Thursday, June 6, 2013

நீ பா த ச ம மா

இன்று என்ன எழுதுவது? யாருடைய பதிவுகளை பகிர்ந்து கொள்வது? 
ஒன்றுமே விளங்கவில்லை...Lets go with the flow !


'அ ' வில் இருந்து ஆரம்பிக்கலாம். அகத்தியர் எனக்குப் பிடித்த தமிழ் முனிவர். well , பொதிகையில் அகத்தியர் படம் பார்த்ததில் இருந்து. :)

அகத்தியர் படத்தில் ராவணனுக்கும் அகத்தியருக்கும் நடக்கும் இசைப் போட்டி ரொம்பவே சுவாரஸ்வம்.  

ச ம மா 
சரி ச ம மா 
ம த மா 
ச த மா 
நீ ச த மா 
ப ரி கா ச மா 
ம  நி தா 
நீ பா த க ம நி தா 

என்று வரும் ஸ்வராக்ஷரங்கள் அருமை!

முற்றிலும் ஸ்வராக்ஷரமாக ஒரு பாடல் பொருளுடன் எழுத முடியுமா?

-பாட்டி வீட்டில் பொழுது போகவில்லை என்றால் அடுத்த வீட்டு நியாயம் பேசவே மாட்டாள். பட்டு மாமி பேரன் பத்தாவது பெயிலாமே? சரஸா மருமகன் இப்போல்லாம் வேலைக்கு போறதில்லையாமே ??? ராஜியை பொண்ணு பாத்துட்டு போனாளே .என்னாச்சு வேணான்னுட்டாளா ?

ஹூஹும்.
.
பொழுது போகவில்லை என்றால் வர்ணங்களிலும் கீர்த்தனைகளிலும் வரும் சிட்டை ஸ்வரங்களுக்கு சாஹித்யம் எழுதிக் கொண்டிருப்பாள்.


உதாரணமாக கமாஸில் ப்ரோசேவாரெவருரா - சிட்டை ஸ்வரம் 

ஸா ஸ  நி த ப த நி ஸ நி நி த த ப ம பா த ம - க ம ப த நி 

என்றால் 

நீ பதமுலனு  மரி மரி பொகடுசு பாடுசு - நீ நாமமுனு 

என்று அழகாக இட்டுக் கட்டி பாடுவாள்...

ஒரு முறை , 'முற்றிலும் ஸ்வர சாஹித்தியமாக ஒரு பாட்டு கட்டேன்  பாட்டி' என்று கேட்டதற்கு,


நீ பா த    ச ம மா  - நி த நி த நி க ம  த ரி 
நீ பா த   ச ம மா 

பா பா ரி  ம நி த ரி ம த க ரி பா த பரி க ரி - நீ பா த 


[உன் பாதத்துக்கு சமமா - நிதமும் மறைகள் தம் உள்ளே தரிக்கும் 
உன் பாதத்துக்கு சமமா ?பாபங்களை அகற்றுபவனே...மணியை தரித்த மத யானையின் வேதனையை அகற்றிய உன் பாதம் சமமா] 

என்று பாடினாள் ...

MISS U பாட்டி... ஏதோ கொஞ்ச நஞ்சம் மூளை இருக்கிறது என்றால் அது பாட்டி தந்த ஜீன்ஸ் தான்.

ஜீன்ஸ் என்றதும் பரிணாமம் நினைவுக்கு வருகிறது.

பரிணாமம் கடவுளை சந்தேகத்துக்கு உரியதாக்குகிறது என்பது சிலர் வாதம். 
பூச்சி, பாம்பு, பூரான், புலி, புளியமரம் , பொன்னுசாமி எல்லாரையும் கடவுள் 
wholesale ஆகப் பார்த்துப் பார்த்து  படைத்தார் படைத்து விட்டு எல்லாவற்றிலும் தன் கையெழுத்தைப் போட்டார்  என்று மதங்கள் சொல்கின்றன. இல்லை கடவுள் சும்மா பிள்ளையார்சுழி மட்டுமே போட்டார். சும்மா சிம்பிளாக ஏதோ ஒரு ஒற்றை செல் உயிரியை படைத்து விட்டு இனிமே உன் சமத்து என்று சொல்லி விட்டு அகண்ட நித்திரை செய்யப் போய் விட்டார் என்கிறது பரிணாமம்.

 பதிவுலகில் பரிணாமம் குறித்த பதிவுகள் எப்போதும் சூடானவை தான். கமெண்ட் பாக்ஸில் சில சமயம் குடுமிப்பிடி சண்டை எல்லாம் கூட நடக்கும். ஜெய தேவ தாஸின் இந்தப் பதிவுகளை படியுங்கள் ...மறக்காமல் வவ்வாலின் பின்னூட்டங்களையும் படியுங்கள் :)

பதிவு 1

பதிவு 2

பதிவர் வவ்வால் புள்ளி விவரங்களுடன் தகவல்களைத் தந்து அசத்துபவர்.
அவரது வலைத்தளம். இது. .. ஆனால் இவரிடம் உள்ள கெட்ட பழக்கம் என்ன என்றால் உங்களை discourage செய்யும் படி பின்னூட்டங்களை எழுதுவார். ஆனால் நம்மை குத்திக் காட்ட, criticize செய்ய யாருமே இல்லை என்றால் நாம் தத்தியாகவே இருந்து விடுவோம்...'அருமையான பதிவு' 'உடன்படுகிறேன்' 'என்ன எழுத்து நடை' 'அபாரம்' 'சான்ஸே இல்லை' என்றெல்லாம் பின்னூட்டத்தில் ஐஸ் வைத்து விட்டால் நாமும் அடடா நாம் உலக இலக்கியம் எழுதி விட்டோமோ அடுத்த முறை புக்கர் பரிசுக்கு முயற்சிக்கலாம். என்று சாரு மாதிரி யோசிக்க ஆரம்பித்து விடுவோம். வௌவால் மாதிரி யாராவது நீங்கள் சொன்னது முற்றிலும் சரியல்ல என்று இடித்துரைத்தால் தான் 'அட இதற்கு இப்படியொரு 
பரிமாணமும் இருக்கிறதா..இதைப் பற்றி இன்னும் படிப்போம்..இன்னும் தெரிந்து கொள்வோம்...என்று நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வோம்'

ஒரு குட்டிக் கதை நினைவில் வருகிறது.

குருவி ஒன்று பனிக்காலத்துக்கு முன்பே வேறு இடத்துக்கு இடம் பெயர எத்தனித்து வானில் பறந்தது. ஆனால் கொஞ்சம் லேட் ஆகி விட்டதால் பனிக் காலம் வந்து விட்டது. பனி அதன் மேல் தாறுமாறாக பொழிந்து அதன் சிறகுகள் விறைத்துக் கொண்டு தொப் என்று கீழே விழுந்து குளிரில் கிட்டத் தட்ட செத்தே விட்டது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த எருமை ஒன்று ஒரு வண்டி சாணத்தை குருவி மேல் போட்டுப் போய் விட்டது. வெது வெதுப்பான சாணத்தால் கொஞ்சம் சூடு பெற்ற குருவி மகிழ்ச்சி தாங்காமல் பாடத் தொடங்கி விட்டது. இந்தப் பாட்டைக் கேட்டு அங்கே வந்த பூனை ஒன்று குருவியை சாணி மொந்தையில் இருந்து வெளியே கொண்டு வந்தது. குருவி நன்றி என்று சொல்லி முடிக்கும் முன்னரே பூனை அதைப் பிடித்து தின்று விட்டது.

'ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்' என்று மூன்று நீதிகளை எப்படி சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகிறதோ அப்படி இந்தக் கதையும் நமக்கு மூன்று நீதிகளை எடுத்துரைக்கிறது.

அவை ஆங்கிலத்தில்:
    1. Everyone who shits on you is not necessarily your enemy.
    2. Everyone who gets you out of the shit is not necessarily your friend.
    3. And, if you're warm and happy in a pile of shit, keep your mouth shut!

சிலப்பதிகாரத்தின் சில பாடல்களை பொருளுடன் நீங்கள் இங்கே படிக்கலாம்.

excerpt :


