Saturday, December 8, 2012

இலக்குகளை நோக்கி....


அச்சு ஊடகத்தை விடவும் இணைய எழுத்தே பரவலான வாசிப்புக்குரியதாக ஆகி வரும் காலகட்டம் இது. கண் இமைக்கும் நேரத்துக்குள் ஒரு வலைப்பூவை உருவாக்கி வடிவமைத்து விட முடிகிற தொழில் நுட்பம் நமக்கு வசப்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் வலைப்பூக்களும் வலைத் தளங்களும் புதிது புதிதாகப் பெருகிக் கொண்டே செல்கின்றன.

எழுதும் ஆர்வம் கொண்டோர்க்குக் கட்டற்ற சுதந்திரத்தை அளிப்பவை வலைப்பூக்கள். அச்சு இதழ்களுக்கு அனுப்பி அவை பிரசுரமாகுமா ஆகாதா எனக் காத்திருக்க அவசியமில்லாதபடி உடனுக்குடன் வெளியிடும் வசதி...,எழுதியதற்கான எதிர்வினையை நொடி நேரத்தில் பெற்று நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும்போது கிடைக்கும் பரவசம் எனப் பலவற்றையும் அளிப்பவை வலை எழுத்துக்கள்.

அச்சிடப்படும் இதழ்களைப்போலச் சிறுகதை,கவிதை,கட்டுரை,திரைவிமரிசனம்,பயணம் எனப் பலவகைச் செய்திகளை உள்ளடக்கியதாகவே வலைப்பூக்கள் பலவும் வடிவமைக்கப்படுகின்றன.எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதிப்பார்க்கும் பயிற்சிக்களங்களாகவே இவற்றைக் கொள்ளலாம்.

கால் போன போக்கிலெல்லாம் அலைந்து பார்ப்பது ஒரு வகையான சுகம் என்றால்..குறிப்பிட்ட ஒரு இலக்கை மட்டும் வைத்துக் கொண்டு அதை நோக்கியே செல்வதும் கூட இன்பம்தான்...
ஒற்றை இலக்கு நோக்கிய அத்தகைய சில தளங்கள் இன்றைய பார்வைக்கு....

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உரிய மாமனிதர்களில் ஒருவர் மகாத்மா காந்தி.

அவரைப்பற்றிய சிந்தனைகள்,கண்ணோட்டங்கள்,பார்வைகள் ஆகியவற்றை இன்றைய தலைமுறைக்கு உரித்தான நோக்கோடு மறுவாசிப்புக்கு உட்படுத்தி அவர்களிடம் கொண்டு சேர்க்கும் தளம் காந்தி இன்றுஅன்னா ஹசாரே தொடங்கிய அறப்போராட்டத்தின்போது அவருக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் தளம்,பின்பு காந்தியை இன்னும் கூடப்  புரிந்து கொள்ளவும் அவர் மீது வைக்கப்படும் அவதூறுகளை எதிர்கொண்டு பதில் உரைக்கவும் உகந்த தளமாக மாற்றம் பெற்றிருக்கிறது.

காரைக்குடியில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவர் சுனில்கிருஷ்ணன் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காந்தி பற்றிய பழைய புகைப்படங்கள், செய்திகள்,கட்டுரைகள்,ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் அவரே மேற்கொண்டிருக்கிறார். இந்தப்பணியைத் தொடங்கிய பிறகு  எதுவுமே தப்பில்ல என்னும் தனது தனித் தளத்தை விடவும்(அதுவும் தரமான ஒரு தளம்தான்-சான்றுக்கு அதிலுள்ள மருத்துவ அறம் - விவாதம்கட்டுரையைப்படித்துப் பார்க்கலாம்.)காந்தியின் மீதே அவரது ஆர்வம் மையம் கொள்ளத் தொடங்கி விட்டிருக்கிறது.என் மதிப்பிற்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான  திரு பாவண்ணன், காந்தி பற்றி எழுதியுள்ள உண்மையின் உருவம்என்னும் கட்டுரையை காந்தி இன்று தளத்திலிருந்து அறிமுகம் செய்கிறேன்.


சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மதுரை திரு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல், வாழ்த்துக்களையும்,வசைகளையும் ஒருசேரப் பெற்ற ஒரு பெரும் படைப்பு. அந்நாவல் குறித்த தகவல் சேமிப்புக்காகவே ஒரு தனித் தளம் தொடங்கப்பட்டிருக்கிறது.  



காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் என்னும் எஸ்.ராவின் கட்டுரையையும்,அதற்கு நேர் எதிரான  பார்வையோடு எழுதப்பட்ட மேலாண்மை பொன்னுசாமியின் காவல்கோட்டம் : மீள் விசாரணை - ஆயிரம் பக்க அதிசயம் என்னும் பாராட்டையும் ஒரே இடத்தில் ஒருங்கே பார்க்க முடிவது இந்தத் தளத்தின் சிறப்பு.

பலவகையானதத்துவத்தேடல்கள்நிறைந்ததும்,ஆழ்ந்தவாசிப்புக்கு உரியதுமான ஜெயமோகனின் நாவல்,விஷ்ணுபுரம்.அதுகுறித்த புரிதலுக்காகவும்,அதுசார்ந்தவாசிப்புக்குமாகவே தொடங்கப்பட்டிருக்கும் தளம் விஷ்ணுபுரம்.காம்.

விஷ்ணுபுரம் நாவல் குறித்த வாசிப்பனுபவங்கள்,விவாதங்கள்,வினாக்கள்,திறனாய்வுகள் எனப் பலவற்றையும் தொகுத்து வழங்கும் இத் தளத்தில் பதிவுகள்.காமில் வெளிவந்த வ.ந.கிரிதரனின் திறனாய்வுக்கட்டுரையும்  உண்டு; முற்றிலும் நேர் எதிரான பார்வையோடு அதன் மீதான விமரிசனங்களை 
மாற்றுத் தளத்தில் கூறும் பொ.வேல்சாமியின் நிறப்பிரிகைக் கட்டுரையும் இங்கே உண்டு.

போற்றுதல்,தூற்றுதல் இரண்டையும் சமநிலையில் நோக்கும் படைப்பாளிகளைப் பாராட்டுவதோடு - இந்தத் தளங்களில் உள்ள அறிமுகக்கட்டுரைகளின் வழி அவர்களின் நூல்களுக்குள்ளும் நுழைய வலை வாசகர்களை வேண்டுகிறேன்.

ஒரு படைப்பாளியாக என்னை ஈர்ப்பவை மேற்சொன்ன தளங்கள் என்றால் ஒரு ஆசிரியராக,கல்வியாளராக என் கவனிப்புக்கு உள்ளான தளம் கல்விக்கான சிறப்பு வலையாகவே மதுரை சரவணன் நடத்தி வரும் அவரது வலைத்தளம்.கவிதை,கட்டுரை,சிறுகதை எனப் பல பதிவுகள் இந்தத் தளத்தில் இருந்தபோதும் அவற்றுள் பெரும்பாலானவை சிறுவர்களை,அவர்களின் பள்ளி வாழ்வை,அங்கே அவர்கள் பெறும் கல்வியை அவற்றின் மீதான அவரது அக்கறையை நோக்கிக் குவிபவை மட்டுமே. வளரும் தலைமுறை மீது சமூகக்கரிசனங்கள் கொண்ட பதிவுகளை வெளியிடும் சரவணனைப்பாராட்டுவதோடு அவரது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு,மாணவனை தண்டிக்கக் கோரும் அதிகாரம் –ஆசிரியரின் இயலாமையே! ஆகிய இரு கட்டுரைகளும் பெற்றோர்களான நம் அனைவருக்கும் மிகவும் தேவை என்பதால் அவற்றை வலைச்சர வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இன்றைய உலகமயச் சூழலில்- பல நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு நல்ல தமிழ்ப்படைப்புக்களின் மீதான ஆர்வமும் தேடலும் அதிகரித்து வருவதால் அவற்றை உரியபடி  கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் மதுரை பாத்திமாக் கல்லூரியின் [நான் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்லூரி] ஆங்கிலம் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஓர் ஆய்வுத் திட்டத்தைத் http://www.classicsintamil.com/ )தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றனர்.நல்ல தமிழ்ப்படைப்புக்களைத் தேர்வு செய்து வலை ஏற்றுவது, அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது, இந்திய மொழியின் தரமான படைப்புக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து அளிப்பது ,இன்னும் மொழியாக்கம் செய்யப்படாமல் இருக்கும் தரமான படைப்புக்களைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றோடு அயல் மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வாழும் -தமிழ்  எழுத்தை வாசிக்க அறியாத அடுத்த தலைமுறையினரின் வசதிக்காகக் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் ஒலிபெயர்ப்பாகத்-transliteration-தருவது என அனைத்தும் அடங்கியது அந்த ஆய்வுத் திட்டம்.சங்கப்பாடல்களில் தொடங்கி வண்ணதாசன்[கல்யாண்ஜி] போன்றோரின் கவிதைகள் வரை பலரின் ஆக்கங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் ஒலிபெயர்ப்பாகவும் வாசிக்கக் கிடைக்கும் இத் தளத்தில் தரவிறக்கம் [DOWNLOAD] செய்து படித்தால் விரியும் மூன்று பத்திகளில் மூலம்,மொழிபெயர்ப்பு,ஒலிபெயர்ப்பு என ஒரு படைப்பு சார்ந்த அனைத்தையும் ஒருசேரப்பார்க்க முடியும்.படித்து ஒப்புநோக்க முடியும்.
இது கல்வித் துறை சார்ந்து எடுக்கப்படும் ஒரு சிறிய முயற்சி!

மரணம், மனிதம், ஆன்மா ஆகியவை பற்றிய ஆழ்ந்த தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட தொன்மையான வேதநூலாகிய கடோபனிஷதத்தின்  கருத்துக்களை எல்லோருக்கும் புரியும் எளிய தமிழ் வெண்பாக்களில் அளிக்க முன் வருவதே ஒரு பெரும் பணி. அதற்கு அடுத்த கட்டமாக- அதன் பொருட்டாகவே நசிகேத வெண்பா என்னும் தனித் தளம் அமைத்து அவ்வெண்பாக்களைப் பதிவு செய்வதென்பது அதை விடவும் மிகத் துணிவான பெருமுயற்சி. அதனை முழுமையாக நிறைவு செய்து இந்தியத் தத்துவ நூல் ஒன்றைப்பொதுத் தளத்தில் கொண்டு சென்றிருக்கும் மூன்றாம் சுழி  திரு அப்பாதுரை அவர்களின் பணியை எத்தனை போற்றினாலும் தகும். அந்த வெண்பாக்கள் வலையில் வெளிவந்து கொண்டிருந்தபோது நூல்வடிவில் அவை தொகுக்கப்பட்டே ஆக வேண்டும் எனத் தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு விடுத்த கோரிக்கையை இப்போது வலைச்சரத்தின் வழியாக மீண்டும் வைக்கிறேன்.


6 comments:

  1. இன்றைய தங்கள் வலை குறிப்பிட்டுள்ள எல்லா வலைகளுமே (திரு அப்பாதுரை அவர்களின் வலை தவிர )நான் பாராதவையாம்.
    இதுபோன்றும் வலைகள் உள்ளனவா என்று என்னை அதிசயிக்கவைத்தன என்றால் மிகையாகாது.
    ஏனெனின், கடந்த ஒரு பத்து வருடங்களாக அட் ரான்டம் ( தமிழ்ச்சொல் என்ன? ) எனும் முறைப்படி தினசரி ஒரு பத்து முதல் இருப‌து புதிய வலைகளைப் படிக்கிறேன்.
    நிற்க.
    தாங்கள் எண்ணுவதும் தாங்கள் எழுதுவதும் எல்லோரும் உயரவேண்டும் என்ற இலக்கே கொண்டதாக உள்ளது.
    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் வள்ளுவன் சொல்லுக்கு உதாரணம் உங்கள் எழுத்து .
    மேலும் கருத்திட எனக்கு வார்த்தைகள் இல்லை.
    இருப்பினும், ஒன்று சொல்வேன்.

    வலைச்சரத்தில் ஆசிரியர் எனும் நாற்காலியினால் பெருமை அடைந்தவர் புகழ் பெற்றவர் பலர் இருக்கலாம்.
    அ ந் நாற்காலிக்குப் புகழ் சேர்த்தவர் நீவிர் எனும் பெருமையை அடையப்பெற்றீர்.

    வாழ்க.
    தங்களை ஆசிரியராகப் பணி ஏற்கச்செய்த திரு சீனா அவர்கட்கும் எனது நன்றி.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. புதிய அறிந்திராத வலைப்பூக்கள்! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. கருத்துச் சொன்ன இருவருக்கும் நன்றி.
    நான் எதை நோக்கமாகக் கொண்டு கடந்த ஆறுநாட்களாக அரும்பாடுபட்டு உழைத்து வித்தியாசமான வலைத்தளங்களையும் பதிவுகளையும் தொகுத்து வந்தேனோ அதை அப்படியே விண்டு சொல்லி விட்டார் திரு சூரிசிவா.நான் பட்ட பாடு வீணாகவில்லை என்பதற்கு அவரது வாழ்த்துரையே சான்று.அதுவே எனக்கு ஆத்ம நிறைவளிக்கிறது.
    திரு சூரி சிவா,ரேண்டம் என்பதை இந்தச்சூழலில் ஆங்காங்கே என்றோ...அங்கும் இங்குமாக என்றோ சொல்லலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. .குறிப்பிட்ட ஒரு இலக்கை மட்டும் வைத்துக் கொண்டு அதை நோக்கியே செல்வதும் கூட இன்பம்தான்...

    அருமையான தளங்களின் அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அனைவரும் எனக்கு புதியவர்கள். அருமையான தளங்கள். சென்று வாசிக்கிறேன்.

    ReplyDelete
  6. எனக்குப் பெருமையாக இருக்கிறது.. தொடர்ந்து நீங்கள் அளித்த ஊக்கத்துக்கும் நசிகேத வெண்பா பற்றியக் குறிப்புக்கும் மிகவும் நன்றி.

    அடுத்த வருடம் புத்தகம் வரும் சாத்தியம் இருக்கிறது. எழுதும் போது எழுதிவிட்டேன் - புத்தமாகக் கொண்டு வருவதன் சிக்கலைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறேன் :)

    மறுபடியும் நன்றி.


    ReplyDelete