Wednesday, May 20, 2009

ஆண்டாள் திருப்பாவை

ஆடிப்பூரத்தில் துளசிச் செடிக்கருகே தானே தோன்றியவள் தான் கோதை. கோதைக்கு மாலை என்றொரு அர்த்தமும் உண்டு. அதனால் தானோ என்னவோ அவளே தன்னைத் தானே தருவது போல் தினமும் பெருமாளுக்கு சாற்ற வைத்திருக்கும் மாலைகளை தான் சூடி கண்ணாடியில் தன்னழகை கண்டு பின் அதை பெருமாளுக்கு கொடுத்து அனுப்ப தோன்றியதோ? அப்படியான சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதை ஆண்டாள் ஒரே பெண் ஆழ்வார். மற்றை ஆழ்வார்களே தங்களை பெண்ணாக உருவகம் செய்து கொண்டு பெருமாள் மேல் காதலாகி கசிந்துருகிய போது, பெண்ணாகவே பிறவி எடுத்த கோதை சூடிக் கொடுத்தவள் ரங்க காதலில் திருப்பாவை முப்பதும் நாச்சியார் திருமொழி நூற்றி நாப்பத்து மூன்றும் செப்பியதில் வியப்பேதுமுண்டோ என்ன?

திருப்பாவையிலும் சரி நாச்சியார் திருமொழியுலும் சரி பெருமாளை மணப்பதே முக்கிய மோடிவ் ஆக‌க் கொண்டு இருக்கின்றார். திருப்பாவையில் பாவை நோன்பு நூர்த்தும், திருமொழியில் மன்மதனுக்கு நோன்பிருந்தும் திருமாலை மணக்க வேண்டுகோள் விடுத்து பல பாடல்கள் பாடியுள்ளார். என்ன தான் மற்ற ஆழ்வார்கள் பெண்ணாகித் தன்னை உருவகப்படுத்தி நாயகன் நாய‌கி பாவ‌த்தில் பெருமாள் மேல் காதலாய் மொழிந்தாலும், அது நாச்சியார் திருமொழியிலும் திருப்பாவையிலும் வெளிப்ப‌டும் பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் போல‌ ஆகாது.

சிறுமியர் நாங்கள் கட்டும் மணல் வீட்டைச் சிதைக்கலாமா என்று கவிதை போல் கேட்ப‌து என்ன‌ அழ‌கு. இதைத்தான் இப்போதெல்லாம் ப‌டிம‌ க‌விதை என்கின்ற‌ன‌ர்.(ஆண்டாள் காத‌ல் = சிறும‌ண‌ல் வீடு) கோதையின் நாச்சியார் திருமொழி ஒவ்வொன்றும் காத‌ல் காவிய‌ம். வாரணமாயிரம் சூழ வலம் வந்து என்று திருமால் கைத்தளம் பற்ற கனவு கண்டதும், பறவை, புல்லினம் இன்ன பிற எல்லாவற்றையும் தூது அனுப்பி கண்ணன் மனம் கண்டு வரச் சொல்வதும், கூடல் இழைப்பதும், சிறு தெய்வங்களை வேண்டுவதும் கோதை அந்த உலகளந்தவன் மேல் எத்தனை நேசம் கொண்டு இருப்பாள் என்ப‌தை விள‌க்க‌ச் செய்யும். "திருமால் தொட அமைந்த என் மார்பகங்கள் மானிடர்க்கு என்ற எண்ணம் ஏற்பட்டாலே மரித்துப் போவேன்" என்பவள் திண்ணம் என்னே என்னே ! "மழையே மழையே" என்றும் "கடலே கடலே" என்று விண்ணிலிருந்து மண் வரை அனைத்தையும் கொஞ்சி, கெஞ்சிக் கேட்கின்றாள் கண்ணனோடு தன்னை சேர்க்க.

"கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே"

என்று தொடங்கும் பத்து பாடலும் "அவ‌ன் வ‌ண்ண‌ ஆடையை என் வாட்ட‌ம் த‌ணிய‌ வீசுங்க‌ள்" என்றும், "அவ‌ன் மாலையை என் மார் மீது புர‌ட்டுங்க‌ள்", அவ‌ன் அமுத‌ வாய் நீர் என‌க்கு ப‌ருக‌ கொடுங்க‌ள்", "அவ‌ன் குழ‌லின் இருந்து தெரிக்கும் எச்சிலை என் முக‌த்தில் த‌ட‌வுங்க‌ள்" "அவ‌ன் திருவ‌டி ம‌ண்ணை என் மேனி எங்கும் உட‌ம்பெங்கும் பூசுங்க‌ள்" "என் மார்ப‌ழுத்த‌ அவ‌னோடு சேர்த்து க‌ட்டி விடுங்க‌ள்" என்று எப்ப‌டி எல்லாம் த‌ன் உன்ன‌த‌ காத‌லை வெளிப்ப‌டுத்தி இருக்கின்றார் கோதை நாச்சியார். காத‌லால் வ‌ரும் உடலியல் உபாதைக‌ளை விர‌ச‌மின்றி வெளிப்ப‌டுத்தியுள்ளார்.

அவ‌ர் மொழி ஆளுமையை மெச்சாம‌ல் இருக்க‌வே முடியாது. திருமாலில் அத‌ர‌ சுவை அறிய‌ வெண்ச‌ங்கை வ‌ண‌ங்கி பாடும் ப‌த்து பாட‌ல்க‌ளும் காணும் போது அவள் புத்திகூர்மையை விய‌க்காம‌ல் இருக்க‌வே முடியாது.

"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே."

என்ற இந்த திருமொழியில் இன்ஸ்பயர் ஆகாதவர்களே இருக்க இயலாது (அதே இன்ஸ்பிரேசனின் எனது ஏளனம் கவிதையும்). ஆக கார‌ண‌ம் இன்றி எந்த‌ காரிய‌மும் இல்லை. ஆண்டாள் காத‌ல் அர‌ங்க‌னை அடைய‌. அவ‌ளை ப‌ற்றிய‌ இந்த‌ ப‌திவு என்னுடைய‌ ஏள‌ன‌ம் என்ற‌ க‌விதையை உங்க‌ள் பார்வைக்கு வைக்க‌.

6 comments:

  1. ஆண்டாளை தரிசிக்க நினைப்பவர்கள் , ஸ்ரீ வில்லி புதூருக்கு செல்ல வேண்டியதில்லை. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலிலேயே , தனி சன்னதி யில் வீற்றிருக்கிறார்.

    ReplyDelete
  2. //தேனீ - சுந்தர் said...
    ஆண்டாளை தரிசிக்க நினைப்பவர்கள் , ஸ்ரீ வில்லி புதூருக்கு செல்ல வேண்டியதில்லை. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலிலேயே , தனி சன்னதி யில் வீற்றிருக்கிறார்.
    //

    சொல்ல நினைத்தேன்.. மதுரை மதுரை தான்..எந்த ஏரியா சுந்தர்??

    ReplyDelete
  3. // நர்சிம் said...
    //தேனீ - சுந்தர் said...
    ஆண்டாளை தரிசிக்க நினைப்பவர்கள் , ஸ்ரீ வில்லி புதூருக்கு செல்ல வேண்டியதில்லை. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலிலேயே , தனி சன்னதி யில் வீற்றிருக்கிறார்.
    //

    சொல்ல நினைத்தேன்.. மதுரை மதுரை தான்..எந்த ஏரியா சுந்தர்??//
    அதே கூடல் அழகர் பெருமாள் கோயில் அருகில்

    ReplyDelete
  4. ஆஹா.. ஆண்டாளைப் பற்றியும் அவளின் அற்புதமான பிரபந்தங்களையும் அருமையா சொல்லிருக்கீங்க..

    ReplyDelete
  5. வாங்க‌ தேனீ சுந்த‌ர் த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி.

    வாங்க‌ ந‌ர்சிம்.

    வாங்க‌ அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா. ந‌ன்றி.

    வாங்க‌ ராக‌வ். ந‌ன்றி.

    ReplyDelete