Wednesday, November 13, 2013

கதைக்காற்றை சுவாசிக்கலாம் வாங்க

இனிய காலை வணக்கம் அனைவருக்கும்

“பொண்ணு கிடச்சாலும் புதன் கிடைக்காதுனு” எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. இந்த நல்ல நாள்ல நான் படிச்ச சில நல்ல கதைகளை உங்களோடு பகிர்ந்துகிறேன். கூட்டுக்குடும்பத்துல வளர்ந்ததால் சின்ன வயசுல இருந்தே நிறைய கதைகளை கேட்டு வளர்ந்துவந்தேன். என்ன கதை சொன்னாலும் உதாரணத்துக்கு என் அத்தை நான் பிறந்தப்போ சுண்டுவிரல் அளவு இருந்தேனு கதை சொன்ன போதும் ...அப்படியானு நம்பின அறிவாளி நான். அதனால் எல்லோருக்கும் என்கிட்ட கதை சொல்ல பிடிக்கும் எனக்கும் கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

முதன் முதலில் படித்த நாவல் கல்கியின் “பொன்னியின் செல்வன்”,அப்புறம் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நாவல்கள் படித்து கல்கியின் இரசிகையாகி விட்டேன். அப்புறம் பாலகுமாரனின் நாவல்கள் படிக்க ஆரம்பித்து...இன்னும் படிச்சுட்டே இருக்கேன். மிகவும் பிடித்த எழுத்தாளர் “பாலகுமாரன்”. நான் மிகவும் விரும்பி படிப்பது “ஓசோ”வின் புத்தகங்கள். இப்போது நண்பர்களின் புண்ணியத்தால் நிறைய பேரின் நாவல்களை படிக்க ஆரம்பித்து இருக்கேன். சமீபத்தில் படித்து அசந்து போனது “சாகாவரம் “ இறையன்பு எழுதியது. “பெத்தவன்” இமையம் எழுதியது. கதைகளுக்கு போரதுக்கு முன்னால் 11- 20 வயது விடலைப் பருவத்தை கொஞ்சம் பார்த்துட்டு வந்துடலாம்.

இந்தப் பருவத்தில் எல்லாம் புதிதாக தோன்றும். நட்புங்கர வார்த்தைக்கு அர்த்தம் தெரியர பருவமிது. மெதுவாக கற்க ஆரம்பித்து எல்லாம் எனக்குத்தெரியுமென்று கூச்சலிடும் காலமிது.பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான காலகட்டம். இந்தப் பருவத்தில் தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கதைகள் புதைந்து இருக்கும். முதல் நட்பு, முதல் காதல், முதல் சண்டையென முதல் ருசியை அனுபவிக்கும் காலம். பிறிதொரு நாளில் வாழ்க்கையை அசைபோடுகையில் பாகுபாடின்றி புன்னகையை பூக்க வைக்கும்.

இதுக்கும் இப்ப கதைகளை சொல்லரதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி வருதா.....அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கர முடிச்சுதான்...ஆனா கண்டுக்காதிங்க. இப்ப நம்ம நேரா கதைகளுக்கு போயிடலாம் வாங்க.

1) இமையம்

பலருக்கு பிரியச்சமான எழுத்தாளர் இவர்.சமீபத்தில் இவரது பெத்தவன் கதையை படித்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த நொடி இன்னும் நினைவில் இருக்கிறது. திரு.இமையம் அவர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவதென்றால் ”வடிகட்டாத எழுத்துக்கும், பேச்சுக்கும் சொந்தக்காரர்”. இவருடன் பேசும் போது வெகுநாள் பழகிய நண்பரோடு பேசுவது போல் இருக்கும். நம் மீது இவர் காட்டும் அக்கறை நெகிழ வைத்துவிடும். இவர் நலமுடனும், பெரும் புகழுடனும் வாழ இறையை பிராத்திக்கிறேன். இப்ப கதைக்கு போலாம் வாங்க.

3 வருடங்களாக காதலுக்காக போராடும் பாக்கியம், அவருக்கு துணையாக நொண்டித்தங்கை செல்வராணி, 20 வருடமாக தவமிருந்து இவர்கள் இருவரையும் பெற்ற பழனி, சாமியம்மாள். பழனியின் தாயார் துளசி. இவர்களின் உணர்ச்சி கலந்த உரையாடல்களை அழகாக பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர் இக்கதையில்.

இந்தக்கதையில் வரும் சாதி, ஊர்பஞ்சாயத்து எனக்கு முற்றிலும் புதிய களம், இதைப் படிக்கும் போது மனதில் ஏற்படும் அதிர்ச்சியை தவிர்க்க முடியவில்லை. “செத்துப்போ” என்று பலமுறை பழனி சொன்னபோதும் தைரியமாய் எதிர்த்த பாக்கியம் “சாப்பிடு” என்ற ஒரு சொல்லுக்கு உடைந்து போவது அன்பின் வல்லமையை காட்டுகிறது. கதையை படிக்கும் போது கண்களில் வழியும் நீரை துடைக்க கூட தோன்றுவதில்லை.

பழனி பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்மை உலுக்கி போட்டு விடுகிறது. சமூகத்தின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கதை.

-----------------------------------------------------------------------------------------------------
2. தமிழ்நதி

இவரது கதைகளை படித்துவிட்டு மனம் ஒரு நிமிடம் பெரும் மெளனத்துள் புதைந்து போவதை உணரமுடிகிறது. இவரது 2 கதைகளை இன்று உங்களோடு பகிரப் போகிறேன்

என் பெயர் அகதி

இந்த தலைப்பால் ஈர்க்கப்பட்டு தான் இக்கதையை படிக்க ஆரம்பித்தேன். இலங்கை தமிழர்களை பற்றியதாக இருக்கும் என்ற உங்கள் அனுமானம் சரி தான் . கதையை படித்து முடித்தவும் மனம் பாறாங்கல்லைப் போல கனத்து இருந்தது. என்ன உலகம் என்று லேசான வெறுப்பு தோன்றுவதை அடக்க முடியவில்லை.

“இங்கு ஏன் வந்தீர்கள்…?”

“உயிர் பிழைத்திருக்க”

இந்த வார்த்தைகளின் வலியைக் கடக்க நெடுநாள் ஆகும். ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக இலங்கையில் அவர்கள் கடந்து வந்த வலிகளை பதிவு செய்து இருப்பார். இதற்கு மேல் விமர்சிக்க மனதில் தெம்பில்லை.

அவர்களுக்கு சீக்கிரம் நல்ல விடியலாக விடியவேண்டும் என்ற பிராத்தனையோடு அடுத்த கதைக்கு போகலாம்.

தாழம்பூ

முந்தைய கதையின் தளத்திற்கு முற்றிலும் மாறுபட்ட தளமிது. மிக வித்தியாசமான கதைக்கரு. காதல் தோல்வியால் அவதிப்படும் ஒரு பெண் தன் தோழியின் வீட்டில் தங்கி இருக்கும் போது அவருக்கு ஏற்படும் அனுபவமே இக்கதை.

"தனது அழைப்புகள் துண்டிக்கப்படுமென்று தெரிந்தே தொலைபேசியில் கூப்பிட்டான். அதையொரு சடங்குபோல வெகு கிரமமாகவும் நேர்த்தியாகவும் முன்பே திட்டமிட்டிருந்ததுபோலவும் செய்தான். அவனுடைய குற்றவுணர்வுக்குப் போடும் தீனியே அதுவென அறிந்திருந்தேன். தொலைபேசி அழைப்புகளால் என்னுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவரமுடியாத நிலையில் களைத்துப்போனவனாக நேரில் வந்தான். துயரப்படுவதான பாவனையோடு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். ஏமாற்றத் துணிபவர்களுக்கு துயரப்படத் தெரியாதென்று சொல்லி அனுப்பிவிட்டேன். நூலிலிருந்து விடுபட்ட பட்டம்போல அவன் அன்று தன்னை உணர்ந்திருக்கலாம். "

மனதில்  எந்தத்தாக்கமும் இல்லாமல் இவ்வரிகளை கடக்கமுடியாது. முன் ஜென்மத்தில் நம்பிக்கையில்லாத போதும் இந்தக் கதை மிகவும் பிடித்து இருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------

3. சல்மா

சிங்கப்புரில் நடந்த “எழுத்தாளர் மாநாட்டில்” இவரது உரையை கேட்ட பிறகு இவரது கதைகளை ப்டிக்க வேண்டுமென்ற ஆவலாம் தேடிப்பிடுத்து படித்த கதை இழப்பு.

இழப்பு      இக்கதை ஒரு பெண் கதாபாத்திரத்தின் வாயிலாகவே நகர்கிறது. அன்புடன் பழகும் பக்கத்துவீட்டு தம்பியின் மரணம் எத்தனை பாதிப்புகளை மனதில் நிகழத்த கூடும் என்பதை விளக்கயடி கதை நகர்கிறது.

இரவு நேரத்தில் தொலைபேசியில் அழைத்து மெளனம் காத்து தொந்தரவு கொடுக்கும் நபர் யாரென்று பரிதவிப்பதும், அந்த அழைப்பு வராத போது மனதில் தோன்றும் எண்ணங்களையும் அழகாக பதிவு செய்து இருப்பார்.

"ஒவ்வொரு நாளுமே என்னை அழைப்பது யாராக இருக்கும் என்கிற கேள்வியும் அதனை அறிவதற்கான ஆர்வமும் என்னை எத்தனை துன்புறுத்தியிருக்கிறது? இன்றோ யார் என்கிற கேள்வியோடு இன்னும் வரவில்லை என்கிற வருத்தமும் தானே சேர்ந்திருக்கிறது. நினைக்க நினைக்கக் குழப்பம் மட்டும் மிச்சமாகப் படுக்கையிýருந்து எழுந்து அமர்கிறேன்"

ஒரு நாள் அந்த நபர் யாரென்று ஊகிக்க முடியும் போது ஏற்படும் அதிர்ச்சியையும் அழகாக விளக்கியிருப்பார் எழுத்துக்களில். எதிர்பாரா முடிவுடன் முடியும் இக்கதையை படிக்க தவறாதீர்கள்

----------------------------------------------------------------------------------------------------------

4. அமுதா

இவரின் ”என் வானம்” வலைப்பக்கம் பார்த்த போது “என்னப் போல் ஒருத்தி” என்ற எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை.  இங்கு தனது எண்ணங்களை அழகாக பதிவு செய்துள்ளார். நிறைய சின்ன சின்ன கதைகள் எழுதியுள்ளார். இதில் என்னை மிகவும் கவர்ந்தது நட்பு பற்றியும், நன்றிமறவாமை பற்றியும் சொன்ன காலத்தினால் செய்த நன்றி கதைதான்.
------------------------------------------------------------------------------------------------------------
இத்துடன் இன்று விடைபெற்றுக்கொள்கிறேன். நாளை மீண்டும் சந்திப்போம்.

 

17 comments:

  1. அருமையான சிறுகதை தள அறிமுகத்திற்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தமிழ் மணத்துல இணைச்சு விடுங்க அக்கா, அப்போ தான் viewers கூடுவாங்க... இப்போதைக்கு நான் இணைச்சுட்டேன்....

    இனி கதை படிக்க போறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிடா....கண்டிப்பா செய்யரேன்.

      Delete
  3. அருமையான கதைப் பதிவுகள் பக்கங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. எல்லா கதையையும் படிச்சு முடிச்சுட்டேன் :)

    ReplyDelete
  5. சிறுகதைகள் பதிவுகளின் தொகுப்பு மிக்க நன்று.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பெத்தவன், என் பெயர் அகதி இரண்டு கதைகள்தான் படித்தேன். இனி உறங்க முடியுமா தெரியவில்லை.
    சாதீயத் தீயை கொழுத்த வேண்டிய கட்டாயம் பெத்தவனை படிக்கும்போது தெரிகிறது. வலி உள்ளுக்குள் குடைகிறது.
    என் பெயர் அகதி.......... இது கதையாகவே இருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. யார் மிகக் கொடியவர்? அந்த மானம் பறித்த கயவர்களா? பணம் பறிக்கும் இந்த கல் நெஞ்சக்காரர்களா? தராசு வைத்தால் முள் நடுவிலே நிற்கும்போல இருக்கிறது.
    கண்ணீருடன்.............

    ReplyDelete
    Replies
    1. என்னையும் மிகவும் பாதித்த கதைகள் சுமன்.........

      Delete
  7. கதைக்காற்றை சுவாசித்தேன் அனைத்தும் அருமை. தங்களின் சிறு வயது அனுபவங்களின் பகிர்வு அழகு. தங்களின் இப் பகிர்வானது ஒவ்வொருவரின் சிறுவதில் நடந்தவற்றை நினைத்துபார்க்கும் விதத்தில் அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். இன்றய சரத்தில் இடம்பிடித்த கதாரியர் ஆசிரியைகளும் கதைகளும் அருமை. அனைத்து கதாசிரியர்களுக்கும், மிக பொருமையுடன் அருமையாக தொகுத்து வழங்கிய அனிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெத்தவன் இமையம் சிறுகதையை அறிமுகம் செய்த உங்களுக்கு என் பாராட்டுக்கள் "ஒரு கலைஞன் தான் வாழும் சமூகத்துக்கும் காலத்துக்கும் ஆற்றவேண்டிய கடமை குறித்து நாளெல்லாம் நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். இமையம் பிரச்சனைக்குரிய அதே நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டு, துணிச்சலாகவும் துல்லியமாகவும் தன் காலத்தின் வாழ்க்கையை, அதன் குரூரத்தை நம் மனமெல்லாம் கரையும் விதத்தில் இக்கதையை எழுதியிருக்கிறார் கண்களில் நீரை வரவழைக்கும் கதை அந்த நீர், சமூகத்தின் சாதித்திரை கிழிக்கும் ஆவேச வெள்ளத்தின் துளி.

      Delete
  8. மழலை பருவத்தில் அம்மா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்து வளர் பருவத்தில் காமிக்ஸ் கதைகள், ஜேம்ஸ்பாண்ட் கதைகள், அதற்கு அடுத்தாற்போல் நீதிநெறி கதைகள், தொடர்ந்து துப்பறியும் நாவல்கள் என்று கடந்து சாண்டில்யன், கல்கி. பாலகுமாரன், சுஜாதா என்று தாவி தற்கால எழுத்தாளர்களின் கதைகளை படித்து இன்புற்று வருவது தொடர்ந்து வந்த கதை சுவைஞராகிய எனக்கு 4 நல்ல எழுத்தாளர்களை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிட்டு இருக்கிறீர்கள். நால்வரும் நல் முத்துக்கள்... அவர்களின் மேற்கூறிய கதைகள் அனைத்தும் தமிழிலக்கிய சொத்துக்கள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ( 5வதாக எனக்கு பிடித்த சுஜாதா, எஸ்.ரா, அசோகமித்திரன், ஜெயகாந்தன் இவர்களது ஏதாவது ஒரு இடம்பெற்றிருப்பின் கூடுதலாக மகிழ்ந்திருப்பேன்)

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் நான் படிக்கும் புத்தகங்களை பற்றி என் வலைப்பக்கத்தில் எழுத முடிவு செய்துள்ளேன். ஜனவரி முதல் வாரம் ஒரு புத்தகம் போட உள்ளேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். இறையன்பு ”சாகாவரம்”, ஜெயமோகன் “யானை டாக்டர்” படிங்க....ரொம்ப நல்லா இருக்கு

      Delete