Tuesday, December 30, 2008

இவர்களுக்குக் கவிதை முகம் !

கவிதை - ஏகாந்தத்தில், தனிமையில் அல்லது கூட்டத்துக்குள்ளும் , நீரின் சலசலப்பில், தாகத்தில் என எல்லாப் பொழுதுகளிலும், உணர்வுகளிலும், இடங்களிலும் வண்ணத்தைப் போலப் பரந்துகிடக்கிறது.
அவ்வண்ணங்களைத் தொட்டு ஓவியமாக்குபவர்கள் பலர். எனினும் ஒரு சிலரது கைவண்ணங்கள் மட்டுமே என்றுமே அழியாதனவாக, வனப்பு நிறைந்த ஓவியமாகப் பலர் மனதிலும் சட்டமிட்டுத்தொங்குகிறது ! எனவே காலங்களைத் திசைகளை
அளவிடும் கருவிகளுக்குள் கவிதையும் ஒன்றாக இருக்கிறது எனலாம்.

ஃபஹீமா ஜஹான் - அழகிய சொற்களை ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, பார்த்துக்கேட்டு அனுபவித்தவைகளை வித்தியாசமான வடிவங்களில் கவிதைகளாகத் தருபவர். இவரது கவிதைகளின் முதல் வரியினை வாசிக்கத் தொடங்கும்பொழுதே, கவிதை குறித்து நிற்கும் விம்பம் மனதிலே உருவெடுத்து எழத் தொடங்குகிறது. கவிதை பூர்த்தியடைகையில் சொல்லொணா உணர்ச்சிகள் மனம் முழுதும் வியாபித்து கவிதையோடு நிரம்பி நிற்கின்றன. சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது கவிதைகளுக்குள்ளும் இலங்கைப் போர் குறித்தான வேதனை வரிகள் பல கலந்தேயிருக்கின்றன.

தமிழ்நதி - இவ் வலைத்தளத்தில் வாழ்வின் தனிமையும், போர் தந்த இடர்களும், இடப்பெயர்வு தந்த வலிகளும் காயங்களுமெனப் பல சுய அனுபவங்கள் புலம்பெயர்ந்து வாழும் சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது எழுத்துக்களில் வடிக்கப்பட்டுக் கவிதைகளாக மின்னுகின்றன. நான் அனுபவித்திராச் சில குரூர உலகங்களை இவரது கவிதைகள் எளிதாக வெளிக்கொணர்ந்து 'பார்' எனக் காட்டுகையில் அதிர்ந்துவிடுகின்றது மனது .

உமாஷக்தி - சிறு சிறு வரிகளுக்குள் பேரர்த்தங்கள் ஒளிந்திருக்கும் வண்ணம் கவிதைகளை மிகச் சிறப்பாக வடித்திருக்கிறார். மன உணர்வுகளையும் அனுபவங்களையும் கவிதைகளாகக் கோர்த்திருக்கிறார். சிந்திக்கவைக்கும் கவிதைகள் இவரது வலைத்தளத்தைப் பூரணப்படுத்துகின்றன.

தீபச்செல்வன் - சமகால யுத்த பூமியின் அத்தனை இன்னல்களையும் பார்த்தும் அனுபவித்தும் வரும் இக்கவிஞரின் வரிகளெல்லாம் குருதி பூசிய வலிகளைச் சுமந்தபடி நம்பிக்கையோடு எழுகின்றன. ஓங்கி ஒலிக்கும் குரலோடு நிகழ்காலத்தைப் புகைப்படங்கள் மற்றும் காத்திரமான கவிதைகளோடு முன்வைக்கிறார்.

சஹாராதென்றல் - ஒவ்வொரு கவிதையிலும் வேறுபட்ட புதுப்புதுச் சொற்கள், ஒரே கருவினைப் பலப்பலப் புது வடிவங்களில் காத்திரமாகச் சொல்லவிழைதல் போன்றவற்றை இவரது கவிதைகளில் காணலாம். ஏதோ ஒரு ஏக்கமும் தனிமையும் கவிதைகளினூடு தெரிகின்றது. வாசிப்பவருக்குத் தன்னை அக் கவிதைகளோடு ஒன்றிப் பயணிக்கவைத்தல் இலகுவாக இருக்கின்றது.

முபாரக் - சிந்திக்க வைக்கும் வரிகளைக் கொண்டனவான இவரது கவிதைகள் மனதிற்குள் சில முடிச்சுகளை விட்டுச் செல்பவை. சமூகக் கருத்துக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொக்கிநிற்கின்றன. அவையே சிந்திக்கவும் வைக்கின்றன.

லக்ஷ்மி சாஹாம்பரி - பெரும்பாலான அழகுணர்ச்சிக் கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. துயரத்தைக் கூட மிக மென்மையான ஒரு நளினத்தோடு எழுதவிழைகிறது இவரது பேனா. சொல்லவந்ததை வேண்டாச் சொற்களின்றி அழகுறச் சொல்லிச் செல்கிறது.

இலக்குவண் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மன உணர்வுகளை அப்பட்டமாகக் கவிதைகள் வழியே வெளிக்கொணர்பவர் இவர். பல நேரங்களில், இவரது வரிகளைக் கண்டு வியந்திருக்கிறேன் . தனிமையின் கொடுங்கரங்கள் தன் கழுத்தை நெரிப்பது கண்டு வெகுண்டெழுகிறதிவர் எழுத்துக்கள்.

கோகுலன் - இயற்கை - அது சுமந்து நிற்கும் எழில் , ஈரம், வெப்பம், அழிவு ; வாழ்க்கை - அதில் தோன்றி மறையும் காதல், நேசம், தனிமை, வலிகளெனப் பல வகையான கவிதைகளால் நிறைந்திருக்கிறது இவரது வலைப்பூ. அழகான கற்பனைகள் மனதிலே கருவினைக் காட்சிப்படுத்துகின்றன. இவர் அனேகக் கவிதைகளில் ஒரே படிமங்களைக் கொண்ட, ஒரே சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால், இவர் சொல்வதைப் போல இத் தனிமை நேரப் புலம்பல்களும் கிறுக்கல்களும் அழகாகவே உள்ளன. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டார் பாடல்களெனப் பல படைப்புக்களைக் கொண்ட இவரது வலைத்தளம் கவிதை தொடர்பான பலதரப்பட்ட ரசனை கொண்டவர்களையும் தன்பால் ஈர்க்கும்.

ஷிப்லி - 'வாழ்க்கை என்பதும் ஒரு புதுக்கவிதைதான்..என்ன ஒரு புதுமை.. நம்மால் விளங்கவே முடியாத புதிர்க்கவிதை ' எனச் சொல்லும் இவரது கவிதைகளில் யுத்தப் பிரதேசங்கள் இருளச் சூழ்ந்த அடர் மேகங்களின் இருள் கொண்டுவரும் வலிகள் தெரிகிறது. வாழ்வின் தனிமையும் ஏகாந்தமும் தந்த சிறு தவிப்பும் பெருந்துயரமும் வரிகளில் இழையோடுவதானது கவிதைக்கு அழகூட்டுகிறது .

அன்புடன் புஹாரி - அழகிய வலைப்பக்கத்தின் கவிதைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. கவிஞர் பல கருக்களைத் தன் கவிதைகளுக்குள் அடக்கியிருக்கிறார். அழகான, எளிமையான சொற்கள் சொல்லவந்த விடயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. மெல்லிய தூறலாய் மனம் நனைக்கின்றன இவரது கவிதைகள்.

என்.சுரேஷ் - பல கவிதைத் தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரரான இவரது வலைப்பூவில் நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களிலும் வீச்சுக்களிலும் உள்ளன. சுவாரஸ்யமான வலைப்பூ இவரது.

