Thursday, June 11, 2009

மனச்சுனையில் பெருக்கெடுக்கும் ஊற்று

மன உணர்வுகளின் அதியற்புதமான வெளிப்பாடுகளில் ஒன்று கவிதை எனலாம். கவிதை பேசுவதும், கவிதை ரசிப்பதும், கவிதையாக வாழ்வதும் எல்லாமே வாழ்வை அர்த்தப் படுத்துவதாகவும், வாழ்வின் மீதான தீராத தாகத்தை இன்னும் கூட்டுவதாகவே இருக்கிறது. சுனையில் பெருக்கெடுக்கும் வற்றாத ஊற்றைப்போல பல சம்பவங்களாலும், வலிகளாலும், நேசத்தாலும் பின்னப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொன்றையும் எழுதி முடிக்க முடிக்க தொடர்ந்து கொண்டேயிருக்கிறது கவிதையின் வரிகள். அப்படியான உணர்வுகளை வற்றாத மனச்சுனையிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற சில கவிஞர்களின் வலைத் தளங்களையும், அவர்களின் ஒரு கவிதையையும் இன்று வாசிக்கலாம்.

உயிரோடை ‘லாவண்யா‘

முத்த‌ப் பூ தொடுக்கும் க‌லை க‌ற்ற‌வ‌ன்

ந‌தியோடு ந‌கரும்
கூழாங்க‌ற்க‌ளை ஒத்திருந்த‌து
ந‌ம் உரையாட‌ல்
சினிமா
அர‌சிய‌ல்
ஆண்டாள்
காத‌ல்
இன்னபிறவென்று

வார்த்தைக‌ள் தீராத‌ பொழுதில்
என்னுடலெங்கும் பூக்கும் முத்தப்பூவை
நேர்த்தியாய் தொடுக்கும்
க‌லை க‌ற்ற‌வ‌ன் நீ
என்றுணர்ந்து
வெடித்தெழுந்தேன் வெட்க‌த்தில்

வெளியே சிரித்து ந‌க‌ர்ந்த‌து
ம‌ழைப்ப‌ற‌வையொன்று
நிலவொளியில்
குளக்கரை தாமரையை நனைத்தபடி

ரகசிய சிநேகிதி

ஒதுங்கல்

அவரவர் பாதை
அவரவர் பயணம்
உன்னை நினைத்தப் படி நானும்
என்னை மறந்தபடி நீயும்
ஒற்றைக் குடையொன்றில்
கண்ணீரைச் சேகரிக்கும்
என் பூமி

நீ வாழ
மரங்களுக்குப் பின்னால் நின்று
மறைகிறது என் நிழல் கூட இன்று

நதியலை

வித்தியாசம் அறிதல்

வீசிய காற்றில்
ஒரு பூவும் ஒன்றிரண்டு இலைகளும்
வீட்டினுள் பிரவேசித்தன
வித்தியாசங்களை
கண்டுபிடிக்கும் முனைப்புடன்
புத்தகத்தில் மூழ்கியிருந்த மகள்
உள்ளறையில் இருக்கும் மனிதன்
மற்ற படத்தில் இல்லாததைக் கவனித்து
ஒரு வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக
மகிழ்ச்சியில் கூவுகிறாள்
மகளே இது வெறும் ஒரு வித்தியாசமன்று
எனக்கூற விழையும்முன்னே
அடுத்த பக்கத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறாள்
இப்போது வீசும் காற்றில்
சருகும் உள்நுழையவில்லை

பெரிதினும் பெரிது கேள்

சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி

சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி
வளரும் மணிப்ளாண்ட்டுக்குப்
பக்கத்தில்
சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப்
பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை.


என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை

தூறல்வெளி

தனிமை கலைத்ததற்காய்

கடிந்து கொள்ளும் காதலர்கள்...

அழுக்கேறிய ஆடைகண்டு

முகம்சுழித்து விலகும்

அழகிய குழந்தைகளின் அம்மாக்கள்..

சிப்பிகள் பொறுக்குவதைச்

சிலநொடிகள் நிறுத்திவிட்டு

சிநேகமாய்ச் சிரிக்கும் சிறுமி...

கடல் வெறித்தபடி

தனிமையில் அழும்

தாடிவைத்த இளைஞன்...

பட்டம் விட்டு விளையாடும்

ஒத்த வயதுச் சிறுவர்கள்...

முகத்தில் சலனமற்று

அனைவரையும் கடக்கிறான்

சுண்டல் விற்கும் சிறுவன்...

என் கவிதைகளுக்குத்தான்

பக்குவம் போதவில்லை

இன்னும்.

பகோடா பேப்பர்கள் (வித்யா)

மூன்றரைக்கே ஆஜராகும் வேலைக்காரி

நாலு மணிக்கு மாமியாரி்ன் சாமி பூஜை

கூடையோடு வருவானே பூக்காரன்;

கூடவே வந்துவிடும் பால்காரன்

அதிகாலை நடை முடிக்கும் மாமனார் பின்

அப்போதே துவங்கி விடும் காபிக்கடை

பேப்பர்க்காரன் பெல்லடித்தால் ஐந்து மணி

பிடிக்கவேண்டும் தண்ணீரை ஐந்தரைக்கு

ஆறுக்குள் ஆகவேண்டும் சமையல்கடை

ஏழுக்குக் கிளம்பிடுவார் என்னவரும்;

எச்சில்தட்டோடு பாத்திரங்கள் எட்டாம் மணி

ஏதோ அவசரமாய் விழுங்கிப் பார்த்தால் எட்டே முக்கால்

ஒன்பது மணிக்கு ஸ்கூட்டரோடு உதையல் சண்டை

ஓராயிரம் சிக்னல் தாண்டி ஒன்பதரை

இளித்தபடி தாமதக்கையெழுத்திட்டுவிட்டு

இரவு சாயும் வரை கண்ணெரியக் கணிணி துணை

இனியும் வீடு வந்து பின் துணி துவைத்து

இரவுச் சோற்றுக்கு ஆகி விடும் ஒன்பது மணி

இன்னைக்கும் இதுதானா? புலம்பல் கேட்டு

புளித்தக்காதுகளை துளைக்கும் பத்துப்பாத்திரங்கள்

துலக்கி நிமிர்ந்த முதுகுவலிக்குப் பதினொன்று

தலைவலியும் கூடவே சேர்ந்து கொல்லும் - அப்போது

வந்திருக்கும் கணவரிடம் மாமியாரும் - அவள்

வயிற்றில் புள்ளபூச்சி இல்லையென்ற புலம்பல்களும்

நாளைக்குப் போகிறோம்மா டாக்டரிடம்நொந்துகொள்ளும்

நம்மவரின் சொல் கேட்டு நோகும் மனம்

அவருக்கும் உணவிட்டு முடித்துப்பார்த்தால்

அன்றைய தினம் முடிய மணி பன்னிரண்டு

ஒன்றாவது உண்டா நம் விதியில்-கணவர் கேட்பதற்குள்

ஓடிவிடும் இரவு மறுவிடியல் காண - மீண்டும்

ஓராயிரம் கனவோடு விழித்தெழுந்து - இன்றாவது

ஓர் இலக்கியம் வளர்க்க எண்ணிக் கொள்வேன்.

====================================================

மீண்டும் கவிதைகளோடு சந்திக்கிறேன்.

மிக்க அன்புடன்...

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

8 comments:

  1. நான்காம் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ரகசிய சிநேகிதி\\

    இவர் தவிர்த்து மற்றவர்கள் புதிதாகத்தான் இருக்கின்றது

    மெல்ல படிக்கிறேன்

    நன்றி பகிர்தலுக்கு.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்.
    /*கவிதையாக வாழ்வதும் எல்லாமே வாழ்வை அர்த்தப் படுத்துவதாகவும், வாழ்வின் மீதான தீராத தாகத்தை இன்னும் கூட்டுவதாகவே இருக்கிறது*/
    உண்மை

    நல்ல சுட்டிகள். தொடருங்கள்

    ReplyDelete
  4. :) நன்றி வாசு ஸார்.

    ReplyDelete
  5. வாசு..உண்மையில் என்னை ஒரு புதிய தளத்திற்கு அழைத்து செல்கீறிர்கள்...

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  7. பகோடோ பேப்பர் அருமைங்க....

    ஒரு பெண்ணின் கனவுகளையும் வலியையும் இவ்வளவு சுவாரஸியமாக

    யாரும் எழுதி நான் பார்த்ததில்லை.

    கலக்கல் பகிர்வு வாசு சார்.

    ReplyDelete
  8. //வெளியே சிரித்து நகர்ந்தது
    மழைப்பறவையொன்று
    நிலவொளியில்
    குளக்கரை தாமரையை நனைத்தபடி//

    நல்லாருக்கு லாவண்யா. வாழ்த்துக்கள்!

    //
    ஒன்றாவது உண்டா நம் விதியில்-கணவர் கேட்பதற்குள்

    ஓடிவிடும் இரவு மறுவிடியல் காண - மீண்டும்

    ஓராயிரம் கனவோடு விழித்தெழுந்து - இன்றாவது

    ஓர் இலக்கியம் வளர்க்க எண்ணிக் கொள்வேன்//

    இயந்திரத்தனமான வாழ்க்கையில் இலக்கியம் வளர்க்க எண்ணியமைக்கு வாழ்த்துக்கள் வித்யா!

    வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete