Wednesday, April 23, 2008

ஜீவா வெங்கட்ராமனும், கபீரன்பனும்! ஆன்மீகப் பதிவர்கள்! பரிசு கபீரன்பன் கொடுப்பார்!

ஆன்மீகப் பதிவர்களில் முக்கியமானவர் குமரன் என அனைவரும் அறிந்த ஒன்றே. அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. பின்னர் ஜிரா, என அழைக்கப் படும் ஜி.ராகவன், கே ஆர் எஸ், ஜீவாஎன்றழைக்கப் படும் வெங்கட்ராமன், திரு திராச, விஎஸ்கே, சிவமுருகன், மதுரையம்பதி, திரு சூரி அவர்கள், சமீபத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் திவா போன்றவர்கள் இருக்கின்றார்கள். குமரனுக்கோ, கேஆரெஸ்ஸுக்கோ அறிமுகம் கொடுத்து எழுதுவது நம்மால் முடியாத ஒன்றாகும். இந்த வலை உலகில் நான் அறிமுகம் ஆன போதில் இருந்தே குமரனை அறிவேன். அவர் எழுத்துக்களைப் படித்துக்கொண்டும் வருகின்றேன். நேரம் இன்மையால் அதிகமாய்ப் பின்னூட்டம் கொடுப்பதும் இல்லை, அவரும் அதிகமாய்ப் பதிவுகளையும் வைத்திருக்கின்றார். :)))))))) கே ஆரெஸ்ஸின் தமிழுக்கு முன்னால் நம்மால் நிற்கக் கூட முடியாது. மற்றவர்களில் ஜிராவையோ, விஎஸ்கேயையோ, சிவமுருகனையோ, திராசவையோ கூட அறிமுகம் செய்ய வேண்டாம். அனைவரையும் பற்றிக் குறிப்பிட்டிருப்பதோடு நிறுத்திக் கொண்டு, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஜீவாவையும், கபீரன்பனையும் மட்டும் சொல்லப் போகின்றேன்.

ஜீவாவை எனக்குச் சிதம்பர ரகசியம் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச பின்னரே தெரியும். ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் பதிவுகள். அவரின் எழுத்தாற்றலுக்கும் விஷய ஞானத்துக்கும் முன்னர் நாமெல்லாம் வெறும் ஜுஜுபி என்பது நன்கு புலன் ஆகும். அவர் எழுதியவற்றிலே அனைத்துமே நல்ல பதிவுகள் என்றாலும் என்னைக் கவர்ந்தது எனச் சொல்லவேண்டுமானால் நடராஜ தத்துவம் பற்றிய அவரின் பதிவுகள் தான்.

//பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!//

இதை விட வேறு விளக்கமும் வேண்டுமா என்ன? அருமையான விளக்கம். அதே போல் ஆறுபடை வீடுகளும், யோக சாஸ்திரத்தில் ஒவ்வொரு சக்கரத்தைக் குறிக்கின்றது என்பதைக் குறித்தும் ஒரு பதிவு எழுதி உள்ளார். கடைசி இரு சக்கரங்கள் பற்றி, எனக்கும் அவருக்கும் கொஞ்சம் வேறுபட்ட கருத்து இருந்தாலும், அவர் எழுதி உள்ளவை மிக மிக அருமையான ஒன்றே ஆகும். அதுவும் முதலில் மூலாதாரம் ஏன் கணபதி என்பதில் ஆரம்பித்துக் கடைசி வரையிலும் சொல்லி இருக்கின்றார் இந்தப் பதிவில். இதோ அந்தப் பதிவின் சுட்டி!:

ஆறுபடை வீடும் ஆறு சக்கரங்களும்!

//கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான். //

பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.//

பொதுவாகவே நாம் அனைத்து வேலைகளையும் விநாயகனை வணங்கியே ஆரம்பிக்கின்றோம். அதற்கும் ஒரு விளக்கம் இவரிடம் தயாராக இருக்கின்றது, இதோ இந்தப் பதிவில்!

திவாவின் ஆனைமுகத்தோன் பதிவுக்கான அவரின் பின்னூட்டம் இது. யோக சாஸ்திரத்தின் உள்ளார்ந்த அறிவைக் காட்டுகின்றது இது. அருமையாகப் பதிவுகள் மட்டுமின்றி பின்னூட்டமும் கொடுப்பதில் இருந்து அவரின் பக்குவம் தெரிய வருகின்றது அல்லவா? இதோ அந்தப் பின்னூட்டம்:

//1.மூலதார கணபதி, முழுமுதல் பொருள். அவனே
ஆதாரம். ஆதாரம் இல்லாமல் என்ன யோகமும் செய்து மேலெழுப்ப எத்தனித்தாலும், நீண்ட தூரம் செல்ல இயலாது. ஆதாரப் பொருளின் அருள் பெற்றால், நிலை பெற்று நிற்கலாம், நீட்டலாம்.
2.வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களையாமல் என்ன யோகம் செய்தாலும், எங்கே மேலெழும்ப எத்தனித்தாலும், மீண்டும் கீழே வர நேரிடும். ஆகவே, விநாயகன் துணைகொண்டு வினைகளைக் களைவது முதன்முதலில் செய்ய வேண்டியது.//

அடுத்ததாய்க் கபிரன்பன் அவர்கள். கபீரின் "தோஹா" எனப்படும் ஈரடிப்பாடலை, அதற்குரிய பொருளோடு மட்டுமின்றி, பாரதி, தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள் என ஒப்பிட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நான் அடிக்கடி செல்லும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. இவர் பாரதியைக் கபீரோடு ஒப்பிட்டுச் சொல்லும் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாரதி இவர் தேடுவது போல் கபீர் பற்றியோ, மற்ற வடமொழிக் கவிஞர்கள் பற்றியோ பாடியதாய் எனக்கும் தெரியவில்லை, எனினும் ஒப்பிடுதல் வேறு முறையில் வருகின்றது பாருங்கள்:

p>http://kabeeran.blogspot.com/2007/09/blog-post_09.html



//

சில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.வேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு//

மேலே இவர் குறிப்பிட்டிருப்பது பாரதி பற்றியது நூற்றுக்கு நூறு பொருந்துமா என்ற கேள்வி எனக்குள் எழும். ஏனெனில் பாரதி துன்பத்திலும், வறுமையிலும் உழன்றாலும் பராசக்தி தாசன்.வறுமையைக் கண்டு பயந்தவனாய்த் தெரியவில்லை. கையில் பணம் இருந்தாலும் நாளைக்கு எனச் சேமித்து வைக்கும் குணமும் அவனிடம் இருந்ததில்லை. துன்பங்களைத் தூசியாகவே மதித்தான் என்று அவன் பராசக்தியை இவ்வாறு துதிப்பதில் இருந்தே தெரிய வருகின்றது அல்லவா?

//நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்:
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ!"//

எனவும் சொல்கின்றான். இவ்வாறு பராசக்தியின் பார்வையிலேயே துன்பங்கள் பஞ்சு பெருந்தீயால் அழிக்கப் படுவது போல் அழிந்து போகும் என்ற நிச்சயம் உள்ளவனாய் இருக்கின்றானே? இவன் எவ்வாறு ஊசலாடுகின்றான் எனக் கபீரன்பன் சொல்கின்றார் எனப் புரியவில்லை. ஒருவேளை மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற இயலாத வறுமையைச் சுட்டுகின்றாரா தெரியவில்லை! ஆனால் அந்த வறுமையைக் கூடப் பாராட்டாமல்,

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில், குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?
தீம் தரிகிட, தத்தரிகிட, தித்தோம்! "

எனத் தனக்குள்ளே கண்ட உள்ளொளியைக் குறித்துக் குதித்துப் பாடியவன், இந்த வறுமையை எள்ளி நகையாடி இருப்பான் எனவே தோன்றுகின்றது. அடுத்து இவர் கூறுவது, இறைவனைச் சென்றடைய சாத்திரங்கள் தேவையில்லை எனப் பாரதி ஏளனம் செய்ததைப் பற்றி. கலகத் தரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்தது பற்றியும், பல கற்றும், பல கேட்டும் பயனொன்றுமில்லையே எனவும் ஏங்குகின்றார். மேலும் பரசிவ வெள்ளம் என்னும் அந்தப்பாடலில்,

"காவித் துணிவேண்டா கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகளேதுமில்லை
தோத்திரங்களில்லை உளந் தொட்டு நின்றால் போதுமடா"


எனவும் கூறுகின்றார். இன்னும் என்ன சொல்கின்றார் இருவரையும் ஒப்பு நோக்கி எனக் கீழே காண்போமா?

ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்என்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன? தவமா ! பாரதி ஏளனம் செய்கிறார்.சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லைதோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)தவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடாசிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)இறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்//

இந்தக் கபீரன்பன் முத்தமிழ்க் குழுமத்திலும் எழுதுகின்றார், வேறு பெயரில். அவர் யார்னு சொல்றவங்களுக்கு அவரே பரிசும் கொடுப்பார். :)))))))))

அடுத்து சமீப காலங்களில் எழுத ஆரம்பித்திருக்கும் மதுரையம்பதி என்னும் சந்திரமெளலி.
இப்போ இரண்டு மாசமாய் எழுதிக் கொண்டிருக்கும் திவா,
இன்னும் திவாவின் பதிவிலிருந்து போய்ப் பார்த்த மாதங்கி போன்றோர் பற்றி நாளை காணலாமா? அடுத்து சூரி சார் அவர்களின் விருதுகள் பற்றிய பதிவுகளையும் பார்க்கலாம்.




10 comments:

  1. நல்லது மேடம், ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பெரிதாக ஏதுமில்லை என்னிடம். கற்றது கடுகளவே. மேலும் கற்க வேண்டியது ஏராளம்.
    பதிவுகளைப் படித்து அவற்றில் பிடித்தவற்றை குறிப்பிட்டுக் காட்டுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று, பாராட்டுக்கள்.

    கபீரன்பன் அவர்களின் ஒவ்வொரு பதிவும் பொறுமையாக செதுக்கப்பட்ட சிலை போன்று அழகானவை. எத்தனை பெரியவர்களின் கருத்துக்களை ஒருங்குசேர ஒரே மூச்சில் படித்திட வேறெங்கு கிட்டும். அவருக்கும் இந்த சமயத்தில் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. //இவன் எவ்வாறு ஊசலாடுகின்றான் எனக் கபீரன்பன் சொல்கின்றார் எனப் புரியவில்லை.//

    ஏன்?
    கபீர் அமைதியாகவே இருந்து வாழ்ந்துவிட்டார்.
    பாரதியார் ஆன்மீக உலகிலும் இந்த நாம் உழலும் உலகிலும் மாற்றி மாற்றி ஊசலாடினார்.
    இது பலருக்கும் ஏற்படுவதுதானே? ஆன்மீக உரை கேட்கும்போது இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம். வெளியே வந்தவுடன் பழைய நினைவுகள் மனஓட்டங்கள்...

    ReplyDelete
  3. அருமையான சுட்டிகளை அளித்தமைக்கு மிக்க நன்னி கீதா மேடம். :)


    //ஆன்மீக உரை கேட்கும்போது இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம். வெளியே வந்தவுடன் பழைய நினைவுகள் மனஓட்டங்கள்...//


    உண்மை, ஆன்மீக பதிவுகள், மற்றும் பயணங்கள் செய்பவர்களுக்கும் இதே நிலை தான் இல்லையா Diva sir? :p

    ReplyDelete
  4. @
    ஆமாம் அம்பி, யாருமே விதிவிலக்கு இல்லைதான்!
    ஊருக்கு போய்கிட்டு இருக்கீங்க இல்ல? பயணம் செய்பவர் யார்ன்னு யோசிச்சேன்!

    ReplyDelete
  5. சிவனேன்னு ஓரமா இருக்கிற ஆளை தலைப்புல போட்டு இப்படியெல்லாம் கூட மாட்டிவிட முடியுமா? நல்லவேளை தனியா இல்லை. கூடவே ஹெவி-வெயிட் ஜீவாவும் திவாவும் இருக்காங்க :) தப்புச்சேன்.
    கபீர் சேவைக்கு இன்னுமொரு ஆள் கெடச்சாச்சு :))
    நன்றி.

    ReplyDelete
  6. // அவர் யார்னு சொல்றவங்களுக்கு அவரே பரிசும் கொடுப்பார் //

    கூடவே போட்டிருக்க வேண்டிய 'ஸ்டாரை' (*) விட்டுட்டீங்களே

    '(*)subject to Terms &Conditions'

    :))))))

    ReplyDelete
  7. //இவன் எவ்வாறு ஊசலாடுகின்றான் எனக் கபீரன்பன் சொல்கின்றார் எனப் புரியவில்லை //

    திவா அவர்கள் ஏற்கனவே பொருத்தமான பதில் சொல்லியிருக்கிறார்.

    ஆயினும் பாரதியின் ஊசலாட்டத்தை அவர் வார்த்தைகளிலே காண்போம்.

    கனவு மெய்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்


    என்று சொல்லும் பாரதி, அவரே மாயையை பழிக்கையில்

    நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே-சிங்கம்
    நாய் தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை மாயையே !


    என்கிறார். ஒன்றுக்கு ஒன்று முரணாக இல்லை!

    பின்னர் இன்னொரு பாடலில்

    நிற்பதுவே நடப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ .....
    வானகமே இளவெயிலே, மரச் செறிவே நீங்களெல்லாம்
    கானலின் நீரோ ?-வெறும் காட்சிப் பிழைதானோ ?
    .....
    நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
    ......
    .......
    காண்பதுவே உறுதி கொண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை
    காண்பது சக்தியாம்- இந்த காட்சி நித்தியமாம்


    அவருக்கு மூடு நல்லா இருந்தா 'சக்தி மயம்' இல்லாட்டி போனா ‘வாழ்வே மாயம்' !

    நல்லதோர் வீணை செய்தே நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
    சொல்லடி சிவசக்தி- என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்


    என்று தன்னுடைய பெருமையை உணராத மக்களின் நிலைக் கண்டு முறையிடுகிறார். இது உலகப் பற்று உடைய மனதிலிருந்து மட்டுமே எழக்கூடிய உணர்வு. இன்னொரு இடத்தில்

    நானென்னும் பொய்யை நடத்துவோன் நான்,
    ஞான சுடர்வானில் செல்லுவோன் நான்
    ஆனப்பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
    அறிவாய் விளங்கு முதற் சோதிநான்


    என்று ஞானிகளைப் போல முழங்குகிறார். இந்த நிலை அடைந்த ஒருவன் உலகத்தின் அங்கீகாரத்திற்காக கவலைப் படுவானேன் ?

    பாரதியார் உணர்ச்சியின் வேகத்தில் வார்த்தைகளை கொட்டும் உன்னத கவிஞர். அவர் மனம் அவ்வப்போது ஆன்மீக வெளியில் சஞ்சரித்தாலும் அவரது கவிதை உள்ளம் இகலோகத்திலும் அவரை இழுத்து வைத்தது. எனவே தான் அவரது போக்கு ஊஞ்சல் போல் முன்னும் பின்னுமாக சஞ்சரித்தது என்று எழுதியிருந்தேன்.

    என்ன மேடம் Home work-assignment சரியா செஞ்சுட்டேனா ? :))

    ReplyDelete
  8. ஆஹா! வசிட்டர் வாயால்....

    கபீர் தோஹா எழுதிய ஞானி.

    பாரதி அப்பப்போது ஞான சிதறல் கண்ட கவி. அதனால கவிக்கு உண்டான அத்தனை உணர்ச்சிகளும் இருந்தன.

    ReplyDelete
  9. // இந்த நிலை அடைந்த ஒருவன் உலகத்தின் அங்கீகாரத்திற்காக கவலைப் படுவானேன் ?//
    @கபீரன்பன்,
    @திவா, ரொம்பவே பெருமை, வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷின்னு! :P

    உலகத்து அங்கீகாரத்துக்கு அவர் எங்கே கவலைப்பட்டார்? ம்ம்ம்ம்ம்??/ திவாவின் "ஜிங்சக்" சத்தம் பெரிசாக் கேட்கிறதாலே, நீங்க சொல்றது மட்டுமே கேட்கும், நான் சொல்றது யாருக்கும் சரியாக் கேட்காது. இது கொஞ்சம் ஓயட்டும், தனியா என்னோட வலைப்பக்கத்திலே வச்சுக்கறேன். இதிலே ஆரம்பிச்சா பெரிசாப் போயிடும், அதுவரையிலும் இரண்டு பேரும் மாத்தி, மாத்தித் தாளம் போட்டுக்குங்க, வாழ்த்துகள்! :P

    ReplyDelete
  10. அறிமுகங்கள் அருமை!
    ஜீவா ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தவர் என்பதை மட்டும் ஒப்புக்க முடியாது கீதாம்மா :-)
    இன்றைய ஆன்மீகப் பதிவாளர்களில் தத்துவ சாரம் தரும் மிக முக்கியமான பதிவர் ஜீவா!
    ஜீவா ராகங்களில் தாகங்கள் தீர்க்கும் இசை இன்பம் பதிவரும் கூட!

    கபீரன்பன் ஐயாவுக்கு அடியேன் அதிகம் பின்னூட்டியது இல்லை என்றாலும் பதிவுகள் தவறாமல் படித்து விடுவேன்! இனி சற்றுக் கூடுதல் நேரம் ஒதுக்கி அவருடனும் திவா ஐயாவுடனும் உரையாட ஆவல்!

    ReplyDelete