முகுந்த் நாகராஜன் - சின்னச் சின்னக் கவிதைகளில் பேருண்மைகளைப் புரியவைத்தலும், அனுபவங்களைப் பகிர்வதுமாக உள்ளது இவரது வலைப்பூ. சில கவிதைகள் மனதைப் பூவாய் விரியவைப்பதோடு, சில முகத்திலறைந்து நிதர்சனம் உணர்த்துகின்றன.

சரவணகுமார் - பெரும்பாலான கவிதைகள் காதல்துயர் குறித்து எழுதப்பட்ட அழகிய கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. இவரது கவிதைகளில் அனேகமான முடிவுகள் அதிர்ச்சியைத் தரவல்லன.

அனுஜன்யா - தான் கடந்துவந்த அனுபவங்களையே இவரது அனேகக் கவிதைகள் பாடுகின்றன . வாழ்வின் எல்லாப் பக்கங்களும் அருமையான கவிதைகளாக்கப்பட்டிருக்கின்றன.

கடற்கரய் -ஆழமான கவிதைகளைக் கொண்ட வலைப்பூ இவருடையது. அதிசயிக்கத்தக்க தளங்களில்தான் பயணிக்கின்றன இவரது கவிதைகள். இவரது கவிதைநடையும் மிக அழகாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

குட்டிசெல்வன் - அடர்த்தியான தனிமையும், மழைநாட்களும் இவரது எல்லாக் கவிதைகளிலும் எட்டிப்பார்க்கின்றன. துலக்கி விட்டதைப் போல அழகான வரிகள் மின்னுகின்றன. இவரது சில கவிதைகளின் வரிகளினூடு பயணிப்பது இலகுவாக இருக்கிறது.

நிவேதா - அதிர்வைக் கிளறும் வரிகளைக் கொண்டவை இவரது கவிதைகள். பால்யகாலத்தில் கேட்கப்படும் கிழவியின் கதைகளாய் இவர் கவிதைகள் மனதிற்குள் விரிகின்றன.

தேவ அபிரா - மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இவரது பாடுபொருளாகியிருக்கின்றன. 'துயரின் நிழலே படராப் பொழுதாய் நீழும் வாழ்வே நினதாய் ஆக! ' எனச்சொல்லும் இவரது கவிதைகள் துயர்களையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஸ்நேகிதன் - காத்திரமான வரிகளைக் கொண்ட இவரது கவிதைகளுள் புகுந்து வெளிப்படும்பொழுது மீண்டும் மீண்டும் புதையவைக்கிறது இவரது கவிதை மொழி.


இன்னும் அழகிய, காத்திரமான வரிகளைத் தனதாக உடைய நிறையக் கவிஞர்கள் எனதிந்தப் பதிவுக்கு வெளியேயும் இருக்கிறார்கள். இந்த ஒரு வாரத்துக்குள் நேரமும் இணையமும் அனுமதித்தால் இன்னொரு பதிவிலும் பலரைப் பட்டியலிடுகிறேன்.


என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

31 comments:

  1. எல்லாமே தரம் சுட்டிகள் அதிலும் கடற்கரய் பற்றி தெரிந்த பதிவர்கள் குறைவென்று நினைக்கிறேன் புதிய பதிவர்கள் பலருக்கும் தெரியாத பல தரமான பதிவர்களின் சுட்டிகள்...

    ReplyDelete
  2. உங்கள் ரசனையின் புள்ளிகள் இணைக்கப்பட்டு நேர்கோடாகி இருக்கிறது ...

    ReplyDelete
  3. இரண்டு வாரத்துக்கு முன் தான் உமாசக்தியின் கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்திருந்தது!


    அருமையான கவிதை தொகுப்பு

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள் ரிஷான்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிறப்பான
    அறிமுகங்கள்!!!
    படித்துப்பார்க்கிறேன்!!!
    தேவா....

