Wednesday, March 19, 2014

பனியைத் தேடி - தலைநகரில்

நிசாமுதினில் இருந்து முதலில் நாங்கள் சென்ற இடம் புது டில்லி ரயில் நிலையம். நிசாமுதின் மற்றும் புது டில்லி ரயில் நிலையம், நமது எக்மோர் மற்றும் சென்ட்ரல் போல் என்று நானே யூகித்துக்கொண்டேன். வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நம் தலை நகரம் இருக்கும் என்ற எண்ணத்துடன், ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கோ ஏழ்மை தலை விரித்தாடும் கோலத்தை கண்டேன். சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வசிப்பதைக் கண்டேன். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் சென்னையில் நான் கண்டிராத மனித ரிக்சாக்களை அங்குக் கண்டு மனம் நொந்தேன். பல எதிர்பார்ப்புக்களுடன் தலை நகரில் வந்து இறங்கிய எனக்கு பெருத்த ஏமாற்றம் தான்.   

இந்திய ரயில்களுக்கும் நேரம் தவருவதுக்கும் ஒரு இனம் புரியா பந்தம் இருப்பதாலும், சென்னையில் இருந்து புது டில்லி  செல்லும் ரயில்கள் என்றுமே சரியான நேரத்திற்கு செல்வதில்லை என்பதாலும், டில்லியில் இருந்து எங்களது சிம்லா பயணத்திற்கு டிசம்பர் 24 அன்றே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு முறை  மட்டும் கல்கா செல்லும் ஷதாப்தி  எக்ஸ்பிரஸ் அது.  என் நண்பனின் முன் யோசனைப் படி செயல் படாமல், அன்றே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் அந்த ரயிலை தவற விட்டிருப்போம். ஒரு நாள் பொழுது டில்லியில் என்றானது. 

புது டில்லி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் MEM இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு, டில்லியை சுற்றக் கிளம்பினோம். தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாமல் வட தேசம் நோக்கி சென்றோமானால் ஒரு எலியைக் கூட யானை என்று ஏமாற்றி நம் தலையில் கட்டுபவர்கள் அதிகம். எங்களுக்கு மிக அருகில் அதிருஷ்ட தேவதை இருந்ததால், எங்கள் குழுவில் இருந்த நண்பனின் அண்ணனுக்கு  ஹிந்தி சரளமாக பேசவும் படிக்கவும் தெரியும். அவரது ஹிந்தி பேச்சினால் எங்கள் பயணத்தில் 4000 ரூபாய் வரை சேமித்தோம் என்பது இன்றளவும் நம்ப முடியாத உண்மை. மேலும் அவர் உயற்கல்வி பயின்றது டில்லியில் என்பதால், அவரது தலைமையில் எங்கள் தலை நகர் உலா தொடங்கியது. 

டில்லியில் அதிக பிரபலமான சில அங்காடித் தெருக்களுக்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டு, அங்கு பயணிக்க மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். மெட்ரோவில் எங்கு செல்லவேண்டுமானாலும் டோக்கன் தான். நமது இலக்கை சொல்லி காசு கொடுத்தால் அதற்கு ஒரு டோக்கன் தருகின்றனர், அதை பயன்படுத்தி தான் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முடியும். அதே போல் நம் இலக்கை அடைந்த உடன் அதை பயன் படுத்தினால் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளிய வர முடியும். இங்கு வழக்கமாக பயணிப்பவர்கள் பாஸ் வைத்துள்ளனர், பயண தூரத்தை நுழைவு மற்றும் வெளியேறும் ஸ்டேஷன் மூலம் கணினி கணித்துக் கொண்டு அதற்கேற்ப காசு கழித்துக்கொள்கிறது. 

அந்த ரயில் நிலையத்தில் வழக்கமாக காணப்படும் பாண் பராக் மற்றும் எச்சில் கரைகள் சுவரில் இல்லாததை கண்டு வியந்தேன். மெட்ரோ ரயில் வந்தவுடன் தானியங்கிக் கதவு திறந்து எங்களை வரவேற்தது. அந்த ரயிலின் உள்ளே சென்றவுடன், 'அம்மம்மா நாம் இந்தியாவில் தான் உள்ளோமா?' என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். மேல்நாட்டு சினிமாவில் காண்பது போன்ற மிகவும் சுத்தமாக, தட்ப வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதியுடன் நவீனமாக இருந்தது. ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் டில்லியில் மெட்ரோவை பயன்படுத்தினாலும்  இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பது பெரிய விஷயம் தான். 

டில்லியில் ரோட்டோரக் கடைகளுக்கு பஞ்சமே கிடையாது. எத்தனை வகைகள். எத்தனை கடைகள். இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சற்று சுருக்கமாக கையேந்தி பவன்களை பற்றி சொல்லி விடுகிறேன். எமது நண்பரின் அண்ணன் டில்லியில் படித்தால் அவருக்கு பரிட்சயமான கடைகளுக்கு அழைத்துச் சென்றார். முதலில் குல்ச்சா வாங்கித் தந்தார், பின் பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆலு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ என அனைத்து வகைக்கடைகளிலும் ஒரு வேட்டை தான். எல்லாமே ரோட்டோரக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி வந்து விட்டு டில்லி அப்பளத்தை தவற விடுவோமா, அதையும் கொறித்து விட்டோம். இரவு ஒரு கோழிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு எங்கள் தலை நகர உலாவை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம். 

மறு நாள் காலை, டில்லியில் வரலாறு காணாத பனி பொழிந்த அந்த வேளையில் கல்கா நோக்கி செல்லும் ரயில் பிடிக்க புது டில்லி ரயில் நிலையம் நோக்கி சென்றோம். ரயிலுக்காக காத்திருந்த வேளையில் அங்கு நடைமேடையில் ஒரு தள்ளு வண்டியை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்க அங்கு சென்று பார்த்தோம். அங்கு பூரி விற்றுகொண்டிருன்தனர். பத்து ரூபாய்க்கு எட்டு பூரிக்கள் சப்ஜியுடன் தந்தனர். பூரிக்கு உருளை மசாலா மட்டுமே உண்டு பழக்கப் பட்ட நாக்கு அங்கு பசியின் பிடியில் அந்த நீர் போன்ற சப்ஜியுடன் வயிற்றை நிரப்பியது. 

ஆறு மணிக்கு இந்த ரயிலை பிடித்து கல்கா சென்று, அங்கிருந்து மலை வழியாக சிம்லா செல்லும் டாய் ரயிலில் செல்வதுதான் எங்கள் திட்டம். அந்த டாய் ரயில் நமது ஊட்டி ரயில் போல, அதில் சென்றால் தான் சிம்லா மலைகளின் இயற்கை எழிலை நன்கு அனுபவிக்க முடியுமாம். மணி ஏழானது, பின் எட்டானது, பின் ஒன்பது மணியையும் கடந்தது. தனது சேவை நாட்களில் ஷதாப்தி ரயில் என்றுமே நேரம் தவறியதில்லையாம். எங்கள் அதிஷ்டம் அதையும் தொத்திக்கொண்டது. ஷதாப்தி ரயில் வருமா, டாய் ரயிலை பிடித்து விடுவோமா?            

இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************
ஒரு முறை எனக்கு எழுதும் பொழுது ஒரு சந்தேகம் எழுந்தது. 'கருப்பு வெள்ளை' அல்லது 'கறுப்பு வெள்ளை' இதில் எது சரி என்று ஒரே குழப்பமானது. அப்பொழுது எனது குழப்பத்தை போக்கியது இவரது பதிவு. இவரும் இவர் நண்பரும் இணைந்து ஒரு வலைத்தளம் நடத்தி வருகின்றனர். இவர் நண்பரை சந்தித்துள்ளேன். ஆனால் இவர் இதுவரை 'முகமூடிப்' பதிவரகவே உள்ளார். மற்ற பதிவர்களைப் போல் இவரைக் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அது நிறைவேறுவது அவர் கையில் தான் இருக்கிறது.            

'எங்கள் ப்ளாக்' என்னும் தளத்தில் ஸ்ரீராம் சார் எழுதிய 'கருப்பும் கறுப்பும்' பதிவு தான் அது.  

