Wednesday, December 31, 2008

கதை சொல்லிகள் !

பிறந்த கணம் தொட்டுக் கதைகளோடு கலந்துவிட்டவர்கள் நாம். சூழவும் சொல்லப்பட்ட கதைகளிலிருந்தே மொழிகளைக் கற்றுக்கொண்டோம் என்பது உண்மையன்றி வேறென்ன ? நமது ஒவ்வொரு செயல்களும் கூடப் பிந்திய கணங்களுக்குக் கதைகள்தானே.

வரலாறுகள் புராதனக்கதைகள்.
வாய்மொழி, சுவடிகள், புத்தகங்களெனத் தொடர்ந்து இப்பொழுது இணையத்திலும் கதைகள் சொல்லப்படுகின்றன. வேற்று தேசமொன்றின் யுத்தக்கதைகளென அல்லது பேய்களலையும் கதைகளெனச் சொல்லப்பட்டவற்றின் யுத்தவீரர்கள், மனிதத்தலைக் குதிரை, விளக்குமாறில் பறக்கும் சூனியக்கிழவி, சிறகு முளைத்த தேவதைகள் எல்லாம் இன்னும் மூளையில் பத்திரமாகவும், பாத்திரமாகவும் உள்ளன எனில் அந்தக் கதைகளெல்லாம் சுவாரஸ்யம் மிகுந்தவை அல்லது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டவை என்றுதானே அர்த்தம்.

அவ்வாறாகத் தங்கள் வலைப்பூக்களில் சுவாரஸ்யம் மிகுந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்பவர்கள் பற்றி இன்று அலசுகிறேன்.

சாந்தினி வரதராஜன் - 'நாளைய உலகம்' எனும் வலைப்பூவில் இவரது நேற்றைய காலங்களில் தோய்ந்த உலகம் சிறுகதைகளாக முழுமை பெற்றிருக்கிறது. அனேகமான கதைகள் தனது தாய்த்தேசத்தைப் பிரிந்த வலிகளை, அம்மாவுடனான நாட்களை, சொந்த மண்ணில் கழிந்த இளமைப்பருவத்தை அசைபோடுகின்றன.ஈழ மொழிநடையைப் பாவித்துக் கதைகள் சொல்லப்படும் விதம் சிறப்பு.

கே.பாலமுருகன் - உண்மை நிகழ்வு, புனைவு, பின்னவீனத்துவம், நகைச்சுவை என எல்லாத்தளங்களிலும் சிறப்பாகப் பயணிக்கின்றன இவரது சிறுகதைகள். மிகவும் வித்தியாசமான நிகழ்விடங்களைக் காட்சிப்படுத்துகின்றன இவர் கொண்டு வரும் எழுத்துக்கள் .

நிலாரசிகன் - அறிவியல், விஞ்ஞானப் புனைகதைகள், அனுபவக் கதைகள், கிராமத்துக் கதைகள், காதல் தொடர்களெனப் பல தளங்களில் தனது எழுத்துக்களை சுவாரஸ்யமாகக் கதை சொல்லவைத்திருக்கிறார் இவர்.

டிசே - மனமதிரச் செய்யும் பால்யத்தின் காலங்களை இவரது 'ஹேமா அக்கா' சிறுகதையில் கண்டேன். ஒவ்வொரு வரிகளும் கண்முன்னே களத்தினையும் அம்மனிதர்களையும் காட்சிப்படுத்துகின்றன. போரின் வன்மப்பொழுதொன்றில் நிகழ்ந்த வன்முறை, பெருங்கோபமொன்றினால் வெளியிட்ட உக்கிரவார்த்தைகளெனக் கதை, வாசிப்பவர்களின் மனதை இழுத்துக் கொண்டு பயணிக்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன் - சிறுகதையுலகின் நீண்ட கால எழுத்தாளர். வாழ்வின் எல்லாப்புள்ளிகளையும் இணைத்து சிறுகதைகள், குட்டிக்கதைகளென அழகிய கோலங்களைத் தாங்கி நிற்கிறது இவரது வலைப்பக்கம். தனது சிறுகதைத் தொகுப்பின் கதைகளையும் பதிவிட்டிருப்பது பிடித்திருக்கிறது.

அகிலன் - 'மரணத்தின் வாசனை'யென இவர் முகரச் செய்யும் பக்கங்களில் யுத்தமும் குருதியும் சமமாய்க் கலந்த வாடையடிக்கிறது. சிறுகதைகளெனச் சொல்லியிவர் எழுதவில்லையெனினும் இவரது இந்த இரத்தக்குறிப்புக்களின் தாக்கம் மிக நீண்ட நாட்களுக்கு நெஞ்சில் அதிர்பவை. சொற்களையும் எழுத்துக்களையும் அருமையாகக் கையாளும் திறன்படைத்தவரின் கதை சொல்லும் திறனும் அபாரம்.

சக்தி ராசையா - வாழ்வின் பக்கங்களிலிருந்து இவரது கதைகள் புரட்டப்படுகின்றன. மொழி நடையும் பேச்சு நடையும் இயல்பாக வருகிறது இவரது கதைகளில். மனதில் நிற்கும்படியான கருக்களைக் கொண்டு கதை சொல்ல முயல்வது மிக நன்று. நம்பிக்கையூட்டும் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.

பாண்டித்துரை - யதார்த்த வாழ்வின் கணங்களை, அவற்றின் நிகழ்வுகளைத் திறம்படச் சுவாரசியமாக சொல்கின்றன இவரது சிறுகதைகள். இக்கதைகளில் பயன்படுத்தும் வட்டார மொழி வழக்கு, கதைகள் செல்லும் நடை என்பன சிறப்பாக உள்ளன.

