Wednesday, June 10, 2009

கவிதை மனம்

கவிதை புரிவதும் புரியாததும் எழுதியவரின் மனோநிலை அல்ல. கவிதை வாசிப்பவரின் அனுபவத்திற்கு உட்பட்டது. எனவே கவிதையையும், அதன் உட்பொருளையும் அனுபவித்து உள்வாங்கிக் கொள்ள சரியான புரிதல் அவசியம். கவிதைக்கு மட்டுமல்ல எதையுமே உணர்ந்து கொள்ள புரிதல் முக்கியமானது.

கல்யாண்ஜியின் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்.
தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே வரிகள் இருந்தன
நீங்கள் அமிழ்கிற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை
உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்
உங்களுக்குப் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறையப் பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று.

கவிதை என்பது ஒரு நாவலைப்போல வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பற்றி மற்றும் சொல்வதல்ல. கவிதையையும் அதன் நீட்சியான உணர்வுகளையும் புரிந்து கொள்ள தனித்துவ மனம் வாய்த்திருக்க வேண்டும். கவிதை பல்வேறு மனோநிலைகளில் எழுதப்பட்டு தனித்தனி நிகழ்வுகளை விவரிப்பது.
அந்த வகையில் நான் ரசித்துப் படிக்கின்ற சிலரை இன்று பார்க்கலாம். ஒவ்வொருவரிடமும் நான் படித்து ரசித்த ஒரு கவிதை உங்களுக்கும்....
நிலாரசிகன் http://www.nilaraseeganonline.com

அதிருபவதனி
யாருமற்ற பின்னிரவில்
கசிகின்ற விழியுடன்
என்னிட‌ம் சரணடைவாள்.
மடியில் முகம்புதைத்து
விசும்புகின்ற
அவளின்
கருங்கூந்தல் இருண்ட‌
முகிலை ஒத்திருக்கும்.
வெண்ணிறத்தில் மெல்லியதொரு
ஆடை
அவள் மேனியெங்கும்
நதியென தவழ்ந்தோடும்.
தளர்ந்த விரல்களால்
என் தலைகோதி,
தகிக்குமவள் முலைகளில்
எனை மூழ்கிடச் செய்திடுவாள்.
கண்ணீரின் காரணத்தை
கடைசிவரை சொல்லாமல்
காற்றோடு கரைந்து
ம‌றைந்திடுவாள்.
விடியலில் மனமெங்கும்
வியாபித்திருப்பாள்
முகம்மட்டும் மறைத்தபடி.

சுயம் http://iruppu.blogspot.com

ஒரு பறவை ஒரு கிளை
ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தமர்ந்து
அன்பைப்
பாடுகிறது

பறவை
கூடுகட்டலாம்
இனி
பறவையாகி
உடன் பறக்கலாம்

சில
உண்மைகள்

பறவை
கிழக்கில் இருந்து
வந்தது

கிளை
கூடுகளற்றது.

அய்யனார் http://ayyanaarv.blogspot.com/

//தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.//

அனிதா http://idhazhgal.blogspot.com/

ரகசியம்

யாரிடமும் சொல்லாதே என்று
அவளைப் பற்றி சொன்னான் இவன்.

ரகசியமாம்.

எனக்குத் தெரிந்தவள்தான்.
உண்மையா என்றேன் அவளிடம்
இல்லையே எனத் துவங்கியவள்
யார் சொன்னது என சேர்த்துக்கொண்டாள்.

இவன் சொன்னதாய் அவளிடம் சொல்லவில்லை
அவளிடம் கேட்டது இவனுக்குத்தெரியாது

பெரிய ரகசியத்தின் வயிறு கிழித்து வெளியேறிய
இந்த குட்டி ரகசியங்களை என்ன செய்வது?
-----------------------------------------------------------
மீண்டும் கவிதைகளோடு சந்திக்கிறேன்.

மிக்க அன்புடன்...
‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

15 comments:

  1. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. கவிதை புரிவதும் புரியாததும் எழுதியவரின் மனோநிலை அல்ல. கவிதை வாசிப்பவரின் அனுபவத்திற்கு உட்பட்டது. \\

    சரியா(ச்) சொன்-நீங்க

    ReplyDelete
  3. நிலாரசிகன்\\

    இவர் கவி வரிகளை வலையில் படித்திருப்பது மிக குறைவே

    அச்சிலேற்றபட்டவையோடு பரிச்சியம் அதிகம்.

    ReplyDelete
  4. சுயம்\\

    இனி அறிவோம் சுயத்தை ...

    ReplyDelete
  5. அனிதா\\

    நிறைய இரகசியங்கள் இருக்கும் போல

    அதுவும் பெரும் இரகசியங்களின் வயிறு கிழித்து வந்த சின்ன சின்ன ...

    ReplyDelete
  6. மீண்டும் கவிதைகளோடு சந்திக்கிறேன்.

    காத்து இருக்கிறோம் ...

    ReplyDelete
  7. லிங்க் தனிதனியா காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண வேண்டியிருக்கு!
    மேலும் கவிதை தொகுப்புக்கு செல்லாமல் முழு ப்ளாக்குக்கும் போகுதே!

    நேரமின்மை காரணமா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நீங்கள் சொன்ன அனைத்து கவிஞர்களையும் வாசித்திருக்கிறேன்.

    குறிப்பாக கல்யாண்ஜி,நிலாரசிகன்,அய்யனார் இவர்கள் எழுத்துகள் ஒரு போதை.

    மேலும் இங்கு ஆதவன் போன்ற புதியவர்கள் நன்றாக எழுதுகிறார்கள்.அவர்களையும் ஆட்டத்தில் சேர்த்து
    கொள்ளலாமில்லையா ??

    ReplyDelete
  9. ரகசியம் கவிதை பிரமாதம்.. எந்தெந்த விஷயங்களெல்லாம் கவிதைக்கான பொருளாய் அமைகின்றன.!!!

    ReplyDelete
  10. மூன்றாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  11. //
    கவிதை புரிவதும் புரியாததும் எழுதியவரின் மனோநிலை அல்ல. கவிதை வாசிப்பவரின் அனுபவத்திற்கு உட்பட்டது.
    //


    தெளிவான சிந்தனை!!

    ReplyDelete
  12. அனைத்து அறிமுகங்களும் எனக்கு புதியவர்கள்தான்.

    அனைவரையும் இடுகையின் மூலம் விரைவில் சந்திக்கின்றேன்!

    ReplyDelete
  13. இன்னும் சிறப்பு (அனைத்துக்கும் இப்படிதான போடுவீங்க இப்புறம் என்னனு கேட்கிறது புரியுது)

    ReplyDelete
  14. //கவிதை புரிவதும் புரியாததும் எழுதியவரின் மனோநிலை அல்ல. கவிதை வாசிப்பவரின் அனுபவத்திற்கு உட்பட்டது. //

    சரியாக சொன்னீங்க வாசு
    அதேபோல்
    திரைப்படமும் அதை பார்க்கும் சூழலும் மிக முக்கியம்தானே

    ReplyDelete
  15. மூன்றாம் நாள் வாழ்த்துகள், மற்றும் நல்ல கவிதைகள் அறிமுகத்திற்கு பாராட்டுகள் வாசு

    ReplyDelete