Wednesday, September 24, 2008

வலையுலகப் புரட்சியாளர்கள்

சமூகக் கட்டமைப்பின் மீதும், மனித நேய மறுதலிப்புகள் மீதும் கோபம் கொண்டும், சக மனித கரிசனையின் வெளிப்பாடாகவும் பல கட்டுரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.
பெரும்பாலான கட்டுரைகள் சமூகத்தின் கறைகளை எப்படியேனும் அகற்றவேண்டும் என்றும், அதன் குறைகளை குறைந்த பட்சமேனும் குறைக்க வேண்டும் எனவும் மும்முரம் காட்டுகின்றன.


இத்தகைய சமூக, சக மனித அக்கறை ஒட்டு மொத்த மனித குலத்தின் நம்பிக்கையை அணையாமல் காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.


அந்த வகையில் வருகின்ற எழுத்தாளர்களில் ஒருவர் வே.மதிமாறன். பெரியார் கொள்கைகளின் மேல் தீராப் பிடிப்புடைய இவருடைய தளம் பல புரட்சிகரமான சிந்தனைகளை துணிச்சலுடன் சபைமுன் வைத்து சவால் விடுகிறது. பெரியாரின் பிரியன் என்பதால் இவரிடம் இயல்பாகவே மதங்களைக் கடந்த மனிதநேயப் பார்வை நிரம்பி இருக்கிறது.


இவர் சில கவிதைகளும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக என்ன செய்து கிழித்தார் பெரியார் என்பது அவருடைய கவிதைகளில் ஒன்று !


மதிமாறன் படைப்புகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பாரதீய ஜனதா என பாரதி குறித்த எதிர்விமர்சனங்களை நூலாக வெளியிட்டிருக்கிறார். அது பல தளங்களில் சலசலப்பை (கூடவே கைகலப்பையும்) ஏற்படுத்திய நூல். மத அமைப்புகள், சாதீய அடக்குமுறைகள், சமூக ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு போன்ற உணர்வுகளும், பெரியார் சிந்தனைகளின் இணை சிந்தனையும் உங்களிடம் இருந்தால் இந்தத் தளம் உங்களுக்குப் பிடிக்கும்.


அசுரன் அவர்களின் போற்பறை எனும் தளம் பல்வேறு சீர்திருத்தச் சிந்தனைகளை விரிவாகவும், பரவலாக ஏற்றுக் கொள்ளும் வகையிலும் வகைப்படுத்துகிறது. அவருடைய சிந்தனைகளோடு பலருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம், எனினும் தெளிவான பார்வையும், ஆழமான பதிவுகளும் அவருடைய தளத்தின் வலிமை என்றால் அது மிகையல்ல.


இயற்கையோடு இணையாத வாழ்வின் சிக்கல்களும், மேனாட்டு கலாச்சார தாக்கங்களும், இன்னும் ஆழ்மன அளவில் விடுதலை பெறாத அரசியல் அமைப்புகளும், சாதீய அடக்குமுறைகள், அத்துமீறல்கள், மத வெறி என பல விஷயங்கள் இவருடைய எழுத்துகளின் முதுகெலும்பாக இருக்கின்றன.


ஜமாலனின் தளம் ஆரோக்கியமான பல கட்டுரைகளால் நிரம்பி வழிகிறது. இவருடைய கட்டுரைகளும் ஆழமான பார்வையுடனும் தெளிவான அணுகுமுறையுடனும் இவருடைய சமூகத்தின் சீர்கேடுகளின் மீது சாட்டையாய் இறங்குகின்றன. தீவிர வாசகர்களுக்கு நிறைவளிக்கும் தளம் இது.


பட்டினியின் கொடுமை தாங்காமல் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்று தப்பிய தாயின் பரிதாப சூழலின் பின்னணியில் சமூக அமைப்பை விமர்சிக்கும் ஆதிரையின் பதிவு மனதை கனக்கச் செய்கிறது. மனிதனின் ஆழ்மனக் கிடங்கில் உறங்கியே கிடக்கும் கரிசனை, மனிதநேயம் இவற்றை சற்று ஆக்ரோஷமாகவே உலுக்கி எழுப்புகிறது இந்தப் பதிவு.


அற்புதனின் தாய்நாடு தளமும் சமூக அவலங்களை விளக்கி, சில மாற்றங்களை முன்னிறுத்துகிறது. மனதைத் தொடும் பதிவாக பல பதிவுகள் இருக்கின்றன.


ஜெகத் அவர்களின் கைமண் அளவு அவ்வப்போது நான் உலவும் இடம். அவருடைய பதிவுகளில் சமூக அக்கறையும், உலகப் பார்வையும் தெரிகிறது சுதந்திரம் எனும் அவரது பதிவு இது !


சட்டம், சமூகம், மனித உரிமை குறித்த பதிவுகளால் வலுவாக இருக்கிறது மக்கள் சட்டம் எனும் தளம். தெரியாத, தெரிய வேண்டிய பல விஷயங்கள் அங்கே உண்டு ! இப்படியெல்லாம் கூட இருக்கிறதா என நினைக்க வைத்த தளம் இது.


உறையூர் காரனின் பல பதிவுகள் விரிவாகவும், தெளிவாகவும் ஆழமாகவும் இருக்கின்றன. ஒரு சோறு பதமாக இந்தக் கட்டுரை.


என்னுடைய இந்தக் கட்டுரையை சீரியஸ் எழுத்து வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே.


நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையும் வசதியும் நம்மை இலக்கியம், தொழில் விஞ்ஞானம், பயணம் என பல தளங்களுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது. ஆனால் வேர்களில் இருந்து பிடுங்கி எடுத்திருக்கிறது. இயற்கையிலிருந்தும், குடும்ப உறவு எனும் ஆரோக்கியமான கட்டமைப்பிலிருந்தும் சிதறி ஓடச் செய்திருக்கிறது.


இந்தச் சூழலில் நமது வாழ்க்கையை அவசரமாய் ஒரு மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல் அவசியம்.


மதிப்பீடுகள் முக்கியமா ? வெறும் கரன்சிகள் முக்கியமா என்னும் வினாவை உள்ளுக்குள் ஒருமுறை எழுப்புவோம்.


சிந்தனை திருத்தப்பட்டால், வாழ்க்கை அர்த்தப்படும்.


மீண்டும் சந்திப்போம்

2 comments:

  1. Anbin Xavier,

    No Tamil font at present - Sorry

    PuRatsikaramaana pathivu - athikam parkkappadaatha pathivukaLai aRimukap paduththiya vitham nandRu.

    poRumaiyaakach selkiReen - padikkiRen - maRumozhi idukiReen

    NalvaazththukaL xavier

    ReplyDelete