 ஆடுமாடு - நாட்டுப்புறக்கதைகளையே அதிகம் சொல்வதாலோ என்னவோ, இவரது புனைப்பெயராக ஆடுமாட்டினை வைத்துக்கொண்டிருக்கிறார். பெயருக்கேற்பவே சொல்லிப்போன கதைகளைப் பலமுறை அசைபோட வைக்கிறார். கிராமத்து வட்டார மொழிவழக்கு இவரது கதாபாத்திரங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.

ஜி -  மிகச் சுவாரஸ்யமான எழுத்துநடை இவருடையது. வாழ்வின் அனுபவங்களைப் பதிவாக்கும் சாயல் கூட அழகிய சிறுகதையை ஒத்திருக்கிறது. இவரது குறுந்தொடர்களும் அருமையாக உள்ளன.

விக்னேஷ்வரன் - நல்ல தரமான சிறுகதைகளைத் தந்த இவரது தற்போதைய பதிவுகள் ' 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்' எனும் தொடர் நவீனமாக இருக்கின்றன . வாசிக்கும் பொழுது மனதிலே இயல்பாகக் காட்சிகள் விரியும் படி எழுதியிருப்பது இவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

வே.பிச்சுமணி - இக் கதைகள் யதார்த்தக் குறிப்புகள். பெரும்பாலான கதைகள் குடும்பமும் அதன் உறவுகளையும் சார்ந்து சொல்லப்பட்டிருக்கின்றன. கதை சொல்லும் நடை சிறப்பாக இருப்பதோடு பயன்படுத்தும் மொழி, தன்பால் ஈர்க்கிறது.

பாஸ்கர் - அனுபவக் கதைகள், அறிவியல் புனைவுக் கதைகளென்கின்ற வெளிகளில் உலவிவருகின்றன இவரது எண்ணங்கள். சொல்லப்படும் விடயங்கள் சிந்திக்க வைப்பதோடு நல்ல மொழி நடையில் எழுதப்பட்டுமிருக்கின்றன.

கோசலன் - காத்திரமான சிறுகதைக்குச் சொந்தக்காரர், தனது வலைப்பூவில் இதுவரை ஒரு சிறுகதையைத்தான் எழுதியிருக்கிறார் எனினும் தொடர்ந்தும் இது போன்ற தரமான சிறுகதைகளை எழுதுவாரென எதிர்பார்க்கவைக்கும் எழுத்து இவருடையது.

இன்னும் வலையுலகில் நான் அடிக்கடி சென்றுவரும்  பல  பிடித்தமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள். இன்னுமொரு பதிவில் அவர்களையும் கதைசொல்லச் சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

12 comments:

  1. எப்பிடிங்க.... இப்பிடி தேடித் தேடி படிக்கிறீங்க? நல்ல அறிமுகங்கள்...

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களின் பதிவு மூலம் பல 'கதாசிரியர்களின்' அறிமுகங்கள் கிடைத்திருக்கிறது.....நன்றி ரிஷான்!!

    ReplyDelete
  3. நன்றி ரிஷான்.

    உங்கள் மேய்ச்சல் ஆழமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. அண்ணே பெரிய பெரிய கதாசிரியர்களின் பெயருக்கு மத்தியில் எனது பெயரும்... சந்தோசமாக இருக்கிறது... நன்றி... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்......

    ReplyDelete
  5. அன்பின் மஹேஷ்,

    //எப்பிடிங்க.... இப்பிடி தேடித் தேடி படிக்கிறீங்க? நல்ல அறிமுகங்கள்...


    புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  6. அன்பின் திவ்யா,

    //தங்களின் பதிவு மூலம் பல 'கதாசிரியர்களின்' அறிமுகங்கள் கிடைத்திருக்கிறது.....நன்றி ரிஷான்!!//

    ஒரு கதாசிரியையின் வருகையில் மகிழ்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

    ReplyDelete
  7. அன்பின் எழுத்தாளர் ஆடுமாடு,

    //நன்றி ரிஷான்.

    உங்கள் மேய்ச்சல் ஆழமாக இருக்கிறது.//

    அருமையான , அடர்த்தியான மேய்ச்சல் நிலங்களை வைத்திருக்கிறீர்கள்.. எனவே எனது மேய்ச்சல் ஆழமானதில் ஆச்சரியமேதுமில்லையல்லவா? :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  8. அன்பின் விக்னேஸ்வரன்,

    //அண்ணே பெரிய பெரிய கதாசிரியர்களின் பெயருக்கு மத்தியில் எனது பெயரும்... சந்தோசமாக இருக்கிறது... நன்றி... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்......//

    ஆமாம்..திறமை மிகுந்த எழுத்துக்கள் உங்களிடமிருக்கின்றன. இந்தப் பட்டியலில் வர நீங்கள் தகுதியானவர் தான்.

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  9. நன்றிகள் ரிஷான் ..
    இப்போது தான் எழுத ஆரம்பித்த என்னையும், இவர்களோடு சேர்த்ததுக்கு...
    எனக்கும் கதை சொல்ல வரும் என நம்ப வைத்தவர் நீங்கள் தான்..
    நன்றிகள் நண்பரே :)

    ReplyDelete
  10. அன்பின் சக்தி,

    //நன்றிகள் ரிஷான் ..
    இப்போது தான் எழுத ஆரம்பித்த என்னையும், இவர்களோடு சேர்த்ததுக்கு...
    எனக்கும் கதை சொல்ல வரும் என நம்ப வைத்தவர் நீங்கள் தான்..
    நன்றிகள் நண்பரே :) //

    உங்கள் ஆரம்பமே அபாரமாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள் :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)

    ReplyDelete