Monday, June 3, 2013

மோதகக் கையானுக்கு முதல் வணக்கம் !

வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த திரு.சீனா அவர்களுக்கு நன்றிகள்.

இந்த ஒரு வாரம் நான் படித்த, பார்த்த, ரசித்த, விரும்பிய,எதிர் கொண்ட  சில பதிவுகள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .வெறுமனே பதிவுகளுக்கான சுட்டிகளைத் தராமல் தொடர்புடைய சிலபல விஷயங்களைப் பேசலாம். அதிக எண்ணிக்கையில் பதிவுகளை அறிமுகப்படுத்த முடியாமல் போகலாம். I believe in quality!

என்னுடைய பதிவுகளைப் பற்றி எழுதி ஒரு போஸ்டை வீணடிக்க விரும்பவில்லை. நேரம் இருந்தால் என்னுடைய வலைப்பதிவுக்கு சென்று உங்களுக்குப் பிடித்த பதிவுகளை வாசித்துக் கொள்ளலாம். ஆசிரியருடைய பதிவுகள் வலைச்சரத்தின் இடது பக்கத்தில் தானாக திரட்டப்படும் .

ஓகே ...
Women are like elephants. I like to look at 'em, but I wouldn't want to own one.

W. C. Fields



எந்த ஒரு செயலையும் செய்யும் முன் விநாயகரை நினைக்க வேண்டும் என்பார்கள்.

[முதலிலேயே வருவதால் ஒரு dis -advantage  இருக்கிறது என்பது வேறு விஷயம். முதலில் உற்சாகமாக அவரை நினைத்து விட்டு , கணநாதனே, அவன் மகனே, இவன் மகனே, அவனை அழித்தவனே இவனை சபித்தவனே  நீ தான் எல்லாம் , உனக்கு அது தருவேன் இது தருவேன்,, இதை நல்லபடியாக நடத்தி வை என்று தாஜா செய்து விட்டு பின்னர் அவரை அடியோடு மறந்து விடுவார்கள்.கடைசியில் வருவதும் ஒருவித அவஸ்தை ...winding up அவதியில் நேரம் இல்லாமல்  ...நடுவில் வருவது தான் கொஞ்சம் பெட்டர்..பாட்டுப் போட்டியிலோ பேச்சுப் போட்டியிலோ உங்கள் பெயர் மிகவும் முதலிலோ மிகவும் கடைசியிலோ வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!]

விநாயகருக்கு கல்யாணம் ஆகி விட்டதா இல்லையா என்று இங்கே விவாதிக்க வேண்டாம். :):) He is happily unmarried :) அவருக்கு ஏன் தேவையில்லாமல் ரெண்டு பெண்டாட்டி கொடுத்து குடுமிப்பிடி சண்டைகளை வரவழைக்க வேண்டும்?:}

விநாயகரை விக்ன வாரணம் என்கிறார் தீக்சிதர். யானை ஒன்று காட்டில் நடந்து வருகிறது. அது எப்படி வழியில் செறிந்து கிடக்கும் சின்னச் சின்ன தடைகளை, புற்களை, புதர்களை,தளைகளை , செடிகளை, கொடிகளை, அழித்து துவம்சம் செய்து கொண்டு முன்னேறிச் செல்லுமோ அப்படி நம் விக்னங்களை தகர்ப்பவர் கணபதி! பாயிண்ட் என்ன என்றால் வழியில் புல்லோ பூண்டோ இருப்பது கூட யானைக்குத் தெரியாது. அது பாட்டுக்கு நகர்ந்து போகும். அது போல விநாயகருக்கு நம் விக்னங்கள் எல்லாம் ஜுஜுபி. நாம் தான் பால்காரனில் தொடங்கி பாஸ்போர்ட் வரை எல்லாத்துக்கும் கவலைப்படுவோம்! 


 [ஜீவா வெங்கட்ராமன் என்பவரால் நடத்தப்படும் இந்த ப்ளாக்கில் பல்வேறு கர்நாடக இசைப் பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் ,காணொளிகள் நிறைந்திருக்கின்றன.]

ராகம் ஹம்சத்வனி. பொதுவாக , அழகான பறவைகளுக்கு குரல் அழகாக இருக்காது. அன்னப்பறவை பார்ப்பதற்கு அழகு; கேட்பதற்கும் அழகு போல!

பாடகர் ஒருவரிடம் கேட்டார்களாம்.

"ஸ்வாமி ...ஏன் விநாயகர் பாட்டு எல்லாம் பெரும்பாலும் ஹம்சத்வனி-லயே இருக்கு?

பாடகர்: ஹ்ம்ம்...ஹம்சத்வனிக்கு என்னென்ன ஸ்வரங்கள் இல்லை சொல்லு?

கேட்டவர்: மத்யமமும் தைவதமும் இல்லை.

பாடகர்: அதாவது, ம, த இல்லை...மத இல்லை.

எல்லா யானைக்கும் மதம் இருக்கும். இந்த யானைக்கு மட்டும் மதம் இல்லை என்று சொல்லத்தான் ஹம்சத்வனில பாடுறாளோ ?

interesting !
  
“It’s absolutely unfair for women to say that guys only want one thing: sex. We also want food.” 
― Jarod Kintz


சரி..விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து விட்டு அதை மனிதன் தானே தின்கிறான்? கேட்டால் வாசனை மட்டும் தான் சாமிக்கு என்பான். அதுதான் சாமிக்கு நிவேதனம் செய்யும் அயிட்டங்களை நாம் முதலிலேயே  முகர்ந்து பார்க்கக் கூடாதாம்.

மனிதனுக்கு சாப்பிடுவதில் தான் எத்தனை ஆர்வம்? க்ரூப்பாக வந்து ஹோட்டலில் ஆர்டர் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?  (  தனியாக சாப்பிடுவதை விட க்ரூப்பாக சாப்பிடும் போது நாம் கொஞ்சம் அதிகம் சாப்பிடுவோம்.)மசாலா தோசை, ரவா தோசை, வெஜிடபிள் தோசை, பொடி தோசை, பூரி,ப்ளெயின் தோசை, காரா பாத், பொங்கல், வடை , ஊத்தப்பம், இட்லி, ரவா இட்லி தனி ஆவர்த்தனமாக காபி டீ ,ஜூஸ்  என்று அவர்கள் சாப்பிடுவதை விட சாப்பிட்டு விட்டு மிச்சம் வைத்திருக்கும் ப்ளேட்டுகளைப் பார்க்க பயமாக இருக்கும். ஏதோ ஒரு பானிபட் போர் நடந்து முடிந்த போர்க்களம் போலக் காட்சியளிக்கும்.எல்லாவற்றையும் கிளீன் செய்து எடுத்துப் போகும் பையன்களை யாரும் கவனிக்கவே மாட்டார்கள்...உணவு என்பது செக்ஸின் இன்னொரு வடிவம் என்கிறார் ஓஷோ. சாப்பிடுவது கூட செக்ஸின் substitute தானாம்  ! அன்பு, காமம் இவை கிடைக்காத போது மனிதன் அதிகம் சாப்பிடுவானாம். ..

இந்த வலைப்பூவில் விதம் விதமான ரெசிப்பீக்கள் உள்ளன.

முள்ளங்கி ராய்தா, அவல் பிஸி பேளே பாத், வாழைப்பூ வடை, etc etc 

[எனக்கு இதுவரை ஒழுங்காக சமைக்கத் தெரிந்த ஒரே அயிட்டம் மாகி நூடூல்ஸ் தான்!]

சமையல் என்பது ஒரு கலை தான்...நன்றாக சமைக்கத் தெரிந்த மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..! சும்மா தயிர் சாதம், சாம்பார் சாதம், லெமன் ரைஸ், உப்புமா என்று செய்ததையே செய்து போர் அடிக்காமல் விதம் விதமாக இது போல ரெசிப்பிக்களை கற்றுக் கொண்டு அவற்றை  செய்து உங்கள் கணவர் அல்லது மனைவியை அசத்தவும். ஏனென்றால் தாம்பத்தியம் வலுப்பட அல்லது முறிய சமையலும் ஒரு காரணமாம்.


அது என்னவோ நிறைய பேர் பல்சுவைப் பதிவுகளை சாப்பிடும் அயிட்டங்களின் பெயர்களில் எழுதுகிறார்கள். கொத்து பரோட்டா, மினி மீல்ஸ், அவியல்,சாண்ட்விட்ச்  இப்படியெல்லாம். மெட்ராஸ் பவன் சிவகுமாரின் ஸ்பெஷல் மீல்ஸ் பதிவுகளை நீங்கள் படித்திருக்கலாம்:
  
நமக்கு இருக்கும் பயம் என்ன என்றால் புதிதாக  ஒன்றை முயற்சி செய்து பார்ப்பது...செப் ஜேக்கப் சொன்னார் என்று இதை செய்கிறோமே, வேலை மெனக்கெட்டு ரொம்ப நேரம் செலவு செய்து பண்ணினால் நன்றாக வருமோ வராதோ, சொதப்பி விடுவோமோ, நேரமும் ingredients -உம் விரயமாகி விடுமோ..எதற்கு வம்பு? வழக்கம் போல உப்புமா கிண்டி விடுவோம் என்று கிண்டி விடுகிறோம்...நம்மில் பலர் இப்படித் தான் இருக்கிறோம்... சமையலில் மட்டும் அல்ல...வாழ்க்கையிலும்...பழையதே போதும் என்று இருந்து விடுகிறோம்..


Do one thing every day that scares you. Eleanor Roosevel

இன்றே போய் பக்கத்து சீட்டு பத்மஜாவிடம் காதலை சொல்லி விடுங்கள் ஆமாம்!


 சரி. சமையல் தான் சலித்துப் போகும்...சங்கீதம் எப்போதும் சலிக்காது.  உங்கள் அபிமானப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இல்லையா? இதை தான் ஔவையாரும் சொல்கிறாள். புதியது என்ன என்று கேட்டதற்கு!'முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது'! - 'பொருள் நிறைந்த பாடல்' என்பதை கவனியுங்கள். சும்மா ஜிஞ்சிலிக்கா ஜிலிப்பிலி என்றெல்லாம்  எழுதினால் சீக்கிரம் சலித்து விடும்! அவ்வையாரின் இந்தப்  பாடலைப் பற்றி இந்த சுட்டியில்: (எழுதியவர் செங்கோவி )

முருகன் என்றதும் நினைவுக்கு வருபவர் பதிவர் கண்ணபிரான் ரவிசங்கர்.
முருகனின் காபி ரைட்டான காவடி பற்றி அவர் எழுதி இருக்கும் விரிவான பதிவு இங்கே:

இந்த முருகனுக்கும் நாம் முதலில் பார்த்த யானை தான் உதவி செய்தது. இது கோயிலில் சும்மா காதசைத்து நின்றிருக்கும் சாதா யானை அல்ல.

அது,
எப்படிப்பட்ட யானை?

சின்னஞ்சிறிய கண்படைத்த யானை 
பாரதம் எழுத கொம்புடைத்த யானை 
பெற்றோரை சுற்றும் பண்புடைத்த யானை 
கஜமுகாசுரன் என்புடைத்த யானை.


[ஒரு வீட்டில் இரண்டு பையன்கள் (அல்லது இரண்டு பெண் குழந்தைகள்) இருந்தால் ஒருவரிடத்தில் அம்மாவின் குணமும் இன்னொருவரிடத்தில் அப்பாவின் குணமும் மிகுந்திருக்கும் இல்லையா? சிவனின் குடும்பத்திலும் இது உண்டு. விநாயகர் பார்வதிக்கு மட்டுமே பிறந்தவர். முருகன் சிவனுக்கு மட்டுமே பிறந்தவன் . எனவே விநாயகரிடத்தில் அம்மாவின் தன்மைகள் அதிகம். பொறுமை, சகிப்புத் தன்மை, மன்னிப்பு, அமைதி, பாசம்,அன்பு  ...ஆனால் முருகனிடத்தில் அப்பாவின் குணங்கள் அதிகம்..கோபம், பிடிவாதம், ரௌத்திரம்,வீரம்! இதனால் தான் விநாயகரை  'ஹேரம்பா  (அம்மாவுக்கு பிரியமானவர்') என்றும் முருகனை தகப்பன் சாமி என்றும் சொல்கிறார்கள் போலும்  ]

"யானையிடம் என்ன பார்க்கிறார்கள். மஹாமௌனம் கண்முன்னே ஊர்ந்து போகிறது. யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை. அது தன்னியல்பில் நடக்கிறது. யானையின் வழியாக எதையோ பார்க்கிறார்கள். உலகில் வேறு எந்த மிருகமும் இவ்வளவு வியப்போடு திரும்ப திரும்ப பார்க்கபடுவதேயில்லை."

இப்படி எழுதுபவர் எஸ்.ராமகிருஷ்ணன். சுட்டி:

  
யானையும் ரயிலும் கடலும் எப்போதும் அலுப்பதில்லை என்பார்கள்.
பேயோனின் ஒரு கவிதை:


ஓடை இலை

ஓடையில் அடித்துச்
செல்லும் சருகு
தன்னுடன் கொஞ்சம்
ஓடையை எடுத்துச்
செல்கிறது.


[சருகு என்றதும் ஒரு ஜென் ஞானியின் நினைவு வருகிறது... மரத்தின் கீழே அமர்ந்திருந்த அவர் மரத்தின் மேலிருந்து ஒரு உலர்ந்த சருகு அப்படியே கீழே விழுவதை பார்த்தவுடனேயே ஞானம் அடைந்து விட்டாராம். உலர்ந்த சருகு கீழே விழுவது எந்த வித எதிர்ப்பும் இன்றி பிரபஞ்சத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதை உணர்த்துகிறது.

இந்த சுட்டியில் நீங்கள் ஒரு ஜென் கதையைப் படிக்கலாம்.]


ஆனால் பேயோன் திருக்குறளை மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று இவ்வாறு எழுதி இருப்பது எரிச்சலாக இருக்கிறது:

 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.



"அமரர் ஆனால் அடக்கம் செய்வார்கள். சரியாக அடக்கவில்லை என்றாலும் உள்ளே ஒரே இருட்டாக இருக்கும்."



ஒரு ஓஷோ ஜோக். எங்கிருந்து எடுத்தேன் என்று சொல்ல மாட்டேன் :):)

யானைகளுக்கும் பூச்சிகளுக்கும் கால்பந்துப் போட்டி நடக்கிறது. யானைகள் உற்சாகமாக விளையாடி பத்து கோல் அடித்து விடுகின்றன. பூச்சிகளோ பாவம் ஒரு கோல் கூட அடிக்க முடிவதில்லை. எல்லாரும் யானை அணிதான் ஜெயிக்கும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்குகிறது. அப்போது பூச்சிகள் அணியில் பூரான் களம் இறங்குகிறது..சும்மா புகுந்து விளையாடி இருபது கோல் அடித்து 20-10 என்ற செட்டிங்கில் யானை அணியை வெற்றி பெற்று விடுகிறது.

'பூரான் ரொம்ப நல்லா புட் பால் விளையாடுதே, இதை முதலிலேயே ஏன் களம் இறக்கவில்லை? ' என்று ஒருத்தர் கேட்டார்.

அதற்கு பூச்சி அணியின் கேப்டன் "அதுவா...அது இத்தனை நேரம் தன் எல்லாக் கால்களுக்கும் பூட்ஸ் அணிந்து கொண்டிருந்தது"


நாளை சந்திப்போம்.....

~சமுத்ரா ...



25 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாவ்.. இதான் அமேசூரா?
    முதல் நாளே ஒரு intellectual உயரத்துக்கு கொண்டு போயிட்டீங்க. ஒரு வாரம் எப்படித் தாங்கப் போறோம்?! 
    'பொருள் கொண்ட பாடல் புதியது' சுத்தி சுத்தி வரும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாவ்.. இதான் அமேசூரா?
     முதல் நாளே ஒரு intellectual உயரத்துக்கு கொண்டு போயிட்டீங்க. ஒரு வாரம் எப்படித் தாங்கப் போறோம்?! 
    "பொருள் கொண்ட பாடல் புதியது' சுத்தி சுத்தி வரும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சுய அறிமுகம் சுருக் நறுக்...

    ஆரம்பமே அறிமுகங்கள் அசத்தல்... வாழ்த்துக்கள்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து விட்டு அதை மனிதன் தானே தின்கிறான்? கேட்டால் வாசனை மட்டும் தான் சாமிக்கு என்பான். அதுதான் சாமிக்கு நிவேதனம் செய்யும் அயிட்டங்களை நாம் முதலிலேயே முகர்ந்து பார்க்கக் கூடாதாம்.

    இந்த சந்தேகம் எனக்கும் உண்டு. சிறப்பான ஆரம்பம் தொடருங்கள் தொடரிகிறோம். அதற்கு முன்பு உங்கள் தளம் சென்று வந்துவிடுகிறேன்.

    ReplyDelete
  6. அன்பின் சமுத்ரா -அருமையான துவக்கம் - ஆனைமுகனைப் பற்றிய பதிவிட்டுத் துவங்கியமை நன்று - மோதகக் கையான் அனைத்து நலன்களையும் அள்ளித் தருவானாக. ஒஷோ ஜென் கதைகளூம் அருமை - அண்ணன் தம்பி இருவரையும் ஒப்பு நோக்கி விளக்கம் கொடுத்ததும் நன்று.
    சுட்டிகள் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்பின் சமுத்ரா - லேபிள் இட வில்லை போலும் - லேபிள் இடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அன்பின் சமுத்ரா - ஹம்ஸவத்னி இராகத்திஉற்கு ம த கிடையாதாம் - அதனால் தான் ஆனைமுகனுக்கு மதம் பிடிக்காதாம். - விளக்கங்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. அன்பின் சீனா,சமுத்ரா என்று லேபிள் இட்டுள்ளேன்.இப்போது.

    ReplyDelete
  10. ஆன்மீகமும் லௌதீகமும் கலந்த சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்விற்கு பாராட்டுக்கள் ..உங்கள் எழுத்து நடை நதியின் ஓட்டத்தை போல இலகுவாக செல்லுகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அருமையான அறிமுகம்.

    சும்மாவா சொன்னாங்க பெரியவங்க எல்லாம். ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்று.

    உங்களைப்போன்றவர்களிடமிருந்து தெரியாத விஷயங்கள் எவ்வளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி
    http://manammanamviisum.blogspot.in/

    ReplyDelete
  12. என்னுடைய பதிவுகளைப் பற்றி எழுதி ஒரு போஸ்டை வீணடிக்க விரும்பவில்லை. நேரம் இருந்தால் என்னுடைய வலைப்பதிவுக்கு சென்று உங்களுக்குப் பிடித்த பதிவுகளை வாசித்துக் கொள்ளலாம். ஆசிரியருடைய பதிவுகள் வலைச்சரத்தின் இடது பக்கத்தில் தானாக திரட்டப்படும் .

    ஓகே ...

    பிள்ளையார் சுழி போட்டு பெருமையுடன் பணியைத் தொடர வந்திருக்கும் தோழிக்கு என் இனிய வாழ்த்துக்கள் .உடல் நிலை சரியில்லை அதனால் முழுமையாக இன்றைய அறிமுக ஆக்கத்தினைக் கூட படிக்க முடியவில்லைஇருப்பினும் ஆக்கத்தின் முகவுரையே தங்களின் எண்ணக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது தோழி ! மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக தொடர்ந்து நற் பெருமையைத் தேடித் தரட்டும் இறைவனருளால் .

    ReplyDelete
  13. ஆரம்பமே அசத்தல்! எதைச் சொல்ல, எதை விட?

    /இதனால் தான் விநாயகரை 'ஹேரம்பா (அம்மாவுக்கு பிரியமானவர்') என்றும் முருகனை தகப்பன் சாமி என்றும் சொல்கிறார்கள் போலும் //

    :) நன்று!

    இனி விநாயகர் பார்த்துக் கொள்வார்!

    ReplyDelete
  14. வணக்கம்

    சுய அறிமுகம் மிக அருமையாக உள்ளது இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. அசத்தலான ஆரம்பம்... வலைச்ஹரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. விநாயக வணக்கத்துடன் ஆரம்பித்து ஜோக்ஸ் உடன்முடித்தது ரசனை. வாழ்த்துகள்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. அம்பாள் அடியாள்...

    தோழி அல்ல...தோழன்..:):)

    ReplyDelete
  19. தனித்தனியாக குறிப்பிட நேரம் இல்லை
    கருத்து சொன்னவர்களுக்கு மிக்க நன்றிகள்....

    ReplyDelete
  20. ஆனைமுகனுடன் அறிமுகம் அருமை..!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  21. நல்ல ஆரம்பம்

    ReplyDelete
  22. ஹம்சத்வனி ராகத்தின் விளக்கமும் இறுதியில் சொன்ன ஜோக்கும் நன்றாக இருந்தது.அறிமுகப்படுத்திய ஜென கதையும் நன்றாக இருந்தது

    ReplyDelete
  23. உங்க கலைடாஸ்கோப்பின் ரசிகன் நான். (சமீப காலமா மிஸ் பண்ணிட்டேன் நிறைய) உங்கள் எழுத்துக்களை வியந்து ரசித்த நான்... இங்க உங்கள் அறிமுகங்களையும் வியக்கிறேன். தொடரட்டும் அமர்க்கள வாரம்!

    ReplyDelete
  24. அசத்தலான ஆரம்பம்.சிறப்பான விஷயங்களைச் சொல்லிய விதம் நன்று. முதல் நாளிலேயே அதிரடியாய் தொடங்கி இருக்கீங்க.... மற்ற பதிவுகளையும் படித்து விடுகிறேன் கையோடு!

    ReplyDelete
  25. ஒரு வித்யாசமான வலைப்பதிவுகள் அறிமுகம், அருமை, வாழ்த்துக்கள்

    ReplyDelete