Monday, December 3, 2012

மாய உலகில் ஒரு சஞ்சாரம்


வலைச்சரத்துக்கு என் வணக்கம்.

வலைச்சரத்தில் நான் அறிந்து இருமுறை என் பதிவுகளும் தளமும் அறிமுகமாகியிருக்கின்றன. முதல் முறை இலக்கியத் தமிழ் என்னும் பிரிவில் வேர்களைத் தேடும் பேராசிரியர் குணசீலனால்.... அடுத்து மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் என்னும் தலைப்பில் தேவியர் இல்லத்தின் காவலர் திருப்பூர் ஜோதிஜி அவர்களால்.(ஒரு வேளை வேறு சிலரும் அறிமுகம் செய்து நான் தவற விட்டிருந்தால் பிழை பொறுக்க!)

தற்போது என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக  அழைத்து வந்து, நான் ரசித்துப் படித்த தளங்கள்...,வியந்து பாராட்டிய பதிவுகள், பலரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பும் இணைப்புக்கள் எனப் பலவற்றையும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறார் திரு சீனா அவர்கள்.
அவருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியைக் கையாள்வதும்,...அதற்குள் உலவுவதென்பதும் ஏதோ ஒரு மாய உலகத்தின் சஞ்சாரம் போலவும், நிறைவேறாத, நிறைவேற்றிக்கொள்ள முடியாத  ஒரு கொடுங்கனவு போலவுமே எனக்குத் தோன்றி வந்திருக்கிறது.பணிக்காலத்தில் அதற்கான வாய்ப்பும் நேரமும் எனக்கு வாய்க்கவுமில்லை.சங்கம் முதல் சமகாலப்படைப்புக்கள் வரை தமிழிலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் நான் கொண்டிருக்கும் தீராத தாகம்...தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியான இணையத் தமிழை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. தீவிர இலக்கிய வாசிப்புக்கான வாய்ப்பு அச்சில் குறைந்து இணையத்தில் பெருகத் தொடங்கியிருந்த காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

 நவீன இலக்கியத்தைப்பொறுத்தவரை ஜெயகாந்தனுக்குப் பிறகு என்னைப்பெரிதும் பாதித்த எழுத்தாளர் திரு ஜெயமோகன் இணையத்தில் புனைவுகளாகவும், அபுனைவுகளாகவும் பதிவுகளை எழுதிக் குவிக்கத் தொடங்கியிருந்தார்.

அவற்றை உடனுக்குடன் வாசிக்க வேண்டுமென்பதற்காகவே இணையத்தில் உலவவும், மின் அஞ்சல் அனுப்பவும் நான் முதலில் கற்றுக் கொண்டேன். அப்போதும் கூடப் பிடித்த பதிவுகளுக்கான பின்னூட்டங்களைத் தமிங்கிலிஷில்தான் எழுத முடிந்ததே தவிரத் தமிழிலேயே நேரடியாக எழுதுவது வசப்பட்டிருக்கவில்லை.நான் அனுப்பிய கருத்துரைகளைக்கண்ட திரு ஜெயமோகன், மற்றும் எஸ்.ரா இருவரும் ஒரே நேரத்தில் நானும் ஒரு வலைப்பூ எழுத வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டனர்; அதற்கு ஏற்ற உதவிகளைக் கவிஞரும் எழுத்தாளருமான நிழல்கள்’ ஹரன்பிரசன்னாவைக் கொண்டு நண்பர் ஜெயமோகன் செய்து தர, நவ.2008இல் என் வலைப்பூ பிறந்தது. எனக்கு முற்றிலும் புதிதான புதிதான ஒரு தளத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்பிய என்னைப் பங்கேற்பாளராக்கிய முழுப்பெருமையும் ஜெயமோகனையே சாரும்.அதற்கு என் நன்றிகள் என்றென்றும் அவருக்கு...!

சமகாலத் தமிழின் நீரோட்டத்தோடு இணைய வேண்டுமென்பதற்காகவே இணையத்திற்குள் தொடர்ந்து நிலைப்பட நான் எடுத்த முயற்சிகள்,அதற்கு உறுதுணையாக நின்றவர்கள் பற்றிய குறிப்புக்கள் ஆகிய அனைத்தையும் ஏற்கனவே வலைப்பூ என்னும் வரம் என்னும் பதிவிலும் நுழைவாயிலிலும்  விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.குறிப்பாகத் தட்டச்சே தெரியாத எனக்குத் தமிழ் எழுதியை எளிமையாக்கிச்சொல்லி என்னை ஊக்குவித்த என் பேராசிரிய நண்பர்கள் குணசீலன்,கல்பனா சேக்கிழார் 
ஆகிய இருவரின் பொறுமை கலந்த அன்புக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.

கற்பித்தல் என்னும் காலகட்டம் என் வாழ்வில் ஒரு முடிவுக்கு வந்து விட்டாலும் கற்றல் என்பதை ஒரு போதும் நிறுத்தி விடாமல் இருப்பதற்கு....இந்த இணையமும் வலை எழுத்தும் நாள்தோறும் எனக்கொரு போதிமரமாய் எதையாவது கற்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இதழியல்துறையில் ஈடுபட்டு இயங்க வேண்டும் என்று என்றோ கண்ட கனவை நிறைவேற்றிக் கொள்ள..., இலக்கியம்,திறனாய்வு, சமூகம்,திரைப்படம்,பயணம் எனப்பல வகை எழுத்துக்களை முயன்று பார்க்க இந்த வலைத் தளம் எனக்கு வாகனமாகியிருக்கிறது. ஒத்த அலை வரிசையிலும்...நேர்மாறான திசையிலும் பயணப்படும் நண்பர்கள் பலரைப்பரிச்சயம் செய்து கொள்ளவும், அவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதன் வழி என் எழுத்தைக் கூர் தீட்டிக் கொள்ளவும் இந்த வலை எழுத்து எனக்கு உதவியிருக்கிறது. இதனால் கிடைத்த நல்ல தோழமைகள்,பாசத்தைப்பொழியும் உள்ளங்களோடான உறவாடல்கள் என் வாழ்க்கைக்கு மேலும் பொருள் சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள 
வலையுலகப் படைப்பாளிகள்என்னும் கட்டுரையிலும்,
ஆனந்த விகடனின் -13.06.12 -வரவேற்பறை பகுதியிலும் 
உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை இணைக்கும் தளம் ஆகியவற்றிலும் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.தமிழ்ச்சிறுகதைகளைத் தொகுக்கும் சிறுகதைகள்’என்னும் தளத்தில் என் சிறுகதைகள் பலவும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும்....,கிட்டத்தட்ட நானூறு பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட ஒவ்வொரு பதிவை எழுதும்போதும் புதிதாக எதையோ எழுதிப்பார்க்கும் முயற்சியாகத்தான் அது தோன்றுகிறதே தவிர முழுமையான நிறைவு இன்னும் ஏற்படவில்லை. சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ என்று தாகூர் சொன்னது போல....சுருதியை மீட்டிக் கொண்டே இருக்கிறேன்...நாதத்தின் தரத்தைக் காலம் கணிக்கட்டும் என்றபடி....!

