Wednesday, July 22, 2009

எடக்கு மடக்கு!

நான் இணையத்தில் எழுதத் துவங்கிய காலந்தொட்டு, பிறர் வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தால் மிகப் பிடித்த இடுகைகளுக்குப் பின்னூட்டமாக வெண்பாக்களைப் பாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவளே! –இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!

பொன்மானின் பின்போனப் பொய்யனவன் பூங்கதையைத்
தன்மானச் சிங்கமிவன் சாடிவிட்டான் –என்மானச்
சிந்தையின் நேருற்ற செந்தாழால்! என்னுடன்வா
செம்புலப் பெய்நீர்போல் சேர்ந்து!


---என்பன போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஓர்முறை நண்பர் இலதானந்த் அவர்கள் தனது இடுகையில் ஓர் கதையைக் குறிப்பிட்டெழுதியிருந்தார். (கதையைப் பார்க்க இங்குத் தட்டுக).

கதையைப் படித்த எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பின்னூட்டம் இட்டிருந்தேன். நண்பர் இலதானந்திடமிருந்து பதில்வந்தது இப்படி. ‘உரைநடையாகப் பின்னூட்டமிட்டால் எப்படி? அப்படியே ஒரு பாட்டுக்கட்டிவிட வேண்டியதுதானே’ –என்றார்.

சரி எனச்சொல்லி நானும்…

எண்ணனுக்கும் எக்காக்கும் என்றனுக்கும் கல்யாணம்
பண்ணலன்னு சொன்னாப் பரிகசிச்சி –முன்னவொங்க
ஆத்தாக்கும் அப்பனுக்கும் ஆச்சான்றே? ஓங்கியொண்ணு
போட்டாச் செவுல்பிஞ் சிடும்!
–என எழுதினேன்.

நண்பர் இலதானந்த் அவர்கள் ஓர்முறை வெண்பாப் போட்டியும்கூட அறிவித்தார். ‘உளறல்’ என்ற தலைப்பிலான போட்டியில்…

கட்டித் தழுவநாற் காற்சேர யாக்கையிரண்
டொட்டி உறவாடி உய்கையில் –மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு!
– என நானும் வெண்பா எழுதி முதற்பரிசையும் பெற்றேன்.

பரிசு வழங்கியமைக்காக நன்றியுரைத்து நண்பர் இலதானந்த் அவர்களுக்கு நன்றிகள் சொல்லிப் பின்னூட்டமாக ஓர் வெண்பாவும் எழுதியிருந்தேன். (இங்குக் காணலாம்).

பரிசுக்கான வெண்பாவையும், நன்றிநவிலும் வெண்பாவையும் படித்த சில நண்பர்களில் ஒருவர், ‘அடேங்கப்பா, நன்றியைக்கூட வெண்பாவிலேயே சொல்கிறாரே அமுதா! பெரீய தெறமயானவர்தாம்போல’ ன்னார். இன்னொருவர், ‘அட நீங்கவேற! வெளிக்குப் போவதைக் கூட வெண்பாவாக்கும் திறமை படைத்தவர் அமுதா’ அப்டின்னார்.

நான் ஏதோ மகிழ்ச்சிக்கு எழுதப்போக இவர்களாக ஒரு முடிவுகண்டிக்கொண்டு ஏதேதோ பேசுகிறார்களே, என எண்ணி நொந்துகொண்டபோது, இந்த அமளிதுமளிகளைக் கண்டுகொண்டிருந்த ஒரு தோழி (பெயர் வேண்டாம்) பரிசெல்லாம் (போட்டியில் கலந்துகொண்டு) பெற்றிருக்கீங்க போல. வாழ்த்துக்கள். வெளிக்குப் போவதைக் கூட வெண்பாவாக்கும் திறமை உங்களுக்கிருக்காம்ல, எங்க? ஒரு தேராத வெண்பா சொல்லுங்க பார்ப்பம்’ என்றார்.

எனக்குச் சங்கடமாகப் போய்விட்டது. என்னடா இது? இத்தனைக் காலமும் தேராத வெண்பாக்களாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியாவது நல்ல வெண்பாக்களை எழுதலாம் எனப்பார்த்தால் இந்த பெண் தேராத வெண்பா கேட்கிறாரே! ஒருவேளை, நம்மைத் தேராதவனே! என நேராக உரைக்கப் பயந்துகொண்டுதான் தேராத வெண்பா எழுதக் கேட்டிருப்பாரோ? எழுதாமல் விட்டுவிட்டால், ‘அமுதாவைத் தேராத வெண்பா எழுதக் கேட்டிருந்தேன், எழுதமுடியாமையால் தோற்றுவிட்டார்’ எனப் பறைசாற்றிவிடுவாரோ? என்கிற அச்சத்தில், அவருக்காக ஒரு தேராத வெண்பாக் கட்டினேன்.
கேட்டவர் பெண்ணல்லவா! நம்சுழி சும்மா இருக்குமா? உடனே எழுதினேன் இப்படி…

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவும் தேராதே! –தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!


பொருள் –

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும் –வெற்றிபெறாது நமக்கிடையிற் தோன்றிய காதல் வெற்றியே பெறாது என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவும் தேராதே! –ஆராயாமல் ஓர்முடிவையும் தேர்ந்தெடுக்காதே!
தேராதே தேராதே என்பாயேல் –ஆராயாது வெற்றிபெறாது என்பாயானால்
தேராதே என்நெஞ்சம் தேராதே –(அச்சொற் கேட்டால்) துன்பத்தில் மூழ்கிக்கிடக்கும் எனது நெஞ்சமானது அதிலிருந்து மீளாதே! மீளலேமிளாதே!
ராதே! ராதே! –ராதா! ராதா!

பொருளைப் புரிந்துகொண்ட அப்பெண் கோபத்தோடு உமக்கு வாய் ரொம்பத்தான் நீளம் என்றார். விடலாமா?

கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! –இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்!


–என்றேன். அத்தோடு அப்பெண்ணை இணையப்பக்கங்களில் காணவில்லை. கண்டவர் சொல்வீராக.

இனி சில பதிவர்களைக் காண்போமாக!

1. தமிழநம்பி.

இவர் சிறந்த மரபுக்கவிஞர் ஆவார். குறிப்பாக ஈழத்தின்மீதும் புலிகளிம் மீதும் தீராப்பற்றுடையவர். கவிதை மட்டுமல்லாது கட்டுரைகளும் எழுதிக் கலக்கக்கூடியவர். இவர் படித்திருப்பது தொழில்நுட்பம் எனினும் தமிழை மிக நேர்த்தியாகக் கையாண்டு யாவரையும் வியக்கச்செய்கிறார். சிதறல்கள் என்ற தலைப்பிலான அழகிய நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இவரது வலைதளத்தைக் கண்டு களிக்க வேண்டுறேன்.

2. சுப.நற்குணன்.

மலேசியரான இவர் ஆசிரியராகப் பணிபுரிவதாக அறிகிறேன். மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். தமிழுக்கும், தமிழருக்கும் தீங்கிழைப்போரைச் சாடிக்கட்டுரைகள் பல தீட்டிவருகிறார். மிக நுட்பமான அறிவுபடைத்த இவரின் வலையைப்படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்..

3. கவிநயா!

எனதருமைத் தோழியான கவிநயா நினைவின் விளிம்பில் என்ற தலைப்பிலான வலைஅமைத்து எழுதிவருகிறார். மிகுந்த இறைநம்பிக்கையுடைய இவர் கடவுளர்களின் மீது நிறைய சந்தப்பாக்கள் தீட்டி வருகிறார். மரபுக்கவிஞரும் கூட. கட்டுரைகள் பலதீட்டி அனைவரையும் கவர்ந்திழுக்கும் எழுத்தாற்றல் படைத்தவர். படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

வளர்வேன் ...
அகரம் அமுதா

17 comments:

  1. இப்பத்தான் புரியுது நான் எழுதற வெண்பாவெல்லாம் தேரவே தேராதுன்னு !! :))))))))))))

    ReplyDelete
  2. அன்பின் அ.அமுதா

    நல்ல நடை - இடுகை அருமை - வெண்பாக்கள் பிரமாதம் - பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துகள் - MOANING என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இவ்வளவு அழகாக வெண்பா எழுத முடியாது. அருமை அருமை

    இன்னொன்று - சுஜாதா சலவைக்குப் போட துணிகளின் சிட்டையை வைத்துக்கூட கதை எழுதுவார் எனக் கூறுவார்கள். அதைப்போல எதைப்பற்றியும் வெண்பா எழுதும் திறமை படைத்த அமுதா - வாழ்க - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உங்கள் வெண்பாக்கள் அருமை

    ReplyDelete
  4. தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
    தேராதே ஓர்முடிவும் தேராதே! –தேராதே
    தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
    தேராதே ராதேரா தே!

    அற்புதம்

    வார்த்தை
    வடம் பிடித்து
    விளையாடுகிறது

    ReplyDelete
  5. வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அகரம் அழகாம் தமிழுக்கு உந்தன்
    பகரும் அழகு தமிழ்ப்பாக்கள் சான்று
    நிகரும் அழகும் தமிழுக்கு என்றும்
    அகரம் அமுதாஉன் னால்.

    ReplyDelete
  7. பாக்களே மற்மொழிகளாக
    பரிசாக கிடைப்பது
    பெருந்தவம்,அதைப்
    பெற்றவன் என்னும்
    பெருமை எனக்குண்டு, தங்களின்
    பாக்களால் இதைவிட
    பெரியது வேறு என்ன வேண்டும்

    தொடருங்கள்
    தமிழைச் சுவைக்க
    தணியாத
    தாகத்துடன்
    திகழ்

    ReplyDelete
  8. /////இப்பத்தான் புரியுது நான் எழுதற வெண்பாவெல்லாம் தேரவே தேராதுன்னு !! :))))))))))))/////

    மகேஷ்! அப்படிச்சொல்லலாமா? காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சல்லவா? எனது துவக்கக்கால வெண்பாக்கள் படுகேவலமாக இருக்கும். அவற்றோடு ஒப்பிடுகையில் தங்களுடையது பத்து மடங்குகள் மேலானவை.

    இப்படியெல்லாம் எதையாவது நினைத்துக்கொண்டு ஈற்றடிக்கு வெண்பாக்கள் எழுதாமல் இருந்துவிடலாம் என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள். விடமாட்டேன்.

    ReplyDelete
  9. /////cheena (சீனா) said...

    இன்னொன்று - சுஜாதா சலவைக்குப் போட துணிகளின் சிட்டையை வைத்துக்கூட கதை எழுதுவார் எனக் கூறுவார்கள். அதைப்போல எதைப்பற்றியும் வெண்பா எழுதும் திறமை படைத்த அமுதா - வாழ்க - நல்வாழ்த்துகள்/////

    வணக்கங்கள் சீனா அவர்களே! சுஜதா எங்கே? நான் எங்கே? அவர்மலை. நான் மடு.

    மேலும் வெண்பாவில் சொல்லமுடியாத கருத்தென்று ஒன்றும் கிடையாது. இதனை வலியுறுத்துவதற்கே வெண்பா எழுதலாம் வாங்க என்கிறேன் பலரையும்.

    ReplyDelete
  10. /////ஆ.ஞானசேகரன் said...
    உங்கள் வெண்பாக்கள் அருமை/////

    மிக்க நன்றிகள் ஞான சேகர் அவர்களே!

    ReplyDelete
  11. திகழ்மிளிர் said...

    வார்த்தை
    வடம் பிடித்து
    விளையாடுகிறது

    அய்யய்யோ! கூச்சங்கூச்சமா வருது திகழ்மிளிர் அவர்களே! நன்றி. நன்றி. நன்றி.

    /////திகழ்மிளிர் said...
    அகரம் அழகாம் தமிழுக்கு உந்தன்
    பகரும் அழகு தமிழ்ப்பாக்கள் சான்று
    நிகரும் அழகும் தமிழுக்கு என்றும்
    அகரம் அமுதாஉன் னால்.////


    திகழ்மிளிர் செய்த திறமிகுவெண் பாவால்
    அகங்குளிந் தான்இவ் வமுதன்! -புகழவும்
    ஓர்மனம் வேண்டும் உளதது உம்மிடம்
    ஓர்குறையு மின்றிநீர் வாழ்க!

    ////தொடருங்கள்
    தமிழைச் சுவைக்க
    தணியாத
    தாகத்துடன்
    திகழ்////

    நானும்... நானும்... (தங்களுடைய எழுத்துக்களை)

    ReplyDelete
  12. அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete
  13. ////// அமுதா said...
    அருமை. வாழ்த்துகள்//////

    மிக்க நன்றிகள் அமுதா

    ReplyDelete
  14. வெண்பா கவிஞர் அமுதாவிற்கு எனது வாழ்த்துகள்,அரிய அறிமுகங்கள்
    பல தொடுத்து மனம் சேருங்கள் வலைசரத்திற்கு.

    ReplyDelete
  15. அட.. பரிசு பெற்ற வெண்பா நம்ம வலையின் பெயருல.. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  16. " உழவன் " " Uzhavan " said...
    அட.. பரிசு பெற்ற வெண்பா நம்ம வலையின் பெயருல.. வாழ்த்துக்கள் :-)


    வணக்கம் உழவன் அவர்களே! உளறல்கள் என்றுத் தங்களின் வலையின் பெயரைத்தலைப்பாகக் கொண்ட வெண்பாப்போட்டியில் பரிசு வென்றதற்காகப் பரிசில் பங்கெல்லாம் கேட்கமாட்டீர்களே!? :- ))))

    ReplyDelete
  17. //வணக்கம் உழவன் அவர்களே! உளறல்கள் என்றுத் தங்களின் வலையின் பெயரைத்தலைப்பாகக் கொண்ட வெண்பாப்போட்டியில் பரிசு வென்றதற்காகப் பரிசில் பங்கெல்லாம் கேட்கமாட்டீர்களே!? :- ))))//
     
    கேட்டால் கொடுக்காமலா இருப்பீர்கள்? -)) மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete