Monday, August 25, 2008

பக்கவாட்டில் எறிந்த கற்கள்

காதல் வரையறுக்க முடியாத ஒரு வார்த்தை. அது ஒரு விசித்திரமான நிலை. கண்ணீர் இனிக்கும். நம்பிக்கையில்லையா? அனுபவிப்ப‌வருக்கு புரியும். காதல் முறிந்த பிறகும் அதை அசை போட மனம் தவிக்கும். கல்லெறியப்படும் போது கனிகளோடு சில பிஞ்சுகளும் மரணமடைகின்றன. அது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் அவைகளின் மரணம் முன்னமே வந்ததை எண்ணி சந்தோஷப்படலாம். பிறிதொரு நாளில் கத்தியால் பிண ஆராய்வு நடந்தேறி மரணத்தை முத்தமிடாமல் கணப்பொழுதில் இறந்ததை எண்ணி மகிழலாம். ஆனால் காதலின் இறப்பை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. காதல் இறந்தால் அந்த வலி ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் அப்பாற்பட்டு விளங்கத் துவங்கிவிடும். அப்படி ஒரு சில சோக பதிவுகளின் கோர்வை தான் இன்றைய தொகுப்பு. இது போன்ற‌ பதிவுகளை படிக்கும் நேரம் உடலில் ஒரு சிறு அலை உருவாகி உயிருக்கு மட்டும் வலி ஏற்படுத்தி மறையும் நிலை உணர்ந்திருக்கிறேன். எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கொண்டு அந்த வலியை அனுபவிப்பீர்களா?

*

சென்ஷி,

வெந்து தணிந்தது காடு அப்படிப்பட்ட ஒரு பதிவு. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்துப்படித்தேன்.

*

இன்றைய தலைப்புக்கும் இதற்க்கும் சம்மந்தம் இருக்கிறதா எனப்பார்த்தால் "தெரியவில்லை" என்கிற பதில் தான் எப்போதும் என்னிடம் இருந்து வரும். அதை சிந்திப்பதாகவும் இல்லை நான். சில காதல்கள் பரிசல், சில காதல்கள் காகிதக் கப்பல், நிறைய காதல்கள் குளத்தில் பக்கவாட்டில் எறியப்படும் கல். நீரை ஏமாற்றி சிறிது தூரம் பயணித்தாலும் காலப்போக்கில் உள்ளமுங்கி தன் எடையளவு குளத்தின் உயரத்தை அறிவியல் விதிப்படி உயர்த்தும். குளமென்னவோ குளமாகவே தெரிந்தாலும் உள்ளே சென்ற கல் தன் இருப்பை அவ்வப்போது வெளிப்படுத்துவது குளத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு விடயம். நெஞ்சத்தின் ஆழத்தில் நீச்சல் தெரியாமல் மூழ்கிப்போன பல நினைவுகள் வருடங்கள் கடந்து நீச்சல் பயின்று வெளியேறி ஆக்கிரமித்துக்கொள்ளும். அந்த நொடியை அனுபவிப்பது மட்டுமே அதை புரிந்துகொள்ள வழி. இது போன்று நீச்சல் பழகிய கல் ஒன்று தன் இருப்பை காட்டிக்கொள்ள மேல் எழும்பும் ஒரு சிறுகதை கோபிநாத் எழுதிய செல்வியின் டைரி.

*

வெட்டிப்பயல் எழுதிக்கொண்டிருக்கும் ஆடு புலி ஆட்டம் அழகா போய்கிட்டு இருக்கு. ஆனால் நான் சொல்ல வந்தது இந்த பதிவை இல்லை. நடுவில் அதன் தொடர்ச்சியை உடைத்து கொல்டி என்கிற சிறுகதை எழுதினார். அதன்னவோ இயல்பான கதையாக இருந்தாலும் அவர் சொல்லி இருந்த விதம் எனக்குப்பிடித்து இருந்தது. கதையின் போக்கில் அதன் முடிவை ஊகித்து விட்டேன் என்றாலும் கதையை முழுதாய் படிக்க செய்தது அவரது நடை. கடைசியில் சின்னதாய் ஒரு ஏமாற்றம். அறுத்துக்கொண்டவனுக்கு விரலென்ன தலையென்ன இரண்டுமே வலி தான். காதலில் காயங்களும் அப்படியே.

*

கதை என்று சொன்னால் நினைவுக்கு வரும் திவ்யாவின் கதைகளை குறிப்பிடவில்லை. காரணம் நான் சொன்ன‌ இவைகள் வேறு விதமான கதைகள். கொஞ்சம் சோகத்தை உள்ளடக்கியவை. எனக்குப்பிடித்த பாட்டு வரி ஒன்று உண்டு. "காசு மாலை தானே கலையின் சன்மானம்" என ஒரு கேள்விக்கு "கண்ணீர் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்" என அழகாய் பதில் வரும். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மேலே சொன்ன கதைகள் போல படிப்பவர்களை கொஞ்சம் அசெளகர்யப்படுத்தினால் அந்த பதிவு அட்டகாசமான பதிவென்பதில் சந்தேகமில்லை. அசெளகரியம் என்பது நான் சொல்வதன் அர்த்தம் இணைத்துயர்மை (ஆங்கிலத்தில் "Empathy") என்கிற பொருளில் கொள்ளவும்.

இதுக்கே பீலிங் ஆனா எப்படி? நாளைக்கு மனசை கொஞ்சம் கல்லாக்கிக்கிட்டு வாங்க. :)

நன்றிகள் ‍
-ஸ்ரீ.

8 comments:

  1. வாழ்த்துக்கள் மாப்பி ;)

    பதிவுக்கு ஒரு நன்றி ;)

    ReplyDelete
  2. என்னப்பா? நீதான் எழுதினாயா?இல்லே மண்டபத்திலே யாராவது எழுதிக் கொடுத்தாங்களான்னு கேக்க வைச்சுடுவே போல இருக்கே???நல்லாருக்கு....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. நண்ப ஸ்ரீ

    நல்ல சுட்டிகள் - நல்ல பதிவுகள்
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. @ கோபிநாத்

    :) நன்றி உங்களுக்கு தான் மாப்பி சொல்லணும்.

    @ aruna

    மண்டபம் எல்லாம் காலியா இருக்குகா இப்போலாம். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க மாச சம்பளத்துக்கு ஆள் வெச்சிக்கிறேன் :)

    @ ஜி

    என்ன ஜி உங்களை கலாய்க்கிலன்னு பீல் பண்றீங்களா? :)

    நன்றி தல தொடர்ந்து படித்து வருவத‌ற்கு

    @ cheena (சீனா)

    பதிவுகள் நல்ல பதிவுகளாக இருப்பினும் அதன் கரு எத்தனை பேருக்கு பிடித்ததென தெரியவில்லை தோழரே. ஊக்கத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. \
    இது போன்ற‌ பதிவுகளை படிக்கும் நேரம் உடலில் ஒரு சிறு அலை உருவாகி உயிருக்கு மட்டும் வலி ஏற்படுத்தி மறையும் நிலை உணர்ந்திருக்கிறேன்.
    \

    நல்ல சொல்வளம் ஸ்ரீ அண்ணன்...

    ReplyDelete
  6. \
    எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கொண்டு அந்த வலியை அனுபவிப்பீர்களா?
    \

    கட்டாயமா,வலித்தாலும் அனுபவிக்க விரும்புகிற வலி காதல் ஒன்றுதானே...

    ReplyDelete
  7. @ தமிழன்

    பொறுத்துக்கொண்டு படித்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete