இன்றைய நான் ரசிக்கும் பதிவுகள்.. உங்கள்
பார்வைக்கு..! _____________________________________________________________________________________________________________________________
நிரம்பி வழியும் வெற்றிடம்
‘திறந்து கிடக்கும்
இவ்வளவு பெரிய நிலத்தில் சாவியைத்தேடுகிறது வார்த்தை‘ என்று கொஞ்சமும்
யூகிக்கவியலாத சொற்கள் கொண்டு தொடர்ந்து எழுதும் இந்த ‘அண்ணல் தக்ஷினாமூர்த்தி’
எனது பட்டியலில் நீங்காத இடம் பெற்றவர். தயங்கித்தயங்கி இட்ட இடுகைகளை
கோர்த்துவைத்து நம்மை அதைப்பற்றின கருத்துகளை ஆவலுடன் கேட்க காத்திருப்பார். இது
போல நிறைய கவிதைகள் , இன்ன நாளென்றில்லாது, அவ்வப்போது எதிர்பாராது பூக்கும்
ட்யூலிப் மலர்களைப்போல கவிதைப்பூ பூக்கவைப்பார். அனைத்தையும் விடாது
வாசித்துவிடுவேன்.
முகநூல் என்ற ராட்சசன்
வந்தவுடன் பலர் இடுகைகளை வலைப்பூவிலும் இடுவது என்று தொடர்ந்து செய்வதில்லை.
இருப்பினும் அவரது பழைய கவிதைகள் இன்னமும் அவர் தன் முகப்பில் கொட்டிக் கிடக்கின்றன.
உதாரணத்திற்கொன்று
இப்பொழுதும்
உன்னை மட்டுமே
நினைத்து
கொள்கிறேன்
கூடவே
வந்துவிடுகின்றன
கொலுசொலிகள்
‘எதனால் சிதைகிறேன்’ என்ற இப்போது சமீபத்தில் அவர் எழுதிய கவிதை
என்னைக்கவர்ந்த ஒன்று. வலைச்சர வாசகர்கள் முகநூலிணைப்பும் வைத்திருப்பர் என்ற
நம்பிக்கையுடன் இங்கு அதைப்பகிர்கிறேன்.
இதுபோன்ற இன்னும் நல்ல பிற கவிதைகளை வாசிக்க
இங்கே சொடுக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலையுதிர்காலம்....
அடுத்ததாக இன்னொரு
எப்போதும் நான் தவறவிடாத இந்த கீழ்த்திசைக்காரக் கவிஞர் ‘ஆறுமுகம் முருகேசன்’. இவரது ‘அரேபிய
ராசாக்கள்’ என்ற கவிதைத்தொடர் முகநூலில் சக்கைபோடு போட்டது. சொற்களைத்
தேர்ந்தெடுத்து அவை எங்கும் திரும்ப வராது, இருப்பினும் சொல்லவந்ததை சொல்லியே
தீரவேணும் என்ற விடாமுடிவோடு எழுதும் அற்புத தமிழ்க்கவிஞன் இவன். ‘ஆராதனா என்னும்
பேய்’ என்ற ஒரு கவிதைத்தொடரை விடாது எழுதிவந்தார். அது ஒரு ஸ்தூலக்குறியீடாகவே
ஆகிவிட்டது இவருக்கு. இதை க்ளீஷே என்று வைத்துக்கொண்டாலும் அதற்கென அவர்
கவலைப்படுவதாயில்லை. லாசரா’வுக்கு ஒரு ஈரப்புடவையுடன் வளையவருபவள்,வண்ணதாசனுக்கு
எப்போதும் செல்லும் சாலையில் கிடைத்துவிடும் ஒரு பழம் போல இவருக்கும் இந்த ஆராதனா.
அந்த ஆராதனாவை இங்கு
எப்போதும் நீங்களும் சந்திக்கலாம்.
அரேபிய ராசாக்களின்
தொகுப்பு இங்கே
‘அன்பின்
அதிகபட்ச வெளிப்பாடு ஒரு துளி கண்ணீராகவும் இருக்கலாம்’ என்று மிகச்சாதாரணமான
சொற்கள் கொண்டு இதற்குமேலும் எதுவும் சொல்லத்தேவையில்லை என்ற நிலையில்
அந்தக்கவிதையை முடித்துவிடும் திறமைசாலி.
உதாரணத்திற்கொன்று
உங்கள்
யூகங்களையும் விமர்சனங்களையும்
ஈவுஇரக்கமின்றிக் கொலை செய்துவிட்டு
வாழக்கற்றுக்கொள்ளுங்கள்
கேள்விகள் ஏதுமற்றுச் சந்தோசமாக
ஈவுஇரக்கமின்றிக் கொலை செய்துவிட்டு
வாழக்கற்றுக்கொள்ளுங்கள்
கேள்விகள் ஏதுமற்றுச் சந்தோசமாக
இவரின் கவிதைகள்
வெளிவராத பத்திரிக்கைகளே இல்லை என்று திண்ணமாகச்சொல்லலாம். எப்போதும் கைவசம்
இவரின் கவிதைகளை வைத்துக்கொள்வேன், அதனை மீளுருவாக்கம் செய்து என் பெயர் அதில்
இட்டுக்கொள்ள...!
_____________________________________________________________________________________________________________________
வேல் கண்ணன் - இலை இலையாய்
மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துகொள்ள
..
அடுத்ததாக நான்
பகிரவிரும்பும் தோழர் வேல் கண்ணனின் வலைப்பூவை. அவர் பெயர் கொண்டே இயங்குகிறது.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ‘இசைக்காத இசைக்குறிப்பு’ என்ற கவிதைத்தொகுப்பு
எல்லோரின் கவனத்தையும் ஈர்த்ததோடு அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கூடத்திலேயே
விற்றுத்தீர்ந்தது என்பது உண்மை.
முகநூலில் எனது
கவிதைகளுக்கும், இன்னபிற ஆக்கங்களுக்கும் விருப்பக்குறியுடன் பின்னூட்டங்களும்
இட்டு தொடர்ந்து ஊக்குவிப்பவர். யாவரும்.காம் என்ற இணைய இதழை இன்னபிற கவிஞர்களுடன்
கூட்டாகச்சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
உயிரோசை’ என்ற
இதழை தொடர்ந்து பல காலமாக மனுஷ்யபுத்ரன் நடத்தி வந்தார். பணி நிமித்தம் அந்த இதழ்
தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை. அதில் என்னுடைய பல கவிதைகள் வெளிவந்தன. கவிஞர்
வேல் கண்ணனும் அதில் தமது பங்களிப்பை செய்திருந்தார்.
சருகுகள்
நிரம்பிய இந்த சாலையை கடப்பதற்குள்
உன்னிடம் சொல்லிவிட வேண்டும்
சிலுவைகளை பற்றி.
உனது மிதமான பார்வை
சிலுவைகள் உடைந்து நொறுங்குவதற்கும்
ஒரு தொடுகை
சிறகுகள் முளைப்பதற்கும்
போதுமானதாகயிருக்கும்
நிரம்பிய இந்த சாலையை கடப்பதற்குள்
உன்னிடம் சொல்லிவிட வேண்டும்
சிலுவைகளை பற்றி.
உனது மிதமான பார்வை
சிலுவைகள் உடைந்து நொறுங்குவதற்கும்
ஒரு தொடுகை
சிறகுகள் முளைப்பதற்கும்
போதுமானதாகயிருக்கும்
அந்த தலைப்பிலான
கவிதைகளை முழுதுமாக வாசிக்க இந்த சுட்டி.
கவிதைகள், நூல்
விமர்சனம், கட்டுரைகள் என அனைத்து துறைகளையும் தொட்டுச்சென்றவர். எனக்கு மிகவும்
பிடித்தமான தோழர் வேல் கண்ணன். இங்கு அவரின் இடுகைகளைத்தொடரலாம்.
___________________________________________________________________________________________________________
‘Corporate Mystic’s Musings’
அடுத்து நான்
விரும்பி வாசிக்கும் எனது நண்பர் கணேஷ் வெங்கட்ராமன். இவருக்கு அடிப்படையில்
பௌத்தம், அது சம்பந்தமான போதனைகள் பற்றிய பதிவுகள்
பற்றி எழுதுவதென்பது மிகப்பிடித்தம். தொடர் ஆராய்ச்சிகளும் செய்து வருகிறார்.
அவரின் படைப்புகள் கிட்டத்தட்ட அனைத்து இணைய இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.
பௌத்தம் மட்டுமல்லாது சிறுகதைகள், கட்டுரைகள்,சினிமா விமர்சனங்கள் என இவரின்
வலைப்பூ நிரம்பிக்கிடக்கிறது.
அவரது ‘மனம்
மட்டும்’ என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி
‘சுற்றுச்சூழலை
உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில்
மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில்
அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.’
கட்டுரையை
முழுமையாக வாசிக்க
‘குளம் கோவில்
புத்தகம்’ என்ற ஒரு சமயம்
சார்ந்த கட்டுரை ‘தி இந்து தமிழ்; நாளிதமில் வெளியாகி இருக்கிறது, அதன் சுட்டி
இங்கே
அதிகம்
ஃபிலாசஃபிக்கலாக எழுதுபவர். கவனத்துடன் இவரது பதிவுகளை அணுகினோமானால் நிறைய விஷயங்களை
அநாயசமாக அள்ளித்தருபவர். இவரின் வலைத்தளத்தில் புகவேணும் என்கிற போது அதற்கென
நம்மைத் தயார்படுத்திக்கொள்ளல் அவசியம். எனினும் இவரின் சிறுகதைகள் குழப்பமற்ற, மிகச்சுலப
மொழியிலேயே அமைந்திருப்பது வாசகர்களுக்கு ஒரு ரிலீஃபாக இருக்கும்.
அவரின்
சிறுகதைகளுக்கான் சுட்டி இங்கே
எப்போதும் இவரின்
வலைப்பூவைச்சுற்றியே என் சுட்டிகள் நகர்ந்துகொண்டிருக்கும். நீங்களும்
வாசிக்கலாம்.
___________________________________________________________________________________________________________________
ஆழ்மனக்குறிப்புகள்
அடுத்ததாக நான்
பகிரவிரும்பும் நண்பர் க.உதயகுமாரின் வலைப்பூவை. யாரும் தவறவிடக்கூடாத வலைப்பூ
இவருடையது. பூக்கடைக்கு விளம்பரம் என்ற அளவிலே நான் நண்பர் உதயாவின் வலைப்பூவை
இங்கு பகிர்கிறேன். இனப்போராளி, கவிஞர், சிந்தனையாளர், கோட்பாட்டாளர், தமிழுக்காக
எதையும் செய்யத்துணிபவர் என் இன்னும் எத்தனையோ அடுக்குமொழி வசனங்களை விகல்பமின்றி
சொல்ல வாய்த்திருப்பவர்.
அத்தனை கவிதைகளும் தமிழையும்,
தமிழ் மண்ணையும் சார்ந்தவைகளாகவும் அவற்றின் கொஞ்சம் சுவை தூக்கலாகவுமே
நிறைந்திருக்கும். இயற்கை பற்றியும், அவற்றை மனிதன் சார்ந்திருப்பது பற்றியும்
இவரின் கவிதைகள் பலவாறு விரியும். இவரின் முகநூல் கட்டுரைகள் மிகப்பிரபலம். அதான்
ஏற்கனவே சொன்னேன், பூக்களின் வாசனையை நான் இங்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று.
இந்தக்கவிதைத்துளியுடன்
தொடங்குகிறேன். இன்றைய தமிழனின் வாழ்க்கையை சில வரிகளில் தீர்மானித்துவிடுகிறது
இந்தக்கவிதை.
‘’யாதொரு பிடிப்புமற்ற மல்லிக்கொடியொன்று
காற்றில் அலைந்தபடி நீட்டித்துக்கொள்கிறது
தன் உயிர் வாழ்தலை
என்ன செய்ய
வாழ்ந்துதொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது
வக்கற்ற நிலத்தில்’’
காற்றில் அலைந்தபடி நீட்டித்துக்கொள்கிறது
தன் உயிர் வாழ்தலை
என்ன செய்ய
வாழ்ந்துதொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது
வக்கற்ற நிலத்தில்’’
உள்ளுக்குள்
இருக்கும் ஆற்றாமையும் சினமும் ஒருங்கே அமையப்பெற்ற பல பாக்களை அவர்
இயற்றியிருக்கிறார். ‘ஏவாளைத்தொலைத்த ஆதாமின் இரவு,கொடும் விதி, வக்கற்று வாழ்தல்’
இந்தக் கவிதைகள் வறண்ட நில மனதின் வெளிப்பாடுகள்.
‘துக்க வீட்டில்
களியாட்டாம் கொண்டாடுதலைப் போல
பொருத்தமற்ற
மற்றும் இரக்கமற்ற
இக்காமத்தை என்ன செய்யலாம்’
களியாட்டாம் கொண்டாடுதலைப் போல
பொருத்தமற்ற
மற்றும் இரக்கமற்ற
இக்காமத்தை என்ன செய்யலாம்’
என்ற கேள்வியுடன்
பயணிக்கும் இந்த மனதை அறுக்கும் கவிதை ‘ஏவாளைத்தொலைத்த ஆதாமின் இரவு’
தொடர்ந்தும்
வாசிக்க இங்கே சொடுக்கலாம்.
தொடர்ந்தும் முகநூலில்
ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்ளும் அவரின் கட்டுரைகளை ஒரு வரி போலும் விடாது
வாசிப்பவன் என்ற பெருமையுடன் அவரின் முகநூல் பக்கத்தையும் பகிர விரும்புகிறேன்.
இது அவரின் வலைப்பூ. அவ்வப்போது புதுப்பிக்கிறார். வலைப்பூ ரசிகர்கள் இங்கே
தொடரலாம்.
_______________________________________________________________________________________________________________
இன்னும் பல நண்பர்களின்,பிரபலங்களின் வலைப்பூ குறித்தான செய்திகளுடனும் சுட்டிகளுடனும் நாளையும் சந்திக்கிறேன்.
நன்றி நண்பன் ராம் சின்னப்பயல் மற்றும் வலைச்சரம்
ReplyDelete"நிரம்பி வழியும் வெற்றிடம்" தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுதியவர்களைக் கண்டேன். நன்றி.
ReplyDelete