Monday, March 17, 2014

எனது வலையுலகப் பயணம்

பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் அனைவரைப் போல தமிழ் தான் எனக்கு மிகவும் கடினமான பாடமாக இருந்தது. உயற்கல்வியில் நான் அறியாமலேயே எனக்கு  தமிழ் மீது பற்று தோன்ற பெரும்பங்கு வகித்தவர் எனது தமிழ் ஆசிரியர் சேகர் ஐயா. கல்லூரியில் தமிழ் என்ற ஒன்று இல்லாமலே போக, காலத்தைக் கடக்க ஆங்கில நாவல்களை படிக்கும் சமயத்தில், என் கையில் கிடைத்த முதல் தமிழ் நாவல் கல்கியின் 'பார்த்திபன் கனவு'. ஆங்கில நாவல்கள் படிக்கும் பொழுது சில நேரங்களில் கதை எழுத வேண்டும் என்ற ஆசை தோன்றி மறைவதுண்டு. தட்டச்சு கலையை நான் அறியேன் என்பதால் அந்த ஆசை மீது எனக்கு பெரும் ஈர்ப்பு தோன்றவில்லை.

கல்லூரி இறுதியாண்டில் நண்பர்கள் மூலம் அறிமுகமானது சுஜாதாவின் படைப்புகள். அவரது நாவல்களை படிக்கத் தொடங்கிய பின் ஆங்கில நாவல்கள் பக்கம் ஏனோ செல்லவில்லை. பணியில் சேர்ந்த பின்பு, ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன் நேரே அம்பத்தூர் 'பொண்ணு சூப்பர் மார்கெட்' சென்று, கணேஷ்-வசந்த் தோன்றும் நாவலை வாங்குவதை, ஓராண்டு காலத்திற்கு வழக்கமாக கொண்டிருந்தேன்.       

இப்படி நாட்கள் செல்ல, அலுவலகத்தில் சென்ற ஆண்டு உடன் பணிபுரியும் சீனுவின் அறிமுகம் கிடைத்து, இணையத்தில் எழுத 'வலை' என்னும் மேடை இருப்பதை அறிந்தேன். ஜனவரியில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சிக்கு சீனு என்னை அழைத்துச் செல்ல, அங்கு விகடன் 'வட்டியும் முதலும்' புகழ் ராஜீ முருகன் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார். அவர் 'கதைக்கு எங்கும் தேடிச் செல்ல வேண்டாம், சுற்றி உள்ள மக்களைப் படித்தால் போதும்' என்று சொன்னார். அது என் மனதினுள் மறைந்து இருந்த எழுத்து ஆசையை மீண்டும் வெளிக்கொணர்ந்து , கூகுள் தந்த விலையில்லா தளத்தில் 'கனவு மெய்ப்பட' என்ற வடிவம் பெற்று, 2013 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்து எட்டாம் நாள் தொடங்கியது உங்களுடனான என் வலையுலக வாழ்க்கை. 

என் முகநூலில் 'நான் எழுதும் முதல் கதை' என்று அந்த லிங்கை பகிர்ந்த பொழுது, எனக்குள் எதோ ஒன்று பெரிதாய் சாதித்த மகிழ்ச்சி தோன்றியது. எனக்கு தெரிந்த அனைவரையும் படிக்கச் சொல்லி தொல்லை  செய்தேன், ஒரு சிலர் லைக் கொடுத்தனர். திடீரென்று அடுத்த நாள் நிறைய கருத்துரைகள் வந்து என் மாடரேஷனுக்காக காத்திருந்தன. அதுவரை என் வாழ்வில் அறியாத பெயர்கள், யார் இவர்கள் என்று ஒரே குழப்பம். அந்த வாரம் சீனு வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தமையால் என்னை அறிமுகம் செய்துள்ளார் என்று பின் தெரிந்து கொண்டேன். அப்படி எனக்கு அறிமுகமான வலைச்சரத்தில் இன்று என்னையும் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்த 'தமிழ்வாசி' பிரகாஷ் அவர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றி.    

