Monday, July 20, 2009

என்னைப்பற்றி!

அன்பனென் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
தென்னவன்நான் செந்தமிழின் சீரெடுத்து -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!


நான்:-
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதா கர்!

ஊர்:-
கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!

தாய்:-
சோறெனக்(கு) ஊட்டி பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்அஞ் சலம்!

தந்தை:-
கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி;
ஊனெடுத்த தேவன் உரு!

பெயர்க்காரணம்:-
தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!

என்னைப்பற்றி இதற்குமேல் விரிவாகச் சொல்ல சிறப்பாக ஒன்றும் இல்லை எனக்கருதுகிறேன். தமிழ்மீதும் மரபுப்பாமீதும் கொண்ட காதலால் மரபுப்பாக்கள் எழுத்துவங்கினேன் என்றால் அது மிகையாகா. என்னைப்போல் பலரும் மரபைப்படித்துக் கவிபுனைய வேண்டும் என்கிற அவாவில் வெண்பா எழுதலாம் வாங்க என்ற வலையை அமைத்துப் பலரும் பயன்பெறுமாறு வெண்பாப்பாடங்களை வழங்கிவருகிறேன். மேலும் இலக்கிய இன்பம் என்ற பெயரில் ஓர்வலை அமைத்து நான்சுவைத்த இலக்கியப்பாடல்களுக்கு விளக்கம் எழிதியும் வருகிறேன். மேலும் எனது முதன்மை வலையான அகரம் அமுதா என்ற வலையலேயே எனது அனைத்துக்கவிதைகளும் வெளிவருகின்றன. தற்பொழுது சிங்கப்பூரில் மின்னாளனாகப் பணிசெய்து வருகிறேன்.

மேலும் வலைச்சரத்தில் என்னைக்கட்டுரைக அழைத்த சீனா அவர்களுக்கேன் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இங்கு எனக்குமுன் வருகைதந்து கட்டுரைத்த அனைத்து தோழதோழிகளுக்கும் எனது முதற்கண் வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

இவண்
அகரம் அமுதா

32 comments:

  1. வாழ்த்துக்கள் அருமையான சுய அறிமுகம்

    ReplyDelete
  2. பெயர் குழப்பத்தால் உங்கள் பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இனி தொடர்கிறேன். வலைச்சர அறிமுகம் அசத்தல். வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  3. பணிசிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. தாங்கள் பெண் பெயரில் எழுதிவருகிறீர்கள் என்பதை இப்பொழுதான் அறிந்து கொண்டேன். மன்னியுங்கள் தோழரே.

    ReplyDelete
  6. தங்கள் வலைத்தளத்தை படிக்க முடியவிலை. கருத்துரை படிவத்தை மாற்றியமைத்தால் Show Original Post பகுதியை க்ளிக் செய்து படிக்க ஏதுவாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  7. ஆரம்பமே அமர்க்களம். வாழ்க.

    ReplyDelete
  8. ////Suresh Kumar said...
    வாழ்த்துக்கள் அருமையான சுய அறிமுகம்////

    மிக்க நன்றிகள் நண்பரே! வருக! ஆதரவு தருக!

    ==== ==== ==== ==== ====

    மிக்க நன்றிகள் குடந்தை அன்புமணியவர்களே!

    ==== ==== ==== ==== ====

    ////முனைவர்.இரா.குணசீலன் said...
    பணிசிறக்க வாழ்த்துக்கள்.////

    மிக்க நன்றிகள் முனைவர் இரா.குணசீலன் அவர்களே!

    ==== ==== ==== ==== ====

    ////திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள்////

    மிக்க நன்றிகள் திகழ்மிளிர் அவர்களே!

    ==== ==== ==== ==== ====

    ////குடந்தை அன்புமணி said...
    தங்கள் வலைத்தளத்தை படிக்க முடியவிலை. கருத்துரை படிவத்தை மாற்றியமைத்தால் Show Original Post பகுதியை க்ளிக் செய்து படிக்க ஏதுவாக இருக்கும். நன்றி.////

    கவனத்தில் கொள்கிறேன் நண்பரே! நன்றிகள்.

    ReplyDelete
  9. ////Vidhoosh said...

    ஆரம்பமே அமர்க்களம். வாழ்க.////

    நன்றிகள் vidhoosh அவர்களே!

    ReplyDelete
  10. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் எழுத்து நடை அருமை

    ReplyDelete
  11. /////புதுகைத் தென்றல் said...
    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் எழுத்து நடை அருமை/////

    மிக்க நன்றிகள் புதுவைத்தென்றல் அவர்களே!

    ReplyDelete
  12. வாங்க அமுதா... வாங்க... நம்ம வெண்பா குரு !!

    ReplyDelete
  13. வெண்பா எழுதும் நண்பா...

    வாழ்த்துகள் அகரம்.அமுதா...

    ReplyDelete
  14. அகரம் வெண்பா சிகரம் ஐயா வாழ்த்துகள் !

    ReplyDelete
  15. அருமையான தொடக்கம். வாழ்த்துகள்

    ReplyDelete
  16. அன்பின் அகரம் அமுதா

    என்னைப்பற்றி - அருமையான சுய அறிமுகம். பெற்ற தாயின் பெயரினையும் தந்தையின் பெயரினையும் சேர்த்துப் புனைப்பெயர் வைத்த சுதாகருக்கு நல்வாழ்த்துகள்.

    வெண்பாக்கள் எழுதி ஊர், தாய், தந்தை, தனது பெயர், என அனைவரையும் ஒருங்கே அறிமுகம் செய்தமை நன்று நன்று.

    தொடங்குக பனியினை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  17. கலக்கலான ஆரம்பம்!

    இனி நானும் வெண்பா எழுதுவேனே!

    ReplyDelete
  18. ////Mahesh said...
    வாங்க அமுதா... வாங்க... நம்ம வெண்பா குரு !!/////


    நண்பர் மகேஷ் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வலையில் மறுமொழி இடமுயல்கிறேன். முடியவில்லை. ஏன் எனத்தெரியவில்லை. சரிபார்க்கவும். தனி மடலில் என்னைத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன். agramamutha08@gmail.com

    ReplyDelete
  19. ////அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    வெண்பா எழுதும் நண்பா...

    வாழ்த்துகள் அகரம்.அமுதா...////

    மிக்க நன்றிகள் எனதன்புக்குறிய நண்பர் ஜோதிபாரதி அவர்களே

    ReplyDelete
  20. கலக்கலான ஆரம்பம்... வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  21. ////கோவி.கண்ணன் said...
    அகரம் வெண்பா சிகரம் ஐயா வாழ்த்துகள் !////

    மிக்க நன்றிகள் கோவியார் அவர்களே

    ReplyDelete
  22. ////cheena (சீனா) said...

    அன்பின் அகரம் அமுதா

    என்னைப்பற்றி - அருமையான சுய அறிமுகம். பெற்ற தாயின் பெயரினையும் தந்தையின் பெயரினையும் சேர்த்துப் புனைப்பெயர் வைத்த சுதாகருக்கு நல்வாழ்த்துகள்.

    வெண்பாக்கள் எழுதி ஊர், தாய், தந்தை, தனது பெயர், என அனைவரையும் ஒருங்கே அறிமுகம் செய்தமை நன்று நன்று.

    தொடங்குக பனியினை

    நல்வாழ்த்துகள்/////

    வலைச்சரத்தில் என்னை எழுதப்பணித்தமைக்கும் மறுமொழியில் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் நண்பர் சீனா அவர்களே!

    ReplyDelete
  23. வால்பையன் said...
    கலக்கலான ஆரம்பம்!

    இனி நானும் வெண்பா எழுதுவேனே!


    வருக வால்பையன் அவர்களே! தங்களைப்போன்றோரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு வருக வருக என அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  24. ஆ.ஞானசேகரன் said...
    கலக்கலான ஆரம்பம்... வாழ்த்துகள் நண்பரே



    மிக்க நன்றிகள் ஞானசேகர் அவர்களே!

    ReplyDelete
  25. 'பதிவர் அமுதா' வலைச்சர ஆசிரியராக இருந்தபோது உங்களுடைய பதிவினைச் சுட்டி இருந்தார் என்று நினைக்கிறேன். அப்பொழுதுதான் உங்களுடைய பதிவினை முதன் முதலில் பார்த்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.

    உங்களுக்குப் பிடித்த பதிவர்களைக் காண ஆவலுடன் இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  26. அகரம் அமுதாவிற்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!

    வலைச்சர ஆசிரியருக்கும் எனது முதல் நாள் வாழ்த்துக்கள்!

    அறிமுகம் அருமை!

    ReplyDelete
  27. /////Krishna Prabhu said...

    உங்களுக்குப் பிடித்த பதிவர்களைக் காண ஆவலுடன் இருக்கிறேன். நன்றி./////

    மிக்க நன்றிகள் கிருஷ்ண பிரபு அவர்களே!

    ReplyDelete
  28. RAMYA said...
    அகரம் அமுதாவிற்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!

    வலைச்சர ஆசிரியருக்கும் எனது முதல் நாள் வாழ்த்துக்கள்!

    அறிமுகம் அருமை!


    மிக்க நன்றிகள் ரம்யா அவர்களே! தங்களுக்குமென் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. வலைச்சரத்தில் வந்துள்ளார் வெண்பாவின் தாதா!
    தலையிருக்க வாலாட யெண்ணி - மலையின்
    படித்தேனாய்ப் பாடிட வாழ்த்திக் கடையில்
    முடித்தேன் இது போல்!

    ReplyDelete
  30. இரா. வசந்த குமார். said...
    வலைச்சரத்தில் வந்துள்ளார் வெண்பாவின் தாதா!
    தலையிருக்க வாலாட யெண்ணி - மலையின்
    படித்தேனாய்ப் பாடிட வாழ்த்திக் கடையில்
    முடித்தேன் இதுபோல் முயன்று!




    நன்றிகள் வசந்த் அவர்களே

    ReplyDelete
  31. வாழ்த்துகள் அமுதா. உங்கள் வெண்பாக்களை இன்னமும் பிரமிப்புடன் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டம் போடக்கூட ஓரளவு இலக்கணம், நல்ல தமிழ் தெரியாததால் ஒன்றும் சொல்லாமல் சென்று விடுகிறேன்.

    அனுஜன்யா

    ReplyDelete
  32. ////////அனுஜன்யா said...
    வாழ்த்துகள் அமுதா. உங்கள் வெண்பாக்களை இன்னமும் பிரமிப்புடன் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டம் போடக்கூட ஓரளவு இலக்கணம், நல்ல தமிழ் தெரியாததால் ஒன்றும் சொல்லாமல் சென்று விடுகிறேன்.

    அனுஜன்யா///////

    மிக்க நன்றிகள் அனுஜன்யா அவர்களே. தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.

    ReplyDelete