பெண்ணுரிமை மிக்க இந்தக் காலத்திலேயே… ஒரு பொண்ணு, நாடாளுமன்றத்துள் நுழைஞ்சி, “தேராப் பிரதமா” ன்னு பேசீற முடியாது; பிச்சிருவாய்ங்க:) “ஈழம்” ங்கிற தொன்மத்தின் பேரைக் கூட உச்சரிக்காதே -ன்னு இன்னிக்கும் Untouchability இருக்கத் தான் செய்யுது; ஆனா… ஊரு விட்டு ஊரு வந்து, மதுரையில் அடித்தளமே இல்லாத ஒரு பொண்ணு, அதிர்ந்து பேசியே அறியாத ஒரு soft பொண்ணு… “தேரா மன்னா” -ங்கிறா…
* எங்க ராசாவைப் பாத்து, மரியாதை இல்லாமப் பேசுறியா, சிறுக்கி?-ன்னு ஒருத்தன் சீறக் காணோம்!
* அதான் தென்னவன் அரசியல்; “தென்னவன் தீதிலன்” ன்னு பிற்பாடு கண்ணகியே சொல்லுறா!
இன்றைய அரசியலுக்கு, இது மூஞ்சியில் அடிச்சாப் போல ஒரு பாடம்!

back to அகத்தியர்.


சிவார்ப்பணம் என்று இந்த வலைத்தளத்தில் அகத்தியரின் வரலாறு உள்ளது.
சித்தர்களைப் பற்றியும், மெய்ஞானம் பற்றியும், தியானங்கள் பற்றியும் யோக முறைகள் பற்றியும் இந்தத் தளத்தில் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. என்ன? இவற்றை வெறுமனே தகவல்கள் என்று பார்க்காமல் இவற்றை நாம் ஞானம் அடைவதற்கு உத்திகளாகப் பார்க்க வேண்டும்.

வெறுமனே ஞானத்தை வைத்து என்ன செய்வாய்? ...தகவல்களின் மூட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? எமன் வரும் போது எனக்கு சிலப்பதிகாரம் தெரியும் சோலார் சிஸ்டம் தெரியும் சாருகேசிக்கு ஸ்வரம் தெரியும் சொற்பொருள் பின்வருநிலை அணி தெரியும் , ஷேக்ஸ்பியர் தெரியும் விட்டுடு என்றால் விட்டு விடுவானா? என்று கேட்கிறது பஜகோவிந்தம்.

நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்சரனெ !

பஜ கோவிந்தத்தை அழகாக படங்களுடன் விளக்குகிறார் திருமதி. இராஜராஜேஸ்வரி இங்கே 

மேலும் பஜகோவிந்தம் இங்கே:


ஒரு மொழிபெயர்ப்பை அனுமதிக்கவும்.


மா குறு தனஜன யௌவன கர்வம் 
ஹரதி நிமேஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா 
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷ விதித்வா ||


அகந்தை தருதோ உன் இளமை? சுற்றம்?
அழித்திடும் அனைத்தையும் நொடியினில் கூற்றம் 
அகிலமே மாயை என்று அறியத் தகுவாய் 
அந்தம் இல்லாத இறையினுள் புகுவாய் 


Take no pride in youth, wealth and your kith
All shall be gone in minutes with death
Know that everything is illusion
May the eternal truth be your passion


மாயாமயம் இதம்....மாயை என்றால் என்ன? இருப்பது போல் இருந்து பின் இல்லாமல் போய் விடுவது. காலையில் டாட்டா காட்டி விட்டுப் போனவர் மத்தியானம் ஆக்சிடெண்ட் ஆகி சதை மூட்டை போல வீட்டுக்கு வருவது.  நமக்கு ஏதேனும் மனித எத்தனத்துக்க் அப்பாற்பட்ட சம்பவங்கள் நிகழும் வரை கடவுளின் நினைவு வருவதில்லை என்கிறார் ஓஷோ. (பகவத் கீதை -ஒரு தரிசனம்)

கீதையில் பகவான் கிருஷ்ணர் ஒரு அற்புதமான சங்கிலி ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அது,

பரமாத்மா -> புத்தி -> மனம் -> இந்திரியங்கள்.

ஆனால் மனிதன் இந்த சங்கிலியை உல்டாவாக்கி விட்டான். பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டது புத்தி. புத்திக்கு கட்டுப்பட்டது மனம். மனத்துக்கு கட்டுப்பட்டது இந்திரியங்கள் (புலன்கள்)...ஆனால் நமக்கோ புலன்கள் மனத்தைக் கட்டுப் படுத்துகின்றன. பஜ்ஜி போண்டா வடை விற்கும் தள்ளுவண்டி கடையைப் பார்த்தால் நாக்கு மனதுக்குக் கட்டளை இடுகிறது....மனம் அங்கே எஜமானனாக இருப்பதில்லை. மனமோ புத்திக்கு கட்டளை இடுகிறது.(revenge at wrong place !) புத்தி 'வேண்டாம் இது ஆபத்து' என்று எச்சரித்தாலும் வாயை மூடு எனக்கு எல்லாம் தெரியும் ...என்று சொல்கிறது. புத்தியோ பரமாத்மாவையே கட்டுப் படுத்துகிறது.  'கடவுளே...எல்லாம் உன் சித்தம்' என்று சொல்வதில்லை...இது எனக்கு வேண்டும்...செய்து கொடு... நான் உன் பக்தன் அல்லவா...எனக்கு ஏன் இன்னும் நீ வேலை கொடுக்கவில்லை? (?) இப்படி இருப்பது உனக்கு அழகா...? என்றெல்லாம்..

