சிறுகதைகள் என்றால் அதற்கு ஆரம்பமும், முடிவும் உண்டு என்பது தான் அதன் வடிவம் இல்லை என நான் சிறுகதைகள் படித்த அளவில் புரிந்து கொண்டிருக்கிறேன். சிறுகதைகள் நிகழ்வுகளை அதன் வரிசையில் எளிமையாக்கி தரும் கற்பனை அல்லது நடந்தவை என்ற அளவில் இருக்கின்றன என்பது அதன் இலக்கணம் என்று கொள்ளலாம். சிறுகதையின் சிற்பி புதுமை பித்தனை வாசிக்காத சிறுகதை அன்பர்கள் (பிரியர்கள்) இருக்க முடியாது. புதுமை பித்தன் சிறுகதைகளை, கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி வாசித்திருக்கிறேன் என்பதை வெளியில் சொல்வதும் கூட பெருமையாக சிலர் நினைக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருக்கிறது மற்றும் அந்த அளவுக்கு அவை சுவைபட எழுதப்பட்டு பேசப்பட்டவைகள். தமிழிலக்கியத்தில் மொழிப்பெயர்க்கப்படாத பெரும் காதைகள் என்றால் அது சமண / பவுத்தர்கள் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமே. குண்டலகேசி என்னும் பவுத்த காதையும், நீல கேசி என்னும் சமண காதையும் ஒன்றை ஒன்று சாடுவதற்காக ஏற்பட்டவை. அதாவது ஒரு தத்துவத்திலிருந்து வேறு ஒன்றை சாடுவதற்கு வெறும் தத்துவ கோட்பாடுகள் மட்டும் போதாது என்பதற்காக ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்று காட்டவும் கதை பின்னனிகள் தேவைப்பட்டு இருக்கிறது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
இன்றைய சிறுகதைகள் எதோ ஒரு கருப்பொருளைத் தாங்கிவந்தாலும் வட்டார வழக்கு, அவ்வட்டார பண்பாடு ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இழைக்கப்பட்டு இருந்தால் அவ்வகை எழுத்தர்கள் சிறுகதை எழுதுவதில் சாதனை படைப்பர். நமக்கு முந்திய தலைமுறைகளில் கு.ப.ரா, கி.ரா, பிரபஞ்சன், சு.சமுத்திரம் மற்றும் பலர் அவ்வகை ஆக்கங்களை படைத்து ஆவணமாக ஆக்கி வைத்திருக்கின்றனர். சிறுகதை எழுதுவது கடினமானதல்ல பாதிப்புகளையோ, தீர்வுகளையோ, நிகழ்வுகளையோ பாத்திரங்களை வைத்து படிப்பவர்களின் மனதில் அசைக்க விடுவதுதான் சிறுகதைகள். தூங்கிக் கொண்டிருக்கும் பாத்திரங்கள் நாம் படிக்க ஆரம்பிக்கும் போது எழுந்து படித்து முடிந்தவுடன் தூங்கிவிடும். அவை உணர்வுகளை தூண்டியிருந்தால் அவை நமது நினைவுகளில் அடிக்கடி வரும் கனாவாக மாறிப்போகும்.
கதை கேட்கும் அல்லது சொல்லும் ஆர்வம் நம் தமிழர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட குணம். பாட்டி சொன்ன கதைகள் முதல் வில்லிபாரதம் வரை எதோ ஒன்றை எல்லோருமே கேட்டு இருப்போம். நமது கதை கேட்கும் ஆர்வங்களை நம்பியே நெடும்தொடர்கள் ( மெகா சீரியலுக்கு புதிய சொல் நன்றி கலைஞர் டிவி) நமது வீட்டு கூடத்திற்கு வந்துவிட்டன. பொழுது போக்கு என்பதற்கு பதில் பொழுதே அதனாலேயே போகிறது என்ற அளவுக்கு கதை ஆர்வம் வந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது கவலைக்குறிய பற்றியம் தான். அக்கம் பக்கத்து கதைகளை கேட்டு குடும்பத்துக்குள் உரசல் வருவதைப்போல் நெடும்தொடரால் உடனடி பாதிப்பு வராது :). எல்லாமுமே ஒரு கட்டத்தில் திகட்டிவிடும் என்பதால் இது தற்காலிகம் என்றே கொள்வோம்.
எனது வலைப்பூவில் எழுதுவது போல் கட்டுரையாகி போய்விட்டது :). வலைச்சரத்தில் படித்ததில் பிடித்த இடுகைகளை வகைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தும்பிகையால் தூக்கி ஒருவர் மிதித்துவிடுவார். ஜூட்.
சிறுகதை பதிவு எழுத்தர்களில் வட்டார வழக்குடன் எழுதுபவர் பலர், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நிலா அக்கா, முட்டம் சின்னப்பதாஸ் சிறில் அலெக்ஸ், ஆழியூரான் போன்றோர் தான் நினைவுக்கு உடனே வருகின்றனர். குப்புசாமி செல்ல முத்துவின் அண்ணியின் அணைப்பில் அதே போன்று நான் எழுதிய பாண்டிபஜார் கடை போன்றவற்றை படித்து பலர் வியர்(ந்)த்திருக்கிறார்கள் :), வினையூக்கி, மெலட்டூர்.இரா.நடராஜன் ஆகியோர் சிறுகதைகளை எழுதி குவிக்கிறார்கள். விவசாயி இளா, நாமக்கல் சிபி, லக்கி லுக் மற்றும் செந்தழல் ரவியின் கதைகளை படிக்கும் போது சிறுகதைகளில் கூட மொக்கை உத்தி பயன்படுத்தப்பட்டுள்ள புதிய சாதனைகளை அறிந்து கொள்ளலாம். :) மற்ற சிறுகதை பதிவுகள் உடனடியாக நினைவு வரவில்லை. நண்பர்கள் பொருத்தருள்க.
No comments:
Post a Comment