My name is N.Nandhakumar. I am studying 6th std. My father's Name is........
நினைவு தெரிந்ததிலிருந்து என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்து பேச
ஆரம்பிக்கும் விஷயங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருந்திருக்கிறது.
மாமாவுக்கு நீ எப்படி இங்கிலீஷ் பேசுவேன்னு பேசிக்காட்டு பார்க்கலாம்
என்பதற்கோ Well Mr.Nandha Tell me about Yourself??? என்று காலம் காலமாய்
இன்டர்வியூக்களில் ஆரம்பிக்கப்படும் கேள்விகளுக்கோவான எதிர்வினைகளாகவே
அவை இருந்திருக்கின்றன.
இவற்றைத் தாண்டி தனக்கான ஒருத்தியை உறுதி செய்த பின்பு, அவளுடன் தனித்து
இருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் இது போன்ற ஒரு கேள்வியை வெகு நிச்சயம்
நம்மில் பலர் எதிர்கொள்ள நேரிடும். போலிப்பூச்சுகளையும், போதையினையும் கலந்து அந்த
தருணங்களில் வந்து விழும் வார்த்தைகள் நம்மில் பலருக்கு பெரும்பாலும்
தமிழில்தான் இருக்கக்கூடும். நம்முடைய முதல் தமிழ் சுய பிரசங்கம்
அதுவாகக் கூட இருக்கலாம்.
முகத்திற்கு நேராய் ஒருவர் நம்மை புகழும் போது நாம் காட்டும் ரீயாக்ஷன்
என்னவாய் இருக்க வேண்டும் என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
கிடைக்கும் பதில்கள் எதுவுமே திருப்தி தருவதாய் மட்டும் இருப்பதில்லை.
நான் என்ன பெரிசா பண்ணிட்டேன்.என்னை ரொம்ப புகழறீங்க" என்று பொய்யாய்,
தன்னடக்கத்துடன் நெளியலாம்.... இதெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம் என்று
ஒரு சாதனையாளனைப் போல் கர்வமாய் முகத்தை வைத்துக் கொள்ளலாம்.... அதுவும்
இல்லையா நீங்க பண்ணி இருப்பதோட ஒப்பிடறபோ நான் பண்ணது எல்லாம் எந்த
மூலைக்கு" என்று திருப்பிப் புகழ ஆரம்பிக்கலாம். தன் சுயம்
திருப்திப்படுத்தப்பட்ட சந்தோஷத்துடன் எதிராள் ஒரு வேளை நகர்ந்து
விடக்கூடும். எது எப்படியாயினும் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று
அந்த விநாடிகளில் நாம் உணர்ந்துதான் இருப்போம்.
வேறு ஒன்றுமில்லை. உங்களைப் பற்றி நீங்களே ஒரு சுய அறிமுகம் செய்து
விட்டு வலைச் சரத்தை ஆரம்பியுங்கள் என்று வெகு எளிதாய் சரப்பொறுப்பாளர்கள்
சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்கள்.ஆனல் உட்கார்ந்து யோசிக்கையில்தான்
புலப்படுகிறது இது எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது என்று. புகழ்ச்சியோ,
சுயபுராணமோ,கிண்டலோ,லிப்ஸ்டிக்கோ எதுவுமே கண்களை உறுத்தாத வரையில்தான்
நமக்கு நன்றாய் இருந்து வந்திருக்கிறது. விஞ்சி நிற்கும் எதுவும் வெகு எளிதில் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது.
யாரோ ஒருத்தியுடன் தனித்திருக்க நேர்கையில் ஆரம்பித்திருக்க வேண்டிய என் சுய புராணத்தை, இதோ இங்கே, அதிகம் கண்ணை உறுத்தா மேல்பூச்சுகளைக் கலந்தே ஆரம்பிக்கிறேன்.
நந்தாவின் கிறுக்கல்கள் இது என் வலைப்பதிவு.
எரிச்சலும் கோபமும் நிறைந்த ஒரு சில கணங்களில், பெரிதாய் இதில் என்ன எழுதி சாதித்து விட்டேன் என்ற கேள்வியை எனக்குள் நானே அவ்வப்போது எழுப்பிக் கொள்வதும் கனத்த மவுனத்தை பதிலாய் பெற்றுக் கொள்வதுமாய் இருந்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நம் பெரும்பாலாரின் வலை எழுத்துக்கள் பெரிதாய் எதையும் சாதித்து விட வில்லைதான் என்றாலும் அட்லீஸ்ட் நம் சிந்தனைகளில் கொஞ்சமேனும் தெளிவு பெறுவதற்கேனும், நம் தமிழ் அறிவை சற்றே விசாலப் படுத்திக்கொள்ளவேனும் இவை பெரிய அளவில் உதவி செய்துதான் இருக்கின்றன.
என் வலைப்பதிவுகளில் நான் எழுதிய எல்லா எழுத்துக்களுமே எனக்குப் பிடித்துதான் இருந்திருக்கின்றன. எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு கவிதை என்றால் இந்த பத்தினிப் பெண்கள் கவிதையைச் சொல்லலாம். இதில் படிமங்கள், இன்னபிற இத்யாதிகள் எதுவும் இருக்காது என்பதால் இதை வசன கவிதை என்றோ, கவிதை மாதிரி என்றோ ஏதேனும் ஒரு பெயரில் அழைத்துக் கொள்ளலாம்.
ஒற்றை முத்தம் என்ற கான்செப்டில் நான் எழுதிய சில கவிதைகளும்,கதைகளும் (ஒற்றை முத்தம் - கதை, கவிதைகள், சமாதானமாய் ஒரு முத்தம் காதல் எனப்படுவது யாதெனின்) என்னை வலையுலகில் காதல் பற்றி பிதற்றித்திரியும் கூட்டத்தில் ஒருத்தனாயும், நண்பர்களின் நடுவே வேறு ஒரு மொக்கைப்பெயரை வைத்து கூப்பிடும் அளவுக்கும் மாற்றி இருக்கிறது.
வலையுலகிலும் சரி சமூக வெளியிலும் சரி பெண்ணியம் பேச முற்படுபவர்களை கலாச்சார எதிரியாகவே துவேஷம் பாவித்து வரும் சூழலில் என்னை சுற்றியுள்ள, நான் பார்த்த சில பெண்கள் என் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் அவ்வப்போது கட்டுரைகளாக உருமாற்றம் பெற்று வந்திருக்கின்றன. பெண்ணியம் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகள், கதைகள் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடித்தவையாயும், ஆத்ம திருப்தியத் தருவதாயும் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கருத்தியல் ரீதியில் நான் சொல்வது மிகச் சரிதான் என்ற இறுமாப்பையும், இது தொடர்பான கருத்து மோதல்கள் எங்கே நடந்தாலும் போய் களத்தில் குதிக்கும் தைரியத்தையும் தந்திருக்கிறது. அந்த வகையில் எனது சில இடுகைகள்
காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்
கனவுகளைத் தொலைத்தவள்
நல்லதோர் வீணை செய்தே
இதைத் தாண்டி இன்றும் நான் வருந்தும் ஒரு விஷயம் பலத்த வெற்று விளம்பரங்களுடன் ஆரம்பித்த என் இந்திய வரலாறு தொடர் பதிவை இன்னும் தொடராமல் இருப்பதுதான். இதற்கான முழு முயழற்சிகளும் பிண்ணனியில் நடந்தேறி வருகின்றன. கூடிய சீக்கிரம் இவை அரங்கேறலாம்.
இதற்கு மேலும் பேசினால் ஓவராய் இருக்கும் என்பதால் இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.
அருமையான வலைச்சர வாரமாக இருக்க வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நந்தா ;)
ReplyDeleteவாங்க பஞ்சாயத்துராஜ்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நந்தா ;)
ReplyDelete