Tuesday, December 4, 2012

பண்டைய தமிழின் இன்றைய முகவரிகள்


தமிழர்களைப்போல மொழியை ஆராதித்து ஆனந்தமடையும் வேறு இனக் குழுக்கள் உண்டா என நான் எப்போதுமே ஆச்சரியம் கொள்வதுண்டு.
வாழ்வின் சகல அம்சங்களோடும் கலந்து பிணைந்து ஐக்கியமானது மொழி. அதனால்தான் அதனைத் தாய் என்று அழைக்கிறோம்...! ''தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்''என்று பூரித்துப் புளகாங்கிதமடைகிறோம். தமிழ்த் தாய்க்குக் கோயிலெடுத்துக் கரம் கூப்பித் தொழுகிறோம்.



‘’கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி’’[புறப்பொருள் வெண்பாமாலை]
என்று பெருமிதம் கொள்கிறோம். செம்மொழித் தகுதியை நம் மொழி அடைந்தபோது நாம் கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை....
ஆனாலும்...உணர்ச்சி பூர்வமான இந்தக் கட்டத்தோடு நம்மில் பலரின் தேடல்கள் முடிந்து விடுகின்றன.ஒரு மொழியை உணர்வுபூர்வமாக அணுகுவதென்பது  ஒரு சிறிய பகுதி மட்டுமே.... அதன் பெருமைகளை நாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்த வேண்டுமென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் அந்தத் தமிழ்ப்பாதையில் ஒரு சில மைல்கற்களையாவது தொட்டுப்பார்க்க வேண்டும்தானே?

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த உரைநடைப் படைப்புக்களான கட்டுரைகளையும்,கதைகளையும் அவை நமக்குப் பழக்கமான சொற்களிலும்,நடையிலும் அமைந்திருப்பதால் ஓரளவு எளிமையாக அணுகி விட முடிகிறது.பழந்தமிழ் இலக்கியம் என்றால் மட்டும் பதவுரை பொழிப்புரைக்கு ஆள் தேடி சற்று மலைத்துப் போய் நின்று விடுகிறோம். எந்த ஒரு உலக மொழியிலும் கால ஓட்டத்தில் சொற்கள் வெவேறு வகையாக மாற்றமடைவதும் புதுப்புதுச் சொற்கள் வந்து சேர்வதும் - ‘’பழையன கழிதலும் புதியன புகுதலும்’’ இயற்கை. 2000 ஆண்டுக்கால நெடிய பயணத்தில் எத்தனை இலட்சம் சொற்களின் ஊடாகத் தமிழ் பயணப்பட்டிருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப்பார்த்தால் அது குறித்த பெருமை மட்டுமே நம்மில் மேலோங்கி எழ வேண்டும்.

பழந்தமிழைப் பொறுத்தவரையிலும் கூட  நம்மை மலைப்படைய வைப்பவை அந்தச் சொற்களே. சொற்களைத் தாண்டிக்கொண்டு பாடல்களுக்குள் சென்றுவிட்டால் இன்றைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அதே உணர்வுகளின் கணங்களைத்தான் அன்றைய புலவர்களும் தரிசனப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எளிதாகப்புரிந்து கொண்டு விடலாம்.

”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
 – செம்புலப் பெயல்நீரார்
[என் தாயும், உன் தாயும் - என் தந்தையும், உன் தந்தையும்,  ஒருவருக்கொருவர் எந்த வகையில் உறவினர்? நானும் நீயும் இதற்கு முன் ஒருவரையொருவர் முன் அறிந்தது கூட இல்லையே? ஆனாலும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன.]
என்ற குறுந்தொகைப்பாடலில் இடம் பெற்றிருக்கும் ஒரு குறிப்புத்தான் 
இன்றைய திரைப்பாடலில்,
‘’உன் பேரும் என் பேரும் அறியாமலே உள்ளங்கள் இடம் மாறுதே’
[‘’கண்ணாளனே...’’பம்பாய்-வைரமுத்து]
என்ற இலகுவான சொற்களில் சொல்லப்பட்டு எல்லோராலும் முணுமுணுக்கப்படுகிறது;விரும்பப்படுகிறது.

’’இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து’’

என்ற திருக்குறளைத்தான் கொஞ்சம் வேறுவகையாக மாற்றி,
’’நீ ஒரு முறை பார்த்தாய்
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது
எங்கே இன்னொரு முறை பார்..
முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்’’ 
என்று புதுக்கவிதையாக எழுதிப்பார்த்தார் கவிஞர் மீரா.

வாழ்க்கையோடும்,வாழ்க்கையின் சில தருணங்களோடும் இணைத்துப் பார்க்கும்போதும் வாசிக்கும்போதும், சங்கக்கவிதைகள் அடிக்கரும்பாய் இனிப்பதை....என்றென்றும் அழியாத பல நிலைத்த உண்மைகளை நமக்குச் சொல்லிக்கொண்டே இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

சங்க இலக்கியம் படிக்க வேண்டும்..அது பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இன்று பல இளம் தலைமுறையினரிடம் புதுப்பிக்கப்பட்டிருப்பதை நான் பெருமகிழ்வோடு அவதானித்து வருகிறேன். தமிழிலக்கியத்தோடு சம்பந்தப்படாத பிற துறை சார்ந்தவர்கள்.... தமிழிலக்கியம் கற்காதவர்கள் எனப் பலரிடமும் இந்த எழுச்சி மேலோங்கிக் கொண்டிருக்கிறது.அவர்களது ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில்...
பண்டைத் தமிழ்ப்பாக்களைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் சில தளங்களும் பதிவுகளும் இன்றைய பார்வைக்கு....

’’பழந்தமிழ் இலக்கியங்களின் பழமை அவற்றின் வயதில் இருக்கிறதேயன்றி அவை காட்டும் வாழ்க்கையில் இல்லை’’ என்று சொல்லும் காயத்ரியும் அவரது கணவர்  சித்தார்த்தும் இணைந்து எழுதும் அணிலாடு முன்றில் என்னும் தளம் சங்க இலக்கியத்தோடு கை குலுக்க விரும்புவோருக்கு அற்புதமான வாசிப்பனுபவங்களை விரித்தளிக்கும் தளம். இன்றைய வாழ்வியலோடு இணைத்து சங்கக்கவிதைகளை விளக்க முயலும் இந்தத் தளத்தில்..குறுந்தொகைப்பாடல் சார்ந்த
'உறக்கமற்ற காத்திருப்புஎன்னும் பதிவும்,


புறநானூற்றுப்பாடலை ஒட்டிய
போர்க்களத்தில் பூத்திருக்கும் ஒற்றைப் பூ!வும் என் பரிந்துரைகள்.

மாயக்கூத்தனின் சொல்வனப்பதிவான 'முத்தொள்ளாயிரத்தில் யானைகள்'  ஒரு கருத்தை மையமாகக் கொண்ட செய்தியைக் குறிப்பிட்ட இலக்கியத்தின் அடிப்படையில் ஆழமாக முன் வைக்க முயலும் ஆக்கம்

சங்க இலக்கியம் குறித்த பதிவுகளைத் தங்கள் தளங்களில் அடிக்கடி வெளியிடும் பேராசிரியர் குணசீலனின் முத்தொள்ளாயிரம் மற்றும் புறநானூறு சார்ந்த  'பிடிநாண...'என்னும் பதிவு,சங்க இலக்கியத்தின் மீது ஆறாக் காதலை நம்முள் கிளர்த்தக்கூடியது.
சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களின் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கும் பேராசிரியரின் பதிவு பெண்கல்வி தழைத்திருந்த சங்கச் சமுதாயத்தின் மேன்மைக்குக் கட்டியம் கூறுவதோடு ஆய்வாளர்களுக்கும் பயன் தரத்தக்கது.

இந்தத் தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் சங்க இலக்கியத்தைக் கொண்டு செல்லும் மிக அருமையான முயற்சி, ஐந்திணைப்பதிப்பகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களை எளிய கவிதை நடையில் அப்பதிப்பகத்தார் கொண்டு வந்திருப்பதையும் கல்பனா சேக்கிழார்  தன் அண்மைப்பதிவான முல்லைப் பாட்டில் சுட்டியிருக்கிறார். எளிமையான அந்தக்கவிதை வரிகளையும் பதிவில் ஏற்றியிருக்கிறார்.தமிழிலக்கியம் கற்ற பேராசிரியர்களைக் கூட மலைக்க வைக்கும் கடுமையான நடை கொண்ட முல்லைப்பாட்டை எளிய கவிதை நடையில் வாசிக்க வைத்து உதவும் இவ்வகை முயற்சிகளே தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடியவை.அவ்வகையில் அது பெரிதும் பயனுள்ள ஒரு பதிவாகிறது.
சங்க இலக்கியத்தின் வித்தியாசமான சொல்லாட்சிக்குச் சான்றாகும் பெரும் பிறிதாதல்’என்னும் கல்பனாவின் பதிவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.


பூவிடைப்படுதல் என்னும் தலைப்பிலான ஜெயமோகனின் ஐந்து தொடர் கட்டுரைப் பதிவுகளும் தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமன்றிப் பண்டை இலக்கிய தாகம் கொண்டோர் அனைவருக்குமே குறுந்தொகை குறித்த மிக அற்புதமான திறப்பை அளிக்கக்கூடியவை. அக்கட்டுரையின் காணொளியும் கூடக் கிடைக்கிறது.



பின் குறிப்பு;
பண்டை இலக்கியம் படிக்கக் கை வசம் நூல் இல்லையே, உரை இல்லையே என்று சாக்குப்போக்குச் சொல்லி அதைப் படிப்பதன் இன்பத்தை ஒத்திப்போட்டுவிடத் தேவை இல்லாதபடி, பாடல்களின் மூலம், உரை எல்லாம் கொஞ்சம் முயன்று பார்த்தால் இணையத்திலேயே கிடைக்கிறது.
அவ்வாறான சில தளங்கள்
http://sangailakkiyam.blogspot.in/
http://www.tamilvu.org
http://ilakkiyam.com/
http://www.thoguppukal.in/ என்னும் தளமும் பண்டை இலக்கியங்களின் அறிமுகத்துக்கு மிகவும் பயன்படும் இன்னொரு தளம்.




21 comments:

  1. சிறப்பான அறிமுகங்களோடு தொடங்கியுள்ளீர்கள்.

    'யாயும் ஞாயும் யாரா கியரோ' பாடலை ஒற்றி, 'உனக்கும் எனக்கும் ஒரே ஊர், வாசுதேவ நல்லூர்' என்ற கவிஞர் மீரா வின் கவிதையைப் பற்றி சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார்.

    ReplyDelete
  2. வாழ்க்கையோடும்,வாழ்க்கையின் சில தருணங்களோடும் இணைத்துப் பார்க்கும்போதும் வாசிக்கும்போதும், சங்கக்கவிதைகள் அடிக்கரும்பாய் இனிப்பதை சுவைக்கவைக்கும் அருமையான பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகளும் .. பாராட்டுக்களும் ...

    ReplyDelete
  3. Anaithu arimugamum arumai...ilakkiyam patri aalunthu eduththu koooriyamaiku nandri

    ReplyDelete
  4. ”யாயும் ஞாயும் யாரா கியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி யறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
    – செம்புலப் பெயல்நீரார்

    குறுந்தொகையா ?
    தமிழ்ப் பண்பினை
    தாய் மண்ணின் பெருமையை
    முன் நின்று ஈர்த்திடும்
    மயில் தோகையா ?


    நான் என்பதை விடுத்து
    நாம் என உணர்ந்து
    நானிலம் போற்றும் வகையில்
    நாணமுடன் வழி நடக்கும்
    நம்குலப்பெண்டீர் வாழ்க.

    தாயினும் மேலாய் அன்பொன்றில்லை.
    தமிழ்மொழியும் மேலாய் சொல் ஒன்றில்லை.

    எங்கிருந்தோ வந்தீர்
    இசை மழை பொழிகின்றீர் - வலைப்
    பாலை வனத்திலே எனக்குப்
    பருகெனப் பதநீர் தருகின்றீர்.

    சுசீலா அம்மா !
    நீவிர் வாழ்க.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. தங்களுக்கே உரிய தமிழியல் நடையில் அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.

    எனது படைப்பையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா.

    அணிலாடு முன்றில் நான் இதுவரை அறியாத வலைப்பதிவு.

    அறிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. தமிழை வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி.
    ஸ்ரீராம் சொல்வது சரியானதே.
    கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற கவிதை அது.உறவே இல்லாமல் வரும் சங்கக்காதலுக்கும்,சாதி பார்த்து சொந்தம் பார்த்து வரும் இக்காலக்காதலுக்கும் உள்ள முரண்பாட்டை அந்தக் கவிதையில் மீரா சொல்லியிருப்பார்.குறளோடு சேர்த்து நான் எடுத்துக் காட்டியிருக்கும் மீராவின் கவிதையும் அந்தத் தொகுப்பில் உள்ளதுதான்.
    குணசீலன்...நாமெல்லாம் பேராசிரியர்களாக இருந்து கொண்டு சங்கத்தை எழுதுகிறோம்.ஆனால் அணிலாடு முன்றில் எழுதுவோர் தனிப்பட்ட ஆர்வத்தால் பண்டை இலக்கியத்தைப்பதிவு செய்கிறார்கள்.அது பற்றியே அந்த அறிமுகம்.உங்களுக்குப் புதிதாக ஒரு தளத்தை இனம் காட்டியதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள். ஒவ்வொன்றையும் பொறுமையாக சென்று படிக்கிறேன்..

    ReplyDelete
  8. ஓ அப்படியா அம்மா! அணிலாடுமுன்றிலின் பணி வரவேற்றலுக்குரியது.

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. பண்டை இலக்கியம் படிக்கக் கை வசம் நூல் இல்லையே, உரை இல்லையே என்று சாக்குப்போக்குச் சொல்லி அதைப் படிப்பதன் இன்பத்தை ஒத்திப்போட்டுவிடத் தேவை இல்லாதபடி, பாடல்களின் மூலம், உரை எல்லாம் கொஞ்சம் முயன்று பார்த்தால் இணையத்திலேயே கிடைக்கிறது.


    மிக அருமையான அறிமுகங்களோடு சங்க இலக்கிய நுழைவாயிலையும் காட்டிய தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. மிகவும் நேரமெடுத்துப் படிக்க வேண்டியது.
    அத்தனையும் அருமையான வரிகள்.
    அறிமுகவாளர்களிற்கும், தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள்..அனைத்தையும் சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete

  12. இன்று பதியப்பட்வலைத்தளங்கள் அனைத்தும் அருமை அம்மா, பதிவுகளை தொடருகிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. tamilvu செழிப்பான தளம். அடிக்கடி மேய்வதுண்டு. குணசீலன் தளம் பழக்கம். கல்பனா சேக்கிழார் வியக்க வைக்கிறார். அனைத்து அறிமுகங்களுக்கும் நன்றி.

    சங்க இலக்கியம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான உந்துதல்கள் காரணங்கள் இவற்றை உங்கள் கருத்தின் வழி அறியவும் விரும்புகிறேன். (சினிமா பாடலில் எளிமையாகக் கிடைக்கிறது என்றால் சிரமப்படுவானேன்?)

    ReplyDelete
  14. நல்ல அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete
  15. மதுரை புத்தகத்திருவிழாவில் பேராசிரியர் தொ.பரமசிவன் உரை கேட்டு சங்கஇலக்கியம் மீது விருப்பம் அதிகரித்து இளங்கலை தமிழ் சேர்ந்து படித்தேன். பாடப்புத்தகங்களைத் தாண்டி தனியான புத்தகங்கள்தான் அதிகம் ஈர்க்கின்றன.

    தங்கள் பதிவுகள் சங்க இலக்கியத்தை எளிமையாக அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கின்றன. இப்பதிவில் நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளையும் வாசிக்கிறேன்.

    சமீபத்தில் 'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' என்ற முருகேசபாண்டியனின் சங்க காலப்பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பகிர்விற்கு நன்றி.

    - சித்திரவீதிக்காரன்

    ReplyDelete
  16. ஜெயமோகனின் 'பூவிடைப்படுதல்' என்னும் பதிவிற்கான இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி. சமீபத்தில் வாசித்த ஜெயமோகனின் 'காடு'நாவல் வாசித்து குறுந்தொகையின் மீதான காதல் அதிகரித்துவிட்டது. தங்கள் பகிர்விற்கு ரொம்ப நன்றி. சுஜாதா எழுதிய குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் கொஞ்சம் வாசித்தேன்.

    ReplyDelete
  17. கடைசியில் சொன்னது எனக்காகவெ சொன்னது போல இருக்கிறதும்மா :)

    புக் மார்க் செய்து விட்டேன் தளங்களை. இனி படிக்கிறேன்.

    ReplyDelete
  18. உங்களைப்போல் தமிழை மாணவர்களுக்கு பிடித்தாற் போல் சொல்லித்தர வேண்டும்.அப்போதுதான் பழைய இலக்கியங்களை படிக்கும் ஆர்வம் வரும் . இன்றைய வாழ்வியலோடு தமிழை இணைக்க உங்களைப் போன்றோரால் தான் முடியும் . அறிமுகத் தளங்களுக்கு செல்கிறேன் நன்றி

    ReplyDelete
  19. அன்பின் சுசீலா - பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டது - சித்திர வீதிக் காரனின் ஆர்வம் பாராட்டத்தக்கது - அவரின் மறுமொழிகளைப் பாருங்கள் - பாராட்டுங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. உண்மையில் பண்டைத் தமிழுக்கு இத்தனை பின்னூட்டங்கள் வருமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
    இணைப்புக்களைப்பார்க்கும் நண்பர்கள்,பாராட்டிய உள்ளங்கள்...குறிப்பிட்ட பதிவுகளுக்குச் சென்று படிக்க நேரம் ஒதுக்கினாலே என் பணி முழுமை பெறும்.

    ReplyDelete