வலைச்சர எழுத்தாளர், வாசகர், நெறியாளர்களுக்கு வணக்கங்கள்.
எழுத்துச் சோம்பல் மிக்க ஒருவனை ஒருவாரம் தொடர்ந்து எழுதவைக்கத் துடித்து இங்கே கோர்த்து விட்டிருக்கும் காயத்ரி தேவிக்கு மெல்லிய கண்டனங்கள். தமிழ்வாசி அண்ணனின் ஊக்குவிப்பும் காயுவின் கண்டிப்பும் இங்கே உலாவ விட்டிருக்கிறது என்னை. உண்மையைச் சொல்லப்போனால் நீங்கள் இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நேரம் நான் சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கமாக இருச்சக்கர வாகனத்தில் கொற்கை கடல்வரைக்கும் பயணப்பட்டுக் கொண்டிருப்பேன்.
ஏழு நாளைக்குமான பதிவுகளை வரைவாக எழுதிவைத்துவிட்டு இந்த பயணத்தைத் தொடங்கலாம் என்று ஒரு வாரம் முன்னதாகவே முடிவெடுக்கப்பட்டது ஆனால் என்ன எழுதட்டும் என்ற கேள்விகளோடு ஆறரை நாட்களும் தீர்ந்து போனது.
இந்த பயணம்கூட அப்படித்தான் நேற்றிரவு முடிவுசெய்யப்பட்டது. நான் கொஞ்சம் அப்படித்தான். கொஞ்சம் அல்ல நிறையவே அப்படித்தான். அனுபவங்களுக்காக அதிகம் மெனக்கிடுவேன். புத்தகங்களுக்காகவும்.
சின்னச் சின்ன கதைசொல்லிகளைத் தேடி பயணப்படுதல் ஒரு அலாதி இன்பம். மற்றபடி பயணம் என்பதை எல்லோருக்கும் பிடித்த ஒரு தட்டையான வார்த்தையாக அல்லாமல் என் விருப்பத்திற்குரிய ஒன்றாகவே மேற்கொள்ளுகிறேன்.
நான் கார்த்திக் புகழேந்தி. அதிகமில்லை அடுத்த ஜனவரியில் இருபத்தி ஏழாவது ஆண்டு பூர்த்தி. சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை. சென்னையின் கொரமண்டலக் கடற்கரையில் உட்காந்து கொண்டு கொஞ்சம் எழுதுகிறேன். அதிகம் வாசிக்கிறேன். நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
பாட்டன் முப்பாட்டனில் யாரோ ஒரு கதைசொல்லிக் கிழவன் வாழ்ந்திருக்க வேண்டும். அன்னாருடைய ஜீன்களின் மிச்சத்தில் கொஞ்சம் கதைசொல்ல வரும். கன்னா பின்னாவென்று கவிதையும் வருகிறதாக வதந்தி உண்டு. இதெல்லாம் தேறுமென்று ஒரு இருபத்தி இரண்டு கதைகளை புத்தகமாக தொகுத்து, நதி குடித்து வளர்ந்த நன்றியின் பேரால் ஜீவநதியான எங்கள் தாமிரபரணியை மனதில் கொண்டு “வற்றா நதி” என்ற தலைப்பில் முதல் புத்தகத்தை கடந்த ஆண்டு (2014) திசம்பரில் வெளியிட்டிருந்தேன்.
வலைச்சரத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் வாழ்த்துகளும் வருகையும் அன்றைய நிகழ்வுக்கு ஒரு நிறைவைக் கொடுத்திருந்தது. எல்லா இணையப் பயனர்களைப் போலவே இந்த வலைப்பூ டிராகுலா என்னையும் கடிக்கத் தான் செய்தது. ஆர்குட் வசம் சிக்கிக் கிடந்த தருணத்திலும், பேஸ்புக்கில் முதன்முதலில் உள்நுழைந்த போதும் இங்கே தமிழில் அடித்து அதை வெட்டி ஒட்டித் தான் கணினி தமிழ் எழுத்துமுறை பழகி இருந்தது.
சின்ன வயதில் நிறைய பொய் பேசக் கற்றுக் கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். மிதமிஞ்சிய கற்பனைகளின் ஆணிவேராக அந்த மென்மையான பொய்கள் தான் என்னை வழி நடத்தியிருக்கிறது.
பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் காலத்திலே மிதிவண்டிகளில் தின்பண்டம் விற்பவனாக, வணிக நிறுவனத்தின் சளைப்பில்லாத வேலைக்காரனாக,
அதே நிறுவனத்தில் நிர்வாக மேலாளனாக, தந்தையை இழந்த தனயனாக, உடன்பிறப்புக்களால் வஞ்சிக்கப் பட்டவனாக, கடினங்களைக் கடக்கும் மனதிடம் கொண்டவனாக,
சென்னை மாநகர சிட்டி யூனியன் வங்கியின் இரவு நேரக் காவலனாக, ரெக்கார்டிங் தியேட்டரில் பகுதி நேர ஊழியனாக, இரவெல்லாம் புத்தகம் வாசிப்பவனாக, சிறுகதை எழுதுபவனாக, திரைக்கதை ஆசிரியனான, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக, களப்பணியாளனாக, நூலாசிரியனாக, சொந்தப் பதிப்பகம் தொடங்கியவனாக, கி.ராஜ நாராயணன் அவர்களின் இதழில் உதவி ஆசிரியனாக, மிகமுக்கியமாய் ஒரு கதைசொல்லியாக, காலமும் தன்பங்குக்கு வேகவேகமாய் எங்கெல்லாமோ என்னை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.
எல்லா இடத்திலும் கற்றுக் கொண்ட பாடம் ஒன்றே ஒன்றுதான்
எண்ணியவை முடித்தல். நல்லவே எண்ணல்.
வலைச் சரத்தில் பங்களிக்கும் வகைக்கு நான் அதிகம் வலைப்பூ எழுதுபவனில்லை. தனியறையில் வாசிக்கும் தாஸ்தாவெஸ்கி போல எனக்கும் எழுத்து ஒரு போதை. அது எப்போது எங்கிருந்து பிறக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் போராட்டத்திலே பாதிநாள் முடிந்துவிடுவதால் பல நேரங்களை வாசிப்பிலே கழித்திருக்கிறேன். ஆகையால் சமரசங்களற்று நான் வாசித்த பதிவுகளை இங்கே அடுத்துவரும் ஆறு நாட்களும் ஏதோ கொஞ்சம் எழுதுகிறேன். அன்பிற்கு நன்றி.
என் எழுத்துக்களில் எது உனக்கு பிடிக்குமென்று கேட்டால் இதுவரை எழுதாததே பிடிக்குமென்பேன். ஆகவே இது தான் எனக்கு பிடித்தவை என அறுதியிட்டு கூற முடியாததால் இதில் கொஞ்சம் என் வலையினில் எழுதிச் சேர்த்தவை... இவற்றை படித்துக் கொள்ளுங்கள்.
காலத்தை கடத்தும் கதை சொல்லி கி.ராவுடன்
குற்றாலமும் கனவுப்பிரியனும்
செய்யாத குற்றங்கள்
வாடி ராசாத்தி
மூன்றெழுத்துச் சொல்!
நளவிருந்து ஆசாமி
லைட்ஸ் ஆஃப்
சந்திர நந்தி முதல் சர்வசிவ பண்டிதர் வரை - செஞ்சி வரலாற்றுச் சுற்றுப் பயணம்
நாளை மீண்டும் சந்திப்போம்...
பயணங்கள் தொடர என் நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு நன்றி. பதிவுகளை படித்து கருத்திடுங்கள்
Deleteமிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாக
ReplyDeleteசுருக்கமாகவும் அருமையாகவும் இருந்தது
தங்கள் அறிமுகப் பகிர்வு
ஆர்வத்துடன் தொடர்கிறோம்
வாழ்த்துக்களுடன்...
என்னைப் பற்றி நானே கூறுவதென்பது சற்று கூச்சத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் அன்புக்கு நன்றி
Deleteஉங்கள் எழுத்திலும் நுரைதிரட்டிச் சுழித்தோடும் தாமிரபரணியின் வசீகரம்.
ReplyDeleteஉங்கள் பதிவுகளை மாலைதான் பொறுமையாகப் படிக்க வேண்டும்.
ஆசிரியப் பணிகளுக்கு வாழ்த்துகளும்
உங்களின் அறிமுகங்களுக்கான காத்திருப்பும்.
நன்றி.
த ம1
உங்கள் வாழ்த்துக்கு நன்றி. பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
Delete"எல்லா இடத்திலும் கற்றுக் கொண்ட பாடம் ஒன்றே ஒன்றுதான்
ReplyDeleteஎண்ணியவை முடித்தல், நல்லவே எண்ணல்".
காற்றில் எழுதுபவரே!
கருத்தாலும் உருவத்தை உயிர்பித்து விட்டீர்கள்! நல்ல துவக்கம்!
வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி அவர்களே!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து சந்திக்கலாம்
Deleteவாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்...! சுருக்கமான சுய விமர்சனம் நன்று... வாழ்த்துகள்...
ReplyDeleteமாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பது தானே உண்மை. பதிவுலகில் யாரையும் தெரியாது நான் இங்கு வந்திருந்தாலும் தங்களை சற்று அறிந்து வைத்திருக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி ஐயா
Deleteபயணம் தொடரட்டும்...
ReplyDelete//சின்ன வயதில் நிறைய பொய் பேசக் கற்றுக் கொண்டிருப்பேன் என நினைக்கிறேன்//
ReplyDeleteஇளமையிற் கல் என்று சும்மாவா சொன்னாங்க !!
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
வெவ்வேறு சிந்தனைகளை கதை புனைவுகளை அழகாக வடிவமைக்க பொய்கள் சில நேரம் கைக்கொடுகின்றன. எழுத்தாளனின் திறமையே ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாய் கொடுப்பது தானே. அதன் அடிப்படையில் தான் இந்த கருத்தை கூறினேன்.
Deleteஇளமையிற் கல் என்று சும்மாவா சொன்னாங்க !!// உண்மை உண்மை
ReplyDelete//மென்மையான பொய்கள் //
பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்குமெனின்.
வள்ளுவன் சொல்லும் பொய்மையில் இந்த மென்மையான பொய் வருமா என்பதை புலவர் இராமனுஜம் அல்லது பாரதி தாசன் அவர்கள் தான் விளக்கவேண்டும்.
இருந்தாலும், பொய் என்றால் பொய் தான் .
இன்னொரு பக்கம் ,
கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையிலே
சிலவை மென்மையான பொய்கள்.
பலவை பொய்யான மென்மைகள் .
இருக்கத்தான் செய்தன.
உமிக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரிவதற்கு முன்பே
வயசு கூடிப் போயிடுச்சே..
நிற்க.
சும்மா சொல்லகூடாது. நவரத்ன நெக்லஸ் போல அல்ல,
இருக்கிறது. உங்கள் முதற்கட்டுரை.
ஒவ்வொரு வார்த்தையும் முத்து, பவளம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள். பெரியவர்களின் வார்த்தைகளை ஆசீர்வாதமாக நினைப்பவன் நான். உங்கள் இந்த பாராட்டும் வாழ்த்தும் எனக்கு உற்சாகமளிக்கிறது. நன்றி
Deleteதொடக்கம் நன்று! பணி சிறக்க வாழ்த்துகள்!
ReplyDeleteதங்கள் சிறப்பான வாழ்த்துக்கு நன்றி
Deleteவணக்கம்,
ReplyDeleteஎன் எழுத்துக்களில் எது உனக்கு பிடிக்குமென்று கேட்டால் இதுவரை எழுதாததே பிடிக்குமென்பேன்.
அருமையான வரி,
தங்கள் அறிமுகம் அருமை,
ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்,
தொடர்கிறோம், நன்றி.
என் எழுத்துக்களில் எது உனக்கு பிடிக்குமென்று கேட்டால் இதுவரை எழுதாததே பிடிக்குமென்பேன்.
Deleteஅருமையான வரி,//////
அடடே !! இதை கவனியாவது எப்படி விட்டு விட்டேன் !!
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கில இலக்கியத்தின் கவி அரசனாய் கோலோச்சிய கீட்சும் சொல்வதும் இதுவே தான்.
நான் எழுதாத கவிதையும்
கேளாத மெலடியுமே
மனதிற்குப் பிடித்தவை
இன்று மட்டுமல்ல,
இறக்கும் தருணமும்
இதையே தான் சொல்வேன்
என்றான் அந்தக் கவிஞன்
சுப்பு தாத்தா.
ஆம், இதை நான் அடிக்கடி சொல்வது தான். தலைசிறந்த படைப்பை படைத்து விட்டதாக எண்ணி விட்டால் பின்பு படைப்பென்பதே இராதே. முதல் நாள் நம் பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற பொழுது எனக்கு கூச்சமே மேலோங்கி நின்றது. என் படைப்புகள் பற்றி கருத்து சொல்ல வேண்டியது வாசகர்கள் அல்லவா
Deleteதங்கள் கருத்துக்கு நன்றி mageswari balachandran
Deleteவணக்கம்!
ReplyDeleteதங்கள் சுய அறிமுகம் அருமை !எல்லா இடத்திலும் கற்றுக் கொண்ட பாடம் ஒன்றே ஒன்றுதான்
எண்ணியவை முடித்தல். நல்லவே எண்ணல்.உண்மையில் மனம் கவர்ந்த பேச்சு புத்தக கவசிப்பு எனக்கு ஒரு போதையே ம்..ம்..ம் நன்று !நன்று! தங்கள் பதிவுகளை பார்க்க ஆவல் மிகுகிறது. ஆசிரியப் பதவிக்கு வாழ்த்துக்கள் ...!
ஆம், புத்தகங்கள் இருந்தால் அதனோடு மூழ்கிப் போவதே என் சுபாவம். பதிவுகளை படித்து விட்டு கருத்திடுங்கள். நன்றி
Deleteவணக்கம் நண்பரே! இதுவரை உங்கள் எழுத்துக்களை படித்தது இல்லை! இந்த அறிமுகம் ஓர் ஈர்ப்பினை வரவழைத்துள்ளது. இருபத்தி ஏழு வயதிற்குள் இத்தனை அனுபவங்கள்! ஓர் முதிர்ந்த சிந்தனையாளராக உங்கள் எழுத்துக்கள் உங்களை பிம்பப்படுத்துகின்றது. பதிவுகளை சென்று வாசிக்கிறேன்! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteஅனுபவங்கள் தானே சிறந்த ஆசான். அந்த வகையில் எனக்கு இருபத்தி ஏழு வயதென்றால் என்னாலயே நம்ப முடிவதில்லை. என் எழுத்துக்களை நேரம் இருக்கும் பொழுது படித்துப் பாருங்கள். நன்றி
Deleteஅருமையான...தொடக்கம் ....பயணம் தொடரட்டும்...வாசிக்க வருகிறேன்.நன்றி
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Deleteவிசித்திரமான சிந்த்னை பயணம் ரசிக்கும் கார்த்திக்கின் பயணம் தொடரடடும்.
ReplyDeleteபயணங்கள் என்றும் முடிவதில்லை. நன்றி கருத்திட்டமைக்கு
Deleteதங்களுக்கு நல்வரவு..
ReplyDeleteஅன்பின் நல்வாழ்த்துக்கள்!..
நன்றி ஐயா
Deleteஎன்னிடம் நிறையவே நல்ல குணங்கள் உண்டு. ஒரே ஒரு கெட்ட குணம் மட்டும்தான் பொய் பேசுவேன் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்ததுவாழ்க்கையில் 27 வருடம் என்பது மிகச் சொற்ப காலமே ஆங்கிலத்திலொரு அறிஞன் சொன்னது நேருவின் மேசையில் இருக்குமாம் I HAVE MILES TO GO அந்த எண்ணத்தில் செயல்படுங்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஆம், போகும் பாதை இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தங்கள் வாழ்த்துக்கு நன்றி
Deleteவருக கார்த்திக்...
ReplyDeleteதங்களின் துவக்கம் மிக அருமை...
நன்றி அண்ணா, தங்கள் ஆதரவுக்கு
Deleteவலைச்சரம் பணி செய்ய வந்த, அன்புத் தம்பி கார்த்திக் புகழேந்தி அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.7
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா
Deleteஆரவாரமில்லா அறிமுகமே அசத்துகிறது. வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteநன்றி. நாளை கட்டாயம் சந்திப்போம்
Deleteஹப்பாடா... அசத்தல் அறிமுகம் தான். கார்த்திக் னா வேகம். என்னைய காப்பாத்தி விட்ருங்க தெய்வமே...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethalipela oru aalntha senthani vaithu thagalin anupavathium kalanthu oru kalyana samayal pool padithu vitergal. athel 2 padivu matum padithu irukan. payanagal thodartum.
ReplyDeleteதொடர்ந்து படித்து கருத்திடுங்கள். நன்றி நண்பரே
Deleteதங்களின் எழுத்தை இதுவரை படிக்காதது பெரும் இழப்பே. என்னவொரு துள்ளல் நடை..! முதல் பதிவிலே என்னை ஈர்த்து விட்டீர்கள்! நேரம் கிடைக்கும் போது தங்களின் பதிவுகளை பொறுமையாக படித்து கருத்திடுகிறேன்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
த ம 9
நன்றி. தங்கள் கருத்துகள் உற்சாகமளிக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்
Deleteவாழ்த்துகள் கார்த்திக்....
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ்
Deleteவளவளா என்று இல்லாமல் அழகாக சொல்லிய உங்கள் சுயவிமர்சனம் அருமை வாழ்த்துகள் கார்த்திக்...
ReplyDeleteநன்றி
Deleteபாரதியின் வார்த்தைகளோடு அழகான அறிமுகம்!! இவ்வளவு சிறிய வயதிலேயே அனுபவத்தை ஆசானாகப் பெற்று உயர்ந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.
ReplyDelete///பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் காலத்திலே மிதிவண்டிகளில் தின்பண்டம் விற்பவனாக, வணிக நிறுவனத்தின் சளைப்பில்லாத வேலைக்காரனாக,
ReplyDeleteஅதே நிறுவனத்தில் நிர்வாக மேலாளனாக, தந்தையை இழந்த தனயனாக, உடன்பிறப்புக்களால் வஞ்சிக்கப் பட்டவனாக, கடினங்களைக் கடக்கும் மனதிடம் கொண்டவனாக,
சென்னை மாநகர சிட்டி யூனியன் வங்கியின் இரவு நேரக் காவலனாக, ரெக்கார்டிங் தியேட்டரில் பகுதி நேர ஊழியனாக, இரவெல்லாம் புத்தகம் வாசிப்பவனாக, சிறுகதை எழுதுபவனாக, திரைக்கதை ஆசிரியனான, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக, களப்பணியாளனாக, நூலாசிரியனாக, சொந்தப் பதிப்பகம் தொடங்கியவனாக, கி.ராஜ நாராயணன் அவர்களின் இதழில் உதவி ஆசிரியனாக, மிகமுக்கியமாய் ஒரு கதைசொல்லியாக, காலமும் தன்பங்குக்கு வேகவேகமாய் எங்கெல்லாமோ என்னை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.///
இந்த வயதில் நீங்கள் பெற்றிருக்கும் உலக அனுபவம் - அதிகம்! பாசாங்குகளில்லாத உங்களின் அப்பட்ட எளிமை நடையிலான சுய அறிமுகம் ரசிக்க வைக்கிறது! வலைச்சரத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்!!!
முதலில் எனது வாழ்த்துக்கள் அண்ணா.
ReplyDeleteஆரம்ப கட்டத்தில் ஃபேஸ்புக்கில் எழுத ஊக்கம் கொடுத்த ஆசான்
வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பதை
பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி!
2012ல் வலை பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போது நான்
உங்களை நினைத்து பல முறை வருத்த பட்டிருக்கேன்! நல்ல எழுத்து நடை கொண்ட ஒருத்தர் ஃபேஸ்புக்கோடு மட்டும் நின்று விட கூடாதென
பல முறை நினைத்ததுண்டு. ஆனால் சென்ற வருடம் தங்களின் வற்றா நதி சிறுகதை தொகுப்பு வந்ததை பார்த்ததும் உங்கள் எழுத்தின்மீது நம்பிக்கை இன்னும் அதிகரித்துவிட்டீர்கள்!
தொடர்ந்து பல படைப்புக்களை நீங்கள் படைக்கவும்,
அவை காலம் கடந்தும் பேசப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
**
வலைச்சர ஆசிரியராக இதுவரை நீங்கள் எழுதிய பதிவுகளை
இன்று கா லை தான் படிக்க முடிந்தது. நல்ல ஆரம்பம்.
தொடருங்கள் அண்ணா.
நண்பர் ஆவியின் காதல் போயின் காதல் படத்தின் ட்ரெய்லருக்கு உங்கள் குரல் காதல் பேசியதிலிருந்து, எங்களைக் கவர... உங்களை அறிந்து கொண்டோம் நண்பரெ!
ReplyDeleteஇதோ உங்கள் ஆசிரியப் பணி...இன்றுதான் தங்கள் வலைச்சரப் பணியை முழுவதும் வாசிக்க வர முடிந்தது. மன்னிக்கவும்....
பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் காலத்திலே மிதிவண்டிகளில் தின்பண்டம் விற்பவனாக, வணிக நிறுவனத்தின் சளைப்பில்லாத வேலைக்காரனாக,
அதே நிறுவனத்தில் நிர்வாக மேலாளனாக, தந்தையை இழந்த தனயனாக, உடன்பிறப்புக்களால் வஞ்சிக்கப் பட்டவனாக, கடினங்களைக் கடக்கும் மனதிடம் கொண்டவனாக,
சென்னை மாநகர சிட்டி யூனியன் வங்கியின் இரவு நேரக் காவலனாக, ரெக்கார்டிங் தியேட்டரில் பகுதி நேர ஊழியனாக, இரவெல்லாம் புத்தகம் வாசிப்பவனாக, சிறுகதை எழுதுபவனாக, திரைக்கதை ஆசிரியனான, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக, களப்பணியாளனாக, நூலாசிரியனாக, சொந்தப் பதிப்பகம் தொடங்கியவனாக, கி.ராஜ நாராயணன் அவர்களின் இதழில் உதவி ஆசிரியனாக, மிகமுக்கியமாய் ஒரு கதைசொல்லியாக, காலமும் தன்பங்குக்கு வேகவேகமாய் எங்கெல்லாமோ என்னை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.// யம்மாடியோவ்......உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைக்கிறது....
உங்கல் காயு தளத்தை வாசிச்சு எங்க தளத்துல போட்டுக்கிட்டோம். அப்பப்ப போனதுண்டு. அப்புறம் இடைல போகல....இனி தொடரணும்...ஆனா உங்க தளம் இனிதான் பார்க்க வேண்டும் நண்பரே! (கடைசில நீங்க சொல்லிருக்கறத வாசிச்சுட்டோம்ல...அதான் எப்பவுமே இதுக்கெல்லாம் நம்ம கண்ணும் காதும் கூரா இருக்குமே!!!)
வாழ்த்துகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து!!!!!!!!