    ReplyDelete
  6. // வண்ணங்களைத் தொட்டு ஓவியமாக்குபவர்கள் பலர். எனினும் ஒரு சிலரது கைவண்ணங்கள் மட்டுமே என்றுமே அழியாதனவாக, வனப்பு நிறைந்த ஓவியமாகப் பலர் மனதிலும் சட்டமிட்டுத்தொங்குகிறது ! //

    எப்படித்தான் இப்படி கவித்துவமா எழுதாரீங்கலோ போங்க.

    நீங்க அறிமுகப்படுத்திய கவிஞர்கள் ஒருசிலரைத்தவிர யாரையும் தெரியாது.

    ஆனா கவிதை பிரியர்கலுக்கு நல்ல வேட்டைதான் போங்க.

    ReplyDelete
  7. அன்பின் தமிழன்-கறுப்பி,

    //எல்லாமே தரம் சுட்டிகள் அதிலும் கடற்கரய் பற்றி தெரிந்த பதிவர்கள் குறைவென்று நினைக்கிறேன் புதிய பதிவர்கள் பலருக்கும் தெரியாத பல தரமான பதிவர்களின் சுட்டிகள்...//

    கடற்கரய் நல்லதொரு கவிஞர். அவரது கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. தற்பொழுது குமுதத்தில் பணிபுரிந்து வருகிறார்.அவர் தமிழ்மணத்தில் இல்லையென நினைக்கிறேன். அதனாலேயே பலருக்கு அவர் பதிவெழுதுவது தெரியவில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  8. அன்பின் வால்பையன்,

    //இரண்டு வாரத்துக்கு முன் தான் உமாசக்தியின் கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்திருந்தது! //

    ஆமாம்..உமா ஷக்தி வலையுலகத்திற்குப் புதியவர். பலதரப்பட்ட பதிவுகளை எழுதிவருகிறார். அத்தோடு இணைய இதழ்களிலும் எழுதுகிறார்.

    //அருமையான கவிதை தொகுப்பு//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  9. அன்பின் மகேஷ்,

    //நல்ல அறிமுகங்கள் ரிஷான்... வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  10. அன்பின் தேவா,

    //சிறப்பான
    அறிமுகங்கள்!!!
    படித்துப்பார்க்கிறேன்!!! //

    நிச்சயமாக.கவிஞர்களின் பெயரை அழுத்தினால் அவர்களது கவிதைகளைப் படிக்க இயலும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  11. அன்பின் கார்த்திக்,

    //எப்படித்தான் இப்படி கவித்துவமா எழுதரீங்கலோ போங்க.//

    :)

    //நீங்க அறிமுகப்படுத்திய கவிஞர்கள் ஒருசிலரைத்தவிர யாரையும் தெரியாது. //

    இதில் சிலர் தமிழ்மணத்தில் இல்லையென நினைக்கிறேன்..அதனாலேயே பலருக்குத் தெரியவில்லை. :(

    //ஆனா கவிதை பிரியர்கலுக்கு நல்ல வேட்டைதான் போங்க.//

    :)
    இவை நான் வழமையாகச் சென்று கவிதைத் தளங்கள். இன்னுமிருக்கின்றன..நேரம் அனுமதிக்கவில்லை :(

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  12. என் கவிதைகளும் (?) உங்களுக்குப் பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சி. முகுந்த் நாகராஜனுக்கு வலைப்பூ இருப்பதே எனக்குத் தெரியாது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. மேலும் புதிய சில பெயர்களை அறியத் தந்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  13. பல புதிய பதிவர்களின் முகவரிகளை
    அறிந்துக்கொண்டேன்
    அதிலும் எனக்கு அறிமுகமாகாத
    நண்பர்களை அறிமுகம் செய்தமைக்கு

    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. அன்பின் ரிஷான்,

    தமிழ் நதி, முகுந்த், முபாரக், லக்ஷ்மி சாஹம்பரி, ஷிப்லி, உமாஷக்தி இவர்களைச் சொல்லும் பட்டியலில் நானும் இருப்பது ஆச்சரியம். நான் உயரத்தில் வைத்திருக்கும் கவிஞர்கள் இவர்கள். சரவணனும், சஹாரா தென்றலும் நான் பொறாமைப்படும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர்களின் அறிமுகத்திற்கு நன்றி. ஆனாலும் உங்களுக்கு தாராளமான மனது ரிஷான் :)

    அனுஜன்யா

    ReplyDelete
  15. அன்பின் ரிஷான், என் கவிதைகள் அதற்கான உள்ளங்களை சென்றடைந்தது நினைத்து மகிழ்ச்சி. அனார் கவிதைகளையும், தோழி தமிழ்நதியின் கவிதைகளும் உங்கள் கவிதைகளும் படித்த இரவுகளில் செயலற்ற தன்மை, குற்றவுணர்வு இயலாமை என உணர்வுகளின் பிடியில் சிக்கி இமைகள் பொருந்தாமல் யோசித்தபடி தவித்திருக்கிறேன். . இந்த தேசத்தில் பரந்துபட்ட அன்பென்பது இல்லாமல் போய்விட்டதா, நிச்சயம் அப்படி இருக்காது என்ற நம்பிக்கையின் வேர்களை இறுக்கமாக பற்றிக் கொள்கிறேன். 2009-ம் ஆண்டு அமைத்திக்கான ஆண்டாக மலர பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரியத்திற்கும் நன்றி என்ற சொல் போதவில்லை ரிஷான். தொடர்ந்து கவிதைகளுடன் வாசம் செய்ய உங்களின் இத்தகைய வார்த்தைகள் ஒத்தடமாய் இருக்கிறது.

    ReplyDelete
  16. நல்ல முயற்சி! தொடருங்கள்....

    ReplyDelete
  17. இவர்களில் ஒருசிலரைத்தவிர யாரையும் தெரியாது,
    நன்றிகள் ரிஷான் .. பல பதிவர்களின் முகவரிகளை அறிமுகப்படுத்தியதிற்கு .
    வாழ்த்துக்கள் தோழரே ..

    ReplyDelete
  18. அன்பின் தமிழ்நதி,

    //என் கவிதைகளும் (?) உங்களுக்குப் பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சி. //

    நான் இணையத்துக்கு வந்த ஆரம்ப காலம் தொட்டே உங்கள் கவிதைகளைப் படித்து வருகிறேன். கவிதை மட்டுமென்றில்லாமல் எல்லாத் தளங்களிலும் பயணிக்கும் உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் அருமை. தொடருங்கள்.

    //முகுந்த் நாகராஜனுக்கு வலைப்பூ இருப்பதே எனக்குத் தெரியாது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. மேலும் புதிய சில பெயர்களை அறியத் தந்தீர்கள். நன்றி.//

    முகுந்த நாகராஜன் கூட தமிழ்மணத்தில் இல்லையென நினைக்கிறேன். அதனாலேயே நிறையப் பேருக்கு அவர் பதிவெழுதுவது தெரியவில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  19. அன்பின் திகழ்மிளிர்,

    //பல புதிய பதிவர்களின் முகவரிகளை
    அறிந்துக்கொண்டேன்
    அதிலும் எனக்கு அறிமுகமாகாத
    நண்பர்களை அறிமுகம் செய்தமைக்கு

    வாழ்த்துகள்//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  20. அன்பின் அனுஜன்யா,

    //தமிழ் நதி, முகுந்த், முபாரக், லக்ஷ்மி சாஹம்பரி, ஷிப்லி, உமாஷக்தி இவர்களைச் சொல்லும் பட்டியலில் நானும் இருப்பது ஆச்சரியம். நான் உயரத்தில் வைத்திருக்கும் கவிஞர்கள் இவர்கள். சரவணனும், சஹாரா தென்றலும் நான் பொறாமைப்படும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர்களின் அறிமுகத்திற்கு நன்றி. ஆனாலும் உங்களுக்கு தாராளமான மனது ரிஷான் :)//

    அண்மையிலேயே உங்கள் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கி வாசகனானேன். மிக அழகிய கவிதைகளை எழுதியிருக்கிறீர்கள். இந்தப் பட்டியலில் இருக்கத் தகுதி வாய்ந்தவரே நீங்கள் !

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  21. அன்பின் உமாஷக்தி,

    //அன்பின் ரிஷான், என் கவிதைகள் அதற்கான உள்ளங்களை சென்றடைந்தது நினைத்து மகிழ்ச்சி. அனார் கவிதைகளையும், தோழி தமிழ்நதியின் கவிதைகளும் உங்கள் கவிதைகளும் படித்த இரவுகளில் செயலற்ற தன்மை, குற்றவுணர்வு இயலாமை என உணர்வுகளின் பிடியில் சிக்கி இமைகள் பொருந்தாமல் யோசித்தபடி தவித்திருக்கிறேன். . இந்த தேசத்தில் பரந்துபட்ட அன்பென்பது இல்லாமல் போய்விட்டதா, நிச்சயம் அப்படி இருக்காது என்ற நம்பிக்கையின் வேர்களை இறுக்கமாக பற்றிக் கொள்கிறேன். 2009-ம் ஆண்டு அமைத்திக்கான ஆண்டாக மலர பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரியத்திற்கும் நன்றி என்ற சொல் போதவில்லை ரிஷான். தொடர்ந்து கவிதைகளுடன் வாசம் செய்ய உங்களின் இத்தகைய வார்த்தைகள் ஒத்தடமாய் இருக்கிறது. //

    உங்கள் கவிதைகளைப் போலவே அருமையான பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் மலரும் புதுவருடம் சுகவாழ்வையும் மற்றுமெல்லாச் சௌபாக்கியங்களையும் அள்ளிவரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  22. அன்பின் மெல்போர்ன் கமல்,

    //நல்ல முயற்சி! தொடருங்கள்....//

    வருகைக்கும் தரும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  23. அன்பின் சக்தி,

    //இவர்களில் ஒருசிலரைத்தவிர யாரையும் தெரியாது,
    நன்றிகள் ரிஷான் .. பல பதிவர்களின் முகவரிகளை அறிமுகப்படுத்தியதிற்கு .
    வாழ்த்துக்கள் தோழரே .. //

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

    ReplyDelete
  24. ///காலங்களைத் திசைகளை அளவிடும் கருவிகளுக்குள் கவிதையும் ஒன்றாக இருக்கிறது எனலாம்///
    உண்மை


    நன்றி நண்பரே எனக்கான வாசிப்புத் தேடல்களை இலகுவாக்கி இருக்கிறீர்கள்...சிறப்பான
    அறிமுகங்கள்!!!

    நல்லதொரு முயற்சி தொடருங்கள் நண்பரே....

    ReplyDelete
  25. அன்பின் தங்கராசா ஜீவராஜ்,

    //நன்றி நண்பரே எனக்கான வாசிப்புத் தேடல்களை இலகுவாக்கி இருக்கிறீர்கள்...சிறப்பான
    அறிமுகங்கள்!!!

    நல்லதொரு முயற்சி தொடருங்கள் நண்பரே....//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  26. அருமையான 'கவிதை' தொகுப்புக்கள் ரிஷான்......நன்றி!!

    ReplyDelete
  27. அன்பின் திவ்யா,
    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

    ReplyDelete
  28. நல்ல பதிவு ஆனால் கவிதைமுகத்தில் ஒருவர் விடுபட்டிருக்கிறார்.அது நீங்கள்தான் ரிஷான் :)

    ReplyDelete
  29. அன்பின் நிலாரசிகன்,

    //நல்ல பதிவு ஆனால் கவிதைமுகத்தில் ஒருவர் விடுபட்டிருக்கிறார்.அது நீங்கள்தான் ரிஷான் :)//

    நான் இப்பொழுதுதான் வந்திருக்கிறேன்..'உங்களுக்குள்' வர இன்னும் நாளாக வேண்டும் :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete