Tuesday, August 4, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 2

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்!



பெரியோர்க்குப் பெருமை பணிந்து சிறுத்தலும், கல்வியிற்ச் சிறந்தவர்க்கு உண்டானது அடக்கமும், செல்வம் படைத்தவர்களுக்கு ஈகையும் பெருமை தரக்கூடியன என முனிவர் அருளிச் செய்த நாலடியாரில் கூறப்பட்டதை நினைவுகூற விரும்புகிறேன். Yes, the greatness of the great is the quality of littleness(humulity); the real acquisition of those who have acquired one is modest self-restraint. If we rightly understand things, those possessors of wealth only are really wealthy who relieve the wants of those that them.


நேற்றைய இடுகையிலே இளைய சமுதாயத்தைக் கண்டு காழ்ப்புக் கொள்கிறார்கள் மூத்தவர்கள். அவர்கள் மத்தியிலே புதிதாக எழுதவரும் பதிவர்களை ஊக்குவித்துப் பாராட்டுமுகமாய் வலைச்சரம் நடாத்தி வருகிற ஐயா அவர்களைப் பாராட்டும் பேறு பெறுகிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அதை எழுதும்போதே இப்படிச் சாடி எழுதுவது தேவைதானா எனும் கேள்வி நம் முன் எழுந்தது. பலமுறை யோசித்துவிட்டே அதை மேற்கொண்டு எழுத விழைந்தேன். அதுவே விவாதமாகவும் ஆகிவிட்டது, எனவே மேலதிகமாக எழுதும் நிலைக்கு ஆட்பட்டிருக்கிறேன்.

காரணம் யாதெனின், சமூகத்திலே இருக்கிற பல பெரியவர்கள் எழுத்திலும் சரி, லெளகீக வாழ்விலும் சரி, இளைஞர்களையும் மேன்மைமிகு மாற்றங்களையும் வெளிவர விடுவதில்லை. தமிழிலே எழுத விழையும் இளைஞர்களிடத்தே குறை காண்கிறார்கள். குறையாகவே இருப்பினும் அதைச் சுட்டி மேலும் அதை மேம்படுத்துவது மட்டுமே நலம் பயக்கும்.

இன்றைக்கு இளைஞர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கோலோச்சும் நிலைமை! காரணம் என்ன? மூத்தோரின் குறுக்கீடுகள் அவற்றில் இல்லை என்பதும், அவர்களுக்கு புதிதாய்ப் பிறந்த தொழில் நுட்பத்தில் தேர்ச்சி இல்லை என்பதும்தானே நிதர்சனம்?! அதனால்தான் இளைஞர்களால் அவற்றில் மேலே வர முடிந்தது. அரசியல், இலக்கியம், எழுத்து, நிதி, நிர்வாகம் முதலானவற்றிலே இன்னமும் அடக்கியாளும் பாங்கு இருக்கிறது என்பதும் உண்மை. இப்படிச் சொல்வது என்பது, பெரியோரை மதியாது நடப்பதை ஊக்குவித்தல் என்றாகிவிடாது.

நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை இனங்கண்டு, அவற்றைத் தீட்டி ஒளிரவிடுவதுதானே பெரியவர்களின் தலையாய வேலையாக இருக்க முடியும்? அதைவிடுத்து காலாகாலமாக ஒளிரும் கதிரவன்களின் பெயரையும் புகழையும் பிரபலத்தையுமே சொல்லிச் சொல்லிக் காலம் கழிதல் வேண்டுமோ? இதே எண்ணம் மற்றவர்க்கும் வந்திருக்கிறது என்பதை, இளைஞர்களுடன் இணைக்கு இணையாய் இருந்து, மாற்றங்களைச் செவ்வனே கற்றுத் தேர்ந்து கோலோச்சும் டோண்டு ஐயா அவர்கள் கொடுத்திருந்த சுட்டி பறை சாற்றியது.

இலக்கியத்தில், எழுத்தில் கோலோச்சும் பெரியோரே, எம்மை மன்னியுங்கள்! ஆனால் அடுத்தவரை வளர விடுங்கள்!! எங்கெல்லாம் அடுத்தவரை வளர்த்துவிட வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மனமொத்துச் செயலாற்றுங்கள்!!!

அந்த பணிவான வேண்டுகோளோடு சில புதிய பதிவர்களைக் காண்போம் வாருங்கள் வாசகர்களே!

செருப்பில்லாதவன் ந‌ட‌க்கும்
பாதையிலே உமிழ்ந்த எச்சில்
காலணிக்குள் உறுத்துகிறது
சிறு கல்லாய்...

புகைவண்டியில் சீப்பு
விற்கும் குருடனிடம்
பேசிய பேரம் எரிகிறது
கண்ணுக்குள் நெருப்பாய்..

அழுகையோடு உறங்கிய‌
என் குழந்தையின் கண்ணீர்
இரவு முழுவதும் மழைநீராய்
சொட்டுகிறது கனவில்.................


இந்தக் கவிதையைப் படித்த பிறகு என் மனம் தவித்தது. இந்தப் படைப்பாளியின் எண்ண வெளிப்பாடுகள் இருக்கிறதே, அவை விண்ணையே முட்டக் கூடியவை. எளிமையாய் எழுதி, சாமான்யனின் நினைவு எச்சங்களை எகிறச் செய்வதில் விற்பன்னர். அவர்தான் கதிர் ஈரோடு!

தமிழ்க் கடவுள், அந்த முருகப் பெருமானே பதிவுலகத்துக்குள் நுழைந்து தமிழ் கற்பிக்க வந்துவிட்டாரோ என வியந்தேன். இயல்பான முறையில், நமது பயன்பாட்டில் தமிழ் எனும் தலைப்பில் அவர் எழுதும் பாங்கு வெகு சிறப்பாக இருக்கிறது. தம்பி செந்தில்வேலனே, உம்மைப் போன்ற இளையோர் இருக்கும் வரையிலும்,

தமிழ் பட்டுவிடப் போவதும் இல்லை!
அந்தப் பற்று விட்டுவிடப் போவதுமில்லை!!


மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தினேன், தம்பியை அறிமுகப்படுத்தினேன். அண்ணனை அறிமுகப்படுத்தாமல் சென்றுவிடுதல் நியாயமாகுமா?
பாலா அண்ணன் அவர்கள், செய்திகளைச் சேகரித்து அதற்கு நறுக்குத் தெறித்தாற்போல் மறுமொழிவதில் நிபுணர் என்றே சொல்ல வேண்டும். மிகவும் சுவாரசியமாக இருக்கும்!

நன்றி மக்களே! மேலதிக அறிமுகங்களோடு மீண்டும் உங்களை எல்லாம் நாளை சந்திக்கிறேன்!


பணிவுடன்,
பழமைபேசி.


15 comments:

  1. பாவனாதீதம்னா நிறைய பேருக்கு நடிகை பாவனாதான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். பாவனாதீதம்னா என்னன்னு தமிழ்ல விளக்கம் சொல்லுங்க.

    ReplyDelete
  2. //சின்ன அம்மிணி said...
    பாவனாதீதம்னா நிறைய பேருக்கு நடிகை பாவனாதான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். பாவனாதீதம்னா என்னன்னு தமிழ்ல விளக்கம் சொல்லுங்க.
    //

    அஃகஃகா! வாங்க வாங்க....

    எனக்கெல்லாம் எழுத வருமா? சிந்திக்கத் தெரியுமா?? யோசிக்கத் தெரியுமான்னு கெடந்து தவிக்குறப்ப, மனசுல வந்து விழறதுதான்... கெடைக்காமக் கிடைச்சதுன்னு வெச்சுகுங்க...

    ReplyDelete
  3. இரண்டாம் நாள் வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  4. மூவரும் எனக்கு புதிய அறிமுகம்தான்

    ReplyDelete
  5. இரண்டாம் நாள் வாழ்த்துகள் நண்பா . நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  6. இரண்டாம் நாள் வாழ்த்துகள் நண்பா. அறிமுகங்களை கண்டுகினு வர்றேன்.