ஆரம்பத்தில் சிறுகதை மட்டுமே எழுதிய நான், பின் 'களவு ' என்ற ஒரு தொடர் கதையை எழுதினேன். அந்த தொடருக்கு தக்க வரவேற்பு இல்லாத காரணத்தால், மேலும் தொடர ஊக்கமின்றி இடையிலேயே நிறுத்தி விட்டேன். சில மாதங்கள் கழித்து 'நித்ரா' என்ற தொடரை தொடங்கி முடித்தேன். 'நித்ரா' எழுதிய சமயத்தில் நண்பர்களிடம் இருந்து கிடைத்த ஊக்கம் தான் என்னை அந்த தொடரை நிறைவு செய்ய வைத்தது என்பதில் ஐயம் இல்லை.    

எனது பயண அனுபவங்களை பற்றி 'ஊர் சுற்றல்' என்ற பகுதியில் எழுதினேன். இந்தப் பகுதியை மேலும் தொடராமல் விட்டது சற்று வருத்தம் தான்.   

எனது தளத்தை பிரபலப் படுத்த ஒரே வழி சினிமாதான் என்ற நிலை உருவானது. புதுப் படங்களை பற்றி சூடாக விமர்சிக்க எனக்குள் ஆர்வம் இல்லாததால்,  கல்லூரிக் காலத்தில் என்னைக் கவர்ந்த சில 'உலக சினிமாபடங்களை குறித்து எழதத் தொடங்கினேன். அதில் கொஞ்சம் வரவேற்பு கூடியது. 

மே மாதத்தில் தொடங்கி எனது வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து 'தேன் மிட்டாய்' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். இன்றளவும் எந்த மாதமும் தேன் மிட்டாய் தடை படாது வெளிவருவதே என்னளவில் மிகப்பெரிய வெற்றியே.

இந்த நிலையில் எதுவும் யோசிக்காமல் விளையாட்டாக எழுதிய பதிவு 'மழை சாரலில் பஜ்ஜி' அதிக மக்களால் படிக்கப் பட்ட பொழுது, 'சாப்பாட்டு ராமன்' என்ற புதிய அவதாரம் எடுத்தேன். இன்று வரையில் நான் எழுதி அதிகம் வாசிக்கப் படுவது சாப்பாட்டு ராமன் பதிவுகள் தான். சினிமா மற்றும் உணவகங்களுக்கு தான் மக்களிடையே எத்தனை வரவேற்பு!  

என்னைப் பார்த்து என் நண்பர்கள் இருவர் தமிழில் எழுதத் தொடங்கியதையே எனது இந்த ஓராண்டுக் கால பதிவுலக வாழ்க்கையின் வெற்றியாக என்னால் பெருமிதத்துடன் கூற முடியும். 

சற்றும் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன், சுஜாதா சொல்லியது போல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.  சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசையுடன் வந்த என் பாதை எப்படியோ மாறினாலும், தொடர்ந்து எழுத எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு தத்தளித்து கொண்டே செல்கின்றேன், காலமும் நேரமும் உதவும் என்ற நம்பிக்கையுடன். ​

எனது பதிவுகளில் நான் மிகவும் ரசித்தவை 'தொடாமலே தொண்ணூறு' மற்றும் 'குள்ளன்'. நீங்களும் படித்துப் பாருங்களேன். நாளைய இடுக்கையில் சில அறிமுகங்களுடன் மீண்டும் சந்திப்போம்.  

புன்னகையுடன் 
ரூபக் 

57 comments:

  1. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள். வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
    உங்கள் அறிமுக உரை அருமை.
    நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை படித்து விட்டு வருகிறேன்.
    வாழ்க வளமுடன் ரூபன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. அடியேன் 'ரூபன்' அல்ல 'ரூபக்' :)

      Delete
  2. ஆங்கில வழியின் பயின்று தமிழில் எழுதும் உங்களின் ஆர்வம் பாராட்டத் தக்கது.
    வாழ்த்துக்கள் நண்பரே.
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  3. நண்பர்கள் இருவர் தமிழில் எழுத ஆரம்பித்தது சிறப்பு வெற்றி...! அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    தமிழ் ஆசிரியர் சேகர் ஐயா + உங்கள் பாதையில் இனிமேல் தொடர்ந்து, உங்கள் மனதில் பிரபலமாகவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தம்பீ... வட்டியும் முதலும் ஆசிரியர் பெயர் ராஜிவ் முருகன் அல்ல... ராஜுமுருகன். அதை முதல்ல திருத்திடுய்யா... வலையில் நம்ம படைப்பை பகிர்ந்துட்டு யாரெல்லாம் படிப்பாங்க கருத்திடுவாங்கன்னு ஆர்வமா அந்த தளத்தையே திறந்து திறந்து பார்த்துட்டிருந்த என் ஆரம்ப காலம் மனத்திரையில் ஓடிச்சு நீ எழுதினதைப் படிக்கிறப்ப... உன் படைப்புகளில் சிறந்தவற்றை அருமையாக தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறாய். இந்த வாரம் முழுதும் நிறைய வாசகர்களைப் பெற்று வலைச்சர வாரம் சிறக்க நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா . திருத்திட்டேன் சார். தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  5. குள்ளன் என் பேவரைட்டும் கூட.. :) வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. வருக.. வருக..
    வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  7. அன்பின் ரூபக்ராம் - அருமையான துவக்கம் - சுய அறிமுகம் மற்றும் தங்களது பதிவுகளின் அறிமுகம் - அருமை அருமை - சென்று படிக்க முயல்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைய பாராட்டும் தங்களுக்கு நன்றி

      Delete
  8. வணக்கம் ரூபக் அய்யா ,,நல்ல அறிமுகம் ...சூப்பர் பொண்ணு சூப்பர் மார்கெட் ல நாவல் வாங்கி படிபீன்களா ..இதான் படிக்கிறப் புள்ள ....அங்க கடலை மிட்டாய் தான் நான் வாங்கி சாப்பிட்டேன்....வாழ்த்துக்கள் ரூபக் ..

    ReplyDelete
    Replies
    1. நான் 'அய்யா' என்று சொல்லும் அளவிற்கு புலமையோ அல்லது முதுமையோப் பெறாதவன் சகோதரி. இன்னும் வாலிபப்பருவத்தில் தான் நீந்துகிறேன்.

      Delete
  9. நித்ரா படித்திருக்கிறேன், தொடாமலே தொண்ணூறு படித்த ஞாபகம் இல்லை... தேன்மிட்டாய் எனது பேவரிட்... வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் ரூபக்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  10. வணக்கம், ரூபக் ராம்.
    உங்கள் சுய அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எத்தனை பேர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம், அவர்களால் நம் வாழ்வு எப்படியெல்லாம் நல்லவிதமாக மாறுகிறது என்று நான் நிறைய யோசிப்பது உண்டு.
    நீங்களும் அதேபோல வலைச்சர ஆசிரியர் பதவிக்கு வருமுன் ஒரு உட்பார்வை பார்த்திருக்கிறீர்கள்.
    உங்களது ஆரம்ப கால எழுத்துக்களை படிக்கிறேன்.

    ஆசிரியர் பொறுப்பைத் திறம்பட நடத்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா

      Delete
  11. சிறப்பான தொடக்கம் ரூபக்....

    தொடர்ந்து வலைச்சரத்தில் சிறப்பான பூக்களைத் தொடுக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  12. அருமையான தொடக்கம் ரூபக்... உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  13. வலைச்சர ஆசிரியர்... வாழ்த்துக்கள் தம்பி... கலக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  14. இந்த வார வலைச்சர ஆசிரியராகத் தெரிவானதில் மகிழ்ச்சி!கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  15. வாழ்த்துக்கள் ரூபக்..... கலக்குங்க..

    ReplyDelete
  16. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் ரூபக்

    ReplyDelete
  17. அறிமுகம் அருமை! பதிவர் சந்திப்பில் சந்திக்க நினைத்தும் சந்திக்க முடியவில்லை! தங்கள் பதிவுகளை சென்று வாசித்து வருகிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள் :)

      Delete
  18. குள்ளன் கதை படு சூவாரஸ்யம் ரூபக்....வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி :)

      Delete
  19. வலைச்சரத்துல கரண்டி இல்லமலே கலக்க வாழ்த்துகள் ரூபக்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் துணை இருக்க எனக்கு என்ன கவலை

      Delete
  20. சிறப்பான தொடக்கம். சிலவற்றை படித்திருக்கிறேன். மற்றவரையும் படித்து விடுகிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  21. மேலும் அசத்த வாழ்த்துக்கள் நண்பரே...

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு நன்றி

      Delete
  22. அன்பு தோழா! நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அனுபவத்தால் புதியவன். தங்களைப் போன்றே தமிழின் மேல் அளவற்ற காதல் கொண்டுள்ளேன். தமிழால் ஈர்க்கப்பட்ட பலரின் சீரிய முயற்ச்சியால் இங்கு தமிழ் வளர்க்கப் படுவதைப் பார்க்கும் போது, வாழ்வின் பெரும் பகுதியை தமிழின் பால் சேவை ஆற்றாமல் வீணாக்கி விட்டோமோ என்ற ஏக்கம் என்னுள் பீரிட்டு எழுகிறது. தங்களின் முயற்ச்சிக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. It is late but never too late என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். கவலையின்றி இனி வரும் நாட்களில் தொடர்ந்து எழுதிக் கலக்குங்கள்

      Delete
  23. அருமையான ஆரம்பம்.. அப்படியே பிக்-அப் பண்ணி டாப் கியரில் தூக்குங்கள்..வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. கியரைத் தூக்கிடுவோம். மிக்க நன்றி நண்பா :)

      Delete
  24. சிறப்பான அறிமுகம் ரூபக்.... இனிதே தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

      Delete
  25. இந்த பதிவுக்கு இந்த நேரம் வரை தமிழ்மணத்தில் மொத்தம் 9/21 இதில் 12 மைனஸ் ஓட்டு விழுந்துள்ளது....

    இந்த பதிவுக்கு இதுவரை ஓட்டு போட்டவர்களின் லிஸ்ட்:

    dindiguldhanabalan ibakthi3y ibakthi4y ibakthi5y ibakthi1y gomathythiru prakashin rubak i2bakthi ibakthi5 sathishbsf@gmail.com ibakthi abdulbasith bganesh55 ibakthi3 thooyaraji ibakthi2y ibakthi1 ibakthi2 i1bakthi seenuguru

    மேற்கண்ட பெயர்களில் pakthi என வருகிற ஐடி அனைத்துமே மைனஸ் ஓட்டு போட்டவர்... இது சம்பந்தமாக ஏற்கனவே http://nadodiyinparvaiyil.blogspot.com/2014/02/blog-post_28.html என்ற பதிவில் தனபாலன் அவர்கள் தனது கருத்துரையில் விளக்கமாக தமிழ்மணத்திற்கு எழுதியுள்ளார்...

    ReplyDelete
    Replies
    1. எனது வலை அனுபவத்தில் இதுநாள் வரை இத்தனை ஓட்டுக்கள் கிடைத்தது இல்லை :)

      Delete
  26. தெளிவான அறிமுகம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. வாங்க ரூபக் ஐயா வாழ்த்துக்கள் ஆசிரியர் பணிக்கு!

    ReplyDelete
    Replies
    1. 'ஐயா' வா? நான் மிகவும் இளையவன்.

      Delete
  28. உங்கள் வலைப்பயணம் சிறக்க வாழ்த்துகின்றேன்!

    ReplyDelete
  29. தோழா!
    நிஜாமுதீன் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் நிற்பதைப் போன்ற அனுபவத்தைக் கொடுத்துள்ளீர்கள். மிக அருமை. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  30. @ இல. விக்னேஷ்...
    டெல்லி அருகிலுள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் பற்றி கருத்திட்டீர்கள்.
    என் பெயர் நிஜாமுத்தீன்...
    நான் ரயில் பற்றி எழுதிய பதிவை இங்கு நினைவூட்டுகிறேன்.
    இணைப்பு: http://nizampakkam.blogspot.com/2010/04/rayilvarumneram.html

    ReplyDelete