Monday, August 26, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -1

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
நன்றி : தினசரி தியானம் - ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் -திருப்பராய்த்துறை
வலைச்சரம் பொறுப்பாசிரியர்  சீனாவுக்கும், வலைப்பூக்களின் ஆசிரிய பெருமக்களுக்கும், எழுதாமல் படித்து ரசிக்கும் வாசகர்களுக்கும் இனிய வந்தனங்கள். சற்றே ஒதுங்கியிருந்த என்னையும்  வலைச்சரம் கட்டி இழுத்து வந்துவிட்டது!

முதல்நாள் சுய அறிமுக நாள். அது  இணையத்தில் என் அனுபவமாக மலர்ந்ததைச் சொல்லுகிறேன்.
என் வலையுலகப் பயணம் மதுரையில் 2001-ல் ஆரம்பித்தது. தொழில்நுட்ப சம்பந்தமான எனது புத்தகம் ஒன்று பலருக்கும் இணயத்தில் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் அதை வலையேற்றுவதற்காக HTML, java script code, போன்றவற்றை சுயமாக தேடித் தேடிக் கற்றுக் கொண்டேன். அந்த பலத்தில் Tripod என்கிற இலவச தளத்தில் மஞ்சரி என்ற பெயரில் ஒரு மின் சஞ்சிகை ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் எனக்குப் பிடித்த நல்ல விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதி  வந்தேன். பின்னர் அந்த வலைத்தளத்தின் எரிச்சலூட்டும் POP UP விளம்பரங்களால் அதை கைவிட்டேன். 

அச்சமயம் வலைப்பக்கங்களில் தமிழில் எழுத யூனிகோடு முறை இல்லாமல் எழுத்துருப் பிரச்சனைகள் பரவலாக இருந்து வந்தது. அதனால் பரஹ மென்பொருள் கொண்டு நான் எழுதியதை Bitmap முறையில் மாற்றி மஞ்சரியில் சில கட்டுரைகளை வலையேற்றி தமிழில் எழுதும் ஆர்வத்தை ஓரளவு தணித்துக் கொண்டேன். தில்லியிலிருந்து கோவைக்கு 2006-ல் வந்த பின் தமிழ்பயணி சிவா Windows XP மூலம் இனிமேல் யாவரும் யூனிகோட்தான் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதால் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய வேண்டிய அவஸ்தைகள் வராது என்ற பெரிய மென்பொருள் ரகசியத்தைப் பகிர்ந்தது கபீரின் கனிமொழிகள் வலைப்பூவுக்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து பல்சுவை விஷயங்களை பகிர்வதற்காக கற்கை நன்றே வை ஆரம்பித்து பின்னர் என் பொழுது போக்கான ஓவியங்களுக்காக சித்திரமும் கைப்பழக்கம் என்கிற வலைப்பூவும் வடிவம் பெற்றன. இதைத் தவிர விளம்பரங்களில் காணப்படும் அபத்தங்களை சுட்டிக்காட்ட ஒரு வலைப்பூவையும் ஆங்கிலத்தில் வைத்திருக்கிறேன். 

இப்படியே நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. இணையத்தின் வாயிலாக பல பெரிய பதிவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது எனது பாக்கியம். அவர்களில் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு இன்னமும் எனக்கு வரவில்லை. ஆனால் இடையில் இரண்டு வருடங்களாக எழுத இயலாத சூழ்நிலையில் இருக்கும் போது தனி மடல்களில் அவர்களின் தனிப்பட்ட விசாரிப்பு நெஞ்சைத் தொடுவதாகும். இணையம் என்பதும் எழுத்து என்பதும் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அப்போது புரிந்தது.

அன்பின் சீனா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது தயக்கமாகவே இருந்தது. படிக்காம ஊர் சுத்திகிட்டு இருக்கிறவன் கிட்ட நாளைக்கு பரீட்சைன்னு சொன்னா எப்படி இருக்கும் !  ஏதோ என்னால் முடிந்ததை எழுதுறேன். வலைப்பூ ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து பாஸ் பண்ணி விட்டுடங்க _/\_.  :)

எனக்கு எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதன் காரணமாய் உருவானது தான் தேன்சிட்டு  என்னும் வலைப்பூ வளையம். இதில் ஒவ்வொரு ஆசிரியரும் தம் வலைப்பூவை இணைத்துக் கொண்டால் அது புது வாசகர்கள் நம் வலைப்பூவுக்கு வர ஒரு வழி வகுக்கும் என நினைத்து உருவாக்கப்பட்டது. இது alt-webring dot com வழங்கும் இலவச சேவை. கூகிள் ரீடர் போல இவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம் என்பது வேறு விஷயம். சில பதிவர்கள் அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி மீண்டும் நிரலை பொருத்தாமல் விடுவதால் சின்ன சின்ன சிக்கல் அவ்வப்போது வருவதுண்டு. உங்களுக்கும் பயன்படுமா என்று பாருங்கள்.

இதைப் போலவே தமிழ் கருவூலம் என்ற பெயரில் கூகிள் விட்ஜெட் செய்து வைத்திருக்கிறேன். இதன் மூலம் பல அரிய தமிழ் பெரியவர்களின் நற்சிந்தனைகளை  வலைப்பூவிற்கு வரும் வாசகர்களோடு எல்லா வலைப்பதிவர்களும் அவற்றை பொருத்தி பகிர்ந்து கொள்ள முடியும். த்ற்போது உலகநாதரின் உலகநீதி,  மதுரை கூடலூர் கிழாரின் முதுமொழி காஞ்சி  மற்றும் தாயுமானவரின் பராபரக்கண்ணி  ஆகியவற்றை அருஞ்சொற்பொருட்கான இணைப்புடனும் வலையேற்றியுள்ளேன். தமிழுக்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டால் மிக்க மகிழ்ச்சி தரும். 

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவற்றை அறிமுகப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று வலைச்சரம் அனுமதி அளித்திருக்கிறது. இதை அவ்வப்போது பிறர் பதிவுகளை தொகுக்கும்போது நினைவுக்கு வருபவற்றோடு பகிர்கிறேன்.  கற்கை நன்றே வலைப்பூவில் குறிப்பாக Ching Chow என்று  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்து கொண்டிருந்த கார்ட்டூன் படங்கள்  தமிழில் சினா சோனா வாக வலம் வருவதையும், கர்நாடகத்தில் சாமானியனின் கீதை என்று போற்றப் பெறும் மக்குத்திம்மன் கருத்துகளையும் படித்துப் பார்க்கலாம். 
[மேலே உள்ள இரண்டு இணைப்புகளும் லேபிள் அடிப்படையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து இடுகைகளும் ஒரே சன்னலில் திறக்கும்]  

கபீர்தாஸர் எப்படி என்னிடம் ஒட்டிக் கொண்டார் என்பது இன்றும் நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம். அந்த வலைப்பூவை ஆரம்பித்த போது அதில் நூறு பதிவுகள் எழுதுவேன் என்ற கற்பனை கூட கிடையாது. ஒவ்வொரு கட்டுரையும் எனக்குப் பிடித்தமானதுதான். ஒரு சில கட்டுரைகளை மட்டும் எப்படி பரிந்துரைப்பது? அதற்கு ஒரு வழி தோன்றியது.

கபீர் வலைப்பதிவில் இடுகைகள் சதம் கடந்ததை ஒட்டி சில முன்ணணி வலைப்பதிவாளர்கள் முன் வந்து சிறப்புக் கட்டுரைகளை வழங்கி அதை கௌரவித்தனர். அவைகள் மட்டும் தொகுக்கப்பட்டு அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூலாக பின்னர் வெளியிடப்பட்டது. கட்டுரை ஆசிரியர்களின் வலைப்பூக்களின் பெயர்களும், அவற்றிற்கான இணைப்பும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் ஜீவா வெங்கடராமன், S. கிருஷ்ணமூர்த்தி, ஜீவி, கீதா சாம்பசிவம், கே.ஆர்.எஸ், கவிநயா, YRSK பாலு, சூரி.சுப்புரத்தினம். இவர்கள் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பதிவர்கள். YRSK மட்டும் ஃபேஸ் புக்கில் சுறுசுறுப்பாயிருக்கும் யோகி ராம் சூரத்குமார் பக்தர். இவர்கள் யாவரும் போற்றும் கபீர்தாஸரின் பெருமையை  அன்பின் சங்கமம் என்னும் மின்னூலை தரவிறக்கம் செய்துகொண்டு படித்து மகிழவும்



அறிமுகப் பதிவிலேயே எட்டு பதிவர்கள் !! ( அன்பின் சீனா ஐயா, கணக்கில சேர்த்துக்குங்க :))
இணையத்தில் என் அனுபவம் எப்பொழுதும் மிக பயனுள்ளதாக, ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு வடிகாலாக, நல்ல நட்பு வட்டம் தருவதாக இருந்து வந்திருக்கிறது. இதில் வலைச்சரம் ஒரு முக்கியமான மைல் கல். உங்களில் பலருக்கு என் அறிமுகம் கிடைக்க வழி செய்திருக்கிறது. என் மனமார்ந்த நன்றி.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். இந்த நாள் இனிய நாளாகட்டும்

பின் குறிப்பு:
என் நிறுவனத்தின் கணிணிகள் தனி மின்னஞ்சல்கள் வலைப்பூக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஆகையால் பின்னூட்டங்களுக்கு என் பதிலுரை மிகத் தாமதமாகவே வரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

29 comments:

  1. உங்க பதிவை படிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்ந்து வருகிறோம். எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, தொடரட்டும் தங்கள் வாசிப்பு

      Delete
  2. யுனிகோட் இல்லாத காலத்திலேயே வலைப்பூ ஆரம்பிச்சவரா நீங்க... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  3. தினசரி தியானம் பகிர்வு அருமை.
    கபீரன்பன் உங்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இன்று உண்மையில் நல்ல நாள் தான்.நாளையிலிருந்து அருள் அமுதம் பொழியும்.
    வலைச்சரத்தை அழகான வண்ணமலர்களால் அலங்கரிக்க போகிறீர்கள்.
    தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ”அருளமுதம்”- சுவாமி சித்பவானந்தர் சிந்தனைகளில் கண்டிப்பாக உண்டு. மற்றபடி வலைப்பூக்கள் அறிமுகம் தான். நான் எதையும் வகைப்படுத்தி செய்யவில்லை. அவ்வப்பொழுது கண்ணில் படும் புது வலைப்பூக்களை அறிமுகம் செய்ய எண்ணியுள்ளேன்.
      தங்கள் ஆதரவுக்கு நன்றி

      Delete
  5. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் திரு கபீரன்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி நடனசபாபதி ஐயா! நீங்கள் ஏற்கனவே ஆசிரியராக இருந்தவர். உங்களைப் போல் சிறப்பாக செய்ய முடியுமா தெரியவில்லை முயன்று பார்க்கிறேன் :)

      Delete
  6. நாளை முதல் இன்னும் பல புதிய அறிமுகங்கள் அளித்து அரிய பணி பெருமை அடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நாளை முதல் இன்னும் பல புதிய அறிமுகங்கள் அளித்து அரிய பணி பெருமை அடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆனந்தகிருஷ்ணன் ஐயா. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

      Delete

  8. பல நாட்களாகிவிட்டன உங்கள் எழுத்தைச் சந்தித்து.

    திரும்பி தமிழ் எழுத்துலகம் வந்தது எனக்கு உவகை அளிக்கிறது.

    நீவிர் எழுதியது எல்லாமே தங்கள் வலையில் இன்னமுதம் என்று குறைத்துச் சொல்ல மாட்டேன்.
    ஏன் எனின் இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்கும் ஒரு இனிய ஏகாந்தம்.

    அவனே எல்லாம் என அவனை தன்னூள் இருத்தி, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற
    சிந்தனையை மேலோக்கி நிறுத்தி, படிப்போரையெல்லாம் பரவசப்படுத்திய
    உங்கள் வலைப்பதிவு கபீரன்பன்
    வலை வானில் கதிரவன் ஆம்.

    வலைச்சரத்தில் தங்களைக் கண்டது பெரு மகிழ்ச்சி.

    உங்களது சங்கமம் நூலில் நானும் இருக்கிறேன் என்பதும் ஆச்சரியமாக இருந்தது.

    சுப்பு ரத்தினம்.
    இப்பொழுதெல்லாம் கவி நயா தொடங்கி வைத்த பெயர் என்னை
    சுப்பு தாத்தா என்றே எல்லோரும் அழைக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. சுப்பு சார் ,
      சங்கமத்தில் இருந்தவர் எப்படி விடுபட்டு போகமுடியும்? தங்கள் உற்சாகத்தில் சொல்லும் பாராட்டுரைகளுக்கு கடுகளவாவது எனக்கு தகுதி உண்டா என்பதை அறியேன்.தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி

      Delete
  9. அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்,
      தங்கள் சேவை இல்லாமல் வலைச்சரம் நகராது. எல்லா ஆசிரியர்கள் போல் நானும் கடமைப்பட்டவனாகிறேன்
      மிக்க நன்றி

      Delete
  11. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அன்புடைய கபீரன்பன்!... உங்களுடைய கபீரின் கனிமொழிகள் - தளத்தினால் நான்காண்டுகளுக்கு முன்பே கவரப்பட்டவன்!.. மீண்டும் சந்திப்பதிலும் கபீரின் கனிமொழிகளை சிந்திப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன்!.. வளமுடன் வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி செல்வராஜு ஐயா. தங்கள் ஆதரவை தொடர வேண்டுகிறேன். அன்புடன்

      Delete
  13. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. வலைச்சர வண்ணமலர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி , தொடர்ந்து வாசியுங்கள்
      அன்புடன்

      Delete
  15. வணக்கம் கபீரன்பன் ஐயா. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துகள்! 100-வது பதிவுக் கொண்டாட்டங்களை 'அன்பின் சங்கமம்' என்ற மின்னூலாகச் செய்திருப்பதை இப்போதுதான் அறிந்தேன். அதில் அடியவளின் பதிவும் இடம் பெற்றிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி :) அதே போல் 'தமிழ் கருவூல'மும் புதிய செய்தி. 'கபீரின் கனிமொழிக'ளில் ஒவ்வொன்றும் ஒரு இரத்தினம். அதைத் தவிர இத்தனை பிற சேவைகளும் செய்து வருகிறீர்கள். மிகவும் நன்றி ஐயா.

    வலையுலகின் செல்ல தாத்தாவான சுப்பு தாத்தாவிற்கும் வணக்கங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. கவிநயா ஜி
      வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. நல்ல புதிய பதிவர்களை அல்லது அதிகம் அறியப்படாதவர்களை அறிமுகம் செய்ய முயற்சிக்கிறேன்.தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  16. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி , நன்றி

    ReplyDelete
  18. //குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்ப அன்பே வழி, அன்பே சிவம். மிக அருமை.//
    அன்புதான் அனைத்தும் உண்மை.
    அன்பின் சங்கமத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அன்பின் சங்கமத்தில் என்னையும் சேர்த்திருப்பது குறித்து நெகிழ்ச்சி, மகிழ்ச்சி இரண்டில் எது அதிகம் எனச் சொல்ல முடியவில்லை. ஒரு முறையாவது உங்களைப் போல் எழுதணும்னு ஆசை. நிதானமாக, மனதைத் தொடும் வண்ணம், அரிய பல குறிப்புகள், மேற்கோள்களோடு! இந்தப் பிறவியில் கிடைக்குமா, சந்தேகமே! முதல் பதிவே அழகான முத்துச்சரம்.

    ReplyDelete