*********************************************************************************************************

கூகுள் தந்த வலையை பயன்படுத்திக்கொண்டிருந்த நான், சொந்தமாக டொமைன் வாங்க முடிவு செய்து, இந்த ஆண்டு ஜனவரி அன்று எனக்கென்று ஒரு முகவரியை உருவாக்கினேன். blogspot.in  இல் இருந்து .com மாக மாறும் பொழுது எனக்கு சில இன்னல்கள் தோன்றின. அவற்றை சரிசெய்ய எனக்கு உதவியது இவரது பதிவு. அவரேவும் எனக்கு சில கோட்களை மாற்றித் தந்தார். பதிவர்களுக்கு டெக்க்னிலாக உதவும் தயாள குணம் படைத்தவர்.

'ப்ளாக்கர் நண்பன்' அப்துல் பாஸித் எழுதிய   'ப்ளாக்கரில் கஸ்டம் டொமைன் பிரச்சனை' என்ற பதிவு தான் அது.  

டொமைன் மாத்தி, புது பதிவும் எழுதி வெளியிட்ட பின், அதை தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை. அதற்கும் இவரிடம் தீர்வுடன் பதிவு உண்டு. 'பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு' என்ற பதிவு தான் அது.
            
*********************************************************************************************************
நான் என் வலை பயணத்தின் தொடக்கத்திலேயே 'களவு' என்ற தொடரை தொடங்கி கைவிட்ட பொழுதும், பின் 'நித்ரா' என்று மற்றொரு தொடரை எழுதினேன் அல்லவா. அதற்கு இவர் தொடராக எழுதிவந்த, ஒரு கல்லூரி கால காதல் கதையின் மூலம் கிடைத்த ஊக்கம் தான். நேரம் கிடைப்பின் நீங்களும் படித்துப்பாருங்களேன் உங்களுக்கும் பிடித்து விடும்.

'பயணம்' என்னும் தளத்தில் கோவை ஆவி அவர்கள் எழுதிவரும் 'ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!!' என்ற தொடர் தான் அது.

*********************************************************************************************************
நித்ரா எழுத ஊக்கம் தந்த தொடரை பற்றிச் சொன்னேன். ஒரு தொடர் கதையை நிறைவு செய்வதன் அவசியத்தை எனக்கு உணர்த்தியது இவரது தொடர்தான். எல்லாப் பகுதிகளையும் வரிசையாக வெளியிட்டு, வாசகர்களை தக்கவைத்துக்கொண்டார் இவர்.

'ஸ்கூல் பையன்' என்னும் தளத்தில் வெளிவந்த 'ரத்தம் பார்க்கின்' என்ற த்ரில்லர் தொடர் தான் அது.    

*********************************************************************************************************
என் தங்கையின் நண்பன். இவன் 'கல்கியின்- பொன்னியின் செல்வன்' போல் ராஜ ராஜ சோழன் காலத்தில் நடந்தது போன்ற ஒரு வரலாற்று பதினம் எழுதிவருகிறான். இதுவரை அவனது வலையில் அந்த பதினம் மட்டுமே எழுதி, பத்தொன்பது அத்தியாயங்கள் எழுதியுள்ளான்.

'Arayan' என்னும் தளத்தில் அவன் எழுதும் 'கழல்' என்னும் தொடர் தான் அது.

*********************************************************************************************************
மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   

27 comments:

  1. வணக்கம்.

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    தொடருகிறேன் பதிவுகளை...

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. ஷடாப்டி - ஷதாப்தி.....
    ஆளு - ஆலு....
    தாய் ரயில் - டாய் ரயில்...

    ஹிந்தி தெரியாதது தெரிகிறது. முதன் முதலில் நான் வந்தபோதும் ஆறு மாதங்கள் வரை தவித்திருக்கிறேன்.....

    இன்றைய அறிமுகங்களில் சிலர் புதியவர்கள். படிக்கிறேன் ரூபக்.

    தொடர்ந்து பயணிப்போம்...

    ReplyDelete
    Replies
    1. பிழைகளை திருத்தியமைக்கு மிக்க நன்றி வெங்கட் ;)

      Delete
  3. பயணம் சுவாரஸ்யம் + இப்போது ஆவலுடன்...

    முடிவில் உள்ள நண்பர் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி

      Delete
  4. "ரத்தம் பார்க்கின்" கிளைமாக்ஸ் தவிர்த்து மற்றவை முன்னரே எழுதிவைத்திருந்தேன். ஆசிரியர் பொறுப்பு வந்தபோது வலைச்சர வாசகர்களைக் கவரும் பொருட்டு அப்போது வெளியிட்டேன். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. "கழல்" புதிய தளம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உக்தி வெற்றி என்று நம்புகிறேன் :)

      Delete
  5. பயணம் இன்னும் வெகு சுவாரஸ்யமாகி விட்டது. ////பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆளு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ//// இத்தனை ஐட்டமும் ஒரே நேரத்துலயா? கொடுத்து வச்ச(பா)விங்கப்பா..! இன்றைய அறிமுகங்கள் எல்லாமே ‘அம்ம’ பயகதேங். சுழல் மட்டும் புதுசு. பாத்துரலாம். டாங்ஸு.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா . அது ராமன் விளையாடிய நாட்களில் ஒன்று

      Delete
  6. மெட்ரோ ரயில் டில்லியின் வரப் பிரசாதம்.
    அறிமுகங்கள் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் மெட்ரோ வரவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்

      Delete
  7. அனுபவங்கள் இனிமை.. அறிமுகத்துக்கு நன்றி.. :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆவி பாஸ், 'ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!!' அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள்

      Delete
  8. #தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது.#

    அவமானமாக ஏன் கருதனும்? வேறு மொழிகள் கற்று கொள்ளுங்கள்.தப்பில்லை.அங்க உள்ள்ளவங்க இங்க வந்து வாழ வில்லை? ஏன் நான் அங்க போய் இருக்கல? ஆரம்பத்தில் கஷ்டம்தான் ஆனால் வெகு எளிதாக அந்தந்த இடங்களின் மொழியை கற்றுகொள்வோம்.அதனால அவமானமாக கருத வேண்டாம் ரூபக்.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரி தான் . நான் வாழும் சூழலில் எனக்கு ஹிந்தி கற்க வேண்டிய அவசியம் தோன்றவில்லை, இப்படி சில பயணங்களின் போது தான் சற்று கடினமாக அமைகிறது

      Delete
  9. அன்பு தோழா!
    நம் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியின் அவசியத்தை நீங்கள் உணர்ந்தது போலவே, அம்மொழி தெரியாததால் நான் அனுபவித்த அவமானங்களை, எனது வலைதளத்தில் "செம்மொழியான தமிழ் மொழியே" எனும் தலைப்பின் கீழ் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
    இன்றைய பதிவும் மிக அருமை. அறிமுக பக்கங்கள் அனைத்தையும் வாசிக்க ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வந்து படிக்கின்றேன்

      Delete
  10. இந்த யுக்தி (உத்தி) எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு!

    பயணம் என்னாச்சுன்னு பார்க்கவாவது தினம் இங்கே வரத்தான் வேணும்!!!!!!

    இனிய பாராட்டுகள்.

    சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க........

    //சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வாசிப்பதைக் கண்டேன். //

    அந்த ஏழ்மையிலுமா வாசிக்கிறாங்க!!!!! 'வசிப்பதை ' என்று இருக்கணும்.
    மத்ததை நம்ம வெங்கட் சொல்லிட்டார்:-)

    ReplyDelete
    Replies
    1. இந்த யுக்தி உங்களை கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி :)

      Delete
  11. அந்த சின்ன சின்ன பிழைகளை மட்டும் திருத்திக் கொள் ரூபக்... சுவாரசியமான பயணக் கட்டுரைகள் உடனான அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. திருத்திவிட்டேன்... அடுத்த கட்ட பயணத்தையும் தொடருங்கள் :)

      Delete
  12. சிறந்த அறிமுகங்கள்
    வரவேற்கிறேன்.

    ReplyDelete
  13. பனியைத்தேடி இனிய பயணம். ....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பயண அனுபவம் சிறப்பு! இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  15. //இவரும் இவர் நண்பரும் இணைந்து ஒரு வலைத்தளம் நடத்தி வருகின்றனர். இவர் நண்பரை சந்தித்துள்ளேன்.//

    யாரது ரூபக்? :)))

    என் பெயரையும் 'எங்கள்' பெயரையும் பதிவில் இணைத்ததற்கு நன்றிகள் ரூபக்.

    ReplyDelete
    Replies
    1. கே.ஜி. சாரைத்தான் உங்கள் நண்பர் என்று குறிப்பிட்டேன்.

      Delete