Wednesday, November 28, 2012

சப்தப்ராகாரம் - நெருப்பு


பல வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் கோவில் மூலஸ்தானத்தில் தீ பிடித்துக் கொண்டதாம். மூலவர் நெருப்பில் தகதகத்திருக்கிறார். போராடி அணைத்திருக்கிறார்கள். பிறகு மூலவரை புதிதாய் வடிவமைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் பல எதிர்ப்புகளைச் சமாளித்து வந்திருக்கிறது. பிற படையெடுப்புகள்.. ஊருக்குள்ளேயே சங்கடங்கள் என்று.. ஆனாலும் இன்னமும் கோவில் அதன் அழகை இழக்காமல் இன்னும் பக்தர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.


சேஷராயர் மண்டபம் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பக்கம் இருக்கிறது.
பாருஙகளேன்.. ஒவ்வொரு தூணும் எவ்வளவு உயரம்..  அதிலும் சிற்ப வேலைப்பாடுகள்.. இணைப்பே இல்லாமல் ஒற்றைத் தூண்..  குதிரை வீரன், அதன் மேலிருந்து புலியை, யாளியை வேட்டையாடுவது போல..  எங்கிருந்து இவ்வளவு கற்களைக் கொண்டு வந்து.. எப்படித் தூக்கி நிறுத்தினார்களோ..
இதன் அருகே தான் ஆயிரங்கால் மண்டபமும்.

அப்படியே கிழக்கு வாசல் வழியே வெளியே வந்தால்.. கிழக்கு சித்திரை வீதி..
எங்கள் சுஜாதா குடியிருந்த வீதி.. ( நானும் தான்!)


மீசை இல்லாத சுஜாதா என்ன அழகு பார்த்தீர்களா..
அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் எப்போது படித்தாலும் சுவாரசியம்.  அவரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது.. ‘சிறுகதை சுமாரா எழுத வருது.. பெருசா நாவல்.. தொடர் எழுதத் தெரியல’ என்றதும் அரை மணி குழந்தைக்கு சொல்வது போல சொல்லிக் கொடுத்தார்.  அன்றுதான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.. அலட்டல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று.

அதே போல என்னைக் கவர்ந்த இன்னொரு பிதாமகர் லா.ச.ரா அவர்கள்.
அவர் எழுத்தில் வரும்... ஒரு கதையில்.   ‘நெருப்பு’ன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும்னு.  அந்த அளவு எழுத்தில் ஒரு தவம் இருக்கணுமாம்..

என் சிறுகதை ஒன்று இலக்கிய சிந்தனையில் மாதப் பரிசு வாங்கியது. ( கல்கி பிரசுரம்- “ஏன்” தலைப்பு ) அந்த வருடம் வெளியாகித் தேர்வான 12 சிறுகதைகளில் இருந்து ஆகச் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்க லா.ச.ரா அவர்கள்.  ஒவ்வொரு கதைக்கும் அவரது விமர்சனத்தோடு.

இரண்டு பக்கங்களுக்கு என் கதையை அவர் பாராட்டியதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. ஏதோ ஒரு தயக்கத்தில் அவரை நேரில் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். என் பிசகுதான் அது. கடைசியில் இனி பார்க்கவே முடியாத தொலைவில் அவர் போய்விட்டார்.

கடைசி வரியில் ஒரு மோதிரக் குட்டும் கிடைத்தது அவரிடமிருந்து.
'இன்னும் கொஞ்சம் அழுத்தமா எழுதணும்’

பாரதியின் அக்னிக் குஞ்சு எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனால் சிலரிடம் அது கனல்கிறது. சிலரிடம் நீறு பூத்து அடங்கிக் கிடக்குது. வாய்ப்பு கிட்டாத பலர் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள்.  இந்த உண்மை புரிவதால் தான் யாரையும் தாழ்வாய் நினைக்கத் தோன்றுவதில்லை.

இனி இந்த வாரம் நாம் சில பதிவர்களைச் சந்திக்கலாமா..

மோகன் ஜி யின் எழுத்துககளில் கிறங்கிப் போகாதவர்கள் உண்டா?! இந்தப் பதிவை (துங்கா) அவரது பதிவுகளில் சிறந்த 10 தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் தேர்வு செய்து விடுவேன். விறுவிறுவென்று என்ன ஒரு சரளமான.. ஆனால் அதே நேரம் அழுத்தமான நடைக்கு சொந்தக்காரர்.

வை;கோவின் எந்தப் பதிவு என்று குறிப்பிட்டு சொல்வது..  அவரது திறமைக்கு அவர் எப்போதோ பத்திரிகைகளில் கொடி கட்டிப் பறந்திருக்க வேண்டும். உடம்பெல்லாம் உப்புச் சீடை அவரது மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.  இவரது எளிய, இனிய பழகும் தன்மையினால் பலர் இவரது அன்புக் கோட்டைக்குள் குடி புகுந்து விட்டார்கள். இவரது எழுத்துதிறன் எனக்கு எப்போதும் உற்சாகம் தரும். சோர்வு வந்தால் இவரை நினைத்தால் போதும்.. சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போகும்.  அவரது அன்பில் திளைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்.

பாரதிக்குமார் நெய்வேலி.. கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், குறும்படம் சொல்லிக் கொண்டே போகலாம்.. இவரது திறமைகள் குறித்து. ‘போட்டுத்தள்ளு’ சிறுகதை ஒரு சாம்பிள்தான்.

சமுத்ரா இவரும் எழுதாத.. தொடாத சப்ஜெக்ட் இல்லை என்று சொல்லலாம்.
அறிவியல் தேடலில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே போனால் முத்துக்கள் எடுக்கலாம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை க்கு எந்த சப்ஜெக்டும் விளையாட்டுத்தான்.. அதாவது எழுத்து விளையாட்டு. இவரது மன்னார்குடி டேய்ஸின் ரசிகன் நான்.

வீடு திரும்பல் மோகன்குமாருக்கு பதிவிடுதல் கின்னஸ் சாதனை.  கலகலப்பான பதிவுகளுக்கு நான் காரண்டி..

ஆரண்ய நிவாஸ்  சிறுகதை எக்ஸ்பர்ட் என்றே சொல்ல வேண்டும்.  பல தரப்பட்ட சுவாரசியங்களுக்கு சொந்தக்காரர்.  இவரது திறமைகளுக்கு எங்கோ இடம் பிடித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டமில்லாத அமைதி, எழுத்து வியாபாரம் இல்லாத தன்மை இவற்றால் வலைப்பக்கம் போதும் என்று ஆனந்தமாய் இருக்கிறார்.

வெங்கட் நாகராஜ் இவரது பயணக் கட்டுரைகள் மிக சுவாரசியம். தில்லி செய்திகளை இவரது பதிவுகளில் படிக்கும் போது எப்படி இவருக்கு நேரம் கிடைக்குது என்கிற ஆச்சர்யம் வரும். சலிக்காமல் பயணம் செய்யும் இவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபர்.

ஹரணி  கதை, கவிதையுடன் சிந்தனையைத் தூண்டும் செய்திகளைப் பகிர்வதில் முன்னணியில் நிற்பவர். கடுகளவு கற்றதிலேயே இவ்வலவு அழகாய் எழுத்துக் கோலம் போடுபவர் கையளவு கற்றால் இன்னும் என்னென்ன செய்வார் என்று நாம் வியந்து நிற்கலாம்.

சுஜாதா தேசிகன் தமிழ் கூறும் நல்லுலகு வாசிக்க வேண்டிய சுவாரசிய மனிதர். ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரெங்கனாதரும் கூடவே சுஜாதாவும் ஞாபகத்துக்கு வந்தால் அது நம் வாசிப்பின் ரசனை காட்டும் அடையாளம். சுஜாதாவே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் என்றால் வேறேன்ன சொல்ல.. வாங்க.. போய் படிக்கலாம்.

புலவர் கவிதைகள்  மரபின் ருசி அறிந்தவர் திளைக்க ஒரு பசுஞ்சோலை. தமிழ் இவருடன் கொஞ்சுகிறது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா  கவிதைகளில் இவரது முத்திரையே தனி. அதன் நேரடி த்வனி.. அதன் அர்த்த ஆழங்கள்.. நம்மை யோசிக்க வைத்து விடும்.

R கோபி பார்த்ததை, ரசித்ததைப் பகிரும் இவரின் எழுத்துக்கள்.. நம்மையும் ரசிக்க வைத்து விடும்.. அவரின் விவரிப்பை.

gmb writes  இந்த பதிவில் சொல்லி இருக்கிறதைப் பாருங்க.. உங்க பதிலைச் சொல்லுங்க.. நானும் ஆவலா இருக்கேன் நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரிஞ்சுக்க.  அவரது அனுபவம் சார்ந்த பதிவுகளைப் படிக்கப் படிக்க வாழ்வின் இன்னொரு பக்கம் அழகாய்ப் புரிகிறது.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும். என்கிற   திண்டுக்கல் தனபாலன் வாருங்கள் நண்பர்களாவோம் என்று அழைக்கும் போதே ஒரு அன்பு வந்து விடுகிறது.. ஹீரோ போல அழகான தோற்றம் இவருக்கு எப்படி வந்தது என்று இவர் பதிவுகளைப் படித்தாலே புரியும்.. அத்தனையும் மனித நேயம் சொல்லும் கருத்துக்கள்..



அடுத்த நாளுக்குக் காத்திருப்போமா..

அதுக்குள்ளே நீங்க இதுவரை வாசிக்காத இவர்களின் பழைய பதிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படித்துப் பாருங்கள். முடிந்தால் அதற்கு ஒரு பின்னூட்டம் கொடுங்க..  பதிவர்களின் முன்னாள் பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கு..

நாம் தொடர்ந்து வாசிக்கிற பதிவர்களின் சில பதிவுகளை வாசிக்கத் தவறி இருப்போம். இப்போது அதை ஈடு கட்டி விடலாம்.   இது என் அன்பான வேண்டுகோள்..

55 comments:

  1. ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரைவீதிக்காரரின் பதிவர் அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  2. நன்றி.. சித்திரவீதிக்காரன்.. முதல் வருகைக்கும்.. கருத்திற்கும்.

    அலைதலும் வாசித்தலுமே வாழ்க்கையாய்.. ஆஹா.. மனசில் சித்திரமாகுது வாழ்க்கை.

    ReplyDelete
  3. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய
    பதிவுகளைத் தரும் வணங்கத்தக்க பதிர்வர்களின்
    அறிமுகங்கள்....
    மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஆரம்பத்தில் சொல்லி இருக்கும் விஷயங்கள் - அருமை. அதுவும் அந்த ஆயிரம் கால் மணடபம், அதன் அருகே இருக்கும் யாளி சிற்பங்கள் அப்பப்பா, பார்த்துக்கொண்டே இருக்கலாம்....

    உலகம் சுற்றும் வாலிபன்.... :) என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே...

    உங்கள் மூலம் வலைச்சரத்தில் மீண்டும் ஒரு அறிமுகம்.... மிக்க மகிழ்ச்சி ரிஷபன் ஜி!

    ReplyDelete
  5. முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... வழக்கம் போல் பதிவை தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    முடிவில் நீங்கள் சொன்ன அன்பான வேண்டுகோளை நான் தொடர்கிறேன்... கருத்து இடுவதில்லை... இனிமேல் கருத்தும் இடுகிறேன்... மின்வெட்டு...

    இன்று ஒரு புதிய பதிவு பகிர்ந்ததால் உடனே வரமுடியவில்லை... சற்று முன்னே இன்று மின்வெட்டு... அறிமுகங்களின் தளத்தை பார்வையிட்டு பிறகு வருகிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  6. இந்த எளியவனையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப் படுத்தியதற்கு

    மனமார்ந்த நன்றி !





    அன்புடன்,



    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  7. நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத்தாளர் சுஜாதா பற்றி நினைவு கூர்ந்து புலவர் ராமானுசம் அவர்களையும் பாராட்டும்பாங்கும், ஸ்ரீரங்கம் பற்றிய தகவல்கள் மற்றும் பிறவும் நல்ல விமர்சனமாகும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. புதியவர்கள் அறிமுகம் மிகவும் நல்லா இருக்கு பழகினவர்களையும் பார்ப்பதில் சந்தோஷம் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. என்னா எழுத்துடா சாமி !

    இம்புட்டு அழகா எழுதுற ரிஷபன் எழுத்தை படிப்பது சந்தோஷம்; நண்பராகவும் அடைந்தது பரம மகிழ்ச்சி. அதுக்கு மேல் அவர் நம்மை இங்கு அறிமுகமும் செய்றது இரட்டிப்பு சந்தோஷம்.

    //கின்னஸ் சாதனை?//

    அவ்வளவு சத்தமாவா கேட்குது :))

    ReplyDelete
  10. எழுத்தாளர்களுடனான தங்கள் அனுபவப் பகிர்வு சுவாரஸ்யம்.

    தங்களால் அழகாக அறிமுகமாகியிருப்பவர்களுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete

  11. அன்பரே! அவ்வப்போது என் வலைவழி வந்து ஊக்கப்படுத்துவதோடு இங்கேயும் அறிமுகப்படுத்தினீர் மிக்க நன்றி!

    ReplyDelete
  12. என்னது நீங்க சுஜாதவ சந்தித்து இருக்கீங்களா, அந்த சந்திப்பு குறித்து எதுவும் பதிவு எழுதி இருக்கீங்களா, அந்த சுட்டி தர முடியுமா...
    அவரிடம் பாடம் கற்ற நீங்கள் எங்களுக்கு பாடம் எடுங்கள் சார். அதே ஸ்ரீ ரங்கம் அதே தெரு சூப்பர் சார்...
    அறிமுகங்கள் அணைத்தும் அருமை சார்

    ReplyDelete
  13. // ஒவ்வொரு தூணும் எவ்வளவு உயரம்.. அதிலும் சிற்ப வேலைப்பாடுகள்.. இணைப்பே இல்லாமல் ஒற்றைத் தூண்..

    குதிரை வீரன், அதன் மேலிருந்து புலியை, யாளியை வேட்டையாடுவது போல.. எங்கிருந்து இவ்வளவு கற்களைக் கொண்டு வந்து..

    எப்படித் தூக்கி நிறுத்தினார்களோ..
    இதன் அருகே தான் ஆயிரங்கால் மண்டபமும்.//

    தூக்கி நிறுத்தியது வியப்பென்றாலும், இன்றும் அது தொய்வடையாமல் தூக்கி நிறுத்திய நிலையிலேயே இருப்பதுதான் பார்ப்போர் அனைவரையும் பரவஸமடையச்செய்கிறது. ;)

    அந்தக்கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ள குதிரைகளின் அவயவங்களில் தான் என்னவொரு பேரெழுச்சி! ;))))))

    பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களுக்கும் உற்சாகமும் பேரெழுச்சியும் தொற்றிக்கொள்ளுமே!
    ;))))))

    கலைக்கண்ணோட்டத்தில் பார்த்தால் அனைத்துச் சிற்பங்களுமே அழகு தான்.

    >>>>>>>>தொடரும்>>>>>>>>

    ReplyDelete
  14. //என் சிறுகதை ஒன்று இலக்கிய சிந்தனையில் மாதப் பரிசு வாங்கியது. ( கல்கி பிரசுரம்- “ஏன்” தலைப்பு ) அந்த வருடம் வெளியாகித் தேர்வான 12 சிறுகதைகளில் இருந்து ஆகச் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்க லா.ச.ரா அவர்கள். ஒவ்வொரு கதைக்கும் அவரது விமர்சனத்தோடு.//

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    //கடைசி வரியில் ஒரு மோதிரக் குட்டும் கிடைத்தது அவரிடமிருந்து.

    பாரதியின் அக்னிக் குஞ்சு எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனால் சிலரிடம் அது கனல்கிறது. சிலரிடம் நீறு பூத்து அடங்கிக் கிடக்குது. வாய்ப்பு கிட்டாத பலர் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். இந்த உண்மை புரிவதால் தான் யாரையும் தாழ்வாய் நினைக்கத் தோன்றுவதில்லை.//

    லா.ச.ரா. அவர்களின் இந்த வரிகள் அனுபவம் வாய்ந்தவை. மிகவும் அற்புதமானவை. இது தங்களுக்குக் கிடைத்தது மிகவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமே.

    >>>>>>>>>

    ReplyDelete
  15. எல்லோருடையதையும் வாசிக்கிறேன் வழிகாட்டுதலுக்கு நன்றி.

    ReplyDelete
  16. இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள 15 - 1 = 14 பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்.

    மிகச்சிறந்த மனிதர்களை மிகச்சிறந்த மனிதரான தாங்கள் அடையாளம் காட்டியுள்ளதும் அழகோ அழகு தான்.

    >>>>>>>>>>>>

    ReplyDelete
  17. //வை.கோ. வின் எந்தப் பதிவு என்று குறிப்பிட்டு சொல்வது..

    அவரது திறமைக்கு அவர் எப்போதோ பத்திரிகைகளில் கொடி கட்டிப் பறந்திருக்க வேண்டும்.

    உடம்பெல்லாம் உப்புச் சீடை அவரது மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. //

    மோதிரக்கையால் குட்டுமட்டுமல்ல ஷொட்டு வாங்குவதும் அதிர்ஷ்டம் தான்.

    எனக்கும் கொஞ்சூண்டு அந்த அதிர்ஷ்டம் உள்ளதை நினைத்து நானும் பூரிப்பு அடைகிறேன்.

    என் மனமார்ந்த நன்றிகள், என்றும் உங்களுக்கு

    ”தாயுமானவள்” என் முதல் கதை. இந்த “உடம்பெல்லாம் உப்புச்சீடை” நான் எழுதிய இரண்டாவது கதை.

    இதை 2006 பிப்ரவரி முதல் வாரத்தில் நான் Manuscript ஆக எழுதி முடித்ததும், முதன் முதலாகப் படித்துப் பார்க்க நான் கொடுத்ததும் தங்களிடம் மட்டுமே.

    உடனே அங்கேயே என் அருகில் நின்று கொண்டே படித்ததீர்கள்.

    தாங்கள் படித்து வரும் போதே தங்களின் முகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்புகளை, உற்சாகத்தை, சந்தோஷத்தை, பேரெழுச்சியை என்னால் என் மனதால் அவ்வப்போது படம் பிடிக்க முடிந்தது.

    மனம் திறந்து என்னைக் கைகுலுக்குப் பாராட்டினீர்கள்.

    என் மனைவி பெயரில் அதை அப்படியே “மங்கையர் மலர்” க்கு அனுப்பச்சொல்லி ஆலோசனை சொன்னதும் தாங்கள் தான்.

    அதன்படி நான் அனுப்பிய இருபதே நாட்களிலேயே, அந்தக்கதை அழகான பொருத்தமான படங்களுடன் மார்ச் 2006 மங்கையர் மலரில் ’நெடுங்கதை’ என்ற பெருமையுடன் 12 பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, இடம் பெற்றது என்னை வியப்படைய வைத்தது.

    அதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால் நான் எழுதி அனுப்பிய சற்றே நீண்ட அந்த மிகப்பெரிய கதையில் ஒரு பத்தியோ, ஒரு வாக்கியமோ, ஒரு வார்த்தையோ, ஒரு எழுத்தோ கூட நீக்கப்படாமல் [எடிட் செய்யாமல்] வேறு எதுவும் புதிதாகச் சேர்க்கப்படாமல், அப்படியே வெளியிட்டு இருந்தார்கள்.

    அப்போது “மங்கையர் மலர்” பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த திருமதி. ரேவதி சங்கரன் அவர்களுக்கு என் நன்றியினை மீண்டும் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

    இந்த என் இரண்டாவது கதையை மனப்பூர்வமாக பாராட்டிய தங்களாலும், தாங்களும் நம் வேறு சில நெருங்கிய நம் அலுவலக எழுத்தாள நண்பர்களும் கொடுத்த தொடர் உற்சாகத்தாலும் மட்டுமே நானும் ஓர் எழுத்தாளன் என்ற அந்தஸ்தினை. தங்களைப்போன்றோர் மத்தியில் என்னாலும் பெற முடிந்தது.

    அதன் பிறகும் தாங்கள் எனக்குக்கொடுத்து வந்த அன்புத்தொல்லைகளால் மட்டுமே, நான் வாரம் ஒரு கதையாவது எழுத வேண்டும் என்ற இலக்கினை வகுத்துக்கொடுத்து, வாத்தியார் பையனைக் கூப்பிட்டு ”வீட்டுப்பாடம் கொடுத்தேனே என்ன ஆச்சு?” என்று கேட்பதுபோல, ஒவ்வொரு வாரமும் என்னை நீங்கள் தொடர்பு கொண்டு “இந்த வாரக்கதை என்ன ஆச்சு? இதுவரை எழுதியதை மட்டும் கொடுங்கள் பார்க்கிறேன்” என்று Follow செய்து துரத்தியதால், நானும் பல கதைகள் தொடர்ந்து [உங்களுக்கு பயந்து கொண்டு மட்டுமே] எழுதலானேன்.

    அவற்றில் பல வார/மாத இதழ்களில் பிரசுரமாகி எனக்கும் மகிழ்ச்சியினைத்தந்தது.

    பிறகு அத்தோடு விட்டீர்களா? சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியிட வேண்டும் என என்னை நிர்பந்தப்படுத்தினீர்கள்.

    2009 ஆம் ஆண்டு இரண்டும், 2010 ஆம் ஆண்டு ஒன்றுமாக இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் என்னால் வெளியிட முடிந்தது.

    நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கலக்கியதும் தாங்கள் அல்லவா! ;)))).

    வருகை தந்த அனைவருக்கும் [சுமார் 200 பேர்களுக்கு] நம் இருவ்ர் கையாலுமல்லவா நூல்களை அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்தோம்.

    ”அர்ஜுனனுக்கு கண்ணபிரான் போல” எழுத்துலகில்,எனக்குத் தாங்கள் செய்துள்ள உதவிகள் ஏராளம் ஏராளம்.

    எல்லாவற்றையும் இங்கே என்னால் எடுத்துரைப்பது மிகவும் கஷ்டம்.

    என் மனம் பூராவும் தாங்கள் நிறைந்துள்ளீர்கள்.

    ஆனந்தக்கண்ணீருடன் தங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    வீ....................ஜீ
    [VGK]

    >>>>>>>>>

    ReplyDelete
  18. //இவரது எளிய, இனிய பழகும் தன்மையினால் பலர் இவரது அன்புக் கோட்டைக்குள் குடி புகுந்து விட்டார்கள். //

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, சார்.

    எனக்கு “அன்பு” என்றால் என்ன என்று போதித்ததே தாங்கள் தானே, சார்?

    தங்களிடம் கற்ற அந்த வித்தையில் கொஞ்சூண்டு [கடுகளவு] நான் உபயோகித்ததில், இத்தனை பேர்களின் அன்பினை ஒட்டுமொத்தமாக என்னால் சம்பாதிக்க முடிந்துள்ளது என்பதே உண்மை.

    //இவரது எழுத்துதிறன் எனக்கு எப்போதும் உற்சாகம் தரும். சோர்வு வந்தால் இவரை நினைத்தால் போதும்.. சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போகும். அவரது அன்பில் திளைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்.//

    This is TOOoooooooooo much Sir. However Thanks a Lot to you, Sir.

    ooo இன்று இத்துடன் முற்றும் ooo

    பிரியமுள்ள
    வீ.......ஜீ
    [VGK]

    ReplyDelete
  19. //மனம் திறந்து என்னைக் கைகுலுக்குப் பாராட்டினீர்கள். //

    ’கைகுலுக்கு’ என்பதை ‘கைகுலுக்கி’ என திருத்தி வாசிக்கவும்.

    அவசரத்தில் ஏற்பட்டுவிட்ட என் எழுத்துப்பிழைக்கு நான் வருந்துகிறேன்.

    ReplyDelete

  20. // ‘நெருப்பு’ன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும்னு. அந்த அளவு எழுத்தில் ஒரு தவம் இருக்கணுமாம்..//

    நெருப்பென எழுதின் சுடவேண்டும்
    நீரென நினைப்பின் கங்கை நீர் வரவேண்டும் .
    நிலமென நின்றால் நானும் தாங்கவேண்டும். அரங்கத்தானின் ஆயிரம் கோபுரங்களை.

    காற்றினில் பறந்திட கருடனின் துணை வேண்டும் .அவ்
    வானிலே சுவர்க்கத்து வாசலும் தெரிய வேண்டும்.

    அரங்கத்தான் சரணடைவின்
    அத்தனையும் சாத்தியமே.
    that apart,
    வையாளி நடனம் பார்க்க தேவாள் வந்தமைக்கு நன்றி


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  21. வணக்கம்
    ரிஷபன்(அண்ணா)

    இன்று அறிமுகமான தளங்கள் சில எனக்கு தெரிந்தவை சிலது தெரியாதவை, 03ம் நாள் அறிமுகமான படைப்பாளிகளுக்கும் தளங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் எனது நன்றிகள் அனைத்துப்பதிவுகளும் அருமை அருமை,பதிவுகளை தொடருகிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. நன்றி மகேந்திரன்.. வணங்கத்தக்க பதிவர்களை வணங்குவோம்..

    உங்களை நான் காமெடி பண்ணுவேனா வெங்கட்.. அப்புராணி நானு..

    மடோனா.. அழகிய சிங்கர்னு கிரேசி மோகன் சிலேடையாய் கமல் படத்தில் வசனம் எழுதி இருப்பார்.. உங்களைப் பத்தி அழகிய பதிவர்னு எழுத நினச்சு விட்டுட்டேன்.. தனபாலன்..

    ReplyDelete
  23. நம்மை யாராச்சும் ”டேய்னு” கூப்பிட இருக்காங்களான்னு எவ்வளவு ஆசையா எதிர்பார்ப்போம்.. இன்னிக்கு என்னை டேய்னு கூப்பிட நீ(ங்க) மட்டும்தானே இருக்கீங்க மூவார் முத்தே.. இந்த எளியவனின் அன்பு சொத்தே..

    கவியாழி ஸார் உங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.. அதனால நன்றின்னு சொல்லி தள்ளி வைக்கப் போவதில்லை.. ஓகேவா..

    ReplyDelete
  24. லக்ஷ்மி மேடம்.. உங்க அன்புக்கு நன்றி..

    அவ்வளவு சத்தமாவா கேட்குது.. ஹாஹாஹா.. சூப்பர் மோகன் ஸார்..

    நன்றி ராமலக்ஷ்மி மேடம்..

    புலவர் அய்யா.. உங்கள் படைப்புகள்தான் எங்களுக்கு ஊக்கம்..

    ReplyDelete
  25. அந்த ட்வீட்டை நானும் ரசித்தேன் சீனு ஸார்.. (தமிழகத்தின் விக்கி பீடியா சுஜாதா) கொஞ்சம் லேட்டா உங்க பாலோயர் ஆகறேன்..

    வை.கோ. ஸார்.. உங்க உழைப்பு.. உங்க திறமை.. நடுவுல நான் தஞ்சாவூர் பஸ் அதான்னு சொன்னதால உறுக்கே வழிகாட்டின பெருமைலாம் வருமா.. சொல்லுங்க.. தொடர்ந்து நீங்க எழுதணும்.. அதான் எங்க சந்தோஷம்.

    ReplyDelete
  26. வை.கோ ஸார் அது லா.ச.ரா சொன்னதில்லே.. அடியேன் சொன்னது. மோதிரக்குட்டுன்னு சொல்லிட்டு அந்த வரிகள் வந்ததால அவர் சொன்ன மாதிரி ஒரு மாயத் தோற்றம்.. அவர் சொன்னது இன்னும் அழுத்தமா எழுதணும்னு.

    ReplyDelete
  27. உங்க எழுத்தில் சொக்கிப் போகிறேன் சுப்புத் தாத்தா.. நேரே பார்க்கணுமே.. வரலாமா..

    நன்றி ரூபன்.. நாம் நிறைய கற்க வேண்டும்.. அதனால்தான் தேடித் தேடிப் படிக்கிறேன்..

    ReplyDelete
  28. தங்களின் அனுபவத்தையும், அன்பர்களின் கருத்துகளையும் அறிந்தேன்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி சார்...

    ReplyDelete
  29. உறுக்கேன்னு தப்பா டைப் ஆயிடுச்சு வைகோ ஸார்.. அது ஊருக்கே..

    ReplyDelete
  30. ''...அன்றுதான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.. அலட்டல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று.

    அதே போல என்னைக் கவர்ந்த இன்னொரு பிதாமகர் லா.ச.ரா அவர்கள்.
    அவர் எழுத்தில் வரும்... ஒரு கதையில். ‘நெருப்பு’ன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும்னு. அந்த அளவு எழுத்தில் ஒரு தவம் இருக்கணுமாம்....''

    எவ்வளவு காத்திரமான வரிகள் எழுதப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
    இந்த நிதானம் தங்கள் வரிகளில் கண்டேன்.
    அத்தனை பதிவர்களிற்கும், தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  31. ''...அன்றுதான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.. அலட்டல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று.

    அதே போல என்னைக் கவர்ந்த இன்னொரு பிதாமகர் லா.ச.ரா அவர்கள்.
    அவர் எழுத்தில் வரும்... ஒரு கதையில். ‘நெருப்பு’ன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும்னு. அந்த அளவு எழுத்தில் ஒரு தவம் இருக்கணுமாம்....''

    எவ்வளவு காத்திரமான வரிகள் எழுதப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
    இந்த நிதானம் தங்கள் வரிகளில் கண்டேன்.
    அத்தனை பதிவர்களிற்கும், தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. ரிஷபன் ஸார் !!

    சொக்கிப்போனது நீங்கள் இருக்கட்டும். அதே சமயம் வரேன் அப்படின்னு நீங்கள் சொன்னதிலே நான்
    விக்கிச்சுப்போய் இருக்கேன்.

    வரலாமா வா ?
    வாருங்கள். வாருங்கள்.
    உங்கள் தரிசனம்
    தாருங்கள். தாருங்கள்.

    திருக்கண்ணமுது துவங்கி,
    புளியோதரையில் பிரவேசித்து,
    சாத்தமுதில் சஞ்சரித்து
    அக்கார வடிசலில் அஞ்சு தொன்னை டேஸ்டிட்டு
    தயிர்வடை தீரும் வரை சாதித்து
    தத்தியோன்னத்தில் முடித்திடவே

    எங்கள் வீட்டுக்கு ஏளணும். ( எழுந்தருள வேணும் )

    தொலைபேசி எண் தந்தால்
    தொல்லை படுத்தாமல்
    உங்களுடன் பேசுவேன்.

    அடியேன்.
    சுப்பு தாத்தா.
    வாசக தோஷஹ க்ஷந்தவ்யஹ .
    அடியேன்: ஈ மெயில்
    எம் 2 ஈ நா அட் ஜிமெயில்

    ReplyDelete
  33. தூணில் உள்ள சிற்பங்கள் அத்தனையும் அவ்வளவு தத்ரூபமாய் இருக்கும். நானும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

    சுஜாதா அவர்களுடன் பேசியது.... கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்.

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள். ஒன்று மட்டும் ஸ்பெஷல்....:)

    ReplyDelete
  34. இலக்கியச் சிந்தனைத் தொகுப்பு ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன். சிதம்பரம் சகோதரர்களின் சீரிய சேவை. சுஜாதா பற்றிய வரிகள் ரசனைக்குரியவை. ஸ்ரீரங்கம் பற்றி விவரங்கள் எழுதி வருவதும் ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  35. இரண்டு நாட்களிலும் ஸ்ரீரங்கம் பற்றிய செய்திகள். . நான் வேலைக்கு சேர்ந்து முதன் முதலாக சைக்கிள் வாங்கியவுடன் ஸ்ரீரங்கத்து வீதிகளில் நண்பர்களைக் காண சைக்கிளில் வந்தது ஞாபகம் வந்தது. ஸ்ரீரங்கம் என்றாலே எழுத்தாளர் சுஜாதாவை மறக்க முடியுமா? ”அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் எப்போது படித்தாலும் சுவாரசியம்.” என்று நீங்கள் சொன்னது உண்மையே. பதிவர்களைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு வலைப் பூக்களில் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    ReplyDelete
  36. திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்களது கருத்துரைகளே ஒரு பதிவு போல படிக்க சுவாரசியமாக இருக்கின்றன. வலைப்பூக்களின் ரசிகரான அவருக்கு அநேக ரசிகர்கள். (என்னையும் சேர்த்துக் கொள்ளவும்)

    ReplyDelete
  37. ஆஹா இன்று நெருப்பு.. தகதகக்கும் நெருப்பில் ஜொலிக்கிறது இன்றைய வலைச்சரம்....

    ஸ்ரீரங்கப்பெருமானைப்பற்றியும் அரங்கன் குடி இருந்த கோயிலைப்பற்றியும் இத்தனை நுணுக்கமாக பகிரும் அத்தனை விஷயங்களையும் பொக்கிஷமாய் பேழைக்குள் தேக்கிவைத்துக்கொள்ளலாம்... நம் நாட்டின் வளங்கள் எல்லாம் எத்தனையோ முறை படையெடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு உருக்குலைந்து கிடந்தாலும்.....

    அன்றலர்ந்த மலர்ப்போல எப்போதும் புதுமையின் வாயிலாகவும் பழமையின் மணமாகவும் புராதனங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதப் புதையலாகவும் பொக்கிஷங்களின் இருப்பிடமாகவும் இன்னமும் ஸ்ரீரங்கம் அதன் பெருமை தேய்ந்துவிடாமல் அழகிய கோபுரமாய் நிமிர்ந்து நிற்கத்தான் செய்கிறது... இத்தனைப்பேரின் பிரார்த்தனைகளோ அல்லது காக்கும் கடவுளான அரங்கனின் கோட்டையை யாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற திடமான எண்ணமோ.... மிக மிக அழகிய வர்ணனைப்பா ரிஷபா... அரங்கனுடனே இருந்து அரங்கனுடனே களித்து அரங்கனுடனே சயனித்து அரங்கனுடனே கொட்டமடித்ததுப்போல அரங்கனை தன் நண்பன் போல சிலாகித்து எழுத ஆரம்பிக்கும்போதே தெரிந்தது .. ஆஹா ரிஷபன் ஸ்ரீரங்கத்தைப்பற்றிய துல்லியமான அத்தனை விஷயங்களும் பகிரத்தான் போகிறீர்கள் என்று... அதே போலவே இதுவரை அறியாத தகவல் மூலஸ்தானத்தில் தீப்பிடித்துக்கொண்ட மூலவரை தகதகக்கும் நெருப்பில் இருந்து மீட்டு புதிதாய் வடிவமைத்து வைத்திருப்பதை பகிர்ந்தது.... உண்மையே கோயிலின் அழகும் அதன் கம்பீரமும் இன்னமும் பக்தர்களை ஈர்த்துக்கொண்டு தான் தன் வசப்படுத்திக்கொண்டு இருக்கிறது.....

    இனி வரும் விடுமுறையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற உத்வேகம் அதிகமாகிறது ரிஷபா உங்கள் எழுத்துகளை காண்கையில்... அங்கே சென்று நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாக காணவேண்டும் என்ற பேராவல் அதிகமாகிறது.... நீங்கள் பகிர்ந்த படத்தை பார்க்கும்போதே வியக்கவைக்கிறது...

    என்னது சுஜாதாவும் நீங்களும் இருந்தது ஒரே இடமா.. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதுப்பா.. சுஜாதாவிடம் உங்களுக்கு நட்பு இருந்திருக்கிறது என்பதை கேட்க இன்னும் சந்தோஷம் அதிகமாகிறது. அதுமட்டுமில்லாமல் உங்கள் கதைகளின் சுவாரஸ்யமும் சஸ்பென்ஸும் திருப்பமும் நான் பலமுறை வியப்படைந்தது உண்டு... சுஜாதாவின் மீசை இல்லாத முகமும் அழகு... அவரின் விஸ்தாரமான நிறைந்த புன்னகையும் அழகு..... அவரின் அரைமணி நேர அறிவுரை வைரத்தை இன்னும் அழகாய் பட்டைத்தீட்டி இருக்கிறதே.. வைரமே அழகு.. அதில் இன்னும் பட்டை தீட்டினால்?? அலட்டல் இல்லாத ரிஷபனைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து காண்பது.. எப்போதுமே ரிஷபனின் இயல்பும் அது தான் என்பதும் எனக்கு தெரியும்பா...

    மற்ற ஒரு பிதாமகர் ( எழுத்தில் கூட ஒருவரை எத்தனை கம்பீரமாக உச்சரிக்கிறீங்கப்பா ஹாட்ஸ் ஆஃப் ரிஷபா... ) லா.ச.ரா. பற்றியும் அவரின் தீட்சண்ய வாசகம் “ நெருப்புன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும் “ எத்தனை தீர்க்கமான வார்த்தை...

    “ ஏன் “ என்ற கதை கல்கியில் பரிசு பெற்றமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா ரிஷபா...

    அதற்கு அவர் இரண்டு பக்கத்திற்கு பாராட்டியதை இன்றளவும் நினைத்து பார்க்கமுடிகிறது என்றால்.. அவரை வணங்கத்தோன்றுகிறது....

    ரிஷபனின் கவிதையாகட்டும் கதையாகட்டும் கடைசி வரியில் எப்போதும் என் ஆழ்ந்த கவனிப்பு இருக்கும்... எப்போதும் ஒரு டச் இருக்கும்... இப்போதும் அப்படியே... ”பாரதியின் அக்னிக் குஞ்சு எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனால் சிலரிடம் அது கனல்கிறது. சிலரிடம் நீறு பூத்து அடங்கிக் கிடக்குது. வாய்ப்பு கிட்டாத பலர் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். இந்த உண்மை புரிவதால் தான் யாரையும் தாழ்வாய் நினைக்கத் தோன்றுவதில்லை.”

    எல்லோரையும் மதிக்கும், பாராட்டும், ஊக்கப்படுத்தும் அற்புதமான குணம் பெற்றமைக்கும் இன்றைய தினம் தகதகக்கும் பிரகாசிக்கும் சொற்களால் மேன்மைப்படுத்தியதற்கும் அன்பு வாழ்த்துகள் ரிஷபா....

    ReplyDelete
  38. ஹை இன்றைக்கும் என் மனம் கவர் பதிவர்கள் இருக்கிறார்களே....


    தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணி சார்..... இவரைப்பற்றி பேச ஆரம்பித்தால் நான்ஸ்டாப்பாக சொல்லிக்கொண்டே இருக்கலாம்... இவரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் என்றுமே வித்தியாசமே இருந்ததில்லை... கூகுளில் என்றோ எதையோ தேட... அது நேராக ரமணிசாரின் வலைதளத்தில் கொண்டு விட்டது.. என்னை பிரமிக்கவைத்தன இவர் எழுத்துகள்.. எளிய நடையில் கூட எல்லோரையும் சிந்திக்கவைக்கமுடியுமா என்று யோசிக்கவைத்தது... என்னுடைய முதல் கருத்து வலையுலகில் ரமணி சார் வலைதளத்தில் தான் ஆரம்பமானது.. எழுத எழுத நீரூற்றாய்..... வரிகளோ சிந்திக்கவைப்பதாய்..... எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து இவர் இடும் பதிவுகள் அப்பப்பா எண்ணிலடங்காதவை... பலமுறை தொலைபேசியில் இவரிடம் பேசும்போது ஒரு தகப்பன் ஸ்தானத்தில் வாத்ஸல்யமாய் இவர் அன்புடன் நலன் விசாரிப்பார்.... பலமுறை இவர் சொல்ல நான் கேட்டது.. இப்படி சொல்லலாம்.. என் பீஷ்ம குரு ரமணி சார்.. என்னால் கருத்து எழுத முடியும் என்ற நம்பிக்கை இவர் எழுத்தில் இருந்து ஆரம்பித்ததால்.....

    வை.கோ அண்ணா.... அன்பின் பிறப்பிடம்... எத்தனை வயது அண்ணாக்கு என்று யாரும் கேட்டுவிடக்கூடாது... அண்ணாவின் எழுத்துகள் அத்தனையும் சொல்லிவிடும் அட என் வயசு இருபதுப்பா என்று.... சந்தோஷமும் மகிழ்வும் மிக அருமையாய் இவர் எழுத்துகளில் காணலாம்... நல்லா இருக்கீங்களா என்று கேட்டால் நலம் என்ற ஒற்றை வரியோடு நிறுத்தாமல் நம் நலனையும் ஒருசேர கேட்டு புன்னகை நம் முகத்தில் மலரவைக்கும் அசாத்திய வரம் பெற்றவர் வை.கோ. அண்ணா.... பரபரப்புடன் பேசுவார்.. ஆனால் எழுத்துகளில் இருக்கும் நிதானம் நம்மை அந்த இடத்திலேயே கட்டிப்போடும்.. நகைச்சுவையா? இதோ மனம் விகசிக்கும், முகம் மலரும், வயிறு வலிக்கும்.. எங்குமே எந்த ஒரு எழுத்துமே புரியலையே தெரியலையே என்று யாருமே சொல்லமுடியாத அளவுக்கு பிரசித்தி அண்ணாவின் எழுத்து... அதோடு மட்டுமா... கருத்தும், பாராட்டும் இவர் எழுத்துகளில் பெற்றால் தொடர் கொண்டாட்டம் தான்... பாராட்டுவதில் கூட வஞ்சனை இல்லாது பிரவாகமாய் இருக்கும் மனதைப்போலவே அண்ணாவுக்கு....


    ReplyDelete
  39. மோகன் ஜீ.... நான் ரசித்து வாசிக்கும் தொடர் சிக்ஸர் பதிவாளர் இவர்..... படபடன்னு எழுதமாட்டார்.. ஆனா படிப்பவர்களுக்கு படபடப்பு வந்துரும் இவர் எழுத்துகளை வாசித்தால்.. சொக்கிப்போய் நின்றுவிடுவர் இவரின் காதல்கிளிகள் கவிதை படிச்சா.... ரசனையுடன் படைப்பது தான் இவரின் ப்ளஸ்பாயிண்ட்..... தானும் தன் படைப்புகளில் ரசிகனாகி ரசித்து அதன்பின் நமக்கும் ரசிக்க பகிர்வார் அருமையான படைப்புகள்... வேறென்ன வேண்டும் அசத்தலா அதரகளம் பண்ணின அசகாய சூரர் நம்பர் 2... அசகாய சூரர் நம்பர் 1 அப்பாதுரை....மோகன் ஜீ யின் எழுத்துகளில் நான் கண்ட வியப்பு இன்னொன்னு என்னன்னா... மாரத்தான் ரேஸ்ல ஓடும்போது அடுத்து ஓடுபவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டே ஓடும் அசகாய ஆற்றல் பெற்றவர்....

    ஹரணி சார்.... இவரின் எழுத்துகளும் படித்திருக்கிறேன். ரமணி சாருக்கு பிறகு இவர் எழுத்துகள் படித்தேன். இயல்பான தெள்ளிய நடை... அடுத்து இருந்து பேசுவது போல் இயல்பாய் அமைந்த எழுத்துகள் இவருடையது.

    வீடு திரும்பல் மோகன்குமார்... அருமையான மனிதர்... அன்பு ஒன்றே போதும் மனங்களை இணைக்க என்ற அற்புதமான வித்துக்கு காரணமானவர்.... இவரின் தளமும் அதையே தான் சொல்கிறது. பதிவர்கள் மாநாடு நினைவு தான் வரும் இவரை நினைத்தால்....

    ஆரண்ய நிவாஸ்... ஆசிரியரா போயிருந்திருக்கவேண்டியது.. அருமையான எழுத்துலகம் இவருடையது... என்ன கேட்டாலும் அதில் கொஞ்சம் ஹாஸ்யம் கலந்து தருவது இவர் ஸ்பெஷாலிட்டி... திறமைகளின் குன்று.... எளிமையான மனிதர்... எல்லோரிடமும் சட்டுனு நட்புடன் இணைத்துக்கொள்ளும் அருமையான மனிதர்.. இவரின் சமீப வேறென்ன வேண்டும் பகுதி ரசித்து வாசித்தேன்...

    புலவர் இராமானுசம்: அப்பாவின் அன்பில் நெகிழ்ந்ததுண்டு... அமைதியான மென்மையான அன்பு மனம் படைத்த அற்புத அப்பா... இவரின் எழுத்துகள் எல்லாமே மரபுக்கவிதையில் அசத்தலாய் செல்லும்.... உலகம் போகும் போக்கை கூட மல்லிகைப்பூ தீண்டலாய் தான் செண்டாய் அமைப்பார்... அப்பாவின் மனதில் முழுக்க முழுக்க நிறைந்த அன்பு... அந்த அன்பு அப்படியே அவரின் எழுத்துகளில் காண்பதுண்டு...

    gmb : மனதளவில் இன்னமும் இளைஞராகவே இருந்துக்கொண்டு எப்போதும் நிறைந்த புன்னகையுடன் எழுத்துகளிலும் அசாத்திய வேகம் உண்டு.. தீட்சண்யப்பார்வையும் உண்டு இவர் எழுத்துகளில்.. இவர் நாடகம் ரசித்து வாசித்தேன் நான்...

    வெங்கட் நாகராஜ் : ஆஹா காசிக்கு திரிவேணி சங்கமத்துக்கு அழைத்து சென்றவர் அல்லவா.. சரியான பெயர் தான் உலகம் சுற்றும் வாலிபன்.. தான் ரசித்ததை நம் எல்லோருக்குமே ரசிக்கத்தரும் அற்புதமான மனிதர்.... ஃப்ரூட் சாலட் என்று சொல்லி உலகத்து விஷயங்கள் எல்லாம் உள்ளடக்கிய தொகுப்பாய் வியப்பிலாழ்த்திவிடுவார்....

    திண்டுகல் தனபாலன் : இவ்ளோ நேரம் இவரின் மெயில் ஐடி தான் இவர் வலைப்பதிவில் போய் தேடு தேடு என்று தேடிவிட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வருகிறேன். நன்றி சொல்லத்தான்... முன்பு இவர் எழுதிய ஒரு விஷயம் என் கண்ணில் பட்டு நான் அந்த வலைப்பூவில் சென்று பிள்ளைகள் சின்னப்பிள்ளைகள் என்ன அழகா அற்புதமாக வரைகிறார்கள் என்று என்கரேஜ் செய்த அருமையான தளம்.. அட இப்படி ஒரு தளமா ஹாட்ஸ் ஆஃப் தனபாலன் என்று சொல்லிக்கொண்டு உடனே என் குட்டி மகன் வரைந்த ட்ராயிங்க்ஸ் அனுப்பி வைத்தேன். இன்று அதற்கு நன்றி கூறி ஒரு மெயில் வந்தது. அதற்கு நன்றி சொல்லலாம் என்று பார்த்தால் பின்னூட்டப்புயலாய் புன்னகை மன்னனாய் எல்லோர் வலைச்சரத்திலும் சென்று அறிமுகப்படுத்தியதை மிக அருமையாய் கேட்காமலயே உதவிய மாமனிதர் அல்லவா தனபாலன்... அவருக்கு நன்றி இங்கேயே சொல்லிவிடுகிறேன்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தனபாலன்... அற்புதமான சேவைகள் தனபாலன் செய்வது... அவர் தளத்தில் நல்லவை நிறைய கற்கலாம்.... சிநேகத்துடன் பகிரும் அத்தனையும் நல்முத்துகள்...

    இன்னும் நான் அறியாதவர் தளங்கள் சென்று வாசிக்கிறேன்பா...

    ரசிக்கப்பட்ட தளங்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா....

    ReplyDelete
  40. அன்பு ரிஷபன் சார், வலைச்சரத்தில் அறிமுகப் படுத்துவதற்கு நன்றி. என் பதிவில் நான் எழுதியுள்ளது குறித்துக் கருத்துக்கேட்டு எழுதியதற்கு மீண்டும் நன்றி. வலைச்சர வாசகர்கள் மூலம் இன்னும் வாசிக்கப்பட்டு கர்ருத்துக்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன். திருவரங்க சேஷ ராயர் மண்டபம் பார்த்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் நான் பார்த்தபோது அந்தக் கலைச் சிற்பங்களை சுற்றி இருக்கும் இடங்கள் மிகவும் மோசமாக. சிமெண்ட்டும், மணலும் ஜல்லிகளும் கொட்டிக்கிடக்க வருத்தத்துடன் கோபமும் வந்தது. யாரிடம் சொல்லி அழ என்று தெரியாமல் கனத்த இதயத்துடன் திரும்பினேன். நமது பொக்கிஷங்களை பாதுகாத்தல் அவசியம். மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தனபாலன் சொல்லி அறிந்து வலைச்சரம் வந்தேன். திறமை மிகுந்த நீங்கள் ஆசிரியர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  41. அன்புள்ள மஞ்சூஊஊஊ,

    வாங்கோ வணக்கம்.

    திரு. ரிஷபன் சாரின் இன்றைய கச்சேரியிலும் தங்களின் பக்க வாத்யம் மிகவும் அருமை.

    மிகவும் ரஸித்தேன். என் வயதில் மட்டும் தவறாக ஒரு நாலு வருஷம் சேர்த்துட்டீங்கோ.

    நான் எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் அல்லவோ !

    அவ்வளவு பெரிய கடத்தை அடியோ அடின்னு அடித்துள்ள மஞ்சுவின் பிஞ்சு விரல்கள் வலிக்காதோ ;(

    அனைவர் சார்பிலும் என் நன்றிகள், மஞ்சு.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  42. அன்பின் ரிஷபன் - அருமையான பதிவு - முன்னுரை மிக மிக அருமை - அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ தேர்ந்தெடுத்த பதிவர்கள் - அறிமுகப் படுத்திய விதமோ அற்புதம். வந்த மறுமொழிகளோ நீண்ட - ஆழ்ந்த கருத்துகளை உடைய மறுமொழிகள். நல்வாழ்த்துகள் ரிஷபன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  43. அந்த காலத்தில் கதிரில் அந்த "ஈகைத் திருநாள்" வெளி வந்த

    போது அனைவரின் பாராட்டையும் பெற்ற கதை அது ! மறுபடியும்

    இத்தனை வருடம் கழித்து நினைவு கூர்ந்ததிற்கு நன்றி ரிஷபன் !

    ReplyDelete
  44. எல்லாப் புகழும் சீனாவுக்கே !

    GMB ஸார் அப்போ வேலை நடந்தது அதான் ஜல்லி மண் எல்லாம்.. இப்போ வாங்கோ.. கிளீனா இருக்கு.

    மஞ்சு மேடம் ... (சொல்ல வார்த்தை இல்லை என்னிடம் )

    தமிழ் இளங்கோ வை கோ ரசிகர் சங்கத்துல நீங்க தான் செயலாளர்..

    நன்றி.. நன்றி.. வேதா.. கோவை2தில்லி.. ஸ்ரீராம்..

    ReplyDelete
  45. ஸ்ரீரங்கம் பெருமாள் சந்நிதியில் தீப் பற்றிய நிகழ்வு நடந்த போது சின்ன வயதானாலும், மாமாக்கள் வாளி வாளியாக தண்ணீர் தூக்கிக் கொண்டு கோவிலை நோக்கி ஓடியது நினைவில் இன்றும் இருக்கிறது.

    பெருமாளை விட்டு வேறு வாழ்க்கை எது ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்களுக்கு?

    அறிமுகங்கள் அருமை.

    3வது நாள் முத்து முத்தாக அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் ரிஷபன் சார்.அத்தனையும் அருமையான அறிமுகங்கள். நன்றி .

    ReplyDelete
  47. //பதிவர்களின் முன்னாள் பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கு.

    சில பேர் எழுத்தின் பரிணாமத்தை அறியச் செய்யும் நல்ல பொழுதுபோக்கும் கூட. ரகசியத்தை போட்டு உடைச்சிட்டீங்களே?

    மோகன்ஜியா? படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  48. //நெருப்புனு எழுதினா சுடணும்
    what a statement!

    ReplyDelete
  49. //எல்லாப் புகழும் சீனாவுக்கே!

    இந்தியாவுக்குக் கொஞ்சம் விட்டு வைக்கக் கூடாதோ?

    (ஹிஹி)

    ReplyDelete
  50. @ரிஷபன், என் பதிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  51. லா.ச.ராவை பார்க்க முடியவில்லை என்று படிக்கும் போது உங்களுக்கு ஏற்பட்ட வருத்தம் எனக்கும் ஏற்பட்டது. நானும் லா.ச.ரா ரசிகை.அவரிடமிருந்து உங்களுக்கு பாராட்டு கிடைத்து இருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்து இருக்கிறீர்கள்!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ஒரு சிலர் பதிவுகளை படித்தது இல்லை. நேரம் ஒதுக்கி படித்து விட ஆவலாய் இருக்கிறேன்.

    வை.கோபாலகிருஷ்ணன் சார் எழுதிய கதையில் எனக்கும் உடம்பெல்லாம் உப்பு சீடை தான் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  53. அழகிய சிற்பங்கள்.

    அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  54. நன்றி ரிஷபன் சார்! (நா லேட்டானவன்) :-)

    ReplyDelete