ஓர்முறை ஒருநண்பர் ஒரு திரைப்படப் பாடலைச் சொல்லி உயர்வாகப் பேசினார். ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து மேகத்தில் குழைத்துப் பெண்ணென்றுப் படைத்து வீதியில் விட்டுவிட்டான்’ எத்துணை அருமையான வரிகள் எனப் பலவாறு புகழ்ந்தார்.
எழுதிய முறையில் மாற்றமுண்டே தவிர சொல்லவந்த உவமையிலோ, கற்பனையிலோ ஒருமாற்றமும் இல்லையே. இதைப்போய்ப் புகழ்கிறீர்களே? என்றேன். பெண்ணை மின்னல் என்று ஈராயிரம் ஆண்டுகளாப் பாடிவந்திருக்கிறார்கள் நம் முன்னோர். மேற்கண்ட பாடலில் கவிஞர் செய்த ஒரே மாற்றம் என்னவென்றால் முகிலில் பிறந்த மின்னலை மீண்டும் முகிலில் குழைத்தெடுத்ததே!
நான்கேட்டேன் நண்பரிடம், முகிலில் பிறந்த மின்னலுக்கு ஒட்டும் தன்மை இருக்குமானால் முகிலிடமிருந்து பிறக்கும்போதே கருமை நிறமுடையதாகப் பிறந்திருக்காதா? பிறக்கும்போதே முகிலுக்கு நேர்மாறான நிறத்தில் பிறக்கும் தன்மையுடைய மின்னலை மீண்டும் கொண்டுபோய் முகிலில் குழைப்பதால்மட்டும் முகிலின் கருமை ஒட்டிக் கொண்டுவிடுமா?
அதெல்லாம் இருக்கட்டும். மின்னல் தோன்றிய விரைவிலேயே மறையும் ஆற்றல் படைத்ததல்லவா? அப்படிப்பட்ட தன்மையுடைய மின்னலைப் பிடித்துப் பெண்ணாய்ச் சமைத்தால் பெண்ணும் தோன்றய விரைவில் மறைந்து விடமாட்டாளா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினேன். நண்பர் வாயடைத்துப்போய் விட்டார்.
இன்றைக்குக் கூறியது கூறல் உணர்வு திரைப்பாடலாசிரியர்கள் இடம்மட்டுமல்லாது பல புதுக்கவிதையாளர்களையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.
உவமைகளை நாம் உருவாக்க முனைவதற்குமுன்பு நமக்கு முன்னோர்கள் எவ்வகையில் உவமைகளைச் சிறப்புற அமைத்திருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.
பொதுவாகக் கூந்தலைப் பலரும் முகிலென்றும், அலையென்றும், மழையென்றும், கருநாகப் பாம்பென்றும், விழுதென்றும் பாடிவந்த காலத்தில் ஓர் சிற்றூர்க்கவிஞன் (கிராமியக்கவிஞன்) ‘தூக்கி முடிஞ்ச கொண்டை தூக்கனாங் கூடுபோல’ என்றான். இதைத்தான் உவமையிற் புதுமைக்காட்டுவது என்பது.
இடையைப் பற்றிப் பாடுகையில், ‘கொடியென்றும், ஆலிலை நுனியென்றும், நூலிழையென்றும் எழுதிவந்த காலத்தில், ‘இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது’ என்பதும், ‘இல்லாத கடவுள்போன்ற இடைகொண்டப் பெண்ணே!’ என்பதும் சற்றே மாறுபட்ட புதுமை எனலாம். இவ்விரண்டுவமைகளும் கம்பன் முன்பே பாடியது எனினும் மாற்றியெண்ணிக் கூறிய தன்மையால் சற்றே புதுமை எனலாம்.
பெண்ணின் புன்னகையை யாவரும், பளிங்குக் கல்லில் காசை இறைத்தாற்போல என்றோ, முத்துக்கள் சிதறினாற்போல என எழுதிவந்தபோது சற்றே மாற்றி இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கண்ணாடிக் கோப்பையில் பனிக்கட்டியை இடுதல்போல எனப் பெண்ணின் சிரிப்பொலிக்கு புதிய முறையில் உவமைகாணப் புகுந்ததைச் சற்றே புதுமை எனலாம்.
ஆக, இன்றைய இளையர்க்குக் கூறிக்கொள்வது என்னவென்றால் முடிந்தவரை உவமையில் புதுமைக் காணவேண்டும். அது முடியாதபோது முடிந்தவரை அடுத்தவர் ஆண்ட உவமைகளைத் தன்னுடையதுபோல் தருவதைத் தவிர்த்துவிடவும்.
சரி. வலைச்சரத்தின் விதிப்படி சில பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டிய கடமையும் உள்ளதால் கட்டுரையை மேலும் வளர்க்காமல் சிலப்பல பதிவர்களை என்பங்கிற்கு அறிமுகப்படுத்த விழைகிறேன்.
தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்!
இவரைப்பற்றி அறியாத்தமிழன் தமிழனாக இருக்க முடியாது. தமிழில் பேரறிவு படைத்த இவர் மேடைப்பேச்சாளர் என்பது யாவரும் அறிந்ததே. எனது கவிதைகளைப் இணைய வாயிலாகப்படித்துவிட்டு என்னைப் போற்றியும் அன்பு செய்தும் வருபவர். எளிமையாகவும் யாவரிடத்தும் இனிமையாகவும் பழகும் இவருடனான எனது பாவிளையாடல்கள் பல ஒன்றை இங்கே எடுத்துக்கட்ட விரும்புகிறேன்.
ஓர்முறை எனது வலையான அகரம் அமுதா வலையில் மௌனம் என்ற தலைப்பில் ஒரு வெண்பா எழுதியிருந்தேன். தமிழ்க்கடல் அவர்கள் படித்துப்பார்த்துவிட்டு வெண்பாவடிவிலேயே வினாதொடுத்திருந்தார். அவர் வினா தொடுத்ததும் அதற்கு நான் விடையறுத்ததும் கீழே!
மௌனம்!
மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் –மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றிச் சொன்னவளே! மௌனத்தால்
சொன்னது நீதானா சொல்!
என் மேற்கண்ட பாவைப்படித்த தமிழ்க்கடல் அவர்கள் விடுத்திருந்த வினா!
கொன்றவளே வென்றதுவும் வென்றதலால் வாழ்ந்ததுவும்
நன்றாகச் சொல்லிவிட் டீர்நீரும்; -அன்றவளும்
பேசவில்லை என்றாலும் பேசிநின்றாள் என்கின்றீர்
கூசுவிழிக் கண்ணாலோ கூறு!
மேற்கண்ட தமிழ்க்கடலாரின் வினாவிற்கு நான்உரைத்த பதில்!
உள்ளதைச் சொல்லுகிறேன் ஒப்பில் புலவரே!
தள்ளாமல் ஏற்பீர் தயவுடனே! –உள்ளபடி
பேசா மடந்தையவள் பேசும் விழியால்தான்
கூசாமல் கூறிவிட்டாள் கூர்ந்து!
செழுமையாகப் பாப்புனையும் ஆற்றலும் பேச்சாற்றலும் இலக்கிய நுண்ணறிவும் படைத்த தமிழ்க்கடலாரின் வலையைப்படித்து யாவரும் பயனுற வேண்டுகிறேன்.
பாத்தென்றல் முருகடியான்!
சிங்கப்பூரின் புகழ்பெற்ற கவிஞர்களுன் முதன்மையான கவிஞர் பாத்தென்றல் முருகடியான் ஆவார். அடியேனுக்குத் தமிழும் மரபுப்பாவும் பயிற்றுவித்து அறிவொளி பெறச்செய்த எழுகதிர் இவரேயாவார். சில நாட்களுக்குமுன்புதான் இவர் எழுதி வெளியிட்ட ‘சங்கமம்’ என்ற தலைப்பிலான கவிதைக்காவியத்திற்கு ‘கரிகாலன்’ விருதுவழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டார். நான் மரபுக்கவிதைகள் பாட இவரிடம் கற்றுக்கொள்ளும் போது, (வரம்வழங்கியவன் தலையிலேயே கைவைப்பதுபொல) பாவிலேயே பற்பல வினாக்கள் தொடுத்துள்ளேன். அத்தனைக்கும் சினம் கொள்ளாது பொறுமையாகப் பதில் வழங்கி என்னை ஊக்கப்படுத்தும் பொறுமையாளர் ஆவார். இவருடன் நான்தொடுத்த வினாக்களும் அதற்குப்பொறுமையுடன் அவர்அளித்த விடைகளும் கீழே!
கேள்வி:-
ஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்
பேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்
நெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)
அஞ்சா(து) அருவியென்(று) ஆர்த்து!
பதில்-
காகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய
தோகை விரிப்பதெது தொல்புவியில்? -மேகமதைக்
கண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்
கொண்டாடல் எம்முடைய கோள்!
கேள்வி-
தோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்?
காகத்திற்(கு) ஈந்தன்றோக் காக்கின்றார்? -தோகையில்லா
காகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின
மாகவன்றோ போற்றிடுகின் றார்?
பதில்-
இரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனம்படைத்தார்;
கரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை
காக்கைக்(கு) உணவீந்துக் கண்ணவிவார்; மாந்தரைப்போல்
யாக்கை எடுத்த விலங்கு!
கேள்வி-
தேமதுரப் பூந்தமிழைத் தேடிக் களிப்பதனால்
ஆவதென்ன? வேற்றுவரின் ஆங்கிலமோ -டேவடவர்
தாய்மொழியும் வந்தே தமிழில் கலப்பதனால்
தாழ்வேதும் வந்திடுமோ தான்?
பதில்-
காற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ?
சோற்றோடு கல்லைச் சுவைப்;பீரோ? -ஏற்ற
அமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை
நமதாக்கல் நன்றோ நவில்!
கேள்வி-
அழியாத் தமிழை அகிலத்தே நாட்ட
வழியுண்டோ? செய்யுள் மரபைப் -பழிக்கும்
புதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி
சதுராடிச் சாய்க்கவழி சாற்று!
பதில்-
முறையாய்த் தமிழறியா மூடர்: புதுக்கவிதைக்
கறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்
செந்தமிழுக் கென்ன சிறப்புண்டு? வெந்தவிதை
எந்தநிலம் ஏற்கும் இயம்பு?
கேள்வி-
பட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை
இட்;டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா
என்ன புதுக்கவிதை? யாண்டுமதை ஏற்காமல்
திண்ணமோ(டு) ஏன்எதிர்க்கின் றீர்?
பதில்-
மட்டமோ? மேலோ? மரபோ? புதுவரவோ?
திட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)
எப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்
செப்புகிறேன் செம்பொருளைச் சேர்!
புவியரசே! பூந்தமிழைப் போற்றுகின்ற சிங்கைக்
கவியரசே! கன்னற் கனிச்சொற் - சுவையரசே!
சேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்
தாயாம்நீர் சொன்னால் சரி!
இவரது வலையின் அனைத்துக்கவிதைகளும் நறுக்குத் தெரித்தாற்போல் அமைந்திருக்கும். எதையும் உணர்ச்சிப்பெருக்கோடு உரைத்துப் படிப்போரைக் கவரும் ஆற்றல் படைத்த கவிஞர் இவர். மரபுக்கவிதைகள் படிக்க விரும்புவோரும் மரபுக்கவிதை எழுதும் யாவரும் இவரது கவிதைகளைப் படித்துப் பயன்பெற அன்போடு வேண்டுகிறேன்.
முனைவர். இரத்தின புகழேந்தி!
அரியபல செய்திகளை தன் அறிவு நுட்பத்தால் மிகத் தெளிவாகவும், யாவரும் புரிந்து உவக்கும் விதத்திலும் அழகிய நடைகொண்டு கட்டுரைப்பதில் இவருக்கு இவரே நேர் எனலாம். அத்துணைத் தெளிவான கட்டுரை வடிக்கும் ஆற்றல்வல்லார். குறிப்பாக இவரைப்பற்றிக் கூறுவதெனில் நான்கிற்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிறுகதை எழுதுவதிலும் கட்டுரைகள் புனைவதிலும் ஆற்றல்வல்லாரான இவரது வலைக்குச் சென்று படித்துப்பயன்பெற அனைவரையும் வேண்டுகிறேன்.
...வளர்வேன்
அகரம் அமுதன்
அட அட அட... அசந்து போய் உக்காந்துருக்கேன் !!!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteதொடருங்கள்
/////Mahesh said...
ReplyDeleteஅட அட அட... அசந்து போய் உக்காந்துருக்கேன் !!!/////
மிக்க நன்றிகள் மகேஷ் அவர்களே! என்னைத்தனி மடலில் தொடர்புகொள்க -agramamutha08@gmail.com
தங்கள் வலையில் மறுமொழி இட்டுப்பார்க்கிறேன். ஆனால் ஏற்கமறுக்கிறது. ஏனெனத்தெரியவில்லை.
Mahesh said...
ReplyDeleteஅட அட அட... அசந்து போய் உக்காந்துருக்கேன் !!!
மிக்க நன்றிகள் திகழ்மிளிர் அவர்களே!
அருமையான பகிர்தலுக்கு நன்றி
ReplyDeleteவாவ்! :)
ReplyDelete////அமுதா said...
ReplyDeleteஅருமையான பகிர்தலுக்கு நன்றி////
மிக்க நன்றிகள் அமுதா அவர்களே!
////Karthik said...
வாவ்! :)////
மிக்க நன்றிகள் கார்த்திக் அவர்களே!
அன்பின் அம்கரம் அமுதா
ReplyDeleteஅருமையான விளக்கங்களுடன் கூடிய கேள்வி பதில் வெண்பாக்கள் - அழகிய அறிமுகம் - பல பதிவர்கள்
நன்று நன்று
நல்வாழ்த்துகள்
புலவர்களின் கேள்வி பதில்கள் அருமை . நல்ல அறிமுகங்கள்
ReplyDelete////cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் அம்கரம் அமுதா
அருமையான விளக்கங்களுடன் கூடிய கேள்வி பதில் வெண்பாக்கள் - அழகிய அறிமுகம் - பல பதிவர்கள்
நன்று நன்று
நல்வாழ்த்துகள்/////
மிக்க நன்றிகள் சீனா அவர்களே!
///// Suresh Kumar said...
ReplyDeleteபுலவர்களின் கேள்வி பதில்கள் அருமை . நல்ல அறிமுகங்கள்/////
நன்றிகள் நண்பர் சுரேஷ் குமார் அவர்களே
அகரத்தாரே...!
ReplyDeleteகலக்குங்க...!
இனமானத் தமிழனே!
நின் புகழ் ஓங்குக...!
/////அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ReplyDeleteஅகரத்தாரே...!
கலக்குங்க...!
இனமானத் தமிழனே!
நின் புகழ் ஓங்குக...!//////
போங்கள் நண்பரே எனக்குக் கூச்சம் கூச்சமாக வருகிறது. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
ReplyDeleteதொடருங்கள்
நன்று நன்று மிக நன்றாக உள்ளது
ReplyDeleteவெண்பாவிலேயே கேள்வியும், பதிலும்... அருமையாக இருந்தது. வாழ்த்துகள் தோழரே.
ReplyDeleteஅறிமுகமும் அற்புதம்.
ஞான சேகர் அவர்களுக்கும் குடந்தைமணி அவர்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
ReplyDeleteசமீபகால வலைச்சர வாழ்வில் தங்களின் வாரம் தனித்திருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துக்களும்!
ReplyDelete////" உழவன் " " Uzhavan " said...
ReplyDeleteசமீபகால வலைச்சர வாழ்வில் தங்களின் வாரம் தனித்திருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துக்களும்!/////
மிக்க நன்றிகள் உழவன் அவர்களே