    ReplyDelete
  7. /-- இன்றைக்கு இளைஞர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கோலோச்சும் நிலைமை! காரணம் என்ன? மூத்தோரின் குறுக்கீடுகள் அவற்றில் இல்லை என்பதும், அவர்களுக்கு புதிதாய்ப் பிறந்த தொழில் நுட்பத்தில் தேர்ச்சி இல்லை என்பதும்தானே நிதர்சனம்?! --/

    உங்களுடன் சற்றே மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறேன். எனக்கு என்னவோ மேற்கத்திய நாட்டவருக்கு குறைந்த கூலியில் அதிக ஆட்கள் இந்தியாவில் கிடைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இதில் உலக அரசியல் இருக்கிறது பழமை பேசி.

    இன்னும் கூட கிராமங்களில் தெருவில் நடந்தால் பலரும் வலிய வந்து விசாரிப்பார்கள். "எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? தினமும் எங்கு போகிறாய்? இன்னும் பல கேள்விகள் வரும்..." இதை நீங்கள் குருக்கீடாகவும் எடுக்கலாம்... அக்கறையாகவும் எடுக்கலாம்...

    குறுக்கீடா அல்லது அக்கறையா என்பது நம்முடைய புரிதலைப் பொறுத்து உள்ளது. புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை. குறைகளும் இல்லை.

    பதிவுக்கு நன்றி பழமைபேசி...

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் இரண்டாம் முறை சுட்டப் படுவதில் மகிழ்ச்சி. அன்புக்கு நன்றியும் இரண்டாம் நாள் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  9. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    /தமிழ் பட்டுவிடப் போவதும் இல்லை!
    அந்தப் பற்று விட்டுவிடப் போவதுமில்லை!!/

    உண்மை தான்

    /செருப்பில்லாதவன் ந‌ட‌க்கும்
    பாதையிலே உமிழ்ந்த எச்சில்
    காலணிக்குள் உறுத்துகிறது
    சிறு கல்லாய்...

    புகைவண்டியில் சீப்பு
    விற்கும் குருடனிடம்
    பேசிய பேரம் எரிகிறது
    கண்ணுக்குள் நெருப்பாய்..

    அழுகையோடு உறங்கிய‌
    என் குழந்தையின் கண்ணீர்
    இரவு முழுவதும் மழைநீராய்
    சொட்டுகிறது கனவில்................./

    அற்புதமான வரிகள்

    ReplyDelete
  10. அன்பின் பழமைபேசி

    வலைச்சரம் அழகாகத் தொடுக்கப்படுகிறது

    அறிமுகப்படுத்தப்படும் பதிவர்களின் பதிவுகள் அருமையாகக் உள்ளது

    நன்று நண்பா - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. @@ஆ.ஞானசேகரன்
    @@Suresh Kumar
    @@குடந்தை அன்புமணி
    @@ Krishna Prabhu
    @@பாமரன்..
    @@திகழ்மிளிர்
    @@cheena (சீனா)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  12. என்னை மிக அழுத்தமாக அடையாளப் படுத்தியிருக்கிறீர்கள்...

    உங்கள் பாராட்டும் மனதும், வளர்த்து விடும் உள்ளமும், வளரும் வலைப்பதிவர்களுக்கு மிகப்பெரிய கொடை

    நன்றி பழமை

    ReplyDelete
  13. மிக அழகாக யார் மனமும் புண்படாமல் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. யாரும் யாரையும் தடுப்பதெல்லாம் இல்லை நண்பரே. அதற்கெல்லாம் யாருக்கும் நேரமுமில்லை.

    ஆரம்பத்தில் அது மாதிரி தோன்றும் போகப் போக நம் சரக்குக்குத் தகுந்த விலை இதுதான் என்பதை பல நல்ல சரக்குகளுடன் ஒப்பிட்டு நமக்கே புரிந்து விடும்.

    சிறந்தவைகள் யார் தடுத்தாலும் தனித்திலங்கும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

    சில நல்ல பதிவுகளை காட்டித் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. @@சுல்தான்

    ஐயா, வாங்க, வணக்கம்! எல்லாரும் உங்களைப் போலவே இருந்தால் நானும் அகமகிழ்வேன் ஐயா!! நன்றி!!!

    ReplyDelete