Thursday, September 25, 2008

கவிஞர்கள் பார்வையில் அம்மா !




ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!



என கவிப்பேரரசு வைரமுத்து தன் அன்னையைப் பற்றி கவிதை வரிகளில் கண்ணீர் வடித்திருப்பார்.

அன்னையைப் பற்றி எழுத கவிப்பேரரசு முதல் கவிதை எழுதத் துவங்கும் கவிக் குழந்தைகள் வரை எல்லோருமே பிரியப்படுகின்றனர். காரணம் உலகில் எப்போதும் கலப்படமின்றிக் கிடைக்கும் ஒரே பொருள் தாயின் நேசம் மட்டும் தான்.


காய்ச்சலில்
நெற்றிதொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து
உற்சாகப்படுத்தஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.

என அம்மாவின் அருகாமை இல்லாத நிலையைச் சொல்லும் நிலாரசிகனின் கவிதை தாயின் நினைவுகளைக் கிளறி விடுகிறது.

தூர தேசத்தில் இருப்பவர்களுக்கு எங்கோ கிராமத்து மூலையில் பிள்ளைகளின் நினைவாய் தேயும் தாயின் ஏக்கங்கள் தெரியாது என்பது தான் பலரின் எண்ணம்.

ஆனால் தாயின் அன்பையும், அருகாமையையும் உணர்ந்தவர்களால் எத்தனை கடல்களுக்கு அப்பால் வசித்தாலும் தாயின் நினைவுகளுக்கு அப்பால் வசிக்கவே முடியாது.

நீண்ட வருடங்களுக்கு முன்பு அமெரிக்க வாழ்க்கையின் தனிமை வறுத்தெடுத்த பொழுதில் வார்த்தெடுத்த எனது அம்மா கவிதை இன்னும் எனக்கும் என் எழுத்துக்களை ரசிக்கும் தோழர்களுக்கும் பிரியமான கவிதையாய் இருக்கிறது.

நகரத்தின் வெப்பத்தில் வசிக்கும் எனக்கும், கிராமத்தின் மரங்களுக்கிடையே வசிக்கும் என் அம்மாவுக்குமான தொடர்பு இன்னும் அவ்வப்போதைய சந்திப்புகளும், அடிக்கடி நிகழும் தொலைபேசி உரையாடல்களும் தான் எனும் வாழ்க்கை நிர்ப்பந்தம் வலியூட்டுகிறது.
ஆயிரம் சொல்லுண்டு அகிலத்தில்
ஆனாலும் ஒன்றுண்டு நெஞ்சத்தில்
அன்பிற்குமுண்டு பலவகை
அம்மாவின் வகையொன்றேதான்
அணைப்புகள் கொடுத்திடும் சுகங்கள்
அன்னையின் அணைப்பிற்குண்டோ ஈடு
அன்றவள் இருக்கையில் இல்லை
அறிவு ஏழை என் வசம்
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகுது இதயம் வெறுமையாகவே
அன்னையர் தினம் வரும் வேளையிலே
அனுபவம் தன்னிலே ஒரு சொல் கேளீர்
அருமையாய் பேணி அம்மாவைக் காத்திடும்
ஆவியாய் அவள் மறைந்த பின்னாலே
அழுது புரளுவதும் ஆயிரம் பேசுதலும்
அமைதியத் தராது
அடித்தே சொல்லுவேன்

என இணையத்தில் காணக்கிடைத்த அமல் என்பவரின் அம்மா கவிதை அம்மாவை பேணுங்கள் என மோனை முத்திரையுடன் விண்ணப்பம் விடுக்கிறது. இருக்கும் வரைக்கும் அம்மாவின் அருமை தெரிவதில்லை.
பார்வை இழந்தபின் ஐயோ எனக் கதறுவதில் பயனில்லை. இருக்கும் போதே அம்மாவைப் பேணுவதும், பெருமைப்படுத்துவதும், அம்மாவின் வார்த்தைகளுக்கு முன்பாகவே அவளுடைய தேவைகளை நிறைவேற்றுவதும், அன்பின் அருகாமையை அன்னையின் கரம் தொட்டு உணர்த்துவதும் என நிஜமான நேசங்கள் பரிமாறப்பட வேண்டும்.

தாயின் அருகாமை திருமணமான பெண்களின் உள்ளத்தில் அதிகமாகவே எழுவது கண்கூடு. அன்னையைப் பிரிந்து கணவனுடன் வாழும் சூழல் பாதங்களில் தீ மிதிப்பதாகவும், இதயத்தில் தீ மிதப்பதாகவும் பெண்களுக்கு காயம் ஏற்படுத்தும்.

உன் மடியில் உறங்கி
நீ ஊட்ட உண்டு
உன் வசவில் சிணுங்கி
உடன் பிறப்போடலைந்து
உனை ஏய்த்து மகிழ்ந்து
சின்னவளாகவே இருந்திருந்தால்..

சுற்றங்களை விடுத்து
மணமொன்று புரிந்து
மறுதேசம் நுழைந்து
நிதமும் உனைத்தேடி
நினைவினில் நீராடி
ஏங்காது இருந்திருப்பேன்

எனும் கீதா வின் கவிதை அனுபவத்தின் வெளிப்பாடாய் இருக்க சாத்தியங்கள் நிறையவே உண்டு.

வெள்ளைத் தேங்காயும்
கருப்பு மிளகும்
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய்
தால லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையிலே
அழகருக்கும் வாயூரும்

என தோழி வைகைச்செல்வி சொல்வது கூட திருமணமாகி நகர வாழ்க்கைக்கு வந்து விட்ட ஒரு பெண்ணின் கிராமத்துத் தாயின் நினைவலைகள் தான்.

அந்த நினைவலைகள் பெண்களுக்கு மட்டுமானதல்ல என்பதை

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

எனும் கவிப்பேரரசின் வரிகள் நிரூபிக்கின்றன.

புரியவில்லையே அம்மா எனும் எனது கவிதை ஒன்று ஒரு பெண்ணின் ஏக்கம் எப்படியிருக்கும் எனும் ஆணின் கற்பனைக்குப் பிறந்தது.

அம்மாவின் பிரிவு உயிரிலிருந்து உயிரைப் பிரித்தெடுப்பது போன்றது. ஜனனத்தில் தாய் எனும் உயிரில் இருந்து மழலை எனும் இன்னோர் உயிர் பிரிந்து வருகிறது. தாயின் மரணத்தின் அந்த பிரிந்து வந்த மழலை உயிரின் ஒரு பாதி இறந்து போகிறது. தாயின் பிரிவு கவிதைகளின் வாசிக்கும் போதெல்லாம் அம்மாவைக் கட்டிக் கொண்டு உறங்கவேண்டும் எனும் ஏக்கத்தை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது.

தமிழ்ராஜாவின் அம்மா உன் நினைவுகள் என்னும் கவிதை உயிரை உலுக்குகிறது.


சுந்தர ராமசாமி அவர்களின் கவிதை ஒன்றும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது

கொல்லிப்பாவை
ஸ்டேஷன்
ஒருமரம்
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
கடைசிக்கவிதை

என ஒரு தனிமையின் சூழலையும், ஏக்கத்தையும் கவிதைகளில் கொண்டுவருகிறார். நவீன மொழி அவருடையது.



“புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,
அப்போதான் காலம் தள்ளமுடியும்!”
அக்காவிற்குச் சொன்ன
அதே அம்மாதான்
என்னிடம் சொன்னாள்.

“உன் பொண்டாட்டி,
தலையணை மந்திரம் ஓதுவா.
அவ முந்தானைல சிக்கிக்காத
நீ ஆம்பளைடா!”

எனும் நந்தாவின் கவிதை மெலிதான நகைச்சுவையையும் மீறி ஒரு தாயின் கரிசனை தன் பிள்ளைகள் மீது எப்படியெல்லாம் படர்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. அக்காவின் கணவனின் அம்மா என்ன சொல்லியிருப்பாள் என்றும், தனது மாமியார் மகளிடம் என்ன சொல்லியிருப்பார் என்றும் கவிஞனின் பார்வை ஒரு தொடர்சங்கிலி ஓட்டத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும் என நம்பச் செய்கிறது இந்தக் கவிதை.

அம்மா!
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையென்றால்
மம்மியாகியிருப்பாய் !

எனும் கோட்டை பிரபு வின் கவிதை ஒன்று வறுமை தமிழைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் வசதிகள் ஆங்கிலக் கதவுகளுக்குள் அடைபடுகின்றன என்பதையும் பளிச் என புரிய வைத்து நகர்கிறது.

அன்பு அவள் மொழி
ஆறுதல் அவள் வார்த்தை
இன்முகம் அவள் முகவரி
ஈடில்லாதது அவள் பாசம்
உயர்வானது அவள் பண்புநலன்
ஊக்கமளிப்பாள் உயர்வு பெற
எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்
ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்
ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா
ஒற்றுமையே அவள் வேதம்
ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை
ஔரவமானது அவள் சக்தி
அஃதே அவளே அம்மா.

எனும் கலையரசனின் அ..ஆ..இ…ஈ… கவிதை வருடங்கள் கடந்தபின்னும் ரசிக்க வைக்கிறது.

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
-
வைரமுத்து.




மீண்டும் சந்திப்போம்.

5 comments:

  1. நல்ல கலெக்ஷன் சேவியர்..

    ஆனா டைட்டிலை பார்த்தவுடனே நீங்க எப்ப அ.தி.மு.க.வில சேர்ந்தீங்கன்னு நான் டவுட் ஆனேன் :))))

    ReplyDelete
  2. நன்றி வெண்பூ...

    //ஆனா டைட்டிலை பார்த்தவுடனே நீங்க எப்ப அ.தி.மு.க.வில சேர்ந்தீங்கன்னு நான் டவுட் ஆனேன் :))))
    //

    சிரிச்சேன். நினைக்கவே இல்லை இப்படி ஒரு பார்வை இருக்குமென :)

    இருந்தாலும் இப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க :)

    ReplyDelete
  3. அருமை... நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. //எனக்கொண்ணு ஆனதுன்னா ஒனக்குவேற பிள்ளையுண்டு ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாயிருக்கா?- வைரமுத்து.//

    இதையே நான் அடிக்கடி அம்மாவிடம் சொல்வதுண்டு...உனக்கென்னம்மா? ஐந்தாறு பிள்ளைகள்....யார் குரலிலாவது சுகம் கண்டு விடுவாய்....எனக்கு நீ ஒரே ஒரு அம்மாதானே என்று..அருமையான அம்மாத் தொகுப்பு.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. அன்பின் சேவியர்

    அம்மாவைப் பற்றிய அருமையான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பதிவில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி - இணையத்தில் - வலைப்பூக்களில் - பல நல்ல கவிதைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. என்ன செய்வது ?

    நன்று நன்று

    ReplyDelete