வேலையாட்கள் எஜமானர்களை கட்டுப்படுத்தினால் அந்த வீடு எப்படி இருக்கும்? அப்படித் தான் இருக்கிறது நம் வாழ்க்கை..

குதிரை வண்டியில் உட்கார்ந்து செல்ல வண்டியை எஜமானன் இழுக்கிறான்!

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥


 மேலும்:

சுட்டியில் 

back to அகத்தியர் ..

அகத்தியரை தன் அவைக்கு விருந்தாளியாக அழைக்கிறான்  இந்திரன்.
ஊர்வசியை நாட்டியம் ஆடும்படி ஏற்பாடு செய்கிறான். சில பேர் வேலை பார்க்கும் இடத்தில் வேலை தவிர வேறெந்த விஷயத்துக்கும் இடம் தர மாட்டார்கள். நோ ஜி-மெயில் நோ பேஸ் புக்.'..நோ நான் சென்ஸ்..அது காதலியே ஆனாலும்...எஸ்.எம்.எஸ். அனுப்பினால் im at work என்று ஒரே ஒரு reply தான் வரும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தான் அவர்களிடம் எதையாவது எதிர்பார்க்க முடியும்.

ஆனால் இந்த ஊர்வசிக்கு வேலை செய்யும் இடத்தில் காதலை எப்படி கையாள்வது என்று தெரிவதில்லை. டான்ஸ் ஆடிக்கொண்டே வசந்தனை ஓரக் கண்ணால் பார்க்கிறாள். அவனைப் பார்த்தபடியே டான்ஸ் ஆடுகிறாள். நீங்கள் விருந்தாளியாக செல்லும் வீட்டில் இப்படி இளவட்டங்கள் லுக்கு விட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அகத்தியர் கடுப்பாகி அவர்களை சபித்து விடுகிறார். 

வேலை செய்யும் இடத்தில் ஜொள்ளு விடாதீர்கள்.....

ஊர்வசி என்றதும் ரம்பா ஞாபகம் வருகிறது. பதிவர் பிலாசபி  பிரபாகரன் 
ரம்பாவை சிலாகித்து, கொண்டாடி, கூத்தாடி, புகழ்ந்து, எழுதி இருக்கிறார் இந்தப் பதிவில்:

எக்ஸ்செர்ப்ட் :

2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் நாளில் அந்த துயர செய்தி ரம்பா ரசிகர்களின் காதுகளுக்கு எட்டியது. செய்தியை கேட்டதும் இதய பலவீனமானவர்கள் பலர் மாரடைப்பில் பலியானார்கள். நிறைய வீடுகளில் கோபத்தில் செய்தி வாசித்த ரேடியோக்களும் தொலைக்காட்சிகளும் நொறுங்கின. பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செய்தி: நடிகை ரம்பா தொழிலதிபரை மணந்தார். திருமணமாகி சரியாக ஒன்பதே மாதங்களில் ரம்பா, குட்டி ரம்பாவை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுபோய் நின்றால் கோபம் போய்விடும் என்பார்கள். ரம்பா ரசிகர்கள் விஷயத்தில் அது உண்மைதான், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தற்போது ரம்பாவை பல்லிளித்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமுத்ரா 

10 comments:

  1. புது பதிவர்களுக்கு என் வாழ்த்துகள்... ஆசிரியர் சிறப்பான பதிவுகளையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்...
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அகத்தியர் பாவம்... விட்டு விடுங்கள்... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பஜ கோவிந்தத்தை அழகாக படங்களுடன் விளக்குகிறார் திருமதி. இராஜராஜேஸ்வரி இங்கே

    எமது பதிவை சிரத்தையாக அறிமுகம் செய்துவைத்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  4. வணக்கம்

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. //பரிணாமம் கடவுளை சந்தேகத்துக்கு உரியதாக்குகிறது //


    முதலாய் ஒரு பொருள் அது எப்பொருள் ஆயினும் உண்டானது எவ்வாறு ? அந்த ஒரு பொருள் ( மேட்டர் ) சக்தியாய் ( எனெர்ஜியாய்) ஆனது எவ்வாறு? முதலில் அப்பொருள் படைக்கப்ப்படுமுன் படைக்கப்பட்ட பொருள் உண்டாக்கப்பட்ட இடம் எங்கு இருந்தது ? படைத்தவன், படைக்கப்பட்ட இடத்தை விட்டு மாறுபட்டவனா ? படைத்தவன் படைத்த இடத்தில் இல்லையெனின் அவன் இருந்த இடம் என்ன ?


    இதற்கெல்லாம் பதில் இன்னமும் தெரியவில்லை. நமக்கு அல்ல. அறிவியலுக்கே.


    நமக்கு புரியாதவையினையும் புரிந்தது போல் அறிந்தது போல்

    இகழுவதும்


    உணரும் நிலைக்கு அப்பாற்பட்டதை இல்லையென எடுத்து எறிவதும்


    உலகத்தோர் வழியாய் ஆகிவிட்ட நிலை இன்று.


    இந்நிலையில் இறை பற்றி பேசுவதே ஏளனத்துக்கு பொருளாகிறது

    வேதனை தருவது நாத்திகம் அல்ல. உண்மையான நாத்திகம்

    மானுடத்தை மதிக்கிறது. மற்றவர்களின் கருத்தையும் உணர்வையும் மதிக்கிறது.



    நாத்திகப்போர்வையிலே நடமாடும் ஆணவத்தின் வெளிப்பாடு.


    நான் எனும் அகம் அழியும் நிலையில் தான் ஆண்டவன் தெரிவான்.


    சுப்பு தாத்தா
    new jersey.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.in

    ReplyDelete
  6. சமுத்ரா,

    வலைச்சரத்திலும் ஒரு கலைடாஸ்கோப் காட்டுறிங்க போல இருக்கே :-))

    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    //உங்களை discourage செய்யும் படி பின்னூட்டங்களை எழுதுவார்.//

    இவ்வாறு என்னைப்பற்றி ஒரு பிம்பம் உருவாக காரணம்,பொதுவாக அனைவரும் பாராட்டினை மட்டுமே எப்பொழுதும் விரும்புவதே, சரியாக சொல்லப்பட்ட கருத்துக்களை ஆதரித்தும் சொல்லியுள்ளேன்,ஆனால் சதவீத அடிப்படையில் குறைவாக இருக்கலாம்.

    வலையுலகிலும் பண்டமாற்று முறைதான் ,நாம் ஒருவரை பாராட்டினால் ,அவர் நம்மை பாராட்டுவார், நான் இப்படி விமர்சிப்பதால் பதிலுக்கு என்னை பாராட்ட யாருக்கும் மனசு வராது அது ஒரு வகையில் எனக்கு இழப்பு தான்,ஆனால் எனக்கு பண்டமாற்று பாராட்டு பத்திரங்கள் தேவைப்படுவதில்லை என்பதால் இழப்பாக நினைப்பதில்லை. எனவே "மனசுக்கு சரி/தப்புனு பட்டதை உள்ளப்படி சொல்லி " டிஸ்கரேஜ் செய்பவன்" என்ற பட்டம் வாங்கிக்கொள்கிறேன்,ஆனால் அதனால் எனக்கு இழப்பொன்றும் இல்லை என என் மனம் சொல்வதால் ,என் இயல்பு படியே தொடர்வேன் :-))

    ReplyDelete
  7. சமுத்ரா,

    நாய் புடிச்சு அடைச்சு ஏத்திக்கிட்டு போற வன்டிய நாய் வண்டினு சொல்வாங்க,எனவே குதிரையை ஏத்திக்கிட்டு போகிற வண்டி தான் "உண்மையான குதிரை வண்டி" :-))

    குதிரை வண்டி படமெல்லாம் சொந்தமா வரைஞ்சு "கணினி வரைகலை" நிபுணராகவும் அவதாரம் எடுத்தாச்சு போல, படத்துக்கு கீழே இப்படத்தினை வரைந்து உங்களுக்கு அளிப்பது "உங்கள் சமுத்திரா" என போட்டிருக்கலாம் :-))

    ReplyDelete
  8. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete