Thursday, December 4, 2008

ச-மையல்..!

ழுத்துக்களில் வசீகரமான வகை ஒன்று இருக்கிறது.

எப்படியும் முழுதாகப் படிக்க வைத்து விடும். பிடிக்கின்றதோ, இல்லையோ..! அப்படி சில வலைப்பதிவுகளைப் பார்ப்போம்.

அ. ஜெகத் எழுதும் கைமண் அளவு. தெளிவான நடை. பிசிறடிக்காத ஒரு சாக்ஸ்போனின் குரல் போல இவரது பதிவுகள் இருக்கின்றன. சொல்ல வந்த கருத்தை துல்லியமான தகவல்களோடு தருகிறார். ஏற்பதும், மறுப்பதும் வேறு..! தெளிவான, வழுக்கல் இல்லாத நடை பார்க்க விரும்பினால், இங்கே பார்க்கலாம்.

ஆ. பி.கே.பி. பற்றி சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். முக்கியமாக அவர் கொடுக்கின்ற பிடிஎஃப் இலவசங்களுக்காகவே அவரது பதிவுகளைப் பார்த்து வந்தவர்கள், அவரது வார்த்தைகளை வசதியாக காணாமல் விட்டிருந்தால், நல்ல சில அனுபவங்களை தவற விட்டவர்கள் என்பேன்.

பி.கே.பி.

இ. 'அவார்டா கொடுக்கறாங்க'

இப்படி ஓர் அதிசயமான தலைப்பை வைத்துக் கொண்டு தமிழ்த் திரைப்படங்களை அலசிக் காய வைத்து, கதை பேசுகின்ற வலைப்பதிவு, சுவையானதொன்று. சமீபத்தில் இயக்குநர் ஸ்ரீதர் மறைவிற்கு பக்ஸும், ஆர்.வி.யும் எழுதிய பதிவுகள் இவர்களது ரசனைத் திறம் பற்றிச் சொல்கின்றன.

மிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, மானிடர் எல்லோர்க்கும் முதலில் சமையல்; பின் தான் மையல். பசி வந்திடப் 10ம் பறந்து போகும் என்றனர். 'ஒருவன் இதயத்தை அவன் வயிற்றின் மூலம் அடையலாம்' என்று பைபாஸ் ரூட் சொன்னார்கள். 'உப்பிலாப் பண்டம் குப்பையிலே; உப்பிருக்கும் பண்டம் தொப்பையிலே' என்பது பழைய கோகுலம் ஜோக். பந்தியில் யாருக்கு முதல் பந்தி என்பது கல்யாணங்களில் அடிதடி வரை போகும். செல்லப்புட்டியைக் காணாமல் தேடும் காமராஜனிடம், 'நீங்களும் குக்; உங்க கிராமமும் குக்கா..?' என்று திரிபுரசுந்தரி க்ரேஸி மோகன் டயலாக் சொன்னார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவையிலிருந்து அடையாறில் கிளை பரப்ப, முருகன் இட்லி கடை மதுரையில் இருந்து, பெசன்ட் நகருக்கு ஒரு ஆபீஸ் போட, சரவண பவன் டெல்லி, என்.ஜே. என்று இறக்கை விரிக்கிறது. 'சாப்பாட்ல கை வெச்சப்புறம் துரத்திர இல்ல; நீ அழுதுகிட்டே போடற பந்திக்கு வர்றேன்' என்று பரதேசி சபதம் போட்டு விட்டுச் சென்றான். நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் உணவு முறைகள் பற்றியும், தொலைந்து போன கம்பு, கேழ்வரகு பதார்த்தங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இரவு ரெண்டு மணிக்கும் கல்லில் குத்தி மைதா பிசைந்த புரோட்டாவும், சிக்கன் குருமாவும் கிடைக்கும் ஆரப்பளையம் பஸ் ஸ்டேண்டும், புழுக்கை எழுத்துக்களில் முன் பேர் எழுதி விட்டு, பெரிதாக 'சாந்தி ஸ்வீட்ஸ்' என்று எழுதி ஏமாற்றி அல்வா கொடுக்கும் நெல்லை சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும், தேங்காய் எண்ணெய் பொறித்த சிப்ஸ் மணக்கும் திருவனந்தபுரம் நிலையமும், பின்னிரவு ரெண்டு மணிக்கும் புழுங்கித் தள்ளும் பாரீஸ் கார்னர் டீக் கடைகளும் இதுவரை நான் கண்ட இரவு நேர அட்சயப் பாத்திரங்கள்.

அ. தூயாவின் சமையற்கட்டு.

எங்கள் ஊர்ப்பக்கங்களில் சமையல் அறையை சமையக்கட்டு என்று தான் சொல்வோம். அப்படியே இவரும் சொல்கிறார். வறட்சியாகச் சமையல் குறிப்புகளை மட்டும் சொல்லாமல், சுவையாக எழுத்துக்கள் வழியாக அவற்றைப் பரிமாறவும் செய்கிறார்.

அ. ரஜ்மியின் ரெசிப்பிஸ்.

வீட்டுத் தலைவியான ரஜ்மி அவர்கள் கொடுக்கின்ற சமையல் முறைகள். ஆங்கிலத்தில் எழுதிய வரை குறைவாக எழுதியவர், தமிழில் எழுதும் நுட்பம் தெரிந்தவுடன், பலப்பல பதார்த்தங்களாக எழுதிக் குவிக்கிறார்.

இ. சமைத்துப் பாருங்க என்கிறார் ஜெர்மனியில் வசிக்கும் கட்டுமான நுட்பரான ராகினி. மிகக் குறைவாகவே எழுதி இருந்தாலும், இவர் எழுதுகின்ற பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்த போது,'அடங்கொக்கமக்கா; என்று கூவி விட்டேன். இவரது சமையல் குறிப்பில் 'ஆட்டு இறைச்சி வடை' மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கின்றது.

ஈ. 'தாளிக்கும் ஓசை'

எல்லோர்க்கும் தெரிந்த ஆள் தான். ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். இவரது சமையல் குறிப்புகளோடு, சளைக்காது போட்டி போடும், கலாய்த்தல் குறிப்புகள். 'மரத்தடி ஜெயஸ்ரீ' என்று பெயர் வருமளவிற்கு மரத்தடி குழுமத்தில், 'சுஜாதா சூறாவளி'யையே உருவாக்கியவர். வாத்தியார் மறைவிற்குப் பின் இன்னும் இவர் எதுவும் எழுத வராமல் இருக்கிறார். கூடிய விரைவில் ஆறுதல் பெற்று வர வேண்டுகிறேன்.

1 comment:

  1. Vasanthakumar,

    Thanks for your kind words!

    RV from http://awardakodukkaranga.wordpress.com/

    ReplyDelete