Monday, January 19, 2015

அன்பு வணக்கங்கள் இசைக்கிறேன்!!

பதிவுலக அன்புள்ள‌ங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.

இன்றிலிருந்து வலைச்சர ஆசிரியராய் பணியைத்தொடங்குகிறேன்.

இந்தப் பணி சாதாரணமானதல்ல. நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டி கூடுதல் உழைப்பிற்குத் தயாராக இருக்க வேண்டும். சுவாரசியமாக  எழுதவும் வாசகர்களை ஈர்க்கவும் ரசிக்க வைக்கவும் அருமையான விஷயங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். இதில் பெண்களுக்கு வீட்டுப்பொறுப்புகள் கூடுதலாக இருப்பதால் கூடுதல் சுமைகளைத்தாண்டி கணினி பக்கம் வர வேன்டும்.

இவற்றையெல்லாம் தாண்டி வலைச்சரத்திற்காக ஒரு வாரம் நம்மை அர்ப்பணித்துக்கொள்வது சுகமாக இருக்கிறது. வரமாக இருக்கிறது என்றும் சொல்ல‌ வேண்டும். காரணங்கள் நிறையவே இருக்கின்றன.
இதற்காக பல பதிவர்களின் வலைத்தளம் செல்லும்போது அவர்கள் எழுதும் அறிவுப்பூர்வமான பதிவுகள் நம்மை மலைக்க வைக்கின்றன. புதியனவற்றைக் கற்றுக்கொள்ள‌ வைக்கின்றன‌. நம் சிந்தனைகள் விசாலமாகின்றன. இத்தனையும் வலைச்சரத்தினால்தான் கிடைக்கின்றன.

மூன்றாம் முறையாக என்னை வலைச்சர ஆசிரியராக பணியேற்க அழைத்த அன்புச் சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு என் எண்ணங்களை இங்கே எழுத ஆரம்பிக்கிறேன்.

எனக்குள்ளே இருக்கும் ஓவியரையும் கலைஞரையும் எழுத்தாளரையும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் வெளிக்கொணரவே முத்துச்சிதறல் என்ற என் வலைத்தளத்தினை ஆரம்பித்தேன். போகப் போக நடைமுறை அனுபவங்களும் மருத்துவப்பதிவுகளும் கலைகளையும் விட அதிகமாக வெளிப்படுத்துவது தொடர்கதையானது.

எனக்குப்பிடித்த என் பதிவுகள் சில:

மரணத்தின் விளிம்பிலிருந்த ஒரு மனிதன் எப்படி தன் மன உறுதியால் நம்பிக்கையால் வெளியே வர முடிந்தது என்ற உண்மைக்கதையை இங்கே எழுதியுள்ளேன். இதைப்படித்தால் நம் தினசரி வாழ்க்கையில் செய்யும் சில சாதாரணத் தவறுகள் எப்படி உயிரையே போக்கக்கூடிய ஆபத்தாக மாறுகின்றன என்பதும் நம் உயிர் நம் கையில் என்பதும் புரியும்.

இன்று முதுமை அடைந்தவர்கள் படும் பாடு சொல்ல முடியாத அளவிற்கு அவலமாயிருக்கிறது. எந்த நேரமும் உதிர்ந்து போகக்கூடிய நிலையிலிருக்கும் அவர்களுக்கு அன்பையும் பாதுகாப்பையும் அளிக்க வேண்டிய தார்மீக கடமை உங்களுக்கிறது என்று இன்றைய இளம் பெண்களிடம் இறைஞ்சியிருக்கிறேன்.

எந்த வித சுயநலக்கலப்புமில்லாமல் ஒருவரிடம் வைக்கும் நேசம் தான் அன்பெனப்படுவது. ஆனால் எந்த உறவிடமும் நாம் அன்பு செலுத்தும்போது, அவர்களிடமிருந்தும் அதே அன்பு நமக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஆனால் ஒரு பிஞ்சு மழலையிடம் மட்டும் அன்பு செலுத்துவதனாலேயே மட்டில்லா மகிழ்வும் மன நிறைவும் கிடைப்பதை கவிதையாய் இங்கே எழுத முயன்றிருக்கிறேன்!

இந்தக் குழந்தையின் கண்ணீர் என்னை மிகவும் பாதித்தது.  அந்த வலியை என் தூரிகைகளில் கொண்டு வர முயற்சித்த ஓவியம் இது!

எத்தனையோ பேர்கள் நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காற்றுக்குமிழிகளாய் மறைந்து போவதை தினமும் பார்க்கிறோம். சிலரின் மறைவுகள் மட்டும் பல வருடங்கள் ஆகியும் இன்னும் ஜீரணித்துக்கொள்ள‌ முடியாததாய் இருக்கின்றன. அப்படிப்பட்ட வலியை இன்னும் தந்து கொன்டிருக்கும் ஒருத்தி காற்றுக்குமிழியாய் மறைந்த நிகழ்வு இது!!

ஜாதகம் என்றால் என்ன என்று சொல்லும் குடும்பம் எங்களுடையது. என் மகனுக்குப் பெண் பார்க்க முனையும் வரை ஜாதகத்தால் எந்தப் பிரச்சினைகளுமில்லை. அதைப்பற்றிய எந்த அறிவுமில்லை எனக்கு! அதன் பிறகு நானும் ஜாதகமும் எப்படியெல்லாம் முரண்பட்டு நின்றோமென்பதை இங்கே எழுதியுள்ளேன்!


 
சென்ற முறை வலைச்சர ஆசிரியராய் இருந்த போது 'முத்துச்சிதறல்' என்ற என் வலைத்தளத்திற்கேற்ப தினமும் ஒரு முத்தாய், விலையுயர்ந்த கற்களைப்பற்றி எழுதினேன். இந்த முறை அதனினும் உயர்ந்ததாய் என்ன எழுதலாம் என்று யோசித்தபோது உடனேயே விடை கிடைத்தது.
இயந்திரமாய்க்கழியும் நாட்களிடையே,  ஒரு வடிகால் போல, மனதிற்கு புத்துணர்ச்சி தர மனிதனுக்கு தினமும் ஏதாவது தேவைப்படுகிறது. சிலருக்கு புத்தகங்கள் தேவைப்படுகின்றன. சிலருக்கு பயணங்கள் உற்சாகத்தைக்கொடுக்கின்றன. எழுதுதல், பாடுதல், கலைக‌ளில் பயிற்சி எடுத்தல் என்று ஒவ்வொருத்தருக்கும் தன்னைப்புதுப்பித்துக்கொள்ளவும் தன்னை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள‌வும் ஓராயிரம் வழிகள் இருக்கின்றன. என் சினேகிதி ஒருவர் ' தினமும் இறைவழி பாடு தான் தன்னை தினமும் புதுப்பித்துக்கொள்ள‌ உதவுகிறது ' என்று சொல்வார்.
தினம் ஒரு பதிவெழுதுவது கூட மனதின் தாகங்களுக்கு ஒரு வடிகாலாய் சிலருக்கு அமைகிறது.  ஆனால் இவைகள் எதிலுமே கட்டுப்படாததாய் தன்னிகரற்று விளங்குகிறது இசை. மனதை உருகச்செய்து உணர்வுகளை பேரலையாய் எழுப்பும்  பேராற்றல் கொண்டது இசை. ஒருவரின் மகிழ்வை அதிகப்படுத்துவதாய் சில சமயமும், மன வலிக்கு அருமருந்தாய் சில சமயமும் அனைத்தையும் மறந்து ஏதோ ஒரு உலகில் சஞ்சரிக்க வைக்கும் வலிமை மிகுந்ததாய் சில சமயமும் இசை விளங்குகிறது. அன்பை வெளிப்படுத்த, மழலையைத் தாலாட்ட என்று உணர்வுகளைப்பிரதிபலிப்பதில் முன்னிலை வகிக்கிறது இசை.
'எத்தனையோ இன்பம் இந்த நாட்டில்  உண்டு
அத்தனைக்கும் இன்பம் பாட்டில் உண்டு'
என்று கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் இசைக்கு மகுடம் சூட்டினார்.
'உலகம் வண்ணங்களால் என்னுடன் பேசுகிறது.என்னுடைய ஆன்மா
இசையில் பதில் அளிக்கிறது !”  என்றார் தாகூர்.
இசை என்பது இசைய என்றும் பொருள். நம் மனதை இசைய வைப்பது என்பதாலேயே இசை என்று பெயர் வந்ததாம். கடலின் காற்று, மழையின் சாரல், இலைகளின் அசைவுகள், குழந்தையின் மழலை, நடப்பன, பறப்பன, ஊர்வன, மிதப்பன என அணைத்து ஜீவராசிகளிலும் ஜீவனாக இருப்பது இசைதான். ஸ்ருதி, லயம் இவற்றின் அடிப்படையில் ராகமும் தாளமும் சேர்ந்து உருவாவது தான் இசை!
இசையில் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமீய இசை என்று பல்வேறு வகைகள் இருந்தாலும் நம் தென்னிந்திய இசை ராகங்களால் ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ என்னும் ஸ்வரங்களால் பின்னிப்பிணைந்தது. ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குணம் உண்டு என்று நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ளார்கள். ஒரு திருமணம் நடக்கையில் மாப்பிள்ளை அழைப்பின் போது கல்யாணி ராகமும் ஊர்வலம் புறப்படுகையில் சங்கராபரணம் ராகமும் ஊர்வலம் செல்கையில் காம்போதி ராகமும் திருமணச்சடங்குகள் நடக்கையில் கரகரப்ரியா ராகமும் முகூர்த்தத்தின்போது நாட்டைக்குறிஞ்சி ராகமும் மாங்கல்யம் அணிவிக்கையில் ஆனந்த பைரவி ராகமும் வாசிக்கப்படுகின்றது.
அமிர்தவர்ஷனி ராகம் வாசித்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு இருந்து வருகிறது. நீலாம்பரி ராகம் குழந்தையை ஆனந்தமாய் உறங்க வைக்குமாம். மன நிலை பிறழ்தவர்க்கு மருத்துவம் செய்யும் ராகம் சங்கராபரணம். சங்கரனின் ஆபரணம்! இந்துஸ்தானி சங்கீகத்தில் ஏராளமான ராகங்களை உருவாக்கிய தான்சேன், விளக்குகளை தீபக் ராகத்தின் மூலம் தானாக எரியச் செய்தார் என்றும் மேகக் ராகத்தின் மூலம் மழையை வரவழைத்தார் எனவும் அறியப்படுகிறது. இராவணன் சிவனை மகிழ்விப்பதற்காகப் பாடிய ராகம் காம்போதி!
ராகங்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. 72 மேளகர்த்தா ராகங்களும் நம் உடலின் 72 முக்கிய நரம்புகள ஆதிக்கம் செய்யும் தன்மை கொண்டவை. ராகத்தின் தன்மை மாறாமல் இசைக்கும் ஒருவனால் குறிப்பிட்ட நரம்பின் செயல்களை ஆதிக்கம் செய்ய முடியும்.
பகல் உணவு உண்ட பின் ஸ்ரீராகம் கேட்டால் சுலபமாக ஜீரணமாகும்.
மனக்கலக்கத்தின் போது சாமா ராகம்  கேட்டால் மன அமைதி கிடைக்கும்.
பூபாளமும் மலய மாருதமும் விடியற்காலையில் கேட்டால் உற்சாகம் தானாகப் பிறக்கும்
அஸாவேரி ராகம் தலைவலியைப் போக்கும்
கரகரப் பிரியா பசியை மறக்கச் செய்யும்
பைரவி காச நோயை தீர்க்கும்
தோடி ஆஸ்துமாவை குணப்படுத்தும்
ஹிந்தோளம் வாதம், கப நோய்களை கட்டுப்படுத்தும்
ஸாரங்கா பித்தக் கொதிப்பை தணிக்கும்.
இசை ஒரு கடல்....! அல்ல ...பெருங்கடல்..! ஆழ்கடல்!! அதிலிருந்து சில முத்துக்கள்,  அருமையான ராக முத்துக்கள் எடுத்து  அந்த ராகத்தால் அமைந்துள்ள, காலத்தால் அழியாத சில பாடல்கள் பற்றி தினமும் இங்கே பதிவர்கள் அறிமுகத்துடன் வலைச்சரத்தில் பேசுவோம்!!
 
 
 
 

63 comments:

  1. அன்புச் சகோதரி மனோ சாமி நாதன்

    பதிவு - வலைச்சர ஆசிரியராக மூன்றாம் முறை பொறுப்பேற்ற உடன் முதல் பதிவு நன்று.

    பொறுமையாக மறுபடி படிக்கிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு!

      இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!

      Delete
  2. காரணங்கள் நிறையவே இருக்கிறது என்று சொன்ன போதிலும், இந்த ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்...

    ஆழ்கடல் முத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஊக்குவித்தலுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தனபாலன்!

      Delete
  3. தங்களின் ஆரம்ப அறிமுகமே அசத்தல்.

    இசைபற்றி பேசி மனதை இசைய வைத்துள்ளீர்கள்.

    படிக்கப்படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ஆழ்கடலில் தான் முத்துக்கள் கிடைக்கும். இதுபோன்ற அரிய பெரிய விஷயங்களும் முத்துச்சிதறலில் இருந்து வெளிப்படும் போதுதான், படிக்கவும், புதுப்புது விஷயங்களை அறியவும் மிகுந்த ஆர்வமாக உள்ளது.

    தினமும் தொடர்ந்து இதுபோல சில விஷயங்களை அறியத்தாருங்கள். வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமிருந்து பாராட்டினைப்பெறும்போது மனதில் தானாக உற்சாகம் பெருகுகிறது! அதற்கும் வாழ்த்துக்களுக்கும் இதயங்கனிந்த நன்றி!!

      Delete
  4. வணக்கம்
    சிறப்பான கருத்துடன் மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!

      Delete
  5. நல்லதொரு தொடக்கம்...
    தங்களின் சுயஅறிமும் சிறப்பாக இருக்கிறது....

    அதேபோல் தங்கள் அறிமுகங்களும் தங்களுடைய பதிவுகள் சிறப்படைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி செளந்தர்!

      Delete
  6. ம்யூஸிக் சீஸன் தொடரட்டும்:-)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி துளசி!

      Delete
  7. நல்ல விரிவான தெளிவான அறிமுகம். முதல் நாள் பதிவே மிகவும் அசத்தலாக இருக்கிறது. புதியவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

      Delete
  8. இசை ஒரு கடல்....! அல்ல ...பெருங்கடல்..! ஆழ்கடல்!! அதிலிருந்து சில முத்துக்கள், அருமையான ராக முத்துக்கள் எடுத்து அந்த ராகத்தால் அமைந்துள்ள, காலத்தால் அழியாத சில பாடல்கள் பற்றி தினமும் இங்கே பதிவர்கள் அறிமுகத்துடன் வலைச்சரத்தில் பேசுவோம்!!//
    அறிமுக உரையும், தங்களின் தளங்களின் வரிசையும், இசையைப் பற்றிய விரிவான செய்திகளும் அடுத்து என்ன என்ற ஆவலை கூட்டுகிறது.
    வாழ்த்துக்கள். இசை அமுதம் பொழியட்டும். நனைய காத்து இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்பிற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

      Delete
  9. வாருங்கள் அம்மா...
    உங்கள் இசையுடன் கூடிய பகிர்வுகளை வாசிக்க காத்திருக்கிறோம்...
    மூன்றாம் முறை ஆசிரியராய்.... வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி குமார்!

      Delete
  10. இனியதொரு அறிமுகம்..
    தொடர்ந்து வரும் தொகுப்புகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. தங்கள் எழுத்தின் அதீத ரசிகர்களில்
    நானும் ஒருவன்
    தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியும்
    சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

      Delete
  13. நல்வாழ்த்துக்கள் அன்பின் அக்கா. தொடர்ந்து வித்தியாசமாக அசத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசியா! நீங்கள் உற்சாகப்படுத்துவது மகிழ்வாக இருக்கிறது! வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!

      Delete
  14. மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியராக பணியாற்ற இருப்பதை இரண்டாவது முறையாக என தவறுதலாக தங்களை வரவேற்கும்போது சொல்லிவிட்டேன். மன்னிக்க. இந்த முறை இசைக்கடலில் மூழ்கி முத்தெடுத்து எங்களுக்கு தர இருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. காத்திருக்கிறேன் அந்த காலத்தால் அழியாத பாடல்களுடன் புதிய அறிமுகங்களை காண.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப்போன்றவர்கள் உற்சாகப்படுத்தும்போது இன்னும் என் பதிவுகள் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற ஊக்கம் பிறக்கிறது! வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

      Delete
  15. வணக்கம் அக்கா!..

    அருமையான சுய அறிமுகத்துடன் இசையால் வசமாகிய விதம்
    மிகச்சிறப்பு!.. நானும் உங்கள் ரகமே!
    இசையைப் பெரிதும் - பெரிதாக விரும்புபவள்!

    தொடருங்கள்!.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இசையில் வசமாக என்னுடன் கூட்டு சேர்ந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி இளமதி!

      Delete
  16. Replies
    1. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி கவிப்ரியன்!

      Delete
  17. ராகங்கள் பாடுபவர், கேட்பவர் மன மகிழ்வை மட்டும் இன்றி, பல் வேறு உடல் உபாதைகளையும் குணம் தர வல்லது என குறிப்பிட்டு, கர்நாடக இசையில் ஆர்வத்தை அதிகப் படுத்தி இருப்பதற்கு நன்றி.

    அமிர்தவர்ஷிணி மழை பொழிவிக்கும் என்று குன்னக்குடி ஒரு நாள் முழவதுமே வயலின் வாசித்தார்.

    ஆஹிரி பாடினால் சூழ்நிலை நெருப்பென தகிக்கும் என்பர்.

    வராளி காலையில் பாடினால், மதிய வேலை சோறு கிடைப்பது சந்தேகம் என்பர்.

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்.

    சுப்பு தாத்தா.
    www.movieraghas.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாஹிரி, வராளி பற்றிய குறிப்புகள் இங்கே கூடுதலாகத்தந்தமைக்கும் மனமார்ந்த நன்றி!

      Delete
  18. வணக்கம்,புத்தகம் படிப்பது தான் எனது புத்துணர்ச்சி. இசை பிடிக்கும் ஆனால் அதில் இவ்வளவு விடயங்கள் உள்ளனவென எமக்கு தெரியாது.ஏதோ பாடல் கேட்பேன்,ஆனால் உமது தெளிவுரைக்குப்பின் இசை மீதும் உம் மீதும் தனி மரியாதை வந்துவிட்டது.மிக்க நன்றி தொடரட்டும் தங்களது முத்தான எழுத்துப்பணி.மனதார வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் இசைக்கு மரியாதை செய்திருப்பதற்கும் என் மனங்கனிந்த நன்றி! இசை பற்றி நான் எழுதுவது சில துளிகள் தான்! இசையென்னும் மகா சமுத்திரத்தில் அதன் ஆழத்தில் எத்தனையோ அற்புதமான இசை முத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒரு சில முத்துக்களை மட்டும் நான் தோண்டி எடுக்க முயற்சிக்கிறேன்!

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அக்கா .இனிய துவக்கம் பயணிக்கிறோம் உங்களோடு வார முழுதும் .

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இந்த வாரம் முழுவதும் என்னுடன் இசைப்பயணம் செய்வதாகச் சொன்னதற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!

      Delete
  21. வணக்கம்
    இசையைப்பற்றி ஒன்றும் தெரியாத ஞானசூன்யமான எனக்கு தங்களின் மூலம் கொஞ்சம் புரிய ஆரம்பித்து இருக்கிறது.
    தங்களைப்பற்றிய சுய அறிமுகம் அருமை தொடர்கிறேன்....
    தங்களது பதிவைப்படிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருக்கும் மொபைலில் படித்து விடுவேன் ஆனால் ? கருத்துரை இடமுடியாத சூழல் ஆகவே மாலை ரூமுக்கு வந்துதான் கருத்துரை எழுதுவேன். Sorry

    தமிழ் மணம் –6

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கில்லர்ஜி! பாலைவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சிறிது ஓய்வென்பது மாலை 7 மணிக்கு அப்புறம் தானே? எனக்கு இது முழுவதும் புரிந்த விஷயம். வசதிப்படும்போது பின்னூட்டம் அளியுங்கள்! எப்படி இருந்தாலும் என் பதிவைப்படிக்கும் முதல் நபர் தாங்களாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அதற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

      Delete
  22. பெருங்கடலில் முத்தெடுத்து கோர்வையாக்கும் வலைச்சரம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சசிகலா!

      Delete
  23. மீண்டும் வலைச்சரம் ஆசிரியராக பொறுபேற்றமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளைப் படித்தேன். நீங்கள் இங்கே சொன்ன ” நானும் ஜாதகமும்” என்ற பதிவினை கிளிக் செய்ய இயலவில்லை.
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. தவறினை சுட்டிக்காட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ! இப்போது சரி செய்து விட்டேன். படித்துப்பாருங்கள்.

      Delete
  24. வாழ்த்துக்கள்! வாசிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

      Delete
  25. வலைச்சர ஆசிரியப்பணியை சிறப்பாக ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி பிரியசகி!

      Delete
  26. வாங்க மனோ அக்கா
    உங்களை மீண்டும் இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்சி
    இப்படிக்கு
    ஜலீலா

    ReplyDelete
    Replies
    1. ஜலீலா! உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக்கொடுத்தது. பின்னூட்டம் அளிக்க மீண்டும் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!

      Delete
  27. வாழ்த்துக்கள் த ம +

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மது!

      Delete
  28. வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

      Delete
  29. தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி உமையாள் காயத்ரி!

      Delete
  30. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!

      Delete
  31. உங்களுக்குப் பிடித்த சில பதிவுகளுக்குப் போய் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து விட்டேன். எல்லாமே மிகவும் நன்றாக இருந்தது. முதுமை,ஜாதகம்,மற்றும் யாவையையும் அனுபவித்துப் படித்தேன். முதுமை
    உணர்ச்சிகரமானது. விவரித்த விதம் முதுமை அடைந்தவர்களை சிந்திக்க வைக்கும். அருமையான எழுத்துகளின் சாரம். நன்றியம்மா. அன்புடன்

    ReplyDelete
  32. உங்களின் பாராட்டுக்கள் எனக்கு மகுடம் சூட்டியது போல இருக்கிற‌து. தங்களுக்கு உள்ள‌ம் கனிந்த நன்றி!!

    ReplyDelete
  33. ஆரம்பமே அருமையாக இருந்திருக்கின்றது....ராகமாய்...சுக ராகமாய்....தாமதமாக வந்தாலும் வாசித்துவிட்டோம்..சகோதரி! அருமையான இன்ட்ரொ ராகங்களைப் பற்றி...

    அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தொடர்கின்றோம்....

    ReplyDelete
  34. ரசித்ததற்கும் மனம் திறந்த பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete