Sunday, December 21, 2014

கில்லர்ஜி தமது ஆசிரியர் பொறுப்பை "பெருநாழி" குருனாதனிடம் ஒப்படைக்கிறார்..

வணக்கம் வலைச்சர நண்பர்களே....

இன்று முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த நண்பர் கில்லர்ஜி அவர்கள் தமது வலைச்சரப் பணியை மிகுந்த சிரத்தையுடனும், தீவிர ஆர்வமுடனும் செய்து முடித்துள்ளார். அவரது ஒவ்வொரு இடுகைகளும் அவரது கடும் உழைப்பினை காட்டுகிறது. வாசகர்களுக்கு நிறைய பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

கில்லர்ஜி மொத்தம் ஒன்பது இடுகைகள் எழுதியுள்ளார். அவரது இடுகைகள் சுமார் 2900 பக்கப்பார்வைகள் பெற்று, சுமார் 740 மறுமொழிகள் வரை பெற்றுள்ளார். அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
கில்லர்ஜியின் இடுகைகள் விவரம் கீழே...

நாளை (22-12-2014) முதல் துவங்கும் வாரத்திற்கு "பெருநாழி" எனும் வலைப்பூவை எழுதி வரும் திரு. குருநாதன் அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க அழைக்கின்றேன். ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி எனும் கிராமத்தில் பிறந்த இவர் பணியின் காரணமாக புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். 
அரசு மேனிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தன்னைப் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

என்னைப் பற்றி….
            நான் சி.குருநாதசுந்தரம். பட்டதாரித் தமிழாசிரியராக, அரசு மேனிலைப்பள்ளி, ஏ.மாத்தூரில் பணிபுரிந்து வருகிறேன். முதுகலைத் தமிழும், இளங்கல்வியியலும் என்னை ஆசிரியராக்கின.
            நான் பிறந்து தவழ்ந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி எனும் குக்கிராமமாகும். பணிநிமித்தம் புதுக்கோட்டை என் வாழ்விடமாயிற்று. என் ஆசிரியப் பணிக்கு மெருகேற்றிய இடமென்று புதுக்கோட்டையைக் கூறலாம். என்னறிவையும் அனுபவத்தையும் வகுப்பறைக்குள் மட்டுமே தேக்கி வைத்திருந்தேன். என் கற்பித்தல் ஆய்வுகளை என் மாணாக்கரிடத்தில் மட்டுமே செயல்படுத்திய குறுகலான சிறிய என் தளத்தில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் மிக்க நான்கு மனிதர்கள் என்னை வெளியில் வருமாறு பணித்தார்கள். மதிப்பிற்குரிய அம்மனிதர்க்ள் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், கவிஞம் சிறந்த கல்வியாளருமான முத்துநிலவன், சிறந்த நல்லாசிரியர்
          ஐயா திருப்பதி, ஒதுங்கி இருந்த என்னை கைதூக்கி விட்ட நல்லாசிரியர் புலவர் மகாசுந்தர் ஆகியோரே என்னைக் கைபிடித்து வெளித்தளத்திற்கு அழைத்து வந்தவர்கள்.
கல்விப்பணி :
            ஆசிரியப் பணியில் இதுவரை இரண்டு காகிதக்கிழிகளைப் பெற்றுள்ளேன். ஒன்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற மாநிலக் கருத்தரங்கில் நான் வழங்கிய கற்பித்தல் ஆய்வுக் கட்டுரை சிறந்த கட்டுரையாகக் கல்வியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவதாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கிடையேயான கற்பித்தல் போட்டியில் சிகரம் தொட்ட ஆசிரியர் என்ற காகிதக்கிழி வழங்கப்பட்டது. ஐந்து செயலாய்வுகளும் முப்பத்திரண்டு கல்விக்கட்டுரைகளும் இதுவரை வெளியாகியுள்ளன.
     ஒன்பதாம் வகுப்பிற்குப் புதிய மதிப்பீட்டு முறையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சார்ந்து மாவட்டக் கல்வித்துறையால் ஆசிரியர்கள் பிரிவில் முதன்மைக் கருத்தாளராக ( தமிழ் )  நியமிக்கப்ப்ட்டேன்.இதன் மூலம் புதிய பல உத்திகள் , செயல்பாட்டுமுறைகள் ஆகியவை வடிவமைக்கப்பட்டன.
       இது சார்ந்து நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு புதிய வடிவமைப்புமுறைகள் உருவாகக் கடுகளவுக் காரண்மாக இருந்துள்ளேன்.
          ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க மாவட்டக் கல்வித்துறையால் கருத்தாளராக நியமிக்கப்ப்ட்டு பணியாற்றிவருகிறேன். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பாக நடைபெறும் பயிற்சிகளிலும் கருத்தாளராக பணிபுரிந்து வருகிறேன்.
       பத்தாம் வகுப்பில் இருமுறை நூறு விழுக்காடு தேர்ச்சியும் நான்கு முறை தொண்ணூற்று எட்டு விழுக்காடுத் தேர்ச்சியும் பெற்றுத்தரக் காரணமாய் இருந்துள்ளேன். புதுக்கோட்டை மாவட்டக் கல்வித்துறையின் சார்பாக பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கெனத் தயாரிக்கப்படும் சிறப்புக் கட்டகக்; குழுவில்; ஓர் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென பட்டதாரி ஆசிரியர் கழகத்தால் நடைபெறும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்வில் தமிழ்ப்பாடக் கருத்தாளராக இருந்து மாணவர்களுக்குப் பயனுள்ள பல கருத்துகளை வழங்கி வருகிறேன். மேலும் தலைமையாசிரியர் கழகத்தின் சார்பாக நடைபெறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வெற்றி நமதே நிகழ்விலும் தமிழ்ப்பாடக் கருத்தாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
இலக்கியப்பணி :
           அரசு மேனிலைப்பள்ளி, ஏ.மாத்தூரில் செயல்பட்டுவரும் பாரதி கலை இலக்கிய மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து எட்டேணி, மருதமாத்தூர் போன்ற மாணவர் கையெழுத்து இதழ் நடத்தும் மாணவர்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறேன். வருடந்தோறும் கல்வி வளார்ச்சி நாளன்று பள்ளியில் கவியரங்கம் நடத்தி வருகிறேன்.
           வீதி இலக்கியக் களத்தில் உறுப்பினராக இருந்து பல் இலக்கிய விவாதங்களில் மாதந்தோறும் பங்குபெற்று வருகிறேன். புதுக்கோட்டை உலகத் திருக்குறள் பேரவை, இளங்கோவடிகள் இலக்கிய மன்றங்களில் உறுப்பினராக இருந்து அவ்வமைப்புகள் நடத்தும் இலக்கிய விழாக்களுக்கு உற்றதுணையாகச் செயல்பட்டுவருகிறேன். 
           இதுவரை பத்து சிறுகதைகள் எழுதியதுடன் ஆறு சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றுள் மொய், மழைச்சோறு, உயிர்த்த சிறகுகள், கிழிந்த மனசு, பேத்தை ஆகியவை பேசப்பட்ட கதைகள்.பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்று கவிதைகள் வாசித்த அனுபவமும் உண்டு.
           gurunathans blogspot.com என்ற வலைப்பூவில் என் இலக்கியப்
;பதிவுகளைப் பதிவுசெய்து வருகிறேன். எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட இலக்கியப் பதிவுகளின் எண்ணிக்கை ஆகும். சிறுகதைகளைப் புத்தகமாக்கும் எண்ணமும் உண்டு.
சமூகப்பணி :
         தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராகப்; பணியாற்றி வருகிறேன். ஆசிரியர்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது உயரதிகாரிகளிடமும் பிற தளங்களிலும் அதனை மீட்டெடுக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இக்கழகத்தின் வாயிலாக முதன்மைக்கல்வி அலுவலர் மூத்த தமிழாசிரியர்கள் ஆகியோர்கள் வழிகாட்டுதலுடன் இரண்டு கணினித் தமிழ்ப் பயிலரங்குகள் நடத்த உற்றதுணையாக இருந்து வந்துள்ளேன். மாணவர்களுக்கு கழகத்தின் சார்பாக பத்தாம் வகுப்பு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டு வருகின்றன். அக்குழுவில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு இந்நிகழ்வை வெற்றிநிகழ்வாக நடத்தத் திட்டமிடுவதில் பெரும்பங்காற்றி வருகிறேன்.
பள்ளிப்பணி :
       பள்ளியில் பாரதி கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளராகவும், நாட்டு நலப்பணித்திட்டத்தில் வலுவூட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறேன். பள்ளியில் நடைபெறும் விழாக்களின் விழாக்குழு திட்டச் செயலராகவும்
மாணவர் தனித்திறன் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறேன். ஆண்டு தோறும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு என்னால் தயாரிக்கப்பட்ட தமிழ்ப்பாடக் கட்டகத்தை இலவசமாக வழங்கி வருகிறேன். இக்கட்டகம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் சிறப்புக் கட்டகத்தின் முன்னோடி எனலாம்.
     பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த என் கட்டகங்கள் கல்விச்சோலை, பாடசாலை, தமிழக ஆசிரியர் போன்ற பல இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.அவை தமிழக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததென இணையதள நிருவாகிகள் கருத்துத் தெரிவித்தது எனக்கு மகிழ்வைத் தந்தது. தீக்கதிர் நாளிதழில் எனது பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் வெளியடபட்டது. அது மிக்க பயனைத் தந்தது.
      என்னையும் ஒரு பொருட்டாக மதித்து வலைப்பதிவு ஆசிரியராக தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றியைத்; தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு நான் முழுத் தகுதியானவன் தானா என்று என்னையே திரும்;பிப் பார்த்த நினைவசைவுகளையே நான் தங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

       என்னைத்; தேர்வு செய்த தேர்வுக்குழுவிற்கும் தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குருநாதன் அவர்களை வலைச்சரப் பொறுப்பேற்க வாழ்த்தி வருக.. வருக.. என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது

நல்வாழ்த்துக்கள் கில்லர்ஜி...
நல்வாழ்த்துக்கள் குருநாதன்....

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

21 comments:

  1. நண்பர் திரு. குருநாதன் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. உங்களின் சிவப்புக் கம்பளம் எனக்கு நற்பாதையாய் அமையும்.

      Delete
  2. வாழ்த்துகள் வெற்றிகரமாக முடித்த கில்லர்ஜி சகோவிற்கும் வரும் வாரத்தை சிறப்பிக்க இருக்கும் குருநாதன் ஆசிரியருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. முடிக்கும்போது மட்டும் முதல் ஆளாக வந்து சொல்றதைப் பார்த்தால் ? எப்ப நான் வலைச்சரத்தை விட்டு போவேன்னு நினைக்கிற மாதிரி இருக்கே......

      Delete
  3. குருநாதன் அவர்களை புதுக் கோட்டையில் சந்தித்திருக்கிறேன். மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி. படபடப்புடன் வலைச்சர வாசலில் நுழைகிறேன். வாருங்கள் . வலைச்சர வாசலை அலங்கரிக்க எனக்கு உதவுங்கள். நன்றி .

    ReplyDelete
  5. கலக்கிச் சென்ற அண்ணன் கில்லர்ஜிக்கும் கலக்கலான வாரமாக அமைக்க வருகை தரும் ஆசிரியர் பெருநாழி குருநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஆசிரியர் குருநாதன் அவர்களுக்கு நல்வரவுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வருக!வருக! வலைச்சரம் வளச்சரமாக!

    ReplyDelete
  8. ஆசிரியப்பணியை மிகவும் திறம்பட செய்து முடித்த நண்பர் கில்லர்ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இந்த வார ஆசிரியப்பணியை துவங்க இருக்கும் தமிழாசிரியர் குருநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம்

    இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. கில்லர்ஜி அண்ணா கலக்கலாய் முடித்த இவ்வாரத்தை நம்மூர் செயல் வீரர் குருநாதன் சார் தொடர்கிறாரா!!! சூப்பர்!! நீங்க ட்ரைனிங் எடுத்தாலே அவ்ளோ டீடைல்ஸ் கலக்ட் பண்ணி, விரிவாய் தெளிவா ,கலக்குவீங்க...so இந்த வாரமும் வலைச்சரம் கலைச்சரம் ஆகபோகுதுன்னு சொல்லுங்க:) வாழ்த்துகள் கில்லர்ஜி அண்ணா, வெல்கம் குருநாதன் சார்:)

    ReplyDelete
  11. குருநாதன் அவர்களே.... அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ஆசிரியர் பெருநாழி – குருநாதன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். ஆசிரியர் முத்துநிலவன் அய்யா முன்னின்று நடத்திய புதுக்கோட்டை கணினி பயிற்சிப் பட்டறையில் இவரை சந்தித்து உரையாடி இருக்கிறேன். இவர் தனது போட்டோவுடன் தன் அறிமுகம் (SELF INTRODUCTION) தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    த.ம.


    ReplyDelete
  13. கடந்த வாரம் பதிவுகளை நிறைவு செய்த ஆசிரியர் கில்லர்ஜிக்கு வாழ்த்துக்கள். இவ்வார ஆசிரியருக்கு வரவேற்பு. குருநாதன் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திய முறை சிறப்பாக உள்ளது. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியப் பணியினை சிறப்பாக செய்த தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அடுத்து ஆசிரியப் பணியேற்க இருக்கும் தமிழாசான் பெருநாழி திரு குருநாதன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete
  15. வலைச்சரப் பணியினை சிறப்பாக நிறைவு செய்த அன்பின் ஜி - அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

    அடுத்து பணியேற்கும் பெருநாழி திரு. குருநாதன் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
  16. கில்லர்ஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக ஏற்று தொகுத்த நண்பர் ஜீ அவர்களுக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !!

    த.ம.5

    ReplyDelete