வலைச்சரத்தின் வாசகர்கள் பலரும் என் தளத்துக்குப் புதியவர்கள் அல்லர் என்றபோதும் அறிமுகப்பதிவில் என் பதிவுகளைப்பகிர வேண்டும் என நண்பர் சீனா கேட்டுக் கொண்டதால். எனக்கு ஆர்வமுள்ள துறைகளில் நான் பகிர எண்ணும் சில பதிவுகள்.கீழே..;
சிறுகதை
1979 முதல் சிறுகதை எழுதி வரும் நான் இதழ்களில் வெளியான கதைகளில் பலவற்றை அவ்வப்போது வலையேற்றிக்கொண்டும் வருகிறேன்.அவற்றில் பரவலான வாசிப்புப்பெற்றது பொம்பளை வண்டி..என்றாலும் நான் உங்கள் வாசிப்பைக்கோருவது இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான நேரமில்லை..யை ...[இன்னும் நேரமிருப்பவர்கள் பிற கதைகளையும் படித்தால் எனக்கு மகிழ்ச்சிதான்]
சங்கம்
சங்கப்பாடல் அறிமுகத்தில் காமர் மந்தியும்,காதல் தலைவியும் பலரையும் கவர்ந்தாலும் தீராக்காதலனையும் அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்குமான வேறுபாடு காட்டும் சங்கக்காதலையும் சற்றுப்படித்துப் பார்க்கலாம்.
பயணம்
பயணம் சார்ந்த பல பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வரும் எனக்கு மனநிறைவும் மகிழ்வும் தந்த பதிவு பத்ரிநாத் பயணம் பற்றி இமயத்தின் மடியில் என நான் எழுதிய தொடர்ப் பதிவுகளும்,அவற்றில் இடம் பெற்றிருந்த  (நான் எடுத்த)இமயத்தின் புகைப்படங்களும்தான். அதே போல இன்னொரு பயண அனுபவத்தில் கிடைத்த செய்தியே சிற்பியின் நிழல் பதிவுக்கு வித்தாக அமைந்தது.
திரைப்படம்
நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்யும் என் பதிவுகளில் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட மலையாளப்படமான ஆதாமிண்ட மகன் அபு பற்றி எழுதப்பட்ட   இவன்தான் மனிதன்,  இயக்குநர் வசந்தபாலனின் அங்காடித்தெருவுக்கு எழுதிய விமரிசனம் ஆகியன எனக்கு உவப்பானவை.
சமூகம்
சமூக அவலம் கண்டு கொள்ளும் அறச்சீற்றம் என் கதைகள் பலவற்றுக்குக் கருப்பொருளானதைப்போன்றே என் பதிவுகளுக்கும் அடிப்படையாகியிருக்கிறது.அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாய் நான் நினைப்பவை இரண்டு பெண்கள் மற்றும் யாருக்கும் வெட்கமில்லை.
புத்தகப்பார்வை
நல்ல நூலைப்படித்ததும் உடன் அதை அறிமுகப்படுத்தி விட நான் தவிப்பதற்கு ஏற்ற வடிகால் என் வலைப்பூ.அந்த  விமரிசனங்களுக்குச் சில சான்றுகள் முதல்சபதமும்,ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதமும்

இன்றைய பதிவை நிறைவு செய்வதற்கு முன் இறுதியாக ஒன்று.
பதிவுலகத்தில் மிகப்பரவலாக அறியப்பட்டவரும்,அத் துறையில் மிகச்சிறப்பாகத் தன் முத்திரையைப்பதித்து வருபவருமான ’சும்மா’ தேனம்மை லட்சுமணன் மதுரையில் என் மாணவியாக இருந்தவர் என்பதும் 

அவரது வளர்ச்சியில் அணிலாக என் பங்கும் உண்டு என்பதும்தான் அந்தச் செய்தி.! தம்மில் தம் மக்கள் அறிவுடைமை காண்பதுதானே ஈன்றோர்க்கும்,வளர்த்தோர்க்கும் பெருமிதம் தருவது?அந்தப்பெருமிதப்பூரிப்புடன் எங்கள் பாசப்பிணைப்பு பற்றி நான் எழுதிய பதிவு  மகளாய்..மாணவியாய்.....

இந்த அனுபவப்பதிவோடு என் கதையை முடித்துக் கொண்டு....தொடரும் அடுத்தடுத்த பதிவுகளில் நான் பரிந்துரைக்க விரும்பும் தளங்களையும்,பதிவுகளையும் அறிமுகம் செய்கிறேன்.

31 comments:

  1. vaazhthukkal ....!

    thodarungal....

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அம்மா. தங்களை வலைச்சர ஆசிரியராய் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    இந்த வாரம் எங்களுக்கு இனிமையான வாரமாய் இருக்கப் போகிறது.

    ReplyDelete
  3. நன்றி சீனி...நன்றி ஆதி...

    ReplyDelete
  4. அருமையான தொடக்கம் அம்மா... நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று நிரூபித்தது தங்களின் எழுத்துகள்....

    தங்களின் மாணவி தேனம்மை லட்சுமணன் என்ற தகவல் கூடுதல் சந்தோஷம்...

    வேர்களைத்தேடி குணசீலனின் பொறுமையும் உதவும் தன்மையும் அறியமுடிந்தது...

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அம்மா.. தொடருங்கள்... தொடர்கிறோம்....

    தமிழ்மணத்துடன் இணைத்துவிட்டேன்....

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியராய்ப் பொறுப்பேற்றுக்கொண்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சுசீலாம்மா. இந்த வாரம் தேன் குடிச்ச நரியாய் ஆகப்போறோம் :-))

    ReplyDelete
  6. வாழ்த்துகள் தொடருங்கள்.

    ReplyDelete
  7. நல்ல தொடக்க உரை...

    ReplyDelete
  8. அருமையான தொடக்கம்.. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நல்லுள்ளங்களுக்கு நன்றி.நல்ல கதைசொல்லியான திரு ரிஷபனுக்கு வணக்கம்.அவருக்குப் பிறகு தொடர்வதால் என் பொறுப்பு கூடுதலாகிறது.

    ReplyDelete
  10. வணக்கம்! இந்தவாரம் வலைச்சரம் - இணைய இதழுக்கு ஆசிரியை பொறுப்பேற்று இருக்கும் பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்களை வருக! வருக! என்று அழைக்கின்றேன்!

    ReplyDelete

  11. // கற்பித்தல் என்னும் காலகட்டம் என் வாழ்வில் ஒரு முடிவுக்கு வந்து விட்டாலும் கற்றல் என்பதை ஒரு போதும் நிறுத்தி விடாமல் இருப்பதற்கு....இந்த இணையமும் வலை எழுத்தும் நாள்தோறும் எனக்கொரு போதிமரமாய் எதையாவது கற்பித்துக் கொண்டே இருக்கின்றன.//

    பல வருடங்களுக்கு முன்னே எங்கள் பயிற்சிக்கல்லூரியில் ஒரு பேராசிரியராக இருந்த காலம் . அது தொழிற்முறை சார்பு கல்விக்கூடம்.
    அதுவரை நான் மனித நல மேம்பாட்டு அலுவலர் எனும் பணியிலிருந்து இந்தப் பயிற்சிக்கல்லூரியில் ஒரு பேராசிரியர் எனும் பொறுப்புக்கு
    மாற்றப்பட்டிருந்தேன்.

    ஒரு சில நாட்களில், எங்கள் கல்லூரிக்கு வருகை தந்த எங்கள் நிறுவனத்தின் முதல் அதிகாரி ( அவரை சேர்மன் என்று சொல்லுவோம் ) நீங்கள்
    ஆற்றுவது என்ன பணி என்ன வினவினார். நானும் என்ன முதற்கேள்வியே இப்படி இருக்கிறது என நினைத்துக்கொண்டு , நான் இங்கு
    ஆசிரியர் பணி புரிகின்றேன். ( I am a teacher here) என்றேன்.

    அவர் வினவினார்: " அப்படியா ! உண்மையிலே நீங்கள் கற்பிக்கிறீர்களா ? " ( Is it ? U believe U teach ?)

    எனக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாது வாளா நின்றேன்.

    " உண்மையில் நீங்கள் வருபவர்களுடன் கற்கிறீர்கள் " ( really, you are learning along with those whom you say you teach)


    அக்கல்லூரியை பிரிந்து செல்லும் கால கட்டத்தில் உணர்ந்தேன்.

    நான் கற்பித்தேன் என்ற அளவை விட கற்ற அளவே பெரிது. நான் நடத்திய வகுப்புகளிலே கேட்கப்பட்ட கேள்விகள் என்னை
    மேலும் மேலும் தூண்டி துல்லியமாக பலவற்றை அறிவதற்கு வாய்ப்பாக அமைந்தன.

    வாழ்க்கையும் அப்படித்தானோ ?

    நீங்கள் தான் சொல்லவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  12. ஆம்.வகுப்பறைகளில் நான் கற்பித்ததை விடவும் கற்றுக் கொண்டதே மிகுதி.என் எழுத்துக்கும்,வாழ்க்கைக்கும் அடித்தளமான பல மூலப்பொருள்களை நான் பாடம் சொல்லித்தந்த என் வகுப்பறைகளே எனக்குப் போதித்திருக்கின்றன.கேள்வி கேட்டு என்னை வளரச்செய்த ஒவ்வொரு மாணவியும் எனக்குத் தகப்பன் சாமிதான்.

    ReplyDelete
  13. //ஒவ்வொரு மாணவியும் எனக்குத் தகப்பன் சாமிதான்..
    பிரமாதம்!

    சிறப்பான வாரத்துக்கான எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வணக்கம்
    சுசிலா எம்,ஏ(அம்மா)

    கடந்த வாரம் ரிஷபன் (அண்ணா) அவர்கள் மிக சிறப்பாக பல தளங்களையும் பல படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தார் அவருக்கு நன்றி,
    இந்த வாரம் நீங்கள் வலைச்சர ஆசிரியர் கடமை ஏற்றதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களை வருக வருகவென வரவேற்கிறேன் , 1ம் நாள் நல்ல அறிமகமாக உள்ளது இரண்டாம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள், தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. மாய உலகமா? மாயன் உலகமா?

    ReplyDelete
  16. விரிவான அறிமுகத்துடன் சிறப்பான பதிவுகள்! மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  17. ..சுருதியை மீட்டிக் கொண்டே இருக்கிறேன்...நாதத்தின் தரத்தைக் காலம் கணிக்கட்டும் என்றபடி....!

    கற்றுக்கொள்ள அருமையான பதிவுகளை அளித்த பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. வாழ்த்துகள் சுசிலாம்மா.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சுசீலா மேடம். நான் உங்களோட வலைப்பூவை தொடர்ந்து ரசித்து படித்து வருபவள். இந்த ஒரு வாரம் வலைச்சரத்திலும் உங்கள் பதிவுகளை ரசித்து படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
    கற்பித்தல் முடிந்து விட்டாலும் கற்பது என்றுமே முடிவதில்லை, அழகாக சொன்னீர்கள். இந்த இணையத்தின் மூலம்தான் உங்களை போன்றவர்களின் அருமையான எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சந்தோஷமாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.

    ReplyDelete
  20. சிறப்பான சுய அறிமுகம்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  21. வாழ்த்துகள் அம்மா....

    ReplyDelete
  22. அருமையான தொடக்கம்.

    திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்கள் தங்களின் மாணவி என்ற தகவல் கூடுதல் சந்தோஷம்.

    அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அன்பிற்குரிய நண்பர்களே,உங்களில் பலரும் என் வலைப்பூவுக்கு வருகை தந்து என்னை ஊக்குவிக்கும் வாடிக்கையாளர்கள்தான்...உங்களை இங்கேயும் சந்திப்பதில் மகிழ்ச்சி.புதியவர்கள் என்னை அறிந்து கொள்ள வாய்ப்பை நல்கிய வலைச்சரத்துக்கும் என் நன்றி.
    கவியாழி கண்ணதாசனின் கேள்வி எனக்குச் சரியாக விளங்கவில்லை...எனக்கு முதலில் பிடிபடாமல் இருந்த உலகம் என்பதாலேயே இணைய உலகை 'மாய உலகம்'என அழைத்தேன்.
    திரு சுரேஷின் கடிதத்தில் ஒரு திருத்தம்.நான் ஐயா இல்லை.அம்மா...

    ReplyDelete
  24. தங்களைப்பற்றி அறிந்ததில் மிக மகிழவு.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. மாய உலகில் சஞ்சாரம் - தலைப்பே மிகஅருமை.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் தொடருங்கள்...!

    ReplyDelete
  27. எதார்த்தமான அறிமுகம் அம்மா... வாசிக்கக் காத்திருக்கிறேன் ....

    ReplyDelete
  28. மிக்க நன்றி அம்மா. அவையத்து முந்தி இருப்பச் செயல் என ஆக்கியமைக்கு. :)

    ReplyDelete
  29. நன்றி மஞ்சு

    நன்றி சாரல்

    நன்றி சுப்புத்தாத்தா

    நன்றி அப்பாதுரை

    நன்றி கோபால் சார்

    ReplyDelete