஆனால் நம்பர் சொல்லித்தான். அது மாற்ற முடியாத காவல்துறை நடைமுறை.
சார்
சொல்றதையெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கங்க என்றார். எஸ்.ஐ கள் நாற்காலியில்
அமர்ந்தார்கள், ஏட்டுக்கள் கொஞ்சம் பக்கத்தில் நிற்க, காதில் கேட்கும் தூரத்தில்
இதர காவலர்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வகுப்பு போலவே நடந்தது. அவ்வப்போது
கேள்விகள் வேறு கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டார். உங்களுக்கெல்லாம் ஏதாவது
சந்தேகம் இருந்தா கூட கேட்டுக்குங்கப்பா என்றார். கடைசியாக கை கொடுத்து “ விடாம
போராடுங்க சார், என் ஸ்டேஷன் லிமிட்டில உங்களுக்கு எப்பவும் எந்த சிக்கலும் வராது
என்று சொல்லி டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அனுமதிக்கான
கடிதத்தை ஒரு கவிதைப் புத்தகத்தில் வைத்து எடுத்துச் சென்றிருந்தேன். அது என்ன
புக் சார் கொடுங்க என்று புரட்டிப் பார்த்தார். அது தோழர் கந்தர்வனின் கவிதைத்
தொகுப்பு என்று நினைவு. படிச்சுட்டு இரண்டு நாளில் தருகிறேன் என்று வாங்கிக்
கொண்டார். நான் வேற வாங்கிக்கிறேன். நீங்களே வச்சுக்கங்க என்று கொடுத்து விட்டு
வந்தேன்.
காக்கிச்
சட்டைக்குள்ளும் கவிதை நெஞ்சங்கள் உண்டு. என்ன எண்ணிக்கைதான் மிகவும் குறைவு.
//காக்கிச் சட்டைக்குள்ளும் கவிதை நெஞ்சங்கள் உண்டு.//
ReplyDeleteஉண்மைதான்!
//மங்கையராய் பிறப்பதற்கே மாதவமும் வேண்டுமோ இனி?//- கவிதை நன்று! காக்கிச் சட்டைக்குள்ளும் கவிதை நெஞ்சங்கள் உண்டு.- ஆஹா..! சுவாரஸ்யம்.